அப்பா வீடு

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

கே.பாலமுருகன்



1
அவன் வீட்டைச் சுற்றி பார்த்ததும் இதுவரை மனதில் எழுந்து பழகிபோன ச்சரியங்கள் சிறுக சிறுக விரிந்து கொண்டேயிருந்தன. எங்கும் பல்லிங்கு கல்லலான தரைகள். நடந்த அனுபவங்கள் குறைவுதான். வெகுநாளாக ஒவ்வாமையாக இருந்து வரும் ஒன்று. ஒவ்வொரு முறையும் அவன் வீட்டின் டம்பரத்தை அணுகும் போதெல்லாம் என் வீட்டின் ஏழ்மை ஒப்பிடுவதற்கு ஏக வசதியாகவே இருந்தது. எப்பொழுதும் தங்கிவிடும் அதே அதிருப்தி.
“20000 ஆயிரம் வெள்ளியா?”
“அப்பறம். . சும்மாவா? எல்லாம் பல்லிங்கு கல்லு. கூலி காசு வேற. .”
:வெலதான், கண்ணாடி ஜன்னலும் அப்பதான் போட்டிங்களா?”
“எல்லாம் ஒரு செட்டுதாண்டா. . இரும்பு கேட்டும் சேர்த்து”
கொஞ்சம் ஆர்வமாக இருந்த முக அடையாளங்களும் இந்த ‘கேட்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் சோர்வேறிப் போனது.
“யேண்டா ஒரு மாதிரி அலுத்துகிற?”
“இது கேட்டு. எவ்ள அழகா இருக்கு! லட்சணமா, எங்க வீட்லயும் ஒன்னு இருக்கே, அதை நினைச்சேன், அதான்”
“ஓ அதுவா? திறந்தா பாட்டு பாடுமே. . உங்க சேகர் மாமாதானே மோட்டர்ல மோதி நெளிச்சிட்டாறு?”
வருடந்தோறும் தீபாவளி காலங்களில் வர்ணம் பூசி, வீட்டின் முற்புறத்தின் அழகின்மையை ஈடுகட்ட கொஞ்சம் அழகாக இருந்தது அந்த கேட் மட்டும்தான்.
“ வீட்லதான் யாரும் அமைதியா இருந்து பார்த்தில்ல. . இந்தக் கேட்டாவது தொறந்து போட்டாலும் சரி, சாத்தி வச்சிருந்தாலும் சரி, சிவனேனு கெடக்கும், அது எங்க மாமாக்குப் பொறுக்கல போல, அதான்” கொஞ்சம் சளித்துக் கொள்ள நேர்ந்தது.
“சரி நாதன், நான் வர்றேன். .”
அந்த வீட்டை விட்டு விலகும் போது, அங்கு சேகரித்திருந்த ஏக்கங்களையும் சுமந்து கொண்டுதான் போக வேண்டிய சூழ்நிலை. ஒவ்வொரு முறையும் நண்பர்களின் வீட்டில் இப்படிதான் யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே மனம் வருந்தியும் ஏங்கியும் தவித்ததுண்டு.. என் நண்பர்களில் யாராவது ஒருவனுடைய வீட்டோடு ஒப்பிடும் அளவிற்காவது என் வீடு இருந்திருக்கக் கூடாதா?
அப்பா இறந்த பிறகு, வரும்படிக்கே உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த வீட்டிலே நிலைக்க வேண்டியதாக போயிற்று. அப்பா இருந்திருந்தாலும் வேறு வீடு வாங்கி போவதற்கும்

வழியிருந்திருக்காதுதான். அவர் காலத்தில், அம்மாவைத் திருமணம் செய்து கொண்டு, தனிக் குடித்தினம் போக வேண்டிய நிலையில், வீட்டுக்கே திண்டாடினார்களாம். அத்தை வீட்டில் 30 நாள், சித்தப்பா வீட்டில் 2 மாதம், மேலும் நண்பர்களின் வீட்டில் சில காலம் அண்டிக்கொண்டும் சுற்றி திரிந்தார்களாம். இறுதியாகத்தான் அப்பா ஜப்பான்காரனிடம் வேலைச் செய்யும் போது, சிறுக சிறுக பணம் சேமித்து, அவரே நண்பர்களின் துணையோடு கட்டிய வீடுதானாம் இந்தப் பலகை வீடு.
இந்தக் காரணத்திற்காகத்தான் நாங்கள் வேறு வீடு போகவில்லை என்று சொல்லிவிட முடியாது. குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்பதான் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள முடிந்தது. அப்பா கட்டிய இந்தச் சின்ன வீடு எங்களுடைய வசதிக்குத் தாராளமாய் அமைந்து விட்டப்போதிலும், எனகென்னமோ இந்த வீட்டைப் பிடித்ததில்லைதான்.

2

எப்பொழுதும் வீட்டை அடைந்தவுடன், அந்தக் கேட்டைத் திறக்க வேண்டுமே என்ற எரிச்சலும் சங்கடமும் வந்துவிடும்.
“கிரெங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்”
கண்டிப்பாக பக்கத்து வீட்டு ச்சி மகன் அறுவறுப்போடு எட்டிப் பார்த்திருப்பான். அவனுக்குக் கொஞ்சம் புன்முறுவல் செய்தாக வேண்டும். அசடு வழிய சிரிப்பை வரவழைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
“வோய், இனி கேட் யூ பிக்கின்லா. . அப்பாலா புடாக் லெலாக்கி.”
(என்னா ம்பளெ பையன் நீ, ஒரு கேட்டெ கூட செஞ்சி வைக்க முடிலெ)
அவனும் அடிகடி அம்மாவிற்கு நிகராக மாறிவிடுவான். இரண்டு வீட்டுக்குக் கேட்கும் அளவிற்கு இந்தக் கேட்டைச் சரிசெய்யும்படி அம்மா திட்டியிருக்கக் கூடாதுதான். அதனால்தான் ஊரிலுள்ளவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி அதிகாரத்துவத்தோடு புத்தி சொல்ல வந்துவிடுகிறார்கள்.
வீட்டு வாசலில் மிகவும் பழமை வாய்ந்த காலணி பெட்டி, சுத்தப்படுத்தி இரு வாரங்கள் இருக்கும், பழுப்பு வர்ணமேறி நின்று கொண்டிருக்கும். இதை எப்படியாவது தூக்கி வீச வேண்டுமென நினைத்தும், அம்மாவுடைய செண்டிமெண்டல் தளத்தில் இந்த அரதபழசான காலணி பெட்டியும் இருந்ததால், என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் தோல்விதான்.
வெள்ளம் வரும் வீடு என்பதால், அப்பா அந்தப் பெட்டியைக் கொஞ்சம் உயரத்தில் கட்டியிருந்தார். அது அப்பாவுடைய அக்கரையாம். அந்தப் பெட்டிக்குக்கூட அம்மா வீட்டுக்குக் கொடுக்கும் அதே அந்தஸத்தையே கொடுத்திருக்கிறார். அதில் அப்பாவுடைய பழைய ஜப்பான் சிலிப்பரும் களையாமல் அடுக்கப்பட்டிருக்கும்.
“யேண்டா அந்தக் கேட்தான் அப்படி சத்தம் போடுதே. . அத செஞ்சா என்ன உன் குடியா முழுகிற போது? நானும் சொல்லிகிட்டே இருக்கேன். . ஒரு ம்பரை எடுத்து அடிச்சி தட்டறதுதான்”
“ங்ங். . உங்க மருமகன் தான் இடிச்சாறு. . அங்க போய் சொல்லுங்க. . வீடு மாதிரியா இருக்கு? எங்க பார்த்தாலும் துணி மூட்டை. . உடைஞ்ச அலமாரி. . எதையும் தூக்கி போடாமா வச்சுக்குங்க. .”
என்னுடைய வீட்டுக்கு நான் தவறியும் வீடென்ற அங்கிகாரம் கொடுத்ததில்லைதான். வீட்டின் வரவேற்பறையில், எப்பொழுதும் கப்பை ரொட்டிகளும் அக்கா மகன்களின் உடைந்தும் அம்மாவால் நிராகரிக்கபடாத விளையாட்டுப் பொருள்களும் சிதறிக் கிடக்கும். அம்மாவிற்கு அதை சுத்தப்படுத்துவதும், அக்கா மகன்கள் மீண்டும் அந்த இடத்தை அசுத்தப்படுத்துவதுமாக, இருவருக்கும் மத்தியில் போராட இயலாமல் அந்த வரவேற்பரை இருப்பை இழந்து அழகை துறந்திருந்தது. வாயில் எச்சிலொழுக அக்காளின் கடைசி மகள் அங்குதான் உட்காந்திருப்பாள். இந்த அசௌகரியங்கள் அனைத்தையும் சமாளித்தே என் வீட்டைக் குறித்துச் சளிப்பு தட்டிவிட்டிருந்தது. ஒரு அழகான வீடு வாங்கி தூரமாக ஓடிவிட வேண்டுமென்று கூட தோன்றியதுண்டு.
“மனுசன் வாழ முடியுமா இந்த வீட்டுல. .”

3

ரகு அண்ணன் கேட்டிருக்கிறார், பஞ்சா அக்கா கேட்டுருக்காங்க, லைன் சாரு கேட்டுருக்காரு, மலாய்க்கார அக்காங்க கேட்டுருக்காங்க, மணியன் அப்புச்சியும் கேட்டுருக்கிறார்.
“பாலா. . உங்க வீட்டுக்கு எங்களைலாம் கூப்டவே மாட்டியா? எல்லாம் ஒன்னா வேலை செய்றோம். .”
“அதுக்கென்ன. . கண்டிப்பா கூப்டறன்”
அதுக்கென்ன? என் வீட்டிற்கு இவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு போய் உபசரிக்கும் அளவிற்கா என் வீட்டின் நிலைமை தாராளமாய் இருக்கிறது? தவறியும் என் வீட்டைப் பற்றி நான் இவர்களிடம் சொல்லியதில்லை. எந்த காலத்தில் மனிதன் கௌரவத்தைக் காட்டிக் கொடுத்துருக்கிறான். என் வீட்டின் அசுத்தமேறிய காலணி பெட்டியையும், அந்தக் கேட் சத்தத்தையும், அக்கா மகளின் வாணி ஒழுகியே வாடையேறிய வரவேற்பரையையும், இவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? முதலில் நாகரிகத்திற்காக அமைதியாக இருந்துவிட்டு, பிறகு நிச்சயம் இவர்களுடைய குறை பட்டியல் நீண்டு கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லைதான்.
அதுவும் அந்த பஞ்சா அக்காவிற்கு தனியாக அணுகி கற்றுத்தர வேண்டியதில்லைதான். மூச்சுக்கு முண்ணுறு தடவை வீட்டின் சுத்தத்தைப் பற்றியும் தன் வீட்டின் டம்பரத்தைப் பற்றியும் தற்பெறுமை அடித்துக் கொள்ளும் அவருக்கு முன் நான் சிறுமையென அவமானப்பட விரும்பாமல்தான், என் வீட்டைப் பற்றி, ‘பலகை வீடுதான்’ என்ற குறைவான அறிமுகத்திலேயே முடித்துக் கொண்டிருந்தேன். இதில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்றால்? எஞ்சியிருக்கும் மரியாதையாவது தற்காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.

4
“ பாலா அந்தக் கேட்டை கொஞ்சம் செஞ்சிறேண்டா. .”
அம்மாவும் ரொம்பவே இறங்கி வந்துட்டாங்க.
“ மா. . வேற வீடு பார்த்துப் போயிடுலாம் மா. . பெரிய வீடா. . நல்ல வசதியானா வீடா. .அதை விட்டுட்டு. .”
என்னுடைய அலட்சியத்திற்கும் அம்மாவுடைய பிடிவாதங்களுக்கும் எப்பொழுதுமே குறைவில்லைதான். பிறகென்ன? சென்ற வருட வெள்ளத்தில் மீதியிருந்த கீழ்ப்பகுதி பலைகைகளும் பெயர்ந்து கொண்டது.. . 2 லேயரில், மேலே பச்சையும் கீழே பழுப்பும் அசிங்கமாய் கிடக்கும். இதில் அம்மா வெறு, வெள்ளத்தில் நனைந்து நாசமாகியும் அந்த அலமாரி பெட்டியை விட்டொழிக்காமல் இருந்துட்டாங்க. வேணுமென்றே விட்டுடாங்க எனலாம்.
“யாராவது ஏழை பிள்ளைங்களுக்குக் கொடுத்துறலாம்” என்று கூறியே பல மூட்டை தூணிகளைத் தூக்கி வீசாமல், அம்மா அறைக்குள்ளே பதுக்கி வைத்திருந்தார். வெள்ளம் சமயத்தில்தான் அதெல்லாம் தானே குப்பைத் தொட்டிகளுக்கு எகிரி கொண்டிருக்கும். அப்பொழுது மட்டும் வீட்டின் மீது தனி அக்கரை வந்தது போல வீட்டின் அழுக்குக்களைச் சுத்தப்படுத்துவதில் இறங்கிவிடுவார் அம்மா. அந்த நேரத்தில்தான் வெள்ளத்தில் நனைந்து போன அந்த மூட்டைகளையும் சில பொருள்களையும் திருப்தியாக வீட்டிலிருந்து எடுத்து போய், வீசிக் கொண்டிருப்பேன். வெள்ளத்தில் நனைந்திருந்த கேட் அந்தச் சமயத்தில் இன்னும் அதிகமாகவே குளிரில் நடுங்கி கொண்டிருக்கும் கிழவியைப் போல சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்.
ஒரே ஒரு ஜன்னலின் பலகை மட்டும்தான் இன்னும் 5 மாதத்திற்குத் தாங்கும் திடத்துடன் இருந்தது, மற்றவையெல்லாம் சாத்தியும் பகல் வெயிலையும் மழைச் சாரல்களையும் தாராளமாய் வீட்டினுள்ளே அனுமதித்திருக்கும். இதைச் சரிப் படுத்துவதற்கு முதல் அக்காவிடம் அம்மா பணம் கேட்டிருந்தார். அது வந்த பாடில்லைதான். அந்த வேலையும் அப்படியே மறக்கப்பட்டது. அசௌகரியங்கள் நிறைந்த வீடு, மறதியையும் கற்று தந்திருந்தது.
வேலை முடிந்து வந்து, கொஞ்சம் நேரம் அயர்ந்திருந்தாலும் என் வீட்டின் கேட் எப்படியாவது என்னை எழுப்பிவிடும். அக்காவோ மாமாவோ, யாரு வந்திருந்தாலும், அம்மாவைவிட இந்தக் கேட்டுக்குதான் அக்கரை அதிகம் போலும்! அதே எரிச்சலூட்டும் ‘கிரெங்ங்ங்ங்’ சத்தம்தான்.
“ஐயோ தாயே! இந்த எழவெடுத்த வீட்டுலேந்து என்ன காப்பாத்து. .”

5
கம்பீரமாய் டம்பரத்துடன் கட்டப்பட்டிருக்கும் தாமான் வீடுகளைப் பார்க்கும் போதேல்லாம் மனதில் ஒருவித அடங்க விரும்பாத சளசளப்பு. வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் இந்த மாதிரியான டம்பர வீடுகளையும் வடிவமைப்புடன் அழகாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளைக் கடக்கும் போதேல்லாம், அந்த ஒவ்வொரு வீடுகளிலும் சில வினாடிகள் வாழ்ந்துவிட்டுதான் வருவேன்.
மின்னியக்கியால் திறக்கப்படும் கேட்களைப் பார்த்து, அந்தக் கேட்டைத் திறப்பவனாக மாறியிருக்கிறேன். வீட்டுக்கு வெளியில் எழுப்பப்பட்டிருக்கும் செயற்கைக் குளத்தில் விளையாடும் குழைந்தைகளின் சிரிப்புக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். எத்தனை அழகான வீடுகளில், நொடி பொழுது பயணத்தின் போது, அந்த வீட்டின் முதலாளியாக வாழ்ந்து மறைந்திருக்கிறேன். னால் எல்லாம் கனவுதான்.
“வாங்கனா இந்த மாதிரி வீடுதான் வாங்கனும், இருந்தா இந்த மாதிரி வீட்லதான் இருக்கனும்” என்று பலமுறை பேருந்தின் கன்னாடியில் முகத்தை அப்பிக் கொண்டு பல வீடுகளைப் பார்த்து ஏங்கியதுண்டு. என்றாவது இந்த மாதிரி வீடுகளில் சொகுசு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, காதை உறுத்தும் கேட் சத்தமில்லாத, அம்மாவின் துணி மூட்டைகள் இல்லாத, பழுப்பேறிய சப்பாத்தி பெட்டி இல்லாத, அக்கா மகன்களின் விளையாட்டுப் பொருள்கள் சிதறிக் கிடக்காத ஒரு பொழுதில் நிம்மதியாக கண் அயர மாட்டேனா? அந்த 23 வயதில் என்னுடைய ஏக்ககங்களுக்கு யாரிடம் நியாயம் பெறுவது என்று தெரியவில்லைதான்.

6

அன்று ஏதோ தைரியம் வந்திருக்க வேண்டும் போல. பக்குவம் நிறைந்த மனிதரின் முகத்தோற்றத்தைக் காட்டிக் கொண்டு அந்தத் தாமான் வீடுகளின் நிர்வாக அறையின் முன் வெகு நேரம் நின்றிருந்தேன். யார் யாரொ என்னைக் கடக்கும் போதெல்லாம் அந்த விசயத்தை எப்படிக் கேட்பது என்று அறியாமலேயே திடிர் பயம் மனதைக் கட்டுப்படுத்துவது போல் அடங்கியிருந்தேன். அப்பொழுதுதான் அங்கு ஒரு டவர், அந்த நிர்வாக அறையிலிருந்து வெளியேறி என்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த உடையிலேயே, அவர் அந்த இடத்தின் பாதுகாவளர் என்று தெரிந்து கொண்டேன்.
“வணக்கம் சார், யேன் சார் வீடு பத்தி கேட்கனும். . .அதான். .”
“உள்ள போனிங்கனா எல்லாம் விவரமும் தருவாங்க” என்று கூறிவிட்டு என்னை கீழும் மேலுமாக பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கியவரை, மறுபடியும் நிறுத்தினேன்.
:இல்ல சார், சும்மாதான் விலைலாம் எப்படினு தெரிச்சுக்கதான். .” என்னுடைய தயக்கத்தை வெகு விரைவில் புரிந்து கொண்டவராய் “ வீடா தம்பி? இங்க வீடுலாம் 2-3 லட்சம்பா. பார்க்கதான் சின்னது மாதிரி தெரியும், னா எல்லாம் லட்சக் கணக்குதான். . நானும் இங்கதான் வீடு வாங்கியிருக்கன், மகன் வாத்தியார் வேலை செய்யறான், அரசாங்க லோன்தான். .” என்று முடித்துவிட்டு என்னுடைய முகத்தில் தோன்றிய பிரமிப்பையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“யேன் சார். . லோன் எடுக்கறதுனா, இந்த வீட்டை வாங்கிறலாமா?”
“ஓ தாராளமா வாங்களாம்பா, செய்யற வேலையைப் பொறுத்துதான் இருக்கு, சாட்சிக்கு ளு வேணும், பேங்க்லதான் விண்னப்பம் செய்யனும்பா, இங்க உள்ளவனுங்க மாசாம் இந்த வீட்டுக்கு 1500 வெள்ளிகிட்ட கட்றானுங்க. . நீ என்னா வேலை செய்யறப்பா?” மறுபடியும் என் முகத்தையே பார்த்திருந்தவரின் கண்களில் என் மீதான திடிர் சந்தேகங்கள் எழுந்திருக்கலாம்தான்.
“எனக்கில்ல சார், என் கூட்டாளி ஒருத்தரு விசாரிச்சிட்டு வரச் சொன்னாரு, அதான். . சரி சார்” அடுத்த கேள்விகளுக்கு என் இருப்பு இடம் தரவில்லைதான் போல. பேருந்தில் அமர்ந்து கொண்டு, அதே கன்னாடியில் முகத்தை அப்பிக் கொண்டேன். இந்தத் தடவை அந்த டம்பர வீடுகளெல்லாம் கண்ணுக்கெட்டாத தொலைவிற்கு சென்று கொண்டிருந்தது போல பிரம்மை தொன்றிய வண்ணமே இருந்தது. மறுபடியும் ஒவ்வாமை.
நான் சொல்லியிருக்கலாம்தான், மெட்ரிக் தொழிற்சாலையில் மாதச் சம்பளம் 800க்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு அசாதரண ஓப்பிரேட்டர் என்று. அப்படிக் கூறியிருந்தால், ஒரு வேளை அவர் சிரித்திருந்தாலும் ஆச்சரியமில்லைதான். இவ்வளவு நாள் உள்ளுகுள்ளே தங்கியிருந்த அறியாமையின் நிழல் முகத்தில் ஒதுங்கியிருந்தது. மீண்டும் மீண்டும் அதே ஒவ்வாமை.

7

வீட்டை அடைந்தவுடன், முன் வாசல் கேட், அப்பாவியாய் திறந்து கிடந்தது. நேராக ஸதோர் அறைக்குச் சென்று சுத்தியிலும் பிளாயிரையும் எடுத்துக் கொண்டேன். இனி இந்தக் கேட் சத்தம் போடாது தான்.
அப்பா கட்டிய வீடுதானே. . . ஏதோ ஒரு வகை திருப்தி.

-முடிவு-
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Series Navigation