அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

அரவிந்தன் நீலகண்டன்


தன்னுணர்வு (consciousness) மானுடத்தின் நெடுநாளைய மர்மங்களுள் ஒன்று. அனைத்து மானுட பண்பாடுகளிலும் அதனைக் குறித்து சிந்திக்காத தத்துவஞானிகள் இல்லை எனலாம். தன்னுணர்வின் இயற்கை என்ன ? விலங்குகள் தன்னுணர்வு கொண்டவையா ? இயந்திரங்கள் தன்னுணர்வு பெற முடியுமா ? பல தலைமுறைகளாக சிறந்த சிந்தனையாளர்கள் பதிலளிக்க முயன்றுவரும் கேள்விகள் இவை. இக்கேள்விகளுக்கான பதில்கள், முரண்படும் பார்வைகள் மற்றும் நிலைபாடுகள் சார்ந்தவை. இன்றைய தேதியில் இவற்றுள், இதுதான் சரி இது தவறு என திடமாக பதிலளிக்கும் நிலையில் அறிவியல் இல்லை. பல நூற்றாண்டுகளாக தன்னுணர்வு குறித்த விசாரம் தத்துவஞானிகள் மட்டுமே காலடி வைக்கும் புலமாக விளங்கியது. இருபதாம் நூற்றாண்டில்தான் அறிவியலாளர்கள் தன்னுணர்வை ஒரு ஆராய்தற்குரிய அறிவியல் கேள்வியாக காணமுற்பட்டனர். தன்னுணர்வு என்பது மூளையின் இயங்குநிலையினோர் விளைவா எனும் கோணத்தில் ஆராய்ச்சிகள் எழுந்தன. அது ஒரு (நியூட்டானிய) இயற்பியல் சார்ந்ததோர் இயக்கத்தொடரால் உருவாவதா எனும் அடிப்படையில் ஆராய்ச்சிகள் வடிவமைக்கப்பட்டன. நம் சிந்தனையோட்டங்களும், உணர்வுகளும் நம் மூளையிலிருந்தே எழுகின்றன. நம் நனவிலும், கனவிலும், ஆழ் உறக்கத்திலும் நம் மூளையின் இயக்கத்தன்மை மாறுகிறது. மேற்கூறிய முந்நிலைகளிலும் நாம் நனவினை மட்டுமே திடமான தன்னுணர்வு கொண்ட நிலையாக உணர்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் முதல் வாட்ஸன் வரை

அமெரிக்க உளவியலின் தந்தை என கருதப்படும் வில்லியம் ஜேம்ஸ் தன்னுணர்வை ஓர் நிகழ்வோட்டமாகக் (process) கருதினார். ஆயின் உளவியலின் நவீன காலகட்டமெனக் கருதப்படும் காலத்தில் ‘நடத்தையியல் ‘ (behaviourism) எனும் முறையின் அடிப்படையில் மனவியல் நிகழ்வுகளை அறிதலே முக்கியமானதெனப்பட்டது. நடத்தையியலின் பார்வை நியூட்டானிய இயற்பியலின் உளவியல் சகபாடி எனலாம். கட்டுப்பாடானதோர் பரிசோதனை சூழலில் நோக்கப்பட்டு அலகிடப்படாத எதுவுமே அறிவியல் எனும் கட்டுக்கோப்புக்குள் கொண்டு வர தகுதியற்றதெனும் திடமான நிலைபாடு நடத்தையியல் உளவியலாளர்களுக்கு இருந்தது. எனவே கட்டுப்பாடானதோர் பரிசோதனை சூழலில் பரிசோதனையாளரால் தனித்து நோக்கப்படவும் அலகிடப்படவும் முடியாத தன்னுணர்வினைக் குறித்த உளவியல் நகர்வுகள் மனோன்மணியத்தின் கருணாகரர்-நிஷ்டாபரர் வாதங்களைப் போல கறிக்குதவாதவை என கருதப்பட்டன. பிரசித்தி பெற்ற நடத்தையியலாளர் ஜான் வாட்ஸனின் வார்த்தைகளில்: ‘ நடத்தையியலைப் பொறுத்தவரை தன்னுணர்வு என்பது வரையறுக்கவோ பயன்படுத்தவோ முடியாததோர் கருத்தாக்கம். அது பழங்காலத்தில் ‘ஆன்மா ‘ என அழைக்கப்பட்டதற்கான மற்றொரு வார்த்தை மட்டுமே. ‘ ஆக நவீனத்துவம் கோலோச்சிய காலங்களின் பல பத்தாண்டுகளாக உளவியலின் மையவோட்டத்தில் தன்னுணர்வு ஒதுக்கப்பட்டது.(விளிம்புகளில் தன்னுணர்வு குறித்த சில முக்கிய கருத்தாக்கப்புரட்சிகளே நிகழ்ந்தன என்றாலும் அதைப் பின்னர் ஓர் சந்தர்ப்பத்தில் காண்போம்.)

ஒரு தீண்டாமையின் முடிவு

1950களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அறிதலியலாளர்கள் (Cognitive scientists) உள்-நிகழ்வோட்டங்களுக்கு உளவியல் அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் குறித்து கூறலானார்கள். என்ற போதிலும் தன்னுணர்வு என்பதென்னவோ பொதுவாக உளவியலாளர்களுக்கும் மற்ற அறிவியலாளர்களுக்கும் ஒரு விலக்கப்பட்ட புலமாகவே இருந்து வந்தது. இன்று நிலை புரட்சிகரமாக மாறியுள்ளது. ‘தத்துவவாதியின் அதீதக்கற்பனை ‘ எனும் முத்திரையுடனான தீண்டாமை விலகி அறிவியலின் பல முன்னணி புலங்களின் சிறந்த மனங்கள் ஒன்றுகூடி தன்னுணர்வின் இயற்கைக் குறித்து சிந்திக்கின்றனர். நரம்பியங்கியல், உளவியல், க்வாண்டம் இயற்பியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய புலத்தினர் தத்துவவாதிகளுடன் அமர்ந்து இப்பெரும் மர்மத்தினை பல்வேறு பரிமாணங்களூடாகச் சென்று ஆய்வதெவ்வாறு என ஆலோசிக்கின்றனர்.

ஒளிவட்டங்களை உணர்வதிலிருந்து

சில அறிவியலாளர்கள் தன்னுணர்வின் அனைத்து தன்மைகளையும் விளக்கிடும் ஒற்றை விளக்கவியல் என்பதை சாத்தியமல்ல என்று கருதுகின்றனர், மாறாக தன்னுணர்வு அதன் பல்வேறு வெளிப்படு தன்மைகளில் தனித்தனியாக ஆராயப்பட்டு அத்தன்மைகளின் அதன் இயக்கவியல் அறிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்துவருங்கால் வெகுகால பயணத்தின் பின் இத்தனித்தனி கண்டுபிடிப்புகள் குவியும் ஒரு குறிப்பிட்ட புள்ளியினை நாம் அறிந்து கொள்ளலாம் என அவர்கள் கருதுகிண்றனர். தாவீஸின் கலிபோர்னிய பல்கலைக்கழக உளவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் எஃப்ரான் ஒரு பரிசோதனையை நடத்துகிறார். பரிசோதனைக்கு ஆட்படுத்தப்படுபவருக்கு 20 மில்லி விநாடிகளுக்கு ஒரு செந்நிற ஒளி வட்டம் காட்டப்படுகிறது. அதனை தொடர்ந்தடுத்து அடுத்த 20 மில்லி விநாடிகளுக்கு ஒரு பச்சைநிற ஒளிவட்டம் காட்டப்படுகிறது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு ஒரு மஞ்சள் நிற ஒளிவட்டம் காட்டப்பட்டதாகவே உணர்கின்றனர். அதாவது ஒரே நேரத்தில் செந்நிற ஒளிவட்டமும் பச்சைநிற ஒளிவட்டமும் காட்டப்பட்டதாகவே உணர்கின்றனர். அதாவது இரு பார்வை-தொடர்பான உள்ளீடுகளும் (visual inputs) ஒரே நேரத்தில் மூளையில் பதனப்படுத்தப்படுகின்றனவேயன்றி தனித்தனியாக அல்ல என இவைக் காட்டுவதாக எஃப்ரான் தெரிவிக்கிறார். இரு உள்ளீடுகளும் ஒருமைப் படுத்தப்படுகின்றன. உள்ளீடுகளைப் பதனப்படுத்தல் எனும் நிகழ்வு நிச்சயமாக பச்சை நிற உள்ளீட்டிற்கு பின்னர்தான் ஒரு திடத்துவ நிகழ்வோட்டமாகத் தொடங்குகிறது. இந்நிகழ்வோட்டம் 60 முதல் 70 மில்லிசெகண்ட்கள் எடுத்துக் கொள்ளுமோர் நிகழ்வோட்டமாகும். ஆக, பார்வையூடாக வரும் உள்ளீடுகளின் தன்னுணர்வு நிகழ்வோட்டங்கள் எடுத்துக்கொள்ளும் கால அளவு நம்மால் அறியப்படமுடிகிறது என்பது எஃப்ரானின் அனுமானம். இவ்விதமாக தன்னுணர்வு உருவாக்கத்தின் ஒவ்வோர் இயக்கத்தன்மையும் ஆராயப்பட்டு வெளிப்படும் புதிர் துண்டுகள் இணைக்கப்பட்டு இறுதியாக தன்னுணர்வின் முழு வடிவம் நமக்கு கிட்டும் என்பது ஒரு சாராரின் வாதம்.

க்ரிக் & கோச்

தன்னுணர்வின் மற்றொரு தன்மை பல்வேறு வகையான புலன்களின் உள்ளீடுகளை ஒருமைப்படுத்துதல். உதாரணமாக, நெய்மீனின் மணம் கொண்ட நீல பிளாஸ்டிக் பெட்டி என் முன்னே இருக்கிறது. இப்பொழுது மீன் மணமும், நீல நிறமும், பெட்டியின் வடிவமும், அதன் பிளாஸ்டிக் தன்மையும் என் மூளையின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக பதனப்படுத்தப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டு பின்னர் ஒரு பொருளின் பல்வேறு தன்மைகளான உணர்வாக்கப்படுகிறது. புகழ்பெற்ற அறிவியலாளரான (அண்மையில் மரணம் அடைந்த) பிரான்ஸிஸ் க்ரிக்கும், மற்றும் உயிர்-இயற்பியலாளரான

கிறிஸ்டாப் கோச்சும் தன்னுணர்வினை அது வெளிப்படும் மிக எளிய செயலோட்டங்களில் அறிய முயல்வது தன்னுணர்வின் மைய இரகசியத்தை முடிச்சவிழ்க்க மிகவும் உதவக்கூடும் எனக் கருதுகின்றனர். ஆனால் பார்வையுணர்வின் உருவாக்கத்தினைமிக

எளிய செயலிழையும் கூட மிகவும் சிக்கலான கட்டமைப்பாகவே உள்ளது என்பதால் க்ரிக் & கோச்சின் கனவு நனவாக மானுடம் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் அல்லது அபரிமித தொழில்நுட்ப உபகரணங்கள் அதனை விரைவுபடுத்தலாம். நரம்பு மண்டல செல்களான நியூரான்களில் நடக்கும் உள்ளீடுகளின் கடத்திச் செயல்பாடுகளை ஆராய்வோரும், மூளை இயக்கத்தினை ஆராய்வோரும், உளவியலாளரும், விலங்கின நடத்தைகளை ஆராய்வோருமென ஒரு விசித்திர கலவையினரின் கூட்டுமுயற்சி மூலம்தான் ஓர் எளிய தன்னுணர்வு வெளிப்பாடு கூட அதன் முழுபரிமாணங்களுடன் விளங்கப்படமுடியும்.

தன்னுணர்வின் கடினக்கேள்வி (Hard problem)

இத்தனை கடின முயற்சிகளுக்கும் பின்னர், ‘இந்த ஆராய்ச்சியெல்லாம் நல்லதுதான் ஆனால் மூளைகளையும், நியூரான்களையும் அவற்றிற்கும் நடத்தைகளுக்குமான தொடர்புகளையும் படிப்பதன் மூலம் நாம் எவ்விதத்திலும் தன்னுணர்வின் இரகசியத்தை மர்மத்தை அறிந்துகொள்ள முடியாது ‘ என எவரேனும் கூறினால் எப்படி இருக்கும் ? அவ்வாறுதான் டேவிட்.ஜெ.சால்மர்ஸ் கூறுகிறார். சால்மர்ஸ் கணிதவியலாளராக தம் அறிவுலக வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் தத்துவம் மற்றும் அறிதலியல் புலங்களால் ஈர்க்கப்பட்டவர். தன்னுணர்வு தொடர்பான அறிவியலின் தேடலுக்கு அவரளிக்கும் தத்துவ பின்புலம் முக்கியமானதாக கருதப்படுகிறது. தன்னுணர்வின் மைய மர்மம் ஏன் முன்கூறிய ஆராய்ச்சிகளால் அறியப்பட முடியாததென அவர் கருதுவது, தன்னுணர்வு ஓர் புனித இறை இரகசியம் என்பதால் அல்ல. தன்னுணர்வை அறிய நரம்பியங்கியலோ அல்லது நரம்பியக்கம் சார்ந்த எந்த அறிவியல் புலமும் சரியான கருவியாக இருக்கமுடியாதென்பதாலேதான்.

சால்மர்ஸ் தன்னுணர்வைச் சார்ந்த கேள்விகளை ‘எளிதான கேள்வி ‘, ‘கடினக்கேள்வி ‘ என இருவகையானவையாகப் பிரிக்கிறார். ‘எளிதான கேள்விகள் ‘ என்பவை தன்னுணர்வின் ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டின் இயக்கவியல் சார்ந்தவை. உதாரணமாக, நீங்கள் எவ்வாறு பச்சை நிற சமிக்ஞை கிடைத்ததும் தெருவினைத் தாண்டுகிறீர்கள் என்பது. நம் பார்வைச்சார்ந்த உள்ளீடுகள் எவ்விதம் பதனப்படுத்தப்பட்டு நம் கால்களின் தசைகள் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிய புலப்பெயர்தலுக்கு தகுந்தவாறு இயக்கப்படுகிறது என்பதை நிச்சயமாக நரம்பியல் ஆராய்ச்சிகள் நமக்கு தெளிவாகக் காட்டக்கூடும். ஆனால் அது தன்னுணர்வினை விளக்கிவிடுமா எனில் சால்மர்ஸை பொறுத்தவரை இல்லை என்றே கூற வேண்டியிருக்கும். ஏனெனில் ஆயிரக்கணக்கான மேற்கூறிய நிகழ்வுகளை நரம்பியல் விளக்கினாலும் கூட, அது சால்மர்ஸி ன் ‘கடினக்கேள்விக்கு ‘ விடையளிக்கப்போவதில்லை. அக்கடின கேள்வி ‘எவ்விதம் அனைத்து பெளதீக இயக்கங்களும் இணைந்து எண்ணிறை அனுபவங்களின் அக ஒருமையை – தன்னுணர்வை உருவாக்குகின்றன ? ‘ என்பதாகும்.

மேரியும் வண்ணமய உலகும் டேனியல் டெனட்டும்

ஆஸ்திரேலிய தத்துவவாதியான ப்ராங்க் ஜாக்ஸன் இதனை ஒரு மனப்பரிசோதனை மூலம் விளக்குகிறார்: மேரி ஒரு நரம்பியல் அறிவியலாளர். அவர் வண்ணமயப் பார்வையின் அனைத்து நரம்பியல் பின்-இயக்கங்களையும் அறிந்தவர். அவர் பார்வையின் அனைத்து அமைவுகளையும், எவ்விதம் மூளை ஓர் நிறத்திலிருந்து மற்றோர் நிறத்தை பிரித்தறிகிறது என்பதையும், மின்காந்த அலையின் வேறுபட்ட அலைநீளங்களையும் அந்த அலைநீளங்களையும், அவற்றிற்கும் நிறங்களுக்குமான தொடர்புகளையும், மற்றும் வண்ணமயப்பார்வையுடன் தொடர்புடைய அனைத்து இத்யாதிகளையும் அறிவார். ஆனால் அவர் தம் வாழ்க்கை முழுவதும் கருப்பு-வெள்ளை சூழலிலேயே வாழ்கிறார். கருப்பு வெள்ளை தவிர அவர் வேறு எந்த வண்ணத்தையும் தம் பார்வையில் அனுபவித்ததில்லை. வண்ண அனுபவமே இல்லாமல் இருப்பதால் அவர் வர்ண அனுபவம் குறித்து இயக்கங்களை அறிந்திருந்தும் அனுபவத்தை இழந்துவிட்டார். அதாவது வண்ணம் எனும் அனுபவத்தின் மைய மர்மம் குறித்து அவர் கூற எதுவுமே இல்லை. சால்மர் கூறுகிறார்: ‘ஒவ்வொரு நடத்தை மற்றும் அறிதல் ஆகிய நிகழ்வுகளின் இயக்கம் விளக்கப்பட்டாலும் கூட ஏன் இந்த இயக்கங்கள் தம்முடன் ஓர் அக-அனுபவத்தை எழுப்ப வேண்டும் எனும் கேள்வி பதிலளிக்கப்படாமல் இருந்தவாறே இருக்கும். ‘ டார்வினிய தத்துவவாதியான டானியல் டெனட் இம்மனப்பரிசோதனையையும் இதன் தத்துவ-அடித்தளமான சால்மர்ஸின் பார்வையையும் விமர்சிக்கிறார். இம் மனப்பரிசோதனையை நம் மனக்கண் முன் கொணர்கையில் பொதுவான சித்திகரிப்பு இவ்விதமாக உள்ளது: மேரி முதன்முதலாக வண்ணமய உலகினுள் நுழைகிறார். அங்கே ஒரு சிவப்பு ரோஜா பூத்து நிற்கிறது. ‘ஆ! இதுதான் சிவப்பா! ‘ என அவர் வியப்படையும் காட்சி நம் மனதில் விரிகிறது. அதாவது சிவப்பு வர்ணத்தின், அந்த வர்ண அனுபவத்தின் அனைத்து பெளதீக

தரவுகளையும் அவர் அறிந்திருந்தும் ஏதோ ஒன்று பூர்த்தியாகவில்லை. இந்த பூர்த்தியின்மையிலேயே தன்னுணர்வின் மர்மம் அடங்கியுள்ளது அங்கே நரம்பியலின் கருவிகள் துழாவமுடியாது என்பதே இம்மனப்பரிசோதனை தன்னுணர்வு ஆராய்ச்சியாளருக்கு அளிக்கும் சித்திரம். மாறாக, டெனட் பின்வரும் சித்திரத்தை அளிக்கிறார், ‘மேரி முதன்முதலாக வண்ணத்தைக் காண அனுமதிக்கப்படுகையில் அவரை கருப்பு வெள்ளை உலகில் அடைத்து வைத்தவர்கள் அவர் முன் ஒரு நீல நிற வாழைப்பழத்தை வைக்கின்றனர். மேரி அதனை உற்றுப்பார்த்துவிட்டு கூறுகிறார், ‘ஹா நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள் இப்பழம் பச்சையாக அல்லது மஞ்சளாக அல்லவா இருக்கவேண்டும். இது செயற்கை சாயம் பூசப்பட்டது. ‘ மேரியின் காவலர்களுக்கு இது அதிசயமாக உள்ளது. மேரி விளக்குகிறார், ‘ எனக்கு வண்ணத்தின் அனைத்து பெளதீக தரவுகளும் தெரியும். எனவே இப்பழத்தின் நிறம் மஞ்சளாக இருந்தால் எனது மூளையில் ஏற்படும் உணர்வுகளுக்கும், இது ஏற்படுத்திய உணர்வுகளுக்கும் வேறுபாடு உண்டு என்பதும், இந்நிறத்தின் உணர்வுகளுக்கும் நீல நிறம் ஏற்படுத்தும் உணர்வுகளுக்கு ஒற்றுமை உண்டு என்பதும், இப்பழம் ஆனால் நீல நிறத்தில் இருக்க முடியாதென்பதும் தெரியும். எனவே இது செயற்கை வண்ணமூட்டப்பட்டது என்பதும் தெரியும். ‘ டெனட்டின் நிலைபாடு என்னவென்றால், இம்மனப்பரிசோதனை எதனையும் நிரூபிக்கவில்லை என்பதே.

க்ரிக், கோச் & வண்ண மய உலகிற்கு மேரியின் வருகை

ஆனால் பிரான்ஸிஸ் கிரிக்கும் கிறிஸ்டாப் கோச்சும் அவ்வாறு கருதவில்லை. மாறாக சால்மர்ஸின் ‘கடினக் கேள்வி ‘ தன்னுணர்வு குறித்த முக்கியமான – பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வி என்றே கருதுகின்றனர். அதற்கான விடையை நரம்பியல் நிச்சயமாக அளிக்கமுடியுமென்றும் ஆனால் இத்தேடலில் நரம்பியல் துறை அதற்கான முதிர்ச்சியை அடையவேண்டுமெனவும் ஆனால் நரம்பியலின் தன்னுணர்வு தேடல் தற்போது அதன் தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர். அவர்களது வார்த்தைகளில்: ‘மேரி நிறத்தினை பார்வையுணர்வின் மூலம் அறிந்திடாததின் காரணம், அவர் நிற அனுபவத்தினை வார்த்தைகளால் அறிந்திருந்தும் தம் நீயூரானிய உபகரணத்தின் மூலம் நிறப்பதிவினை தம் மூளையில் ஏற்படுத்தியதில்லை என்பதே என நாங்கள்

கருதுகிறோம்….ஒரு அக அனுபவத்தை வார்த்தைகளாலும் கருத்தாக்கங்களாலும்

விவரிக்கமுடியாது இருக்கலாம். ஆனால் இரு அக அனுபவங்களின் வேறுபாடுகளை கட்டாயமாக விவரிக்கமுடியும் இதற்குக் காரணம் மூளையின் உயர் நிலை பார்வைத்தொடர்பு கார்ட்டிக்கல் பகுதிகளில் பெறப்படும் வேறுபாடுகள் உறுப்பு இயக்க வேறுபாடுகளுடன் தொடர்புடையவை என்பதனாலேயே.”

சால்மர்ஸைப் பொறுத்தவரையில் தன்னுணர்வின் மைய மர்மத்தின் மற்றொரு முக்கிய பரிமாணம் உள்ளீடுகளை பதனப்படுத்துவதன் மூலம் எழும் அகானுபவம் அதனை அனுபவிக்கும் உயிர் அமைவுக்கு பொருளுடைய ஒருமையாக விளங்குவது. எனது பழைய பெண்டியம் MMX கணினி நான் என் வாழ்நாளில் பெற்று பதனப்படுத்தக்கூடிய தரவுகளைக் காட்டிலும் அதிக அளவு தரவுகளை பதனப்படுத்தியுள்ளது எனினும் மிகக்குறைந்த தரவுகள் கூட என்னில் பதனப்படுத்தப்படுகையில், அவை எழுப்பும் பொருள்பொதிந்த அனுபவத்தை எனது MMX கணினி பெறவில்லை என்பதில் (நீங்கள் லையல் வாட்சனின் ‘Secret life of machines ‘ போன்றவற்றை நம்பாதவாரக இருக்கும் பட்சத்தில்) எவ்வித ஐயமுமில்லை. எனவேதான் சால்மர்ஸ் நரம்பியக்க உள்ளீடுகளைப் பதனப்படுத்துவதை முழுமையாக அறிகையின் மூலம் தன்னுணர்வினை அறியமுடியும் என்பதனை சந்தேகிக்கிறார். க்ரிக்கும், கோச்சும் கூறுகின்றனர், ‘சால்மர்ஸ் சந்தேகிப்பது போல தகவல் (information) என்பதே இங்கு மையமாக இருக்கலாம். (பல்வேறு புலன் உள்ளீடுகளைப் பதனப்படுத்தலின் மூலம் எழும் அக அனுபவப்) பொருளினை உருவாக்க ஒரு நியூரானிய வலையமைப்புக்கு (neural networks) எத்தகைய பண்புகள் தேவை என்பதனை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கலாம். எனில் சால்மரின் கடினக்கேள்வி முழுக்க முழுக்க புத்தொளியில் காணப்பட முடியும் –

அல்லது காணாமலே போகலாம். ‘ ஆனால் சால்மர்ஸ் வைக்கும் கருதுகோள் சுவாரசியமானது. இக்கருதுகோள் இயற்பியல் நிகழ்வோட்டங்களுக்கும் அனுபவத்திற்குமான ஒரு அடிப்படைத்தன்மையை சுட்ட விழைகிறது. அதன்படி: தகவலுக்கு இரு பரிமாணங்கள் இருக்கலாம். ஒன்று அதன் இயற்பியல் ரீதியானது மற்றொன்று அனுபவத்துவமானது (experiencial). நாம் எங்கெல்லாம் தன்னுணர்வுப்பூர்வமான அனுபவத்தைக் காண்கிறோமோ அங்கெல்லாம் அவ்வனுபவமானது அதன் ஒரு பகுதி தகவல் தன்மையிலும், மற்றோர் பகுதி மூளையின் இயற்பியல் – பெளதீக செயல்பாடுகளிலுமாக உள்ளது. இக்கருதுகோள் மென்மேலும் கூர்மைப்படுத்தப்படுகையில் அது நம் தன்னுணர்வின் பல்வேறு தன்மைகளை விளக்கக் கூடும். சால்மர் அதனோடு கூட மற்றொரு அதீத ஆனால் சாத்தியமற்றதெனக் கூறமுடியாதத் தொடர்பையும் உடன் வைக்கிறார்.

தன்னுணர்வும் பிரபஞ்ச விதிகளும்

சால்மரின் வார்த்தைகளில்: ‘இயற்பியலாளர் ஜான் வீலரின் பிரபஞ்சத்துவத்தின் அடிப்படை நியதிகளில் தகவல் என்பது இன்றியமையாததோர் அம்சமாகும். இயற்பியல் விதிகள் இறுதி நிலையில் தகவலியற்கையின் விதிகளாகும் போது இயற்பியல் விதிகளுக்கும் பெளதீக-உளவியல் விதிகளுக்கும் சில அடிப்படை இசைவுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகளும் உண்டு. அனைத்து இயற்பியல் விதிகளுக்குமானதோர் ஆகப்பெரிய பொதுக் கோட்பாடும், தன்னுணர்வு குறித்ததோர் கோட்பாடும், தம் வேரில் இணைந்து ஒரு மகா தகவல் கோட்பாடாக வெளிப்படவும் சாத்தியக்கூறு உண்டு.”

மைக்ரோ ட்யூபுயூல்கள், க்வாண்டம் இயற்பியல் மற்றும் தன்னுணர்வு

இந்நிலையில் பிரிட்டிஷ் கணித இயற்பியலாளரான ரோஜர் பென்ரோஸ் க்வாண்டம் இயற்பியல் மூலம் தன்னுணர்வை விளக்க முயலும் கருத்தாக்கங்களும் முக்கியமானவை. கட்டுப்பாடான பரிசோதனை மூலம் தன்னுணர்வை அறிவதற்கானதோர் புரட்சிகர பார்வையினை தாம் ஏற்படுத்தியதாகவே பென்ரோஸ் கருதுகிறார். உள்ளீடு ஒரு குறிப்பிட்ட தீர்வு-வழிமுறை (algorithm) மூலம் பதனப்படுத்தப்பட்டு வெளிப்பாடு ஏற்படும் கணினி என்னும் உருவகத்தின் அடிப்படையில் மூளையை கணினியாகவும் அதன் இயக்கத்தை தீர்வு-வழிமுறை மூலம் பதனப்படுத்தப்படுமியக்கமாகவும் தன்னுணர்வை அப்பதனம்+உள்ளீடு ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் காணும் போக்கே நரம்பியல் மற்றும் உயிர்-இயற்பியல் ஆராய்ச்சிகள் தன்னுணர்வினை அணுகுவதில் வெளிப்படுகிறது எனக் கருதும் பென்ரோஸ் தன்னுணர்வு அதற்கு மாறாக இருப்பதாகக் கருதுகிறார். அது தீர்வு-வழிமுறை மூலம் பதனப்படுத்தல் எனும் தன்மையற்றது (non-algorithmic). என்கிறார். ஏற்கனவே நாம் எண்ணிறந்த அனுபவங்கள் ஊடாகவும், அவற்றின் மேலாகவும் கவிந்து ஒரு ஒருமைத்தன்மை ஏற்படுத்துவது தன்னுணர்வின் முக்கிய குணாம்சம் என்பதைக் கண்டோம். இது தீர்வு-வழிமுறை மூலம் பதனப்படுத்தல் மூலம் விளக்கப்படமுடியாதது.

மயக்க-தொழில்நுட்பவியலாளரான ஸ்டூவர்ட் ஹேமராஃப்புடன் இணைந்து பென்ரோஸ் சில முக்கிய முடிவுகளை முன்வைக்கிறார். க்வாண்டம் இயற்பியலின் விதிகள் செயல்படும் நுண்ணுலகின் முக்கிய குணாம்சங்கள் தன்னுணர்வின் செயல்பாட்டில் பிரதிபலிப்பதாகக் கருதும் பென்ரோஸ் & ஹேமராஃப், எனில் க்வாண்டம் இயற்பியல்த்தன்மையுடன் செயல்படும் உயிரியல் நுண்அமைப்புகளைத் தேடுகின்றனர். மைக்ரோட்யூப்யூல்கள் எனப்படும் அமைப்புகளிலிருந்து க்வாண்டம் நிகழ்வோட்டங்கள் மூலம் தன்னுணர்வு முகிழ்த்தெழலாம் எனும் அவரது கருதுகோளை வலுப்படுத்தும் சில கண்டுபிடிப்புகள் அண்மையில் நிகழ்ந்துள்ளன.

ஒரு செல் உயிரினங்களிலிருந்து மூளையின் நியூரான்கள் வரைக்குமான அமைப்புகளில் காணப்படுகிற சைட்டோஸ்கெலிடான் (செல்லின் ‘எலும்பமைப்பு ‘) பல மைக்ரோட்யூபுயூல்கள் எனப்படும் அமைப்புகள் உள்ளன. 12.5 நானோமீட்டர்கள் (ஒரு நானோமீட்டர் ஒரு மீட்டரை ஒரு பில்லியனால் வகுத்தால் கிடைப்பது:10^-9) ஆரம் கொண்ட உல்ளே ஏதுமற்ற உருளை போன்ற அமைப்புகளால் ஆனது.

மைக்ரோட்யூபுயூல்களின் சுற்றுச்சுவர்கள் அறுகோண அமைப்பு கொண்டவையாக 13 சுற்றுகளில் ட்யூபுலின் (Tubulin) எனும் புரதத்தால் அமைக்கப்பட்டுள்ளன. இப்புரதம் இரு பெப்டைட் மோனோமர்களால் ஆனது. 8 நானோமீட்டர் பரிமாணம் கொண்ட ட்யூபிலின் தோடு மூடிய நிலக்கடலைத் தோற்றம் கொண்டது. இது நாள் வரை செல் மற்றும் அதனினும் நுண்ணிய உயிர் அமைப்புகளின் அமைப்பொழுங்குக்கு மட்டுமே உதவுவதாக கருதப்பட்ட இந்த மைக்ரோட்யூபுயூல்கள் மின் மற்றும் பெளதீக சமிக்ஞைகளை கடத்தும் தன்மையும் கொண்டவை என்பதும் இரண்டாம் நிலை நியூரானிய தகவல்கள் அனுப்புவதில் பங்கு பெறுகின்றன என்பதும் கடந்த பத்தாண்டுகளான ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளன. ட்யூபுலின் புரதம் ஒன்றிற்கு மேற்பட்ட நிலையுருவுகள் கொண்டது. இப்புரத மூலக்கூறுகள் இத்தகைய நிலையுருவுகளில் க்வாண்டம் மேற்பதிவுத்தன்மையோடும்(quantum superpositions) இருக்க வல்லவை. ஆனால் இதற்கும் தன்னுணர்வுக்கும் என்ன தொடர்பு ? பொதுவான கணினித்துவ தன்மையில் (computational model) மனம், தன்னுணர்வு மற்றும் மூளையினை ஆய்பவர்கள் நியூரானிய இயக்கங்களை ON-OFF எனும் ஒரு சுவிட்ச் (switch) ஆக காண்கின்றனர். இத்தகைய பார்வையில் மூளையில் ஏற்படும் செயல்கள் ஒரு நொடிக்கு 10^18 ஆகும். ஆனால் மைக்ரோட்யூபுயூல்களின் இயக்கச் செழுமையைக் கணக்கில் எடுத்துக்கொள்கையில் மூளையின் செயலியக்கத் திறனளவு நொடிக்கு 10^27 இயக்கங்கள் என அதிகரிக்கிறது. நியூரான்கள் வெறும் சுவிட்ச்களாக இல்லாமல் தம்மளவில் ஓர் கணினியாகக் கருதப்படவேண்டும்.

க்வாண்டம் நுண்ணுலகில் பருப்பொருட் துகள்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட இருப்புகளின் சாத்திய மேற்பதிவுகளாக உள்ளன. ஒரு நோக்குச்செயல் (observation) மூலம் இச்சாத்தியங்கள் ஒரு நிலைக்குக் குறுக்கப்படுகின்றன. தன்னுணர்வுக்கு முந்தைய நிலையிலிருந்து தன்னுணர்வுக்கு அத்தகையதோர் குறுக்கம் இருக்கலாம் என பென்ரோஸ் & ஹேமராஃப் கருதுகின்றனர்.ட்யூபுலின்களின் க்வாண்ட இயற்கைச் சார்ந்த இருநிலைக்களுக்கிடையாக தாவல் நானோவிநாடிகளில் (1 நானோ விநாடி= 1விநாடி/ 10^9) நடைபெறுவது (அதாவது ட்யூபுலின் புரத மூலக்கூறுகளில் அத்தகைய தாவல் நடைபெற்றால்.) அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், ட்யூபுலின்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தன்னுணர்வு orch-OR குறுகல் மூலம் நடைபெறும் நேரம் குறையும். ஒரு நெமடோட் எனும் வளையப்புழு தனது 300 நியூரான் செல்களில் 3 பில்லியன் ட்யூபுலின் மூலக்கூறுகள் கொண்டது. அதில் orch-OR குறுகல் சம்பவிக்க 133 மில்லி-விநாடிகள் (ஒரு மில்லி விநாடி= ஒரு விநாடி/1000) ஆகும். பென்ரோஸ் & ஹேமராஃப் கருதுகோளில் தன்னுணர்வின் ‘போதம் ‘ ஏற்பட orch-OR குறுகல் அவசியம். மானுடர்களில் இதற்கான நிகழ்வு நேரம் 13 மில்லி- விநாடிகள்.

பென்ரோஸ்-ஹேமராஃப் கருதுகோள் சரியானதாக ஒருக்கும் பட்சத்தில் பரிணாமத்தின் ஒரு உச்சகட்ட விளைவாக தன்னுணர்வு கருதப்படாமல், தன்னுணர்வின் விகசிப்பும் பரிணாமத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கலாமா எனும் சுவாரசியமான கேள்வி எழுகிறது. 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் காம்பிரியன் காலத்தில் ஒரு பெரும் உயிரினவகை அதி-பெருக்கம் ஏற்பட்டது. உயிரியலாளர்கள் அதை உயிரின-பெரும் வெடிப்பு (Big bang of life forms) என்றே வர்ணிப்பர். தன்னுணர்வு ஓர் தன்னிறை அடைந்ததன் விளைவாக எழுந்ததுதான் அவ்வுயிரினப் அதி-பெருக்கமா ? எனும் கேள்வி சுவாரசியமும் ஒரு பார்வை மாற்றத்தின் வித்துகளையும் உள்ளடக்கியது. ஆனால் இக்கருதுகோள் சாத்தியக்கூறாகக் கருதப்பட்டாலும் அது தன்னுணர்வின் நிறுவப்பட்ட அறிவியலாக பல மைல்கல்கள் செல்லவேண்டும். இக்கருதுகோளால் பெருமளவு ஈர்க்கப்படாத டானியல் டெனட் கூறுவது போல, பென்ரோஸ் தமது கருதுகோளை மிகக்கவனமாக அறிவியல் பரிசோதனை முறைகளால் ஆய்ந்தறியும் விதத்தில் வடிவமைத்துள்ளார். இக்கருதுகோள் பொய்பிக்கப்பட்டாலும் அல்லது அதன் சில முக்கிய ஊகங்கள் நிரூபிக்கப்பட்டாலும் அது தன்னுணர்வு குறித்த ஆய்வில் ஒரு முன்னகர்வாகத்தான் இருக்கும்.

[இக்கட்டுரையில் கூறப்படாத மற்றொரு முக்கிய பார்வையினை வரேலா – மட்டுரானா முன்வைத்துள்ளனர். இவர்களது ‘அறிதல் உயிரியக்கத்தின் அடிப்படை ‘ என்பது குறித்த சுருக்கமானதோர் அறிமுகம் கேப்ராவின் நூல் குறித்த எனது திண்ணை கட்டுரையான ‘டார்வீனியத்திற்கு அப்பாலான உயிரியல் ‘ -இல் உள்ளது.]

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

பயன்படுத்தப்பட்ட நூல்கள் மற்றும் இணைய தளங்கள்:

அ) பின்வரும் கட்டுரைகள் இரண்டும் Scientific American பத்திரிகை வெளியிட்ட சிறப்பு கட்டுரைத் தொகுதி நூலான Mysteries of the Mind (Vol.7 No:1 1997) இல் வெளிவந்தவை.

i) Francis Crick & Christof Koch, The Problem of Consciousness

ii) David J.Chalmers, The Puzzle of Conscious Experience

ஆ) Daniel C. Dennett, Consciousness Explained, (Back Bay, 1991)

இ) இணையதளங்கள்:

i) டேனியல் டெனட்: http://ase.tufts.edu/cogstud/~ddennett.htm

ii) கிறிஸ்டாப் கோச்: http://www.klab.caltech.edu/~koch/index-main-page.html

iii) அரிஸோனா பல்கலைக்கழக தன்னுணர்வு ஆய்வின் இணையத்தளம்: http://www.consciousness.arizona.edu/csua.html

iv) ஸ்டூவர்ட் ஹேமராஃப் இணையதளம்: http://www.quantumconsciousness.org

v) பென்ரோஸின் நூலான ‘Shadows of the Mind ‘ -க்கு சால்மர்ஸின் விமர்சன-மதிப்புரை: http://psyche.cs.monash.edu.au/v2/psyche-2-09-chalmers.html

vi) பென்ரோஸ் கூறுவது போல தன்னுணர்வை விளக்க க்வாண்டம் இயற்பியல் அவசியமா என்பது குறித்ததோர் பார்வை:

i) http://psyche.cs.monash.edu.au/v2/psyche-2-03-klein.html

vii) தன் நூல் குறித்த விமர்சனங்களுக்கு பென்ரோஸின் பதில்: http://psyche.cs.monash.edu.au/v2/psyche-2-23-penrose.html

viii) க்வாண்டம் தன்னுணர்வு மற்றும் orch-OR குறித்து: http://www.consciousness.arizona.edu/hameroff/slide%20show/slideshow_1.htm

[சில இணையதளங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் கண்டவை – இணைய முகவரிகள் மாறியிருக்கும் வாய்ப்பும் உண்டு.]

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்