ஆசான் விருது ஏற்புரை

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

சுந்தர ராமசாமி


சென்னை ஆசான் நினைவுச் சங்கத்தினரால் நிறுவப்பட்டிருக்கும் கவிதைக்கான இந்த ஆண்டுக்குரிய ஆசான் பரிசைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன். கேரள அமைச்சர் ஸ்ரீனிவாசன் அவர்கள் எனக்கு பரிசு அளித்துப் பாராட்டினார். பேராசிரியர் கணேசன் அவர்கள் சான்றிதழ் படித்து பாராட்டினார். தமிழறிஞர் நல்லபெருமாள் அவர்களும் என்னைப் பற்றி ஒரு சில கருத்துக்களை இங்கு கூறினார்கள்.

அவற்றை ஆராயும் மனநிலையில் இப்போது நான் இல்லை.

என்னைப் பாராட்டும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலுமே பொதுவாக அக்கருத்துகள் அமைந்தன என்று எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவர்களுடைய இன்றைய பாராட்டுரைகள் விமர்சன ரீதியான மதிப்புரையாக நாளை ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் எனது எதிர்காலப்பணிகள் ஓங்க வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறேன்.

‘நடுநிசி நாய்கள்’ என்ற என் கவிதைத் தொகுதிக்காக இப்பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அக்கவிதைகளின் தரம் பற்றியோ அல்லது எனது வேறு படைப்புகளின் தரம் பற்றியோ இப்போது சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை.

தமிழில் 1959க்குப் பின் நிகழ்ந்த புதுக்கவிதை இயக்கத்தின் இரண்டாவது அலையில் எளிய அளவில் நானும் பங்கு பெற்றிருந்தது இப்போது திரும்பிப் பார்க்கும்போது எனக்கு மனநிறைவைத் தருகிறது. இலக்கியப் புலமையினாலோ, தீர்க்கத் தரிசனத்தினாலோ, அறிவுச் சுடராலோ நான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. கருப்பையில் வளரும் குழந்தை தன் நாபிக் கொடி வழியாகத் தாயுடன் கொண்டிருக்கும் பிணைப்பு போல் கலைஞன் அவன் வாழும் காலத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறான் என்ற என் அடிப்படை நம்பிக்கையிலேயே என் படைப்புகள் அனைத்தும் உருவாகியிருக்கின்றன. நான் வாழ்ந்த காலத்தின் முன் என் படைப்புகளை நெருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக புதுக்கவிதை இயக்கத்திலும் நான் ஈடுபாடு கொண்டேன். படைப்பின் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை அது.

கலாச்சார இந்தியா மொழி வழியில் பல கூறுகளாகப் பிளந்து கிடக்கிறது. மலையாளமும் தமிழும்போல் பொதுத்தன்மை மிக அதிக அளவு கொண்ட மொழிகளில்கூட கலாச்சாரப் புரிதல்கள் திருப்திகரமாக இல்லை. நவீனத் தமிழ் இலக்கியத்திள் மீது நான் எந்த அளவு ஆர்வம் கொண்டிருக்கிறேனோ அந்த அளவுக்கு நவீன மலையாள இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருக்கிறேன். பாரதியும் புதுமைப்பித்தனும் என்னைப் பாதித்திருப்பது போலவே தகழியும், எம். கோவிந்தனும், சி.ஷே. தாமஸும் என்னைப் பாதித்திருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியின் காரணமாக, தமிழின் ஆகச் சிறப்பானவற்றை மலையாளத்திற்குக் கொண்டு போவதும், மலையாளத்தின் மேலான சாரத்தைத் தமிழுக்குக் கொண்டு வருவதும் எப்போதும் என் கனவாக இருந்து வந்திருக்கிறது.

இந்த வகையில் நான் செய்ய எண்ணியிருப்பது மிக அதிகமும், செய்திருப்பது மிகக் குறைவும் ஆகும்.

இந்தப் பரிசு பெறும் ஊக்கத்தில் என் பழைய கனவை இப்போது நான் புதுப்பித்துக் கொள்கிறேன்.

இந்த இரு மொழி மக்களும் தங்கள் கலாச்சார உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் நான் ஒரு சில முயற்சிகள் இனி செய்யக்கூடும் என்றால் இந்தப் பரிசு பெற்றதற்கான அர்த்தம் முழுமையடைந்துவிடும் என்று நினைக்கிறேன்.

இப்பரிசை எனக்கு அளித்த ஆசான் நினைவுச் சங்கத்தினருக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1987

kalachuvadu@sancharnet.in

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி