அல்லி-மல்லி அலசல்- பாகம்3

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

பவளமணி பிரகாசம்


அல்லி: என்ன மல்லி, தலைய பிடிச்சிகிட்டு உட்காந்திருக்க ?

மல்லி: நேத்து ராத்திாி ஒரு ஹோட்டல்ல நடந்த விருந்துக்கு போய்ட்டு வந்தேன். அங்க இசைகருவிகள் சத்தமா ஒலிச்சதுல இன்னும் தலைக்குள்ள இடிக்கிற மாதிாி ஒரு வலிய என்னால தாங்க முடியல.

அல்லி: உனக்கு மட்டுமில்ல, இந்த சத்தமான, ஆரவாரமான இசை நிறையப் பேருக்கு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, ஹோட்டல்ல, பொழுதுபோக்கு இடங்கள்ல, கடைத்தெருவில எங்க போனாலும் இந்த இசை வந்து காதுல அறையத்தான் செய்யுது.

மல்லி: ஆமா, கார்ல போகும் போதும் இசை வேண்டியிருக்கு, வேலை செய்யும் போதும் கூட காதுல வாக்மேனோடதான் நிறையப் பேர் திாியறாங்க.

அல்லி: வீட்டுல இந்த இளந்தலைமுறையினர் அதிர வைக்கிற இசை மூலமா அவங்களோட முத்திரையை பதிக்க முயற்சி செய்றது மாதிாி இருக்கு.

மல்லி: இந்த அளவு டெசிபல் தொடர்ந்து தாக்கினா செவிப்பறை சேதமாயிடும்னு அறிவிப்புகள் வந்தாலும் இந்த ஒலி மாசுப்படுத்தல் தொடருது, கூடிக்கிட்டேயும் போகுது. யாருக்கும் காதை காப்பாத்திக்கிற அக்கறை இருக்கிற மாதிாி தொியல.

அல்லி: நாடியை நீவி சாந்தப்படுத்துற மாதிாி இதமான, மெல்லிய சங்கீதம் இருக்கு, அதை விட்டுட்டு நரம்பை முறுக்கேத்தி விலுக் விலுக்குன்னு சுயநினைவில்லாம ஆட வைக்கிற ராட்சஸ இசையை நாடுறவங்கள பாத்தா வேடிக்கையா இருக்கு.

மல்லி: மனிதர்களோட ரசனையிலதான் எண்ணிப் பாக்கமுடியாதபடி அத்தனை வேறுபாடு இருக்கறத்தான் இது காட்டுது. இசை ரசனை மட்டுமா மாறிகிட்டு வருது ? பாடல்களின் வாிகள கேட்டியா ? முக்கால்வாசி காது கூசுற மாதிாி பச்சையா, கொச்சையாயில்ல இருக்கு ? சிருங்கார ரசம் அவசியமானதுதான். ஆனா இலை மறை, காய் மறையா அத வெளிப்படுத்துன விதத்துல இருக்குற அழகு இப்படி அப்பட்டமா, அதிரடியா வெளிப்படுத்துறதுல இருக்குறதா எனக்குத் தோணல.

அல்லி: இப்படி சொல்றவங்கள தலைமுறை இடைவெளின்னு சொல்லி ஒதுக்கித் தள்ளிட்டு சிறுசுங்க போய்கிட்டே இருக்குதுங்க.

மல்லி: பொியவங்க சொல்றத காதுலயே போட்டுக்கிறதில்லைன்னு சங்கல்பம் செய்துகிட்டவங்க மாதிாியில்ல நடந்துகிறாங்க ? செவிடன் காதுல சங்கூதுனது மாதிாி இருக்கு.

அல்லி: ஆமா, மல்லி. யோசிச்சிப் பாத்தா, இறைவன் கொடுத்த நம் ஐம்புலன்கள்லயும் செவிதான் மிகச் சிறப்பானதுன்னு தோணுது.

மல்லி: அல்லி, நீ சொல்றது ரொம்ப சாி. நம்மோட வாழ்க்கைல செவியோட பங்கு ரொம்ப பொிசு, ரொம்ப முக்கியமானது. ஒலிகள் இல்லாத ஒருவர் உலகம் மொழியில்லாத ஊமை உலகமாகவும் போயிருமே!

அல்லி: உணவுதான் அடிப்படைத் தேவைன்னு சொல்லுவோம், ஆனா அதைவிட அதிக முக்கியத்துவத்த வள்ளுவர் செவிப்பயனுக்கு கொடுக்கிற விதத்தில, ‘செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் ‘னு சொல்லியிருக்காரு.

மல்லி: செவிக்கு உணவா நம் காதுகள்ல அன்றாடம் பல சேதிகள் வந்து சேருது. பலது ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில விட்டுறலாங்கிற வகை. சிலது உள்ளே வாங்கி நினைவில இருத்தி பயன்பட வேண்டியது, சிலது இன்னும் பல பேர் காதுகளை சென்றடைய வேண்டிய நல்ல விஷயங்கள்.

அல்லி: மல்லி, நீ சொல்றத கேட்டதும் ஒரு மிகப் பழைய திரைப்படத்தில இத ஒரு நகைச்சுவை காட்சியா விளக்கினது ஞாபகம் வருது.

மல்லி: அப்படியா ?

அல்லி: ஆமா. பாக்க ஒரே மாதிாி இருக்கிற 3 உருவ பொம்மைகளோட வித்தியாசங்களை கண்டுபிடிக்கச் சொல்லி ஒரு போட்டி. போட்டியில ஜெயிச்சவர் ஒரு ஈர்க்குச்சியை ஒரு பொம்மையின் ஒரு காதுக்குள்ள விடும்போது அது மற்றொரு காது வழியா வெளியே வந்துரும். அடுத்த பொம்மையின் ஒரு காதுல விட்டப்ப வாய் வழியா வெளிய வந்துரும். மூணாவது பொம்மையின் ஒரு காதில குச்சியை விட்டப்ப அது இன்னொரு காது வழியாவும் வெளிய வரல, வாய் வழியாவும் வரல. உள்ளவே நின்னுகிச்சி. ரகசியம் காக்க எத்தனை பேருக்கு முடியும்னு நினைச்சா சிாிப்பு வருது.

மல்லி: பெண்கள் காதுல போட்ட ரகசியம் நிக்காதுன்னு ஒரு பழி வேற இருக்கு. யார்கிட்டயாவது சொல்லாட்டி தலையில்ல வெடிச்சிருமாம்.

அல்லி: அதையும் ஒரு பழைய திரைப்படத்தில நகச்சுவையா காட்டினாங்க. ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு கழுதைக்காதாம். ஆனா யாருக்கும் தொியாதபடி மூடி மறைச்சிகிட்டாராம். ஆனா அவருக்கு முடி திருத்தும் நாவிதனுக்கு மட்டும் இந்த ரகசியம் தொியும். அவன் அதை தன் மனைவிகிட்ட ரகசியமா வச்சிக்க சொல்லி வெளியிட்டதும் அவளுக்கு அந்த ரகசியத்த வெளிய சொல்லாம இருக்கிறது பொிய உடல் அவஸ்தையாவே வந்து துடிக்கவே அந்த நாவிதன் சமயோசிதமா யோசிச்சி ஒரு குழி தோண்டி யாருக்கும் தொியாம அவள அதுக்குள்ள ரகசியத்த சொல்லச் சொல்லி குழியை மூடிட்டான். வேடிக்கை என்னன்னா குழிக்குள்ள இருந்த ஒரு விதை முளைச்சி நாளடைவில பொிய மரமாகி, அந்த மரத்த அறுத்து அதில ஒரு மத்தளம் செஞ்சி அத ராஜாவோட அரச சபையில ஒரு கலைஞர் தட்டும் சமயத்தில அது ‘ராஜா காது கழுதைக் காது, ராஜா காது கழுதைக் காது ‘ அப்படின்னு ஒலிச்சிதாம்.

மல்லி: ரொம்ப வேடிக்கையாத்தான் இருக்கு, அல்லி, இந்தக் கதை. காதால கேட்குற சங்கதிகளை என்ன செய்யணும்னு சீர்தூக்கிப் பாக்குற திறமைய, பக்குவத்த நாம கண்டிப்பா வளத்துக்கணும். ‘எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ‘ன்னு வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே.

அல்லி: பின்னே, கேழ்வரகிலே நெய் வடியுதுன்னா கேட்கிறவனுக்கு எங்க போச்சி புத்தின்னு கேட்கமாட்டோமா என்ன ?

மல்லி: வாய் ஒன்னுதான், காது ரெண்டு ஏன் தொியுமா ? குறைவா பேசி, நிறைய கேட்டு ஞானத்தை வளக்குறதுக்காக.

அல்லி: ரொம்ப சாி.அளந்து பேசுற கொஞ்சத்தையும் இரவு நேரத்துல முழுசா கைவிடணும்னு ‘பகலிலே பக்கம் பாத்து பேசு, இரவிலே அதுவும் கூடாது ‘ன்னு பொியவங்க யோசனை சொல்லியிருக்காங்க, ஏன்னா சுவருக்கும் காது இருக்குமாம்.

மல்லி: சாியாப் போச்சி! இப்படித்தான் காதே இல்லாத பாம்பை வம்புக்கிழுக்கிற மாதிாி செவிப்புலன் கூர்மையா இருக்கிறவங்களுக்கு கடுப்போட ‘பாம்புச்செவி ‘ன்னு பட்டப்பேர் வைக்கிற பழக்கமும் இருக்கு.

அல்லி: மல்லி, பொிய காதுள்ளவங்களுக்கு, ஆனைமுகனை நினைச்சோ என்னவோ, ஞானம் அதிகம்னு ஒரு ஆதாரமில்லாத கருத்தும் இருக்கு!

மல்லி: அப்ப சாி, இனிமே எல்லோர் காதையும் கவனிச்சி ஒரு கணிப்பு செஞ்சிர வேண்டியதுதான்!

அல்லி: வீணா வம்பில மாட்டிக்காத, மல்லி. இன்னொன்னு தொியுமா ?பகல்ல பொழுது போகாதவங்க வெறும் வாய மெல்லாம அவல் மாதிாி பல ரகசியங்கள பகிர்ந்துக்கிறாங்க. அதாவது அடுத்தவங்க ‘காதை கடிக்கிறாங்க ‘!ஆனா ராத்திாியில மனைவி கணவன் காதுல ரகசியமா பேசுறத ‘தலையணை மந்திரம் ‘ன்னு சொல்லி பல மாமியார்கள் அநாவசியமா பயத்தோடயும், சந்தேகத்தோடயும், எதிர் போர் நடவடிக்கையுமா அலையுறது கூட்டுக்குடும்ப காலங்கள்ல சகஜம்.

மல்லி: ஆமாமா. மனைவி ராத்திாி கணவன் காதுல தலையணை மந்திரம் ஓதுன மாதிாி சுவாமிமலைல குமரன் தகப்பன் காதுல ஓதுனது பிரணவ மந்திரம்.

அல்லி: அந்த ‘விடையேறிய ‘சிவனை, ‘தோடுடைய செவியன் ‘ன்னு சொன்னது மாதிாி அபிராமி பட்டர் வணங்கிய அம்மனும் வசதியா வைரக்கம்மல் அணிஞ்சிருந்ததால தன் மேல பூரண நம்பிக்கை வச்சிட்ட, இக்கட்டுல மாட்டிகிட்ட பக்தனை காப்பாத்துறதுக்கு ஒரு கம்மல கழட்டி வானத்துல வீசி பெளர்ணமி உண்டாக்கிட்டாங்களாம்.

மல்லி: அம்மன் காதுகள அலங்காிக்கிற வைரக்கம்மல்களுக்கு சாமான்யப் பெண்கள் ஆசைப்பட்டா நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில மதுரத்திடம் கேட்ட மாதிாி, ‘சீமைக்கமலம் போடாட்டா காது கேட்காதோ ‘அப்படின்னு கேட்க வேண்டியிருக்கும்.

அல்லி: அடடா!காதைப் பத்தி கதைச்சிகிட்டு இருந்ததில பொழுது ஓடிருச்சி. வீட்டுக்காரர் வர்றதுக்குள்ள சமைச்சி முடிக்கலைன்னா செவிட்டுல அறை விழுந்திரும்!

மல்லி: அப்புறம் தாமஸ் ஆல்வா எடிசன் மாதிாி செவிடாயிருவே!

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்