ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்



பாளையங்கோட்டை என்றால் எனக்கு பள்ளிக்கூட கொஸ்டீன் பேப்பர்தான் ஞாபகம் வரும்.. அவ்வளவு டஃப் ஆக இருக்கும்.. அந்த ஊரில் இருந்து ஒரு ஆசிரியரின் கவிதைத் தொகுதியை படித்தேன். ஹிலால் ப்ரஸ்ஸின் சாதிக் அலி வெளியிட்டுள்ளாரர். மிக அருமையான தொகுப்பு அது..

நகைச்சுவைத் தென்றல் பொ. ம. ராசமணி என்றால் தெரியாதவரே இருக்க முடியாது நெல்லை மாவட்டதில்.. சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். அவரது மகள்தான் நம் அன்பிற்குரிய வலைப்பதிவர் சித்ரா சாலமன்.. தந்தையின் நகைச்சுவை இவருக்கும் கை வந்த கலை..

திரு ராசமணியின் கவிதைத் தொகுதிக்கு தோப்பில் முகம்மது மீரான் முன்னுரை அளித்துள்ளார்.. அதில் இவருடைய கவிதைகள் பற்றி ,” இவருடைய மென்மையான வரிகளில் நரம்பு கம்பிகளில் எறும்பு ஊறும் சத்தத்தின் நாதம் மெல்ல ஒலிக்கக் கேட்கலாம் “ என கூறியுள்ளார்.

இவரை பேச்சாளராக தெரிந்தவர்க்கு இவரின் கவிமுகம் ஆச்சர்யம் அளித்துள்ளது.. ”இவர் அற்புதமான கவிஞர்., கதைகள் எழுதுபவர்., ஓவியர்., சிறந்த விமர்சகர்., மேடைப் பேச்சாளி., பட்டிமன்றம்., வழக்காடு மன்றத்தில் நடுவராகவும் இருந்திருக்கிறார் “ என சவேரியார் கல்லூரியை சேர்ந்த தமிழ்த்துறைத்தலைவர் சிவசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். ”பேச்சு ஆரம்பித்தவுடன் ஐந்து வினாடிகட்குள் கூட்டம் சிரிக்கத் தொடங்கிவிட்டால் அங்கே ஐயா நடுவர் என்று பார்க்காமலே கூறிவிடலாம்.. இது ஐயா 1960 களிலேயே எழுதிய கவிதைகளின் தொகுப்பு.,” என்கிறார்.

மகள் சித்ராவோ தன் தந்தையின் நூலில்., தன் உள்ளத்திலிருந்து வந்த எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார். இது தன் அம்மாவுக்கு அப்பா தந்துள்ள காதல் பொக்கிஷம் என பெருமிதமாகக் கூறுகிறார்.. தன் கணவருக்கு காதலுடன் கவிதை எழுதும் வரம் பெற்றதே தன் அப்பாவால்தான் என குறிப்பிட்டுள்ளார்.

அந்தந்த வயதில் அந்தந்த ஆசைகள் வரணும்.. வந்தால்தான் அவன் நார்மலா இருக்கான்னு அர்த்தம்.. சின்ன வயசுல மிட்டாய் மேல ஆசை வரணும். இருபது வயசுல பொண்ணு மேல., முப்பது வயசுல குடும்பத்து மேல ஆசை வரணும் என்று சொல்கிறார் ராசமணி அவர்கள்..

தன் அணிந்துரையில்., 1948 இல் சென்னையிலிருந்து வெளிவந்த ,”தம்பி” இதழில் சிறுகதைப் போட்டியில் ,” காட்டுச் சிறுவன்” என்ற தலைப்பில் தான் எழுதிய சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்ததைக் குறிப்பிட்டுள்ளார்.. அப்போது வருக்கு வயது 12 ஆம்..!!!

இவரது கவிதைகள் மாலை முரசு., நெல்லை முரசு., வேலூர் முரசு., தமிழ்ப்பணி., தமிழன் குரல்., சிவகாசி முரசு., விஜயா., சௌபாக்கியம்., ஈழநாடு., தினமலர்., நங்கை., குயில்., கவிதை., கவியமுது., என கிட்டத்தட்ட 14 பத்ரிக்கைகளில் ., 63 கவிதைகள் 1960 இலிருந்து 1973 வரை வெளிவந்துள்ளன.. அவற்றின் தொகுப்பே இது..

இனி விமர்சனம்..

காதல் பிறப்பதுண்டு ., இறப்பதில்லை.. காதல் கொண்டவர்கள் ., காலத்தை வென்றவர்கள் என்கிறார்.. உண்மைதான்..

ஒரு சில கவிதைகளில் பெண் குரலாகவும் ஏக்கமாகவும் கூட ஒலிக்கிறது இக்கவிதைகள்.. “எனது வாழ்க்கை மரவேர் நீயத்தான்.. பிரிவைச் சகியேன்., திரும்பி வாயேன் என்றும் மறையும் பொருள் தேடி என்னை மறந்து பிரிந்தானே..” என்றும் ..

காதலி ஊற்றுத்தமிழால் பேசியதால் உள்ளம் தகிப்பதும்., நிலையற்ற வாழ்வை காதலி தன் அன்பாலே நிலைபெறச் செய்வதும்., கீச்சுக் குரலில் அவள் பாட அதைக் கேட்டுச் சொக்குவதும்., அருமை..

மின்காந்தச் சிலையென்று நெருங்கிய பெண்., இளைஞரிடம் பேரம் பேசி நிற்பது கண்டு., பேயென ஒதுங்குவதும்., ஓவ்வொன்றாய் விற்ற விதவை கடைசியில் மகனையும் தன்னையும் பசிக்காக விற்பதும் கொஞ்சம் கோபமும் வருத்தம் கலந்த கவிதை..
அதே சமயம்., “பசிக்கே அன்னமிட்டு பாரில் பாவம் தொலைப்பவரே., விசும்பும் விதவை பசி நீவிர் விரும்பித் தீர்ப்பதென்று..?” என வினவுகிறார்..

மனைவியின் இயல்புகளாக.. சீறிச் சொன்னாலும் கோபம் அடையாள்., தீயர் அண்டிடக் கண்ணினைக்காட்டாள்., சீரும் ., சிதைவும் சேர்ந்தே என்னுடன் தினமும் சுவைக்கும் பெண்னவள்., நீயின்றி வாழும் வாழ்வனைத்தும் வெறும் நீரில்லாக் குளத்துத் தாமரையாம் ., நிறையென்றால் எடையளவு யென்பர்- நின் நிலையான கற்பதனின் சிறப்பினையே அறியார் என புகழ்வதும் அழகு.

காமமெனும் பேயினது கரத்தை விட்டு ஓடவும்., ஏமாற்றும் காதலியர் பற்றிய சீற்றமும்., இதயம் திறந்து விடு ., ஏனோ போவென்றாய் என்று காதல் ஏக்கமும். திரும்பி விடு என பிரிவாற்றாமையும்., பெருகி வழிகிறது.. உழைப்பவர் ., கற்றவர்க்கெல்லாம் காதலிக்க நேரமில்லை என்றும்., உண்டு கொழுத்த கயவனுக்கு பெண் உலகையே காதலிக்க நேரமுண்டு என்றும் சலிக்கிறார்.

FERRY ME ACROSS THE RIVER என்ற ஆங்கிலப் பாடலையும் தமிழாக்கம் செய்துள்ளார்..

மனைவி கருக்கொண்டதை., உள்ளத்தில் எனைக் கொண்டாய் .. உதரமதைக் கருக் கொண்டாய்., என்றும்., பந்தம் அவளானாள்., மக்கள் பலரை இனித் தருவாள்., எந்தன் வாழ்வினுக்கே விளக்காய் என்றும் இலங்கிடுவாள் என்றும்., சந்தோஷம் பகிர்கிறார்..

பணத்திற்காக ஏழைப் பெண்கள் பணக்கார வயோதிகருக்கு வாழ்க்கைப்படும் அவலத்தை ஏழைப் பெண் என்ற தலைப்பில் 13 கவிதைகளாக சோகத்தோடு விவரிக்கிறார்.

நண்பன் காதல் நினைப்பில் விழித்து நொந்ததும்.,மாதை வலிய அணைப்பவனை பழித்திட சொல் தேடுவதும் .,, பெண்ணை வானமாக்கி வர்ணிப்பதும் ., பசியோடு இருக்கும் பிச்சைக்காரனைக் கவராத அழகான பெண்ணின் அழகு பற்றியும்., கண்ணில் உள்ள கன்னி என்று அழுகை பற்றியும்., பிறன் மனை நோக்காதிருப்பது பற்றியும் கற்பில்லாப் பெண்கள் பற்றியும் உள்ள கவிதைகள் வித்யாசமானவை..

காதலர் இருவர் கருத்தொருமித்தாலும் திருமணத்துக்குப் பின்னே வாழ்வியல் இன்பம் துய்ப்பது பற்றி வலியுறுத்தும் கவிதைகள் அருமையிலும் அருமை.. பெண்களின் அழகு., அன்பு., அணைப்பு., முத்தம்., ஒழுக்கம்., நல்லியல்புகள்., பண்பு., கண்ணீர்., தாய்மை., பற்றிய அனைத்துக் கவிதைகளும் அருமை..

அன்பெனும் தெய்வமது குடியிருக்கும் ஆலயந்தான் பெண்மையென அறிந்துகொண்டேன்.. .. கண்ணிரண்டும் பூத்துமனம் கலங்கும் வேளை கண்டுவிட்டேன் தாய்மையினை அமைதி கொண்டேன்.. என்றும் ., உடலுக்கு அழிவு உண்டு ., உடல் காதல் அழிவதுண்டு என்றும் ., உயிருக்கு அழிவில்லை., உயிர்க்காதல் அழிவதில்லை என்றும் ராசமணி ஐயா அவர்கள் சொன்னதையே வழி மொழிகிறேன்..

மிக அருமையான கவிதைகள் .. கிடைத்தால் படித்துப் பாருங்கள்.. சிறந்த மனிதராய் வாழ்வதன் மாண்பு பொலிந்தது..

வேண்டுகோளுக்கிணங்கி அனுப்பி வைத்த இக்கவிதைகளின் நாயகி ஃப்ளோரா ராசமணி அவர்களுக்கு நன்றி..

Series Navigation