அறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

நூல்நயன்


நாடாளுமன்ற மக்களாட்சி, கிருஸ்தவம், மேலைப் பண்பாட்டின் நீதி முறைகள் பற்றிய சொல்லாடல்களை மேலைக் காலனிய ஆட்சியாளர்கள் மீதே திருப்பி அவற்றைத் தர்க்க ரீதியாகப் பின்பற்றுமாறு வற்புறுத்தியவர் காந்தி. மேலைக் காலனியத்தின் இனவெறி, சுரண்டல், ஆட்சி செய்வதில் அவர்களுக்கிருந்த பாரபட்சம் ஆகியவற்றையும், ஆள்வதில் அவர்கள் காட்டிய ஏராளமான நெறி பிறழ்தல்களையும் ஊழல்களையும் சுட்டிக் காட்டி, ஆளும் திறமை கூட அவர்களிடம் இல்லை என்பதையும் காந்தியால் எளிதாகவே நிறுவ முடிந்தது. ஆளப்படுவோரின் ஒப்புதல் இல்லாத நிலையில், வெறும் அமைதியான ஒத்துழையாமை கூட அரசைக் கவிழ்க்க முடியும் என்றும் அவரால் காட்ட முடிந்தது.

இத்தகைய ஒப்பற்ற ஒரு மாமனிதரை ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் நிலவும் எல்லா நாடுகளும் வியந்து போற்றுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் காந்தியின் பிறந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. டெக்ஸாஸ் மாநிலம் ஹ்யூஸ்டன் நகரில் காந்தியின் சிலை இந்த ஆண்டு அக்டோபர் 2-ல் நகர மேயரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

நியூயார்க் மன்ஹாட்டன் பகுதியில் யூனியன் சதுக்கம் பூங்காவில் உத்தமர் காந்தியடிகளின் சிலை ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிலைக்கு மாலையணிவித்தல், காந்தியடிகளுக்கு மிகவும் விருப்பமான பாடல்களை இசைத்தல் போன்ற கொண்டாட்ட நிகழ்வுகள் இந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியன்று காலை 10-மணிக்கு நடைபெற உள்ளன (Union Square Park West Side on 14th Street).

நியூயார்க் நகரிலும், அக்கம் பக்கத்திலும் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாகத் கலந்து கொண்டு மேலைக் காலனி ஆதிக்கத்தின் இனவெறி, சுரண்டல், பாரபட்சம் போன்றவற்றையும், காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்தையும் நினைவு கூர்வது – அதுவும் உலக முதலியத்தின் கோட்டையாகவும், கிருஸ்துவ அடிப்படைவாதம், வெள்ளை இனவெறி ஆகியவை புத்தெழுச்சி பெற்றும் வரும் அமெரிக்க நாட்டின் மிக முக்கியமான நியூயார்க் நகரிலேயே இதைச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

noolnayan@verizon.net

Series Navigation