சிவஸ்ரீ
தோட்டத்து மாமரத்தில் காய்த்துத் தொங்கிய தேனடையை எடுத்து வந்து தேன் பிழிந்து அதில் ஒரு சொட்டு நாக்கில் வைத்த போது சப்புக் கொட்டியபடி அம்மாவிடம், ‘மாங்கா மரத்துல தான் தேங்கா (தேன் காய்) காய்க்குமா, அப்ப நெய்க் காய் எந்த மரத்தில் காய்க்கும்மா ? ‘ என்று கேட்ட காலத்திலிருந்தே நான் நினைந்திருந்தேன் எங்கள் வீட்டுக்குப் பிளான், லேயவுட் எல்லாம் போட்டுக் கொடுத்துக் கொத்தனாரிடம் செய்முறையும் சொல்லித் தந்தவர் பாரதியார் தான் என்று.
‘ -அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே -ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்; அங்கு
கேணி யருகினிலே -தென்னைமரம்
கீற்று மிள நீரும்.
பத்து பன்னிரண்டு -தென்னைமரம்
பக்கத்திலே வேணும் -நல்ல
முத்துச் சுடர்போலே -நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்கு,
கத்துங் குயிலோசை -சற்றே வந்து
காதிற் படவேணும்; என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே -நன்றாயிளந்
தென்றல்வர வேணும் ‘
என்று பாரதி சொன்ன பேச்சை எங்கள் வீட்டைக் கட்டிய கட்டட வல்லுநர்களும், தென்னைமரம் வைத்த தோட்டக்காரர்களும், தென்றலும் நிலாவும், சொன்னபடிக் கேட்டு அவர் சித்தம்போல் வீட்டைச் செய்திருக்க, எப்போதுமே அவர் சொல் கேளாத அந்த நீசக் குயில் மட்டும் இப்போதும் அவர் சொன்ன தென்னைமரத்தை விட்டு, எங்கள் வீட்டுப் புளிய மரத்தில் குடும்பத்தோடு கூடு கட்டி, அதன் நெருப்புச் சுவைக் குரலில் நித்தம் கூவிக் கொண்டிருக்கும், கூடக்கூடக் கூவும் என்னை வம்புக்கிழுத்து வைத்து.
பின்பு மயிலு, பட்டு, ரேவதி, ரோஸ், சின்னப்பொண்ணுவிடமிருந்தெல்லாம் கறந்து வந்த பாலில் அமுதூற்றி, மறுநாள் கட்டித் தயிரை மிக்ஸியில் போட்டுக் கடைந்து வெண்ணெய் எடுத்து எடுத்துத் தண்ணீரில் மிதக்க விடும் போது பக்கத்தில் உட்கார்ந்து சுச்சை ஆன், ஆஃப் செய்து கொண்டிருக்கும் நான், ‘அப்பன்னா, நெய் மரத்தில காய்க்காதா, மாட்டிலிருந்து தானா ? ‘ என்று புரிந்து பெரிய மனுஷியான போது தெரிந்து கொண்டேன், பாரதி எங்கள் வீட்டுப் பக்கமே வரவில்லை என்று. ஆனால் அப்ப வேற ஒருத்தர் மேல் சந்தேகம் வந்தது. அவர் தான் எங்கள் என்.எஸ்.எஸ் காம்ப் முகாமுக்குப் பக்கத்தில் கட்டியிருந்த மாளிகையில் இருந்த செட்டிநாட்டு ராஜா. இந்த வீட்டை மாதிரிக்குச் செய்து பார்த்த பின்பு அவருடைய அரண்மனையைக் கட்டிக் கொண்டாரோ என்ற என் ஐயம் பின்பொரு நாள் தாத்தா சொன்னதில் தான் தீர்ந்தது. அந்த அரண்மனை கட்டிய அதே கட்டட வல்லுநரைத் தான் கூப்பிட்டு இதைக் கட்டச் சொன்னார் கொள்ளுத் தாத்தா என்று.
நாங்கள் பின்னால் ஒரு கூடைப் பந்து வீராங்கனை போல வளர்ந்து விடுவோம் என்று முன்கூட்டியே யூகித்து வைத்திருந்தார் எங்கள் வீட்டின் நிலைவாசல் வைத்தவர். அவர் மிக முன்னெச்சரிக்கையாக ஒருவர் மேல் இன்னொருவர் ஏறி நின்றாலும் தலை தட்டாதிருக்குமாறும் செய்திருந்தார் நன்மாடங்களை. அந்த மாடங்கள் செய்து வெகுகாலத்துக்குப் பின், கேணியில் நீர் இறைக்க மோட்டார் பொருத்தச் செய்த அப்பா நியமித்த எலக்ட்ரீசியனும் அந்த மாடப் பொறியியலாளருடன் கருத்தொருமித்திருந்தார். அந்த மோட்டாரை இயக்கும் மின்விசையைத் தட்ட ஒருவர் மீது ஒருவர் ஏறித் தட்டுவதற்கு ஏதுவாய் ஓங்கி உலகளந்த அந்த மாடத்தின் மடிப்புகளில் கொண்டு போய் அந்த மோட்டார் சுச்சை வைத்திருந்தார் அப்பாவின் எலக்ட்ரீசியன்.
நல்லவேளையாக வீட்டுத் தரையின் ஆனையடிக்கல்லை எல்லாம் புதுப்பித்து மொசைக் போட்ட போது அந்த மாடத்தின் கீழிருந்த நடையின் இரு மருங்கும் தாங்கி நின்ற வாட்டசாட்டமான தூண்களின் முழங்கால் வரை வழுவழுவென்று திண்ணையெழுப்பி வைத்தார் அப்பா. அது எங்களுக்கு எப்படி உதவப் போகிறது என்று அவர் எண்ணிப் பார்த்திருக்கவில்லை அப்பா அப்போது.
மசமசவென மார்கழிக் குளிரின் இருள் நனைத்த விடியலில் நாலு மணியாகியும் நிலவெரிக்கும் வெளிச்சத்தில் அவசரமாய் உடைகளைந்து, பாவாடையைத் தூக்கி நெஞ்சு வரை ஏத்திக் கட்டி, அந்தத் திண்ணையில் ஏறி, ஒரு கால் பெருவிரலைத் தூண் விளிம்பில் ஊன்றி, மற்றொரு கால் காற்றி ஊசலாட, ஒரு கையால் தூணைக் கட்டிக் கொண்டு, இன்னொரு கையை எவ்வி, அந்த மோட்டார் சுச்சைத் தட்டி விடக் கற்றிருந்தோம் நானும் தங்கையும். அதைத் தட்டிய மறு நிமிடம் கிர்ர்ரென சத்தம் போட்டுக் கொண்டு சுத்த ஆரம்பிக்கும் மோட்டாரிலிருந்து நேரடியாய் வரும் பம்ப் செட்டைத் திருகிவிட்டு, இளஞ்சூடாய் மடமடவெனப் பாயும் வெள்ளத்திற்குத் தலை கொடுத்து, கண்கள் சிவக்கக், குள்ளக் குளிரக் குடைந்து நீராடி, பின்னும் கைகளால் வாரி இறைத்து விளையாடித் திகட்டிய பின் தலை துவட்டிப் பின் வாசலையும் குளிப்பாட்டி, வண்ணங்கள் குழைத்துக் கொட்டிக் கோலமிட்டு, அதிகாலை ஐந்து மணிக்குக் கோயில்மணி அடிக்கும் போது திட்டித் திட்டி ஓய்ந்து போயிருப்பார் அம்மா, தண்ணிய வீணாக்காத, நிறுத்து, நிறுத்து, போதும் என்று.
பின்பு சரிகை சினுசினுக்கும் பாவாடைத் தாவணியின் ஜனக்கா பெளடர் வாசனையும், ஈரம் சொட்டும் கூந்தலில் ஹேர்ப்பின்னால் குத்தி வைத்த பவழமல்லிச் சரத்தின் வாசனையும், யார்ட்லிப் பெளடர் வாசனையும், சாந்தும் சந்தனமும் மணக்க, வளையல், கொலுசு, ஜிமிக்கியுமாய், ஏழு படிகள் வைத்த வாசலைக் குதித்துக் குதித்துத் தாண்டிப் போய்க் கோயிலில்
‘பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம் ‘
என்று ஒலிவாங்கியில் ராகம் போட்டுப் பாடிவிட்டு, அதிலும் தீக்குறளை என்ற அச்சுப்பிழையைச் சமர்த்தாய்த் திருத்தி, திருக்குறளைச் சென்றோதோம் என தெளிவாய்ப் பாடிவிட்டு, நெய் வழியும் பொங்கலையும், புளியோதரையும் சுவைத்துக் கொண்டு வரும்போது, அம்மா முணுமுணுத்தது ‘பிதாவே! இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னித்தருளும் ‘ என்பதாய்த் தான் இருந்திருக்க வேண்டும். அப்போது அதை யார் கேட்டார் ?
குளித்த தண்ணீர் சிறு வாய்க்காலாய் ஓடி விழலுக்குப் போவதை வழியெல்லாம் காட்டி வைது கொண்டே வருவார் அன்றைக்குப் போலவே மறுநாளும். தோட்டத்துக் கேணியிலாவது, அடுக்களைக்குப் பின்னிருக்கும் கொல்லைக் கேணியிலாவது குளித்துத் தொலையலாம்ல என்பார். தோட்டத்தில் குளித்தால் நீர் பாத்திகளில் பாய்ந்தோடி மா, பலா, வாழை, தென்னை, தேக்கு, கொய்யா, மாதுளை, இலவம்பஞ்சு, சரக் கொன்றை, அகத்தி. இன்னும் அப்ப பேர் தெரியாத மரங்களையெல்லாம் நனைத்து முகிழ்ப்பதைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். கொல்லைக் கேணியில் குளித்தாலும் கருவேப்பிலை, கொத்துமல்லி, தக்காளி, வெங்காயம், ச்செளச்செளக் கெல்லாம் பாயும். ஆனால் அதெல்லாம் விடுமுறை தினங்களில் பகலில் கயிற்றால் இறைத்திறைத்துக் குளிக்கும் போது தான். காலை அவசரத்துக்கு முகப்பில் இருக்கும் மோட்டார் கிணறு தான்.
திசைக்கொரு கிணறு வைத்த வீட்டில் பிறந்தவளுக்கு தஞ்சாவூர் விவசாயி, தண்ணீருக்குக் கர்நாடகாவை ஏன் கேக்கனும் என்பது மாங்கா மரத்தில் தேன் காய்த்தது போலத் தான் புரிந்திருந்தது. தேனீப் பக்கம் பிறந்திருந்தாலும், இரண்டு வருடங்கள் அப்பாவுடன் சென்னையில் இருந்த தோஷம் அம்மாவைப் பிடித்திருந்ததது. சின்னப்பிள்ளையில் எனக்கு குளுகோஸ் ஏற்றிய போது பாட்டிலில் குளுகோஸ் தீர்ந்து போய், என் உடலில் இருந்து ரத்தம் பாட்டிலுக்குள் ஏறத் தொடங்கிய போது பதறியது போலவே, தண்ணீர் வீணாய் சிந்தும் போதெல்லாம் பதறுவார் அம்மா.
அம்மாவுக்கு, சித்தப்பாவைப் போல் உபதேசிப்பதற்காகவே அவரெடுத்து வந்த அவதாரம் பிசகாமல் சொற்பொழியும் நூதனம் தெரியாது. அப்பாவைப் போல், இதையெல்லாம் கண்டுகொள்ளாதிருந்து விட்டு, எப்பவாவது, கூப்பிட்டுக் கதை சொல்லவும் தெரியாது. ஆனால் எப்பாடு பட்டாவது ஒழுங்கைக் கொண்டு வந்துவிடப் பிரயத்தனப் படுவார் அம்மா. அதிலும் இந்தத் தண்ணீர்ப் பிரச்சனையில் அவர் தொண்டைத் தண்ணி வற்றிக் கொண்டு போனதை அவர் அறியவில்லை.
ஆனால் இப்ப வாளியில் கணக்காய்ப் பிடித்து வைத்து மொண்டு குளிக்கும் சத்தத்தைக் குளிப்பறைக்கு அருகிருந்து அம்மா காதுகுளிரக் கேட்கவேண்டும். இங்கயும் தண்ணிக்காக எங்கயும் தேடிப் போக வேண்டாம். தண்ணீரைப் பூப்பூவாய்க் கொட்டும் குழாயும் இருக்கிறது. ஸ்படிகம் போன்ற பரிசுத்தமான நீர் பக்கத்து நாட்டிலிருந்து வெள்ளியை வாங்கிக் கொண்டு குடிநுழைவு பெற்று நுழைந்து வீடு தேடி வந்து விடுகிறது. எஃதிராம் போல, தள்ளாத வயதில் கிலோமீட்டர் கணக்கில் நீருக்காக அலைய நேரவில்லை என் வாழ்வில் இன்னும். நான் தண்ணீருக்காகப் பட்ட கஷ்டமென்றால் அந்தத் தூணில் கால்வைத்து எவ்வியேறி மாடத்து சுச்சைத் தட்டியது தான். ஆனாலும் எனக்கும் புரிவது போல முத்துலிங்கம் ‘பருத்திப் பூ ‘ எழுதியது என்னை இப்படி ஆக்கிவிட்டதை அடுத்த முறை வரும்போது அம்மா பார்த்தால், அதற்குக் காரணமாயிருக்கும் வம்சவிருத்தியும் படித்தால், எங்கள் கேணிக்கு மோட்டார் மாட்டிய போதே இவரது வம்ச விருத்தி நூல் வெளியிடப் பட்டிருப்பதும் தெரிந்தால், அப்போதே இதை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்காமல் போனோமே என்று மிகவும் ஆதங்கப் படுவார் அம்மா.
இதுமட்டுமல்லாமல் அம்மா செய்வதறியாது திகைத்திருந்த பல வேளைகளில் அம்மாவுக்குப் பல வகைகளில் உதவியிருக்கக் கூடும் முத்துலிங்கம், அம்மா மட்டும் வம்சவிருத்தியையும், திகடசக்கரத்தையும் படித்திருந்தால்.
‘குப்பையைப் பிளாஸ்டிக்கில் கட்டி எருக்குமேட்டில் போடாத, அது வயலுக்குப் போகிறது, மண்ணில் மக்கவே மக்காது ‘ என்று தினம் தினம் கத்தியிருக்க வேண்டாம் அம்மா.
‘பால் கவர், பலகாரக் கவர் எல்லாம் அப்டி தூக்கி வீசாத, பத்திரமா சேர்த்து வை, ரீசைக்கிள் செய்ய எடுத்துப் போறவரிடம் கொடுக்கலாம் ‘ என்று படித்துப் படித்துப் பாடம் சொல்லியிருக்க வெண்டாம் சிலப்பதிகாரம் படிக்காமலே.
‘வம்சவிருத்திக்கு ஆம்பளப்புள்ள இல்லையே ‘ என்று ஐந்து மாதத்தில் செத்துப் போன என் இரட்டைத் தம்பிகளை அப்பப்ப நினைத்துக் கொண்டு அழுதிருக்க வேண்டாம்.
ஆனால் இவையெல்லாம் இத்தனை மாற்றம் செய்யவல்ல புத்தகங்களாய் இருப்பதை அறியும் முன்பே இந்த மகாராஜாவின் ரயில் வண்டியை நண்பன் நூல் நிலையத்தில் எடுத்துக் கொடுத்த மறுவாரம் நான் சென்னையிலிருக்கும் என் மாமா பையனுக்கு, பத்து வெள்ளிக்குத் தொலைபேசி அட்டை வாங்கி அவசரமாய்த் தொலைபேச நேர்ந்தது. ‘உனக்கு என்ன தேவையானாலும் உடனே பேசு ‘ என்று அவர் எத்தனையோ முறை என்னிடம் கூறியும் எதுவும் கேட்காதிருந்த நான் அவரிடம் ஒன்றைக் கேட்க நேரிட்டு விட்டது இந்தப் புத்தகத்தைப் படித்ததினால்…
தொடரும்… (அடுத்த வாரம்)
-சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)
- கடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்
- முப்பதாண்டு கால முயற்சி
- பதுங்கியிருக்கும் பாளையப்பட்டு…:
- தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்
- மெய்மையின் மயக்கம்-19
- Submission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா
- புத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….
- ஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”
- செல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)
- சொன்னார்கள்
- கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை
- கடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்
- கடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்!
- கடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில
- கடிதம் செப்டம்பர் 30,2004
- கடிதம் செப்டம்பர் 30,2004
- மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்
- கடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்!
- உரத்த சிந்தனைகள்- 1
- அ.முத்துலிங்கம் பரம்பரை -2
- பிரிக்க முடியாத தனிமை
- எனக்கென்று ஒரு மனம்
- பிழை திருத்தம்
- எதிர்பார்ப்பு
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)
- அறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
- சென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,
- சினிமா — முக்கிய அறிவிப்புகள்
- ஒரு முன்னோடியின் பின்னாடி
- ஐந்து கவிதைகள்
- பெரியபுராணம் — 11
- நீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39
- கூர் பச்சையங்கள்
- களை…
- இயற்கைக் கோலங்கள்
- அதிசயம்
- இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)
- சிலந்தி வலை சிக்கல்கள்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)
- பகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்
- காவேரி உற்பத்தியாகும் கர்நாடகம்