ஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சித்ரா ரமேஷ்


ஸ்ட்ரைக் லீவும் முடிந்து ஸ்கூல் திறக்கப் போகிறது என்ற நினைப்பே

தலை சுற்றியே வேதனை செய்ததடி! நான் ஸ்ட்ரைக் பண்ணும் நேரம். என்னை டுவல்வ் பிளாக் ஸ்கூல்லயே சேர்த்துவிடு நான் இந்த ஸ்கூல் போக மாட்டேன் என்று தகராறு பண்ண ஆரம்பித்து விட்டேன். ‘என்னடி இது! காலேஜ் சேரும் போது இங்கிலிஷ் மீடியத்தில் படித்தால் ஈசியா இருக்குமேன்னு சேத்தா இப்படி பண்ணறியே ‘என்று அம்மாவுக்கு வெறுத்துப் போய்விட்டது. ஏழாங்கிளாஸ் தாண்டுவதே பிரச்னையாக

இருக்கும் போது காலேஜ் படிப்பையெல்லாம் பற்றி கற்பனை செய்துக் கூட பார்க்க முடியவில்லை. ஹிட் லிஸ்ட் மாதிரி ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டு இவர்களையெல்லாம் எழாங்கிளாஸ் தாண்டவே விடப் போவதில்லை என்று கங்கணம்

கட்டிக் கொண்டு ஒரு அன்புள்ள ஆசிரியை இருப்பதைச் சொன்னேன். அம்மா கேட்ட ஒரே கேள்வி ‘நீ ஃபெயில் ஆற மாதிரி மார்க் வாங்கினாத்தானே அவங்க அப்படி ஏதாவது செய்ய முடியும் ? கொஞ்சம் கஷ்டப் பட்டு படித்து விடு. அதுக்கப்புறமும் அப்படி ஏதாவது ஆச்சுன்னா நான் உங்க ஹெச் எம் கிட்டயே போய் பேசிக்கறேன் என்று பெண்புலியெனப் பாய்ந்து எனக்கு வாக்கு கொடுக்கவும் வேறு வழியில்லாமல்

திரும்பவும் போக ஆரம்பித்தேன். இங்கிலிஷ் நன்றாகப் படிக்க நிறைய இங்கிலிஷ் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து இங்கிலிஷ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். உடனே சார்லஸ் டிக்கன்ஸ், சாமர்செட் மாம்,

ஆர்கே நாராயண் என்று நீங்கள் கற்பனை செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

‘நாடி கோஸ் டு டாய்லாண்ட் ‘ என்ற எனிட் பிளைட்டன் புத்தகம். எனிட் பிளைட்டன் கதைகளிலேயே அந்த வயத்துக்குப் படிப்பதற்கு எக்கச்சக்க புத்தகங்கள் இருக்கின்றன.

அதைப் பற்றிய அறிவெல்லாம் அப்போது கிடையாது. இது எளிமையாக புரியும் படி கலர் கலர் படங்கள் போட்டு அழகாக இருந்தது.அப்புறம் ‘நாடி ‘ வரும் கிண்டெர்

கார்டன் லெவலில் இருந்த புத்தகங்கள் அத்தனையும் படித்து என் மொழிஅறிவைப் பெருக்கிக் கொண்டேன். ஏழாங்கிளாஸ் இங்கிலிஷ் மிடியம் படிப்பதற்கு இந்த மொழியறிவு இருந்தால் போதும் என்ற திடுக்கிடும் உண்மையையும் கண்டு பிடித்தாகி விட்டது. ரொம்ப நல்லா படிக்கிற அருமையான பெண் ஒருத்தி இங்கிலிஷில் இருப்பதை அப்படியே தமிழ் படுத்தி படிக்கும் டெக்னிக்கையும் தெளிவு படுத்திய பிறகு வானம் வசப்பட்டிவிட்டது. அடுத்தது அந்த டாச்சர். அதற்குள் அந்த வகுப்புக்கு

நாங்களும் பழகி அன்னியர்கள் இல்லை என்று எங்கள் எல்லைகளை விரிவுப் படுத்திக்கொண்டு விட்டோம் எல்லோரும் ஒரே வகுப்பு என்ற ஒற்றுமை உணர்ச்சித் தோன்றி ரகசியமாக டாச்சர் எதிர்ப்பு சங்கத்தை ஆரம்பித்து விட்டோம். சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் பி இ வகுப்பின் போது எப்பாடு பட்டாவது விளையாடப் போவது.

தினமும் கடைசி பிரியட் வரைக்கும் வகுப்பை இழுக்கடிக்காமல் சீக்கிரமாக கொடுத்த வேலைகளை முடித்து விட்டு டாச்சரையே வலுக் கட்டாயமாக விளையாட அனுமதி கொடுக்குமாறு செய்வது. ஓரளவிற்கு வெற்றி கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.

பெண் பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பது வெகு சீக்கிரம் நிறுத்தப் பட்டு விடும் விஷயமாக இருந்தது. பத்து பன்னிரண்டு வயது ஆகி விட்டால் தெருவிலெ நின்னு என்ன விளையாட்டு என்று தடுக்கப்பட்டு விடும். அவர்களாகவே விலக ஆரம்பித்து விடுவார்கள். ஸ்கூலில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தால் தான் உண்டு. இதில் நிறைய சோம்பேறிப் பெண்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு பி இ வகுப்பில் கூட மரத்தடியில் உட்கார்ந்து பொழுதைக் கழித்து விடுவார்கள். அதனால் விளையாட்டில் யாராவது ஆர்வம் காட்டினால் பி இ டாச்சருக்கு சந்தோஷமாகி விடும். கேம்ஸ் ரூமுக்குப் போய் எந்த விளையாட்டுக்கு வேண்டுமானாலும் உபகரணங்கள் எடுத்துக் கொண்டு வந்து விளையாட அனுமதி தந்து விடுவார்கள். ஸ்கூலை மிகவும் கட்டுப்பாடோடு ஒழுக்கத்திற்கு முக்கியம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஆசிரியை ஒருத்தி பெண்கள் விளையாடும் போது ஆண்பிள்ளைகள் எட்டிப் பார்க்கிறார்கள். அதனால் பள்ளியின் சுற்றுச் சுவரை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு ஒட்டகமோ, ஒட்டகச் சிவிங்கியோ மட்டும் எட்டிப் பார்க்க முடிந்த சுவரை எப்படி பசங்க எட்டிப் பாத்தாங்க என்பது புரியவில்லை.

பொதுவாகவே எங்க ஊர் பையன்கள் அருமையான பசங்கதான். ஏனென்றால் ஏதாவது வம்பு செய்தால் அட்ரஸோடு பையனைக் காட்டிக் கொடுப்பது எளிது. சின்ன ஊர்தானே! கிட்டத்தட்ட எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்.காட்டிக் கொடுக்க மாட்டோம் என்ற தைரியம் சில பேருக்குத்தான் இருந்தது. ஆனாலும் அந்த வயதிற்கே உரிய ஆர்வம் இல்லாமலிருக்குமா ? காதெலென்னும் ஆசையில்லா பொம்மைகளா ? எப்படியோ மரத்தில் ஏறி சுவரின் மீது வந்து உட்கார்ந்து விடுவார்கள்

போலிருக்கிறது.இதெல்லாம் யாருக்குத் தெரியவேண்டுமோ அவர்களுக்குத் தெரியாது. யாருக்குத் தெரியக் கூடாதோ அவர்கள் கண்ணில் சரியாகப் பட்டுவிடும்.

டெஸ்ட், பரீட்சை இதெல்லாம் எழுதுவதற்கு ஒரு அபத்தமான யுக்தி இருந்தது.

அதை யார் கேட்டாலும் ரத்தம் கொதிக்கும்! இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் எவை ?(4 மதிப்பெண்) என்றக் கேள்வியிருந்தால் நான்கு காரணங்கள்

எழுதினால் நாலு மார்க். இது எவ்வளவு எளிமையான விஷயம். ஆனால் இதை மட்டும்

எழுதினால் 1/2 இல்லை 1 மார்க்தான் கிடைக்கும். நான்கு மதிப்பெண்ணையும் முழுமையாக வாங்க வேண்டும் என்றால் ‘ஒரு ஆஸ்திரிய இளவரசனை செர்பிய புரட்சியாளன் சுட்டுவிட்டான் ‘ என்ற முதல் உலகப் போருக்கான காரணங்களோடு தொடங்கி லீக் ஆஃப் நேஷன் உருவானது வரை எழுதி கடைசியில் இரண்டாம் உலக போருக்கான உண்மைக் காரணங்களை கூட எழுதாமல் விட்டு விடலாம். எழுதப்படும் கருத்துக்களை விட எழுதப்படும் அளவைக்கொண்டு நிர்ணயிக்கப்படும் மதிப்பெண்கள்.

சரித்திரம், பூகோளம் இந்த பாடத்தில்தான் இப்படியெல்லாம் கதை விட முடியும். மற்ற பாடத்தில் எல்லாம் முடியாது என்று முடிவு கட்ட வேண்டாம். த டிஃப்ரன்ஸ் பிட்வீன் பிளாண்ட் அண்ட் அனிமல் செல் என்று கேள்வி கேட்டால் கூட முதல் முதலில் செல் கண்டு பிடித்த ராபர்ட் ஹூக் அசந்து போகிற அளவிற்கு மொத்த பாடத்தையும் எழுதி அசத்தி விடுவார்கள். சயின்ஸ் டெஸ்ட்டில் முப்பதுக்கு இருபத்தியேழு மதிப்பெண்கள் போட்டு விட்டு டெஸ்ட் நோட்டை என்னிடம் கொடுக்கும் போது நம்ப முடியாமல்

திரும்ப அதை என்னிடமிருந்து வாங்கி அங்கேயும் இங்கேயும் மார்க்கைக் குறைத்து

கையில் கொடுத்ததும் உடம்பில் கிடுகிடுவென்று ஒரு ஆவேசம். முகம் சிவந்து நான் கோபமாக இருப்பதை மொத்த வகுப்பும் உணர்ந்தது. சில பேர்தான் எவ்வளவுக் கோபம் வந்தாலும் அதை மறைக்கும் திறமை பெற்றிருந்தார்கள். அந்த மாதிரி வேஷம் காட்டும் திறமையெல்லாம் என்னிடம் கிடையாதே! கோபத்தில் பயமேனும் பேய் பறந்து போய் ‘நீங்க நல்லாப் படிக்கலைன்னு திட்டறீங்களேன்னு நல்லாப் படிச்சு எழுதினாலும்

இப்படி செய்யறீங்க. இந்த டெஸ்ட் நோட்டை என் அம்மா பாக்கணும். நான் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகப் போறேன் ‘ என்று அழுகையும் ஆத்திரமுமாக

பேசினேன் . ஏதோ இதைப் போல் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

டாச்சருக்கு ஏதோ பிரச்சனையை வலுவில் அழைத்து விட்டோம் என்பது புரிந்து விட்டது. எதைப் பற்றியும் கவலைப் படாதவள் போல் எல்லோரிடமும் டெஸ்ட் நோட்டை திருப்பி வாங்கினாள். என் குரூப் லீடர் என்னை மிரட்டி டெஸ்ட் நோட்டை வாங்கி டாச்சரிடம் கொடுத்து விட்டாள். இந்தப் பிரச்சனையை நாமே சமாளிப்போம் என்று அம்மாவிடம் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு வெளிப்படையாக வெறுப்பைக் காட்டுவது குறைந்துவிட்டது. சமாதானக் கொடியாக பள்ளி ஆண்டு

விழா குழு நடனத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். என்னால் அந்த டாச்சரோடு எப்பவுமே இயல்பாக பழக முடியவில்லை. அதற்குப் பிறகு வகுப்பில்

என் பேச்சு எடுபடும் நிலைமை வந்த போது வந்தாரை வரவேற்பது நம் பண்பாடு என்பது நம் வகுப்பின் தனித்துவமாக இருத்தல் வேண்டும் என்று எல்லோரையும் ஆற்றுப் படுத்தி எட்டாம்வகுப்பு , ஒன்பதாம்வகுப்பு என்று தொடர்ந்த புதுமுகங்களையெல்லாம் எங்களில் ஒருவராக அன்புடன் வரவேற்றோம். நல்லவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் நல்ல குணங்களை வெளிக் காட்டவேண்டாமா ?அதில் ஒரு முயற்சியாக இது. ஆனால் அந்த மாதிரி வந்த புது முகங்களெல்லாம் அப்படி ஒன்றும் வழி தவறிய வெள்ளாட்டுக் குட்டியாய் இல்லை!

ஏழாம் கிளாஸ் தேர்வு எழுதி விட்டு கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.

அம்மா விடவில்லை. எதுக்கு அந்த டாச்சர் இப்படி சொல்லிக் கொண்டேயிருந்தாள் ?

என்று விசாரித்துத்தான் பார்ப்போமே என்று விசாரித்து விட்டு வந்தாள். அந்த கிளாஸிலே எல்லாரும் ரொம்ப பிரமாதமாகப் படிக்கும் மாணவிகள். அதில் கொஞ்சம் சுமாரா படித்தால் கூட அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னதைக் கேட்டு அப்படி என்ன எல்லோரும் பிரமாதமாக மார்க் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தால்

அந்த பிரமாதமான மார்க் ரேஞ்சில் தான் நானும் வாங்கியிருந்தேன். அப்புறம் எப்படி ஃபெயில் ஆக முடியும் ? வாழ்க்கையில் ஒப்பீடு செய்தே பாதிப் பேர் இப்படித்தான்

துன்பங்களைத் தேடிப் போகிறார்களா ? தமிழ் மீடியத்தில் படித்திருந்தால் நல்ல மார்க் எடுக்க முடியும். அதே இங்கிலிஷ் மிடியம் வகுப்புக்கு வந்து விட்டால் சுமாரான மார்க் வாங்க முடியும் என்றால் நம் கல்வித் தரத்திலேயே ஏதோ தப்பு இருக்கிறது. இல்லை பாவம் அந்த ஹிட் லிஸ்ட்டில் இருந்த நான்கு பேர் ஃபெயில். டூரண்டு பேர் ஸ்கூல் மாற்றிக் கொண்டு போய் விட்டார்கள்.

ஒருத்தி தைரியமாக அங்கேயே தொடர்ந்தாள். என்னுயிர்த் தோழி ராணி கிரிஜா என்ன

ஆனாள் என்றே தெரியவில்லை. என்னைத் தவிர யாரிடமும் பேசக் கூட மாட்டாள். அந்த டாச்சர் என்ன சொன்னாலும் தலையைக் குனிந்து கொண்டு கேட்டுக் கொண்டு இருப்பாள். சபரி மலைக்குப் போக வேண்டும் என்று சொல்லி முன்னாலேயே லீவு கேட்டால் கிடைக்காது என்று சொல்லாமல் பத்து நாள் லீவு எடுத்துக் கொண்டு போய்விட்டாள். ஸ்கூலுக்குத் திரும்பி வரும் போது அவள் அப்பாவையும் கூட்டிக் கொண்டு வந்தாள். அவள் அவளை விட சாதுவாய் டாச்சருக்குப் பயந்து பயந்து பேசினார். ராணி கிரிஜா பாஸா ஃபெயிலா என்பது கூடத் தெரியவில்லை. எந்த

ஸ்கூலுக்குப் போனாலும் ஒன்பதாம் வகுப்புப் படிக்க இந்த ஸ்கூலுக்குத்தான் வர வேண்டும் என்று நினைத்துக் காத்திருந்தேன். அக்கம் பக்கத்து வீடுகளில் தான் போய் விளையாட முடியும் அவளைத் தேடி அவள் வீடு வரைக்கும் போய்ப் பார்ப்பதெல்லாம் முடியாது. அவள் இருக்கும் அட்ரஸ் கூடத் தெரியாது.ஆனால் அவள் வரவில்லை. எங்கே போனாளோ ? என்றோ ஒரு நாள் அபூர்வமாக கிடைத்த மகிழ்ச்சியான

தருணத்தில் ‘பிச்சி மந்தாரம் துளசி இச்சக மாலைகள் சார்த்தி குருவாயூரப்பா நின் பதம் சரணம் ‘ பாட்டை பாடிக் காட்டினாள். வரிகள் சரியாக நினைவில்லை. கொஞ்சம்

தமிழ் படுத்தி விட்டேனோ ? கிட்டத்தட்ட இந்த வரிகள்தான்! மயிற்பீலி சூடிக்கொண்டு

என்று தொடரும். கண்ணன் பாட்டு எதைக் கேட்டாலும் அவள் நினைவு வருவதை

தவிர்க்க முடியவில்லை. எனக்கு தற்செயலாக இதைப் பற்றி விசாரித்து தைரியம் சொன்ன அம்மா, கொஞ்சம் வலிமையுள்ள பின்னணி இருந்தது. பாவம் இதெல்லாம் இல்லாததினால்தான் அவள் எங்கள் வகுப்பை விட்டு வெளியேற நேர்ந்ததோ ?

அடுத்த வருடம் நிஜமாகவே தமிழ் சொல்லித் தர ஒரு தமிழ் பண்டிதை,

மாத்ஸ் டாச்சர் போன்ற விஷயங்கள் இயல்பாய் நடந்து விட அந்த டாச்சருக்கும்

அப்படி ஒன்றும் வெறுப்பு இல்லாதவள் போல் இதை பற்றியெல்லாம் மறந்து விட்டவள் போல் சாதாரணமாக நடந்து கொள்ள முயற்சி செய்தாலும் நான் ஸ்கூல் முடிந்து போகும் வரை அந்த டாச்சரைக் கண்டாலே வேறு வழியில் போவது பார்க்காதது போல்

போவது என்று தவிர்த்துக் கொண்டுதான் இருந்தேன். இதற்கப்புறம் வேறேந்த டாச்சர் எது செய்தாலும் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. காரணம் நல்லாப் படிக்காத போதுதான் ஒரு மாணவனுக்கு டாச்சர் தேவை.

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>