ஆட்டோகிராஃப்- 23-இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்!!

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

சித்ரா ரமேஷ்


“எங்களுடைய சொந்த ஊரில் இரண்டு மூணு வீடு வாங்கியாச்சு! ஊருக்குப் போனா வசதியாத் தங்கலாம்”, என்று என்னிடம் யாராவது சொன்னால் அவர்களை சற்றுப் பொறாமையுடன் பார்க்கத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாய் சொந்த ஊர் என்ற ஒரு அனுபவமே இல்லாமல் வாழ்ந்து விட்டக் குடும்பம். சொந்த ஊர், அதில் நிலம், வீடு, அதற்கென்று பிரத்யேகமான தெய்வங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள், சுற்றிலும் நெருங்கிய சொந்தங்கள், ஊர் முழுக்கத் தெரிந்த மனிதர்கள்!

இப்படிப்பட்ட பாதுகாப்புகள் அற்ற சமூகத்தில் வாழப் பழகி விட்டோம். இனிமேல் தீடாரென்று இப்படிப்பட்ட அமைப்பில் வாழ நேரிட்டால் மூச்சு முட்டுமோ ? வெளிக் கிர்ில்கதவைப் பூட்டி, உள்மரக் கதவைச் சாத்தி பெல் அடித்தால் மந்திரக்கண்ணால் பார்த்து உள்ளே வர வேண்டியவர்கள் மட்டுமே நுழையலாம் என்ற பாதுகாப்புகள் மட்டுமே உள்ள வாழ்க்கைக்கு மட்டுமே பழகியவர்கள். சொந்த ஊர் ஏக்கம் என்பது

தாய்ப்பாலை மறக்கும் ஏக்கம் போன்றது. கண்டிப்பாக எந்தக் குழந்தையும் தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளர முடியாது. அம்மாவிடம் பால் குடித்து வளரும் குழந்தைகள்வளர வளர மற்றச் சாப்பாட்டுக்குப் பழகிக் கொள்ளும். ஆனால் அம்மாவைப் பார்த்தால் ஒரு கெஞ்சலும், கொஞ்சலுமாக ஒரு சிரிப்புச் சிரித்து மயக்கி அம்மாவிடமும் பால் குடிக்கும். இந்த நயன பாஷை அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும். காலையில் பாட்டிலில் பால், இட்லி, அப்புறம் பருப்புச்சாதம்,

சாத்துக்குடி ஜூஸ், பிஸ்கெட், சாக்லேட், அவல் பொரி, பொட்டுக்கடலை என்று சகலத்தையும் சாப்பிட்டு விட்டு அம்மாவிடமும் போய் பால் குடிக்கும். தூக்கம் வந்தால் தூங்காமல் அம்மாவைத் தொந்தரவு செய்யும். கடைசியில் இந்த அநியாயம் பொறுக்க முடியாமல் அம்மா, மாமியார், அண்ணி, நாத்தனார் என்று அத்தனை பெண் உறுப்பினர்களும் சேர்ந்து சதித்திட்டம் போட்டு குழந்தையையும் அம்மாவையும் ஒருத்தர் கண்ணில் ஒருத்தர் படாமல் கொஞ்ச நாள் வைத்து குழந்தைக்குத் தாய்ப்பாலை மறக்கச் செய்வர். நல்லா கொழுக் மொழுக்கென்று இருந்த குழந்தை கொஞ்சம் வாடி இளைத்துத்தான் போகும். இவ்வளவு சதி பண்ணி நிறுத்த வைத்தவர்களே “பாவம் குழந்தை பால் குடிக்கறதை நிறுத்தினப்புறம் உடம்பே தேறலை”, என்று பரிதாபப்படுவார்கள். கலையில் காபி,இட்லி, சாதம், பிஸ்கெட் என்று வகைவகையாக சாப்பிட்டு விட்டு பாலையும் குடித்துக் கொண்டிருந்தால் உபரிச் சத்து சேர்ந்து குழந்தை குண்டாகத்தான் இருக்கும். உபரிச்சத்து குறைந்த பிறகு கொஞ்சம் உடம்பு இளைக்கத்தான் செய்யும். அம்மாவுக்கும் இந்தப் பிடுங்கல் இல்லாமல் இருந்தால் சரிதான் என்று எல்லாத்துக்கும் ஒத்துக்கொண்டுதான் இருப்பாள். அப்புறம் குழந்தையை தன் உடம்பில் ஒரு பாகமாகச் சுமந்த நினைவின் மீதமாக பால் குடிக்கும் பழக்கமும் மறக்கடிக்கப் பட்டது ஏக்கமாகத்தான் இருக்கும். குழந்தைக்கும் அம்மா மேல் ஒரு சின்ன வருத்தமும் ஏக்கமும் இருக்கும். இந்த ஏக்கம் போலத்தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுப் பிரிவதும்!

அப்பா அம்மாவோடு அந்த ஊரிலேயேதான் இருக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில் ரொம்ப நாள் இருந்தோம். பிறகு விடுமுறைக்கு மட்டும் எட்டிப் பார்க்கும் ஊராகி விட்டது. அப்பா அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஊரே அந்நியப்பட்டுப் போய்விட்டது. ஸ்கூலுல் அப்படித்தானே! நாம் படிக்கும் வரை நாம் அலங்காரம் செய்து பழகிய வகுப்பு, நம்முடைய பெயர் இன்ன பிற விஷயங்களோடு பிளேடு கீறல்கள் கொண்ட நம்முடைய டெஸ்க், விளையாட்டு மைதானம், நம் நண்பர்களோடு வழக்கமாக உட்காரும் மரத்தடி எதுவுமே நம்முடையதாக இல்லாமல் ஆகிவிடும். அடுத்த வருட மாணவிகள் அதையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்வார்கள். ஸ்கூலுக்கு சும்மா போய் நம் ஆசிரியைகளைப் பார்த்து விட்டு வரும் போது அங்கு நாம் இருந்த மாதிரி எதுவுமே இல்லாதது போல், நம்முடைய சக மாணவிகள் போல்

ஒழுக்கமாகவும், நட்புடனும் இல்லாமல் அதிகமாக அலட்டுவது போலவும் தோன்றி அதை டாச்ச்சரிடமும் சொல்லி “ என்ன டாச்சர் எங்களையெல்லாம் இப்படி விடமாட்டாங்க! பரவாயில்லை! இப்போ ரொம்ப லீனியன்ட்டா ஆயிட்டாங்க!” என்று புலம்பி விட்டு “நம்ப ஸ்கூல் நம்ப இருந்த மாதிரி இல்லை”, என்று அப்புறம் அவ்வளவாக போகப் பிடிக்காது. நாங்கள் வாழ்ந்த வீட்டைப் பிரியும் போதும் இதே போல் ஒரு துக்கம். வளர்த்த மரங்கள், பூச்செடிகள், ஒட்டு மாமரம், கொய்யா, வாழை, மணத்தக்காளி, அம்மா தினமும் கொடுக்கும் தக்காளிப் பழத்தைச் சாப்பிட வரும் அணில், பின்னால் டிசம்பர் பூச்செடிப் புதரில் வாழ்ந்த கீரிப் பிள்ளைக் குடும்பம், முன்னால் மல்லிகைப் புதர் பக்கத்தில் வாழ்ந்த பாம்பு, இப்படி அசையும், அசையாச் சொத்து ஏகத்துக்கு விட்டு விட்டுச் செல்ல யாருக்குத்தான் மனது வரும் ? கடைசித் தம்பி பிறந்ததும் இந்த வீட்டில்தான்! பாட்டி ரூமுக்குள் வராதே என்று மிரட்டினாலும் அம்மாவுக்கு எதுவும் ஆகாமல் பத்திரமாக இருக்கிறாளே என்று அம்மாவிடம் போக முயற்சி செய்த போது பாட்டி தம்பிப் பாப்பாப் பாரு என்று காட்டினாள். அப்படியெல்லாம் உடனே பாசமிகு அக்காவாக மாறி தம்பியை உச்சி மோந்து கொஞ்சவில்லை. அம்மா அசதியாக ஏன் இருக்கிறாள் ? களைப்புடன் படுத்துக் கொண்டிருந்த அம்மாவைத்தான் பார்க்கத் தோன்றியது. இப்படி எத்தனையோ நினைவுகளை எடுத்துச் சென்ற வீடு. அதைக் காலி செய்து கிளம்ப வேண்டும். ஊரையும் மறந்து வேறு ஊருக்குப் போய் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஆனால் எந்த ஊருக்குப் போனாலும் எங்க ஊர் மனிதர்கள் அடையாளம் கண்டு கொண்டு பாசத்துடன் பேசுகிறார்கள். ஒரு இரவு நேரப் பஸ் பயணத்தில் யாரோ ஒரு பயணி போல அந்த ஊர் வழியாக கடந்து செல்லும் போது அந்த மெளனமான இரவு, இலை உதிர்ந்த மரங்கள்,வெறுமை வழியும் சாலைகள் இவையெல்லாம் சோகமாகத் தெரிகின்றன. சில சமயம் சில காட்சிகளே மனதில் சோகமாக படிகின்றன. இது ஏன் இவ்வளவு துக்கத்தைத் தர வேண்டும் ? பஸ்ஸை விட்டு இறங்கி

நான் வந்திருக்கிறேன் என்று உரத்தக் குரலில் கத்த வேண்டும் போல் இருந்தது. இந்த ஊரின் ஒவ்வொரு மூலையும் என்னகுத் தெரியும். உங்களுக்குத் தெரியுமா என்று பக்கத்தில் இருப்பவரிடம் பெருமை அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

ரொம்ப நாட்களுக்குப் புதிதாக எந்த ஊருக்குப் போனாலும் தொலைந்து போய்விடுவோமோ ? எப்போது வீட்டுக்குத் திரும்பப் போகலாம் என்றிருக்கும். திரும்ப ஊருக்கு வந்ததும்தான் பாதுகாப்பாக உணர்வேன். இப்போதும் ஊருக்குப் போகலாம். தெரிந்த மனிதர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் ஊர் நம் வீடு என்ற

உரிமைக் கொண்டாட அங்கு எதுவும் இல்லை.

ஆனால் ஊர் பிரமாதமாக முன்னேறிவிட்டது. சைக்கிள் எல்லாம் அவ்வளவாக ஓட்டுவதே இல்லை. எல்லோரும் டூவீலர்தான். நகர மத்தியில் குளிர் சாதன வசதியோடு

திரையரங்கு. நிறைய பஸ் வசதி. ஆட்டோ ஸ்டாண்ட். ஒரு லட்சம் ரூபாய் வரை போனஸ் வருகிறதாம். வீடு வாங்க லோன் என்று நிறைய வசதிகள். இப்போது அங்கு வளரும் குழந்தைகள் எங்கள் ஏக்கங்கள், அப்பாவித்தனங்கள், விளையாட்டுகள் எதுவும் இல்லாமல் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ வளர்கின்ற குழந்தைகளைப் போல் வளர்வதற்குரிய வசதிகள் பெருகி விட்டன. போனமுறை விடுமுறைக்குப் போன போது நெய்வேலி போய்விட்டு மறக்காமல் முந்திரிப் பருப்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான் என் தம்பி. “நம்ம ஊர் டேஸ்ட் வேறெங்கேயும் கிடைக்காது. அமராவதித் தியேட்டரில் டிக்கெட் கிடைக்கறதுக்கு சாமி கிட்டல்லாம் வேண்டிப்போமே! இப்ப போய் பாரு. புதுப் படமெல்லாம் ரிலீஸ் செய்யறான். பாக்கறத்துக்குத்தான் ஆள் கிடையாது” என்றான்.

எல்லோரும் பிரியும் போது ஆட்டோகிராஃப் வாங்கிக் கொள்வோமே! அதைப் போல் நானும் வாங்கினேன். ஆட்டோகிராஃப்பில் பொதுவாக எல்லோரும் இந்திரன், சந்திரன், நல்லவரு, வல்லவரு, உலகம் உருண்டைதான் என்றாவது சந்திப்போம் என்று

இஷ்டத்துக்குப் புகழ்ந்துதான் எழுதித் தருவார்கள்.உன் சிரிப்பு ‘ஸ்ரீதேவி மாதிரி, வகுப்புத் தலைவியாக இருந்து வழி காட்டிய தெய்வம் என்று ரீதியில் புகழ்ந்து எழுதியிருந்ததைப் பார்த்து என் உயிர்த் தோழிகள் இருவரும் செமையாக கடுப்பாகி நாங்களும் எழுதித்தருவோம் என்று கேட்டார்கள். நான் முடியாது என்று சொல்லியும் கேட்காமல் அவர்களே பிடுங்கி உன் அலட்சியப் போக்கும், ஆணவமான பேச்சும், அகங்காரமான சிரிப்பும் என்று ஆளுக்கு ஒரு வரி எழுதி அதற்கு மேல் இன்னும் என்ன எழுதுவது என்று யோசித்து முடிக்கிறோம் என்று எழுதத் தொடங்கியது இன்னும் முடிக்கப் படாமலேயே என்னிடம் இருக்கிறது. எப்போது முடிக்கக் போகிறீர்கள் என்று கேட்டால் இன்னும் முழுமையாக உன் குணங்களைத் தெரிந்து கொண்ட பிறகு என்கிறார்கள். அதேப் போல் இன்னும் முழுமையாக முடிக்கப்பட்டாத ஆட்டோகிராஃப் இது. பதினாறு வயதுடன் ஒரு காலக் கட்டம் முடிவடைகிறது. இதற்குப் பிறகு அந்த நண்பர்கள், என் சகோதர்கள், அப்பா அம்மா யாருடனுமே முழுமையாக இருக்க முடியவில்லை. இந்த உலகில் பெரிய நகரங்களில் வாழும் படியான சூழ்நிலை. வளர வளர அப்பாவித்தனத்தோடு கூடிய யதார்த்தம் போய் நிறைய கள்ளங்கள், கபடு சூது எல்லாம் கற்றுக் கொண்டு பெரிய பெண்ணாகி விடுகிறோம்.இதெல்லாம் கற்றுக் கொள்ளவில்லையென்றால் ஸ்மார்ட் கேர்ள் ஆக முடியாதே! சொந்தச் சகோதர்களே விருந்தாளி ஆகிவிடுகிற விபரீதம்! அண்ணன் அண்ணியின் கணவனாகி விடுகிறக் கொடுமை! இது மட்டும் நல்லவேளையாக நடக்கவில்லை. வாழ்க்கை பதினாறு வயதுடன் முடிவடையவில்லை. உங்க பக்கத்து வீட்டுக் குழந்தை விளையாடுவதை மட்டும் பார்த்து ரசித்தவர்களுக்கு அந்தக் குழந்தையின் அழுகை, பிடிவாதம், படுத்தல், அடம் ஜூரம் வந்த போது ராத்திரியெல்லாம் கண் விழித்துப் பார்த்துக் கொண்டது உடம்பு சரியில்லைகாது வலி, வயிற்று வலி என்று நடுராத்திரி கதறியது, இதெல்லாம் தெரியாது. மேலும் அதை வளர்க்கும் பொறுப்பும் நமக்குக் கிடையாது. அதேப் போல் சிரித்து விளையாடியதை மட்டும் சொல்ல முடிகிறது. கிடைத்த ஏமாற்றங்கள், மூழ்கிய சோகம், சிந்தியக் கண்ணீர், முதுகில் குத்திய துரோகங்கள், பொறாமை, வருத்தம் இதெல்லாம் சொல்லப்படாதக் கதைகள்.

ஆட்டோகிராஃப் எழுத ஆரம்பித்ததும் நிறைய வாசகர்கள் மின்னஞ்சல் மூலம்

தங்களுடைய ஆட்டோகிராஃபை என்னுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள்.

‘அக்காவைப் ‘ பற்றி எழுதிய வாரம் தான் எக்கச்சக்கக் கடிதங்கள்! என்னைப் போலவே அக்காவால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்புறம் தமிழ் மீடியம் வகுப்பிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாறிய சோகத்தை எழுதிய போதும் அதே போன்றச் சோக அனுபவங்களைப் படித்தேன். தீபாவளிக் கதையின் போது ஓலைவெடி, லஷ்மி வெடியை பற்றி எழுதவில்லையே என்று கேட்டு வந்த கடிதங்கள்!

இன்னும் ஒருவர் என்னுடைய ஆட்டோகிராஃப்புக்கு இணையாக ஒவ்வொரு வாரம் வந்தக் கதைகளுக்கும் ஒரு ஆணின் பார்வையோடு எழுத முடியும் என்று எழுதினார்.

சீக்கிரம் முடிக்கப் போகிறேன் என்று எழுதியதற்கு ஹாஸ்டலில் இருந்த அனுபவங்கள் ஒரு முதிர்ச்சியடைந்தப் பெண்ணாக உங்கள் அனுபவங்கள் என்றெல்லாம் தொடரலாமே என்று ஒருவர் ஆலோசனை கொடுத்தார்.பாவம் ஹாஸ்டல் வார்டன்! எழுதலாம். ஆனால் இப்போது இல்லை!எப்போதும் காதல் பாடல்கள் வருகின்றன. ஆனால் காதல் அனுபவங்கள் எதுவும் இல்லையா ? என்று கேட்ட நண்பருக்கு நான் வாழ்க்கையைக் காதலித்ததுப் புரியவில்லையா ? வாரா வாரம் படித்து விட்டு தொடர்ச்சியாக எழுதிய மின்னஞ்சல் நண்பர்கள்! திண்ணையில் எழுதினால் நிறைய பேர் படிப்பார்கள். ஆனால் அதற்கு குமுதம், விகடனில் எழுதுவது போல் வாசகர் கடிதமெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று சொன்ன நண்பரின் கணிப்பைப் பொய்யாக்கிய இணைய வாசகர்களுக்கு நன்றி! நான் எழுதாவிட்டால் என்ன ? இன்னும் நிறைய ஆட்டோகிராஃப் தொடரப் போகிறது என்று ஒரு குருவி சொல்கிறது. நாமே நம் அனுபவங்களைச் சொல்லும் போது அதுவும் பெண்கள் தங்களை பற்றிச் சொல்லும் போது ரொம்ப அலட்டலாகத்தான் அமையும். நான் எப்பவும் ஃப்ர்ஸ்ட் ராங்க்தான் வாங்குவேன். டான்ஸ் ஆடுவேன், பாட்டுப் பாடுவேன் எங்க வீட்டுலே ரொம்ப ஸ்டிரிக்ட் எங்க குடும்பம் முகலாய வம்ச வழித்தோன்றல்கள், எங்கப்பாதான் பில்கேட்ஸ் இப்படி நிறைய அலட்டுவாங்க! கூடிய மட்டும் இதெல்லாம் இல்லாம அடக்கி வாசிக்க முயற்சி செய்தேன். நிறைய சமயங்களில் ஆண்களைக் கிண்டலடித்திருக்கிறேன். அப்படியெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி பெரிய பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் புதுமைப் பெண்ணெல்லாம் இல்லை.அருமையான அண்ணன், தம்பிகள், கணவர், பையன், நண்பர்கள் என்று நிறைய ஆண்கள் என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சமயத்திலும் கைக் கொடுத்திருக்கிறார்கள். உங்க பக்கத்து வீட்டுப் பெண்போல் சராசரி வெற்றியுடன், சாதாரணமாக எல்லாப் பெண்களையும் போல் சமைத்து குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு கொலு வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடும் பெண்தான்! ஒரே மாற்றம்! கொஞ்சம் படிக்கும் பழக்கம் உண்டு! அவ்வளவுதான்! என்னுடைய அனுபவங்கள் எனக்கு மட்டுமே நிகழ்ந்தவையல்ல! அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்த எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைத்ததுதான்! நாம் அந்தச் சமயத்தில் பார்த்தக் கனவுக் கன்னிகளெல்லாம் அண்ணி, அம்மா, பாட்டி வேஷத்தில் வந்து கலர்க்கனவுகள் நிறம் மாறி கருப்பு வெள்ளையாய் ஆனது போல், கருப்பு வெள்ளைக் கனவுகள் கலர்க்கனவுகளாக ஆக முடியாதா ? என்ற நினைவுகளோடே ஆட்டோகிராஃப் கதாநாயகியை இனிக்கும் பதினாறோடு நிறுத்திவிட்டேன்.

கனவும் கற்பனையும் தான் வாழ்வு! நாம் நமக்களித்துக் கொள்ளும் சுகம்! நம்மைச் சுற்றி இருக்கும் சமூகம் மாறி வருவதைப் பார்க்கிறோம். தங்கள் வாழ்வை தாங்களே வகுத்துக் கொள்ளும் சுதந்திரத்தோடு என் வாழ்வை வாழும் உரிமை என்னிடம்தான் இருக்கிறது என்று தங்கள் வாழ்வை தாங்களே வரையறுத்துக் கொள்ளும் மனிதர்களைப் பார்க்கும் போது அந்தத் தன்னம்பிக்கை பிடித்திருக்கிறது.அப்படியெல்லாம் வாழும் சுதந்திரம் இல்லையென்றாலும் வாழ்கின்ற நாட்களின் ஒவ்வொருத் துளியையும் நிறைந்த மனதோடு அனுபவிக்க வேண்டாமா!

ஆகாயத்தில் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கும் போதெல்லாம் பிரபஞ்சத்தில் வேறு ஒரு கிரகம்! அதில் என்னைப் போல் ஒரு மனுஷி வாழ்ந்து கொண்டிருப்பாள். வேறு ஒரு பிரபஞ்சம்! அதிலும் வேறு ஒரு கிரகம்! அதிலும் நம்மைப் போல் மனிதர்கள் வாழ்வார்கள். இல்லையா ? இந்தத் தொடர்ச்சிக்கும் முடிவில்லை. பிரபஞ்சத்துக்கு காலம், இடைவெளி எதுவும் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் செய்யபடும் எதற்கும் ஒரு கால வரையறையுண்டு!

போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதனால்

நானுமோர் கனவோ ?- இந்த ஞாலமும் பொய்தானோ ?

இத்தனை நாள் சிரிக்கச் சிரிக்க எழுதிவிட்டு முடிக்கும் போது ஏன் இத்தனைச் சோகம் ? எல்லாத்துன்பங்களையும் அனுபவித்து விட்டு கடைசிக் காட்சியில் திருமணக் கோலத்தோடு வாய் விட்டு சிரித்ததும் ‘வணக்கம் ‘ போட இது என்ன தமிழ் சினிமாவா ?

உண்மை வாழ்க்கை! தேவதைக் கதைகளில் ‘பிறகு இளவரசனும் இளவரசியும் மகிழ்ச்சியுடன் எப்போதும் வாழ்ந்தார்கள் என்று முடிப்பது ஒரு மரபு போல் வாழ்க்கையும் முடியுமா ? ஆனால் சந்தோஷமாக இருந்தக் காலங்களை எழுதிய சந்தோஷத்தோடு…. முற்றும்.

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்