அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்மூன்று தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் அங்கே 4 குழுக்கள் அமைந்துவிடும் என்பதற்கு மாறாக, ஒற்றுமையும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்புடனின் அடையாளங்களாக அமைந்திருப்பதில் தமிழ் வலைக் குழுமங்களில் மட்டுமல்லாமல் எனக்குத் தெரிந்த தமிழ் அமைப்புகளிலேயே அன்புடன் தனித்துத் தெரிகிறது. குழுமத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் வாழ்த்துக்கள்

போட்டி நடத்துவதென்பது எளிதல்ல என்பதை பலமுறை அனுபவத்தின் மூலம் கண்டறிந்திருக்கிறேன். அன்புடனின் இரண்டாவது ஆண்டு நிறைவுப் போட்டிகள் மிகவும் கோலாகலமாய் கச்சிதமாய் நடத்தப்பட்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வழக்கத்திலிருந்து விலகி, வாசிப்பனுபவம், பாடும் அனுபவம், கேட்கும் அனுபவம், பார்க்கும் அனுபவம் என கவிதையின் பல்வேறு பரிணாமங்களையும் சுகிக்கத் தந்த குழுவினருக்குப் பாராட்டுக்கள். ஒரே ஒரு குறை – சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற மற்ற படைப்பு வடிவங்களையும் சற்று கவனித்திருக்கலாம். அன்புடன் கவிஞர்களுக்கு மட்டுமான களமாக ஆகிவிடக் கூடாதல்லவா?

சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது கேளம்ப்பாக்கம் சுஷீல் ஹரி பள்ளிக்காக இரண்டு விளம்பரப்படங்கள் எடுத்தேன். வெறும் 10 -20 விநாடிகள்தான். ஆனால் அதற்கு ஸ்டோரி போர்ட் அமைத்து, நடிகர்களைத் தெரிவு செய்து, படம்பிடித்து, பின்னணிக் குரல், இசை சேர்த்துப் பார்க்க இரு நாட்கள் ஆயின. ஆனால் அவற்றை முழுமையாய்ப் பார்த்த விநாடி கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே… துள்ளிக் குதிக்க வேண்டும் போல உற்சாகம் பீரிட்டெழுந்தது, முகமெல்லாம் மத்தாப்பு என்றார்கள் சுற்றி இருந்தவர்கள். ஓராயிரம் வரிகள் சொல்ல முடியாததை ஒரு நல்ல காட்சி சொல்லிவிடும் என்பதில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு. அதனால் காட்சிக் கவிதைப் பிரிவுக்கு நடுவராக இருக்கச் சொன்னதும் மிக மகிழ்ச்சியாகச் சம்மதித்தேன்.

12 கவிதைகளும் வந்து சேர்ந்த உடன் ஆர்வம் தாளமுடியாமல் பார்த்துத் தீர்த்துவிட்டுத்தான் மற்ற வேலை பார்க்க முடிந்தது. பங்கு பெற்றவர்களைப் பாராட்டியே தீரவேண்டும். போட்டிப் பிரிவுகளிலேயே இதுதான் சிரமமான பிரிவு, அதிக சிரத்தையும் உழைப்பும் திறமையும் தொழில்நுட்ப அறிவும் தேவையான பிரிவு என்பது எனது எண்ணம்.

போட்டி விதிமுறைகளில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது.

– கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டுமென்றால், படைப்பு வீடியோ காட்சியாக இருக்க வேண்டுமா அல்லது புகைப்படங்களை இணைத்துச் செய்த படக்காட்சியாக இருக்கலாமா?

– பொதுவில் இலவசமாய்க் கிடைக்கும் படங்களையோ காட்சிகளையோ பயன்படுத்தலாமா?

இது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இல்லை என்றாலும் படைப்புகளை மதிப்பிட, ஸ்டோரி போர்ட், காட்சியழகு, காட்சிகளைக் கோத்த விதம், கவியழகு மற்றும் ஒலியழகு போன்ற அம்சங்களை அடிப்படையாக எடுத்துக் கொண்டேன்.

ஒரு காட்சியின் வெற்றி நம்மை அதனோடு ஒன்றிவிடச் செய்வதில், நம்மில் ஒரு எதிர்வினையைக் கிளறிவிடுவதில் இருக்கிறது. எதிர்வினை ஒரு சின்ன புன்சிரிப்பாகவோ, ஒரு துளிக் கண்ணீராகவோ, மின்னலாய்த் தோன்றி மறையும் ஒரு சிந்தனைக் கீற்றாகவோ அல்லது வேறேதேனுமாகவோ இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படி ஒன்றினை நம்மில் கிளப்பிவிட வேண்டும் – மண்ணுக்குள்ளிருக்கும் மணத்தை ஒரு சொட்டுச் சாரல் கிளறிவிடுவதைப் போல!

வாத்தியாரிடம் சண்டையிடும் ‘நம்பியார் பயலை’ டூரிங் டாக்கீஸின் புழுக்கத்திலும் ஒரு கிராமத்து ஆத்தா மண் வாரித் தூற்றுவதில்தான் அந்தக் காட்சியின் வெற்றி இருக்கிறது. ஒரு நல்ல திரைக்கதையால்தான் இது சாத்தியமாகும். அதுதான் படைப்பின் உயிர்நாடி. உயிர் மட்டுமிருந்தால் போதாதே! உடலும் இருந்தால்தானே படைப்பு முழுமை பெறும்?

இயக்குநர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படம் பார்த்திருப்பீர்களல்லவா? அதனைப் பின்னணி இசை சேர்க்குமுன் பார்த்தவர்கள் படம் தேறாது என்றே கூறினார்களாம். ஆனால் இளையராஜாவின் இசையுடன் முழுமை பெற்று வெளியானபின் என்ன நடந்ததென்று சொல்லத் தேவையில்லை.

திரைக்கதையோடு ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை என இன்னபிற அம்சங்களும் காட்சிக்கு வலு சேர்க்கின்றன. எனவே, திரைக்கதை, காட்சியழகு, கவியழகு, ஒலியழகு, காட்சிகளைக் கோத்தவிதம் போன்றவற்றின் அடிப்படையில் காட்சிக் கவிதைகளை மதிப்பிட்டேன்.

சில படைப்புகளில் திரைக்கதை என்பதே முற்றிலுமாய் விடுபட்டுப் போயிருந்தது. சம்பந்தமில்லாமல் எதேதோ காட்சிகள். ஆனால் இங்கே நான் உட்பட எல்லோரும் கற்றுக் குட்டிகள்தானே! அடுத்தமுறை இதில் கவனம் செலுத்தினால் ஆயிற்று!

சில படைப்பாளிகள் தமது கவிதைக்காக பிரத்யேகக் காட்சிகளைப் படம் பிடித்திருந்திருந்தார்கள்; நடிகர்களைத் தெரிவு செய்து நடிக்க வைத்திருந்த சிரத்தை தெரிந்தது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு காட்சியை உருவாக்குவதிலுள்ள நிறைவை அவர்கள் சற்றேனும் சுகித்திருப்பார்கள்.

பரிசுக்குரிய படைப்புகளாக நான் தேர்ந்தெடுத்த படைப்புகளையும் அவை குறித்த சிறு விமர்சனங்களையும் கீழே தருகிறேன்.

ஆறுதல் பரிசுக்குரிய இரு படைப்புகள்:

அருவி:

இந்தப் படைப்பின் மிகப் பெரிய பலம் பின்னணிக் குரல் என்றுதான் சொல்வேன். இனிமையான குரல், ரஸமான வாசிப்பு, தெளிவான உச்சரிப்பு. கவிதையில் இருந்த சந்தமும் வாசிப்புக்கு உறுதுணையாய் இருந்தது. திரைக்கதை என்று பெரிதாக மெனக்கெடாவிட்டாலும் கவிதையோடு ஒத்த காட்சிகளாலும் காட்சிகளில் இருந்த இயற்கையழகினாலும் படைப்புக்கு ஒரு உந்துதல் கிடைத்திருக்கிறது. பரிசில் பாதியேனும் நயாகராவுக்குச் சேரவேண்டும் 🙂

துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

என்ற வரிகள் கவர்ந்தன.

ஒரு காட்சியில் ஓரு ஃப்ரேம் சரியில்லை என்றாலும் சில சமயம் காட்சி பாழ்பட நேரும். அருவி எங்கோ இருக்க, ஒரு பெண்ணின் பின் தலையும் கேசமும் சில நொடிகள் பிரதானமாய் வந்து போவதை வெட்டி எறிந்திருக்கலாம். பெரிய சிரமமொன்றுமில்லை. இத்தகைய சின்னச் சின்ன சிரத்தைகள் படைப்பில் பெரிய மாறுதலைக் கொண்டுவரும்.

மூப்பு:

இந்தப் படைப்பு ஒரு வயதானவரின் மூக்கிலிருந்து துவங்குவது ஒரு பெரிய சறுக்கல். முகத்தை முழுமையாகக் காட்டியிருந்தாலோ அல்லது சோகம் ததும்பிய கண்களிலிருந்து துவங்கியிருந்தாலோ கூட தாக்கம் சிறப்பாக இருந்திருக்கும்.

படைப்பின் ஆரம்பக் காட்சிகளில் நடித்திருக்கும் மனிதரின் பாடி லாங்குவேஜ்தான் இந்தப் படைப்பின் உயிர்நாடி. அலுப்பையும் தனிமையையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். ஆனால் அவரிடம் மூப்பு தெரியவில்லை என்பது ஒரு சிறிய குறை.

//மூப்பு வந்து முதுகை அழுத்த
மூச்சிரைத்து மார்பும் வலிக்க
முட்டாள் மனது ஏக்கத்தோடு//

//உடலும் உலர்ந்து ஓய்ந்து விட்டது – இன்று
உயிரும் பசையின்றிக் காய்ந்து விட்டது//

போன்ற உணர்ச்சி மிக்க வரிகளை மனித முகங்கள் அருமையாய்ப் பிரதிபலிக்கும். ஆனால் கேமரா அஃறிணைப் பொருட்களையே சுற்றி வருவதால் உணர்வுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வெகு நேரம் வருகிற மொட்டை மரம் சற்று எரிச்சலைக் கூட ஏற்படுத்துகிறது. எனினும், கவிதை வரிகளுக்கேற்ப காட்சிகள் படமாக்கப்பட்டிருந்ததால் காட்சிக் கவிதையின் மதிப்பு கூடியதென்னவோ உண்மை.

பின்னணி இசையும் உச்சரிப்பும் நன்று – இளமையை இளைமை என்பதைத் தவிர.

//இந்த உடல் இன்று மக்கி விழுந்தால்
நாளை இன்னொரு உடலுடன் பிறப்பேன்.
மறுபடி உலகில் தவழ்ந்து ஒருநாள் – நான்
இளமையை மீண்டும் தீண்டி மகிழ்வேன்.//

– இவை கவிதையின் நம்பிக்கையான வரிகள். கவிதையில் சந்தம் இன்னும் கொஞ்சம் சந்தம் சேர்ந்திருக்கலாம்.

இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு:

“பூங்கா”

பூங்காவை மையமாகக் கொண்ட அழகான சில காட்சிகள் படைப்பின் பலம். குழந்தைகளையும் முதியவர்களையும் கவிதைக்கேற்பப் படமாக்க மிகுந்த முயற்சி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இவ்வளவு குட்டிக் கவிதையில் கூட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்தது ஒரு குறையே. குழந்தைகளையும் பூக்களையும் எப்படிப் படம் பிடித்தாலும் அழகாய் அமைந்துவிடுமென்பதால் இந்தக் குறையைப் பமிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம்.

நீ பாதி நான் பாதி படத்தில், ‘நிவேதா’ பாடலை கவனித்திருக்கிறீர்களா? குட்டிக் குட்டியாய் க்யூட்டாய் அவ்வளவு காட்சிகள்.. அத்தனையும் கவிதைகள். அப்படி அமைந்திருக்க வேண்டிய கவிதை இது…

சில இடங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் நிழல் விழுந்ததையும் கவனித்திருக்கலாம்.

ஒவ்வொரு பருவத்தின் உணர்வுகளையும் வெளிப்படுத்த அந்தத்தப் பருவத்தினரின் முக உணர்வுகளைக் கொஞ்சமேனும் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். எடுத்துக்காட்டாக,
//தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ//
என்ற வரிகளுக்கு ஒரு மழலையின் எச்சிலொழுகுகிற சிரிப்பு காட்சியாய் அமைந்திருந்தால் நம்மைச் சிலிர்க்க வைத்திருக்குமல்லவா! எனினும் நல்ல ஆரம்பமே!

கவிதையைக் காட்சியில் எழுதுகிற வேகம், சில வேளைகளில் பார்வையாளர்களைக் காட்சியிலும் ஒட்ட முடியாமல் கவிதையிலும் ஒட்ட முடியாமல் செய்கிறது. இவ்வளவு செய்தவர்கள் கவிதையைப் பின்னணியில் வாசித்திருந்தால் அம்சமாய்ப் பொருந்தியிருக்கும். பின்னணி இசையும் எடிட்டிங்கும் ஓகே. கவிதை ஏனோ பூர்த்தியாகாத உணர்வைத் தருகிறது.

முதல் பரிசுக்குரிய படைப்பு:

“உயிர் வலிக்க வலிக்க…”

‘க்ளியர் வின்னர்’ என்று இந்தப் படைப்பினைச் சொல்லலாம் – கிட்டத்தட்ட போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல.

மனதை உலுக்குகிற படைப்பு. இனப்பிரச்சினைகளை மிகச் சிறப்பாய் எடுத்துக்காட்டியிருக்கிறார் படைப்பாளி. மொழிபெயர்த்து சேவை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வளவு நேர்த்தி.

கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்…

எனக்குள்
அதிர்கிறது!!!

காட்சி நம்மையும் அதிரவைக்கிறது. அதுதான் இந்தப் படைப்பின் வெற்றி. ஒவ்வொரு படமும் ஒரு அகதியின் அத்தியாயத்தை அழுத்தமாய்ப் பேசுகிறது – வார்த்தைகளின் தேவை இல்லாமலே! வார்த்தைகளும் சேர்ந்து கொள்ளும்போது கனம் தாங்காமல் மனது மௌனமாய் சுருண்டு கொள்கிறது.

உன்
ஞாபகத்தூறலோடு
நடக்கிறேன்…

நான்
இன்னும்
நீண்ட தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது!!!

(ஞாபகத் தூறல்… என்ன அழகான வார்த்தைப் பிரயோகம்!) இப்படி கவிதை முற்றுப் பெறும் பொழுது நெஞ்சு வெறிச்சென்றிருக்கிறது. எல்லாவற்றையும் இழந்துவிட்டு, வெறும் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நீண்ட தூரம் செல்ல வேண்டிய வலியை உணரமுடிகிறது.

இந்தக் கவிதையைத் தனியாய்ப் படித்திருந்தால் இப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்காது… இதுதான் இந்தக் காட்சிக் கவிதையின் வெற்றி

முகத்திலறைகிற புகைப்படங்களை அழகாகக் கோத்து, உயிரைத் தொடுகிற சோகத்தைப் பின்னணி இசையில் புகுத்தி, இதயத்தைத் துளைக்கும் வார்த்தைகளால் கட்டியெழுப்பி படைப்பினை நம் மனதுக்குள் ஒரு தாஜ்மஹால் போலப் பிரமாண்டமாய் இருத்திவிடுகிறார் இயக்குநர். பிரத்யேகமாய் வீடியோ எதுவும் பதிவு செய்யாமலேயே இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அதீத திறமை தேவை. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

கவிதை இன்னும் சற்று கோர்வையாக இருந்திருக்கலாம் என்பதைத் தவிர எனக்குக் குறையேதும் தெரியவில்லை.

அன்புடன்
நிலா

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


http://groups.google.com/group/anbudan

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த படக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் ஆசிப் மீரான் கருத்துரை

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


(படக்கவிதை – பார்க்கச்சுவை – கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது)

*

‘அன்புடன்’ குழுமம் நடத்திய படக்கவிதைக்கான போட்டி முடிவுகளை வெளியிடும் இந்நேரம் போட்டி குறித்த நடுவர்களின் அனுபவங்களையும், போட்டியாளர்களுக்கான சில குறிப்புகளையும் வழங்கினால் அடுத்த முறை போட்டியில் கலந்து கொள்பவர்கள் பயன் பெறக்கூடுமென்று அன்புடன் நிர்வாகம் கருதியதால், போட்டி குறித்த எனது வாசிப்புரையை இங்கே தருகிறேன்.

ஒரு முக்கியமான விசயத்தை முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன்.

நிறைய இளம் எழுத்தாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட போட்டி. 150க்கும் மேற்பட்ட படைப்புகள். 10 படங்களுக்காக எழுதப்பட்ட கவிதைகள். வித்தியாசமான படங்கள். அழகான படங்கள். நிறைய பாடுபொருளை கவிஞர்களுக்குள் தோற்றுவிக்கக் கூடிய படங்கள் என்பதால் மிகுந்த ஆர்வமாகத்தான் இருந்தது எனக்கும். ஆனால்…….

கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் எழுதப்படக்கூடியதுதான் என்பது போன்ற எண்ணம் பெரும்பாலோருக்கு இருக்கிறது என்பதை இந்தப் போட்டி மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் போல மூச்சு விட அவகாசமின்றி நீண்டு போகின்ற கவிதைகளைக் காண நேரும்போது இயேசுநாதரைப் போல ‘கர்த்தரே! இவர்களை மன்னியுங்கள். இவர்கள் செய்வதென்னவென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அதற்காகக் கவிதைப் போட்டியே பிரார்த்தனை கூடம் போல மாறிவிட்டது கொஞ்சம் அதீதம்தான்.

கவிதை – உணரப்படுவது. உணர்த்தப்படுவது அல்ல என்பதை உணர மறுப்பவர்கள் வார்த்தைகளின் ஊர்வலங்களை ஒழுங்கின்றி அமைத்துவிட்டு கவிதை எழுதுவதாகக் காட்டிக் கொள்ள விழைகிறார்கள் என்பதுதான் பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதாக அமைந்திருந்தன பெரும்பாலான கவிதைகள்

கவிதை அதன் நீளத்தில் இல்லை மாறாக அதன் செறிவில் பொதிந்து கிடைக்கிறது. மொட்டாக இருக்கும் அந்த உணர்வு வாசிப்பவனின் மனதிற்குள் நுழையும்போது மொட்டவிழ்ந்து மலர்ந்து ஒரு அனுபவரீதியான மலராகிறது. இந்த மலரின் நுகர்ச்சிதான் கவிதையின் வெற்றியாகக் கூட இருக்க முடியும். சில சமயங்களில் மொட்டவிழாமலேயே போகக் கூடும். சில மலர்கள் மணம் தராமல் வெறும் அழகினை மட்டும் தரலாம். சில அழகின்றி இருந்தாலும் அடர்த்தியான மணம் தரக்கூடும். மலர்களின் குணங்கள் வேறாக இருப்பினும் அது தரும் ஆனந்தமே தனி. கவிதையும் ஏறக்குறைய அதுபோலத்தான். வலியச் சென்று மொட்டவிழ்க்கும்போது அது ஏறக்குறைய இல்லாமலேயே போய்விடும் சாத்தியங்களே அதிகம்

இனி படக் கவிதைகளுக்கு வரலாம். இது ஒரு புதிய முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக கவிஞர்களுக்கு இயற்கை மேல் அலாதியான காதல் இருக்கும். சமூகக் கோபம் கொண்ட கவிஞர்களும் கூட ஏதேனும் காட்சியை மனதில் கொண்டே கவிதையை வெளிப்படுத்துகிறார்கள். ஆக, காட்சியும் கவிதையும் ஒன்றோடொன்று இணைந்ததுதான். அதில் மாற்றமில்லை. ஆனால், அவ்வாறு எழுதப்படும் கவிதைகளுக்கான காட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த கவிஞர்களுக்கே இருக்கும். சில காட்சிகளைப் பார்க்கும்போது “அடடா! நான் ஒரு கவிஞனாக இருந்திருந்தால் இதனை கவிதையாக்கியிருக்கலாமே?’ என்று கூடத் தோன்றும்.ஆனால், அதையே ஒரு காட்சிப்படமாக்கி நண்பனிடம் கொடுத்து கவிதை புனையச் சொன்னால் எப்படியிருக்கும்? இதை மனதில் கொண்டுதான் சில அழகான புகைப்படங்களை முன்னிறுத்தி அவற்றுக்கான கவிதைகளை வரையச் சொல்லி புதுமையான கவிதைப் போட்டிக்கு அன்புடன் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது.

ஏதேனும் ஒரு படமாக மட்டுமே இருந்தால் அது ஒரு கட்டுக்குள் அடங்கி விடக்கூடுமென்பதால் வித்தியாசமான காட்சிகளைக் கொண்ட பத்து படங்களைத் தந்து கவிஞர்கள் தத்தமது கோணங்களுக்குள் காட்சியை உளவாங்கிக் கவிதை வடிக்கக் கேட்டிருந்தார்கள்..

சாதாரணமான கவிதைப் போட்டி எனும்போது தலைப்பு வழங்கப்பட்டிருக்கும். அல்லது தலைப்பை நாமே வழங்கிக் கொண்டு எழுதலாம். இங்கே படம் கொடுக்கப்பட்டிருப்பதால் அதுதான் தலைப்பு. ஒரு படம் ஒரு செய்தியைத்தான் சொல்ல வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு படம் நூறு செய்திகளைச் சொல்லும் என்பதால் படக் கவிதைகள் தலைப்பு என்ற நெருக்கடிக்குள் கவிஞனைத் தள்ளுவதில்லை. ஆனால், படத்தை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்கிறோமோ அவ்வாறேதான் நமது கவிதையும் உருவாகும்.

உதாரணமாக படம் எண் ஒன்றை எடுத்துக் கொண்டால் இரு கரங்கள் ஒன்றையொன்று தொட முயல்வதாக ஒரு காட்சி. இந்தக் காட்சி சாதாரணமாக உள்வாங்கிக் கொள்ளப்படும்போது ‘தொடுதல்’ என்பது மட்டுமே புலப்படும். அதையே ‘தொட முடியாதவனின் ஏக்கமாக’ காட்சிப்படுத்தினால் வரும் கவிதையின் அடர்த்தியே வேறாக இருக்கும். அதையே தீண்டாமையாகவும் பார்க்கலாம். தொடுதல் என்பதை ஒரு குறியீடாகக் கொண்டு புதிய படிமங்களையும் உருவாக்கிப் பார்க்கலாம். ஆனால், அப்படி எதுவும் நிகழாமல் நேரடியான பொருளிலேயே காட்சியைப் பார்ப்பதால் பெரும்பாலான கவிதைகள் நீர்த்துப் போய்விட்டன.

தாஜ்மஹாலை அற்புதமான காதல் சின்னமாகவும் பார்க்கலாம். எத்தனை ஏழை உழைப்பாளிகளின் வியர்வை என்றும் பார்க்கலாம். ஏன் இத்தனை ஆடம்பரம் என்றும் கேட்கலாம். ஏழ்மைக் காதலர்களின் மேலான எள்ளி நகையாடல் என்றும் விமர்சிக்கலாம். அது அவரவர் சிந்திக்கும் கோணத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையையும், வாசிப்பறிவின் சக்தியையும் பொறுத்தது.அது காட்சிப்படுத்துதலுக்கும், கவிதைக்கான பாடுபொருளை ஏற்றுக் கொள்வதற்கும் மட்டும்தான்.

ஆனால், கவிதை என்று வந்த பிறகு அதில் எவ்வித சமாதானமும் செய்து கொள்ள வேண்டியதில்லை. கவிதை சொற்செறிவும், வார்த்தை சிக்கனமும், பாடுபொருளைத் தெளிவாகச் சொல்வதாகவும், சொல்ல வந்ததை நேரடியாகவோ, உட்குறியீட்டு வழியாகவோ வாசகனுக்குக் கடத்துவதாகவும், கவிஞனின் உணர்வுகளை வாசகனிடமும் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

செங்கல்லை அடுக்கி அடுக்கி வீடு கட்டுவது போல கட்டுவதல்ல கவிதை. மாறாக, தேவையற்ற பாகங்களைக் கல்லிலிருந்து செதுக்கி அகற்றி சிலையாக உருவாக்குவது போல தேவையற்ற வார்த்தைச் சடலங்களை அகற்றி இருக்கும் வார்த்தைகளுக்கு உயிர் தருவதுதான் கவிதை.

இத்தனை சிரமங்கள் இருப்பதாலேயே கவிதை உரைநடையை விட கடினமானதாக, உரைநடையை விட போற்றப்படக் கூடிய இலக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு இலக்கிய முயற்சியை மேற்கொள்ளும்போது அதற்கான தனியான பயிற்சியும், முயற்சியும் அவசியம்.
இந்தப் பயிற்சியும் முயற்சியும் அதீதமான வாசிப்பனுவங்களால் கிடைக்கக் கூடும். பல்வேறு விதமான உத்திகளைக் கொண்ட கவிதைகளை வாசிக்க நேரும்போது, கவிதை தொடர்பான தொடர் விவாதங்களில் ஈடுபடும்போது கவிதை என்னவென்பது புலப்படக்கூடும். அப்படியில்லாமல், ஏதோ நண்பர்கள் பாராட்டிவிட்டார்கள் என்பதோடு நிறுத்தி விட்டால் கவிதையைப் புரியாமலேயே கவிதை எழுதும் நிலைதான் ஏற்படும். அதனைத்தான் இந்தப் போட்டியும் ஒருவகையில் மெய்ப்பிக்கிறது.

பெரும்பாலான கவிதைகள் சொல்ல வந்ததை சொல்லிக் கொண்டே………… இருக்கின்றன. எங்கே நிறுத்துவது, எப்படிச் சொல்வது, என்ன சொல்வது என்பது பற்றிய தெளிவான சிந்தனை இல்லாமல் எழுதப்படும் கவிதைகளை எளிதில் அடையாளம் காண முடியும். வார்த்தைகளுக்குள் பொருள் புதைக்கும் சூட்சுமம் புரிந்து கொண்டால் கவிதை அழகுபெறும். ஆனால், அழகியல் மட்டுமே கவிதையா என்றால் இல்லை. சமூகக் கோபமும், தனிமனித உணர்வுகளும், காட்சிப்படிமங்களூம், இயற்கை அழகுகளும், அன்றாட நிகழ்வுகளுமே கூட கவிதைகளுக்குக் களமாக அமையும் . ஆனால், அவற்றைச் சொல்லும்போது சுவையாக, தெளிவாக, எளிமையாக, செறிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டூம்.

சில கவிதைகள் நாட்டுப்புற பாடல்களைப் போல் இயல்பான நடையில் அமைந்திருந்தது அழகுதானென்றாலும் பாடுபொருளிலும் கொஞ்சம் அழுத்தம் சேர்ந்திருக்கலாம். நாட்டுப்புறப் பாடல்களைப் போல வழக்கு மொழியிலும் சில கவிதைகள் இருந்தன. இம்மாதிரியான பாடல்களில் இயல்பாகவே ஒரு சந்த லயம் இருக்கும். ஆனால் அதனை கவிஞர்கள் தவற விட்டிருந்தார்கள். சில கவிதைகள் செறிவாக இருந்தன.ஆனால் தலைப்போடு ஒன்றவில்லை. ஒரே ஒரு கவிதை மட்டுமே கொஞ்சம் அங்கதச் சுவையோடு இருந்தது. சில கவிதைகளில் கருத்துக்கள் செறிவாகவும் சொல்லப்பட்ட விதம் சொதப்பலாகவும் இருந்தன. சில கவிதைகள் என்ன சொல்வதென்றே தெரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தன.புதிய நீதிக்கதை ஒன்றை வெகு நீளமாகச் சொன்னதால் சொல்ல வந்ததை நீர்த்துப் போகச் செய்தது ஒரு கவிதை. இப்படி பலவிதமான கவிதைகளைப் படிக்க நேர்ந்தது ஒரு வித்தியாசமான, மகிழ்ச்சியான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அந்த மகிழ்ச்சியிலும் கவிதை குறித்த உணர்வின்றி எழுதுகிறார்களே என்ற வருத்தமும் கலந்தே இருந்தது.

முகம் தெரியாத இந்தக் கவிஞர்களின் ஆர்வத்தையும், அவர்களுக்கு வாய்ப்பளித்து இப்படி ஒரு போட்டியை நடத்திய அன்புடன் குழுமத்தையும் பாராட்டுவோம். வெறும் இயல் கவிதைகளோடு நின்று விடாமல் காட்சி, ஒலி என்று பல்வேறு புதிய முயற்சிகளுக்கும் இடம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மரபுக்கவிதைகளுக்கும் ஒரு போட்டியை ஏற்படுத்தியிருக்கலாம்.. இளம் கவிஞர்களுக்கு ஒரு மேடை அமைத்துத்தர முயலும் அன்புடனின் முயற்சிகள் தொடரட்டும்.

இனி கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகளுக்கு வரலாம். பத்து படங்கள் தரப்பட்டபோதும் முதல் படம் மட்டுமே அனைவரையும் எழுத வைத்திருக்கிறது என்று சொல்லிவிடலாம். அநேகமாக முதல் படத்திற்கு எழுதப்பட்ட கவிதைகள்தான் ஓரளவுக்கேனும் கவிதை வாசிப்பனுவத்தைத் தந்தது எனலாம்.மற்ற படங்களைப் பொறுத்தவரை ஆங்காங்கே சில கவிதை வரிகள் சிலிர்ப்பூட்டினாலும் ஒட்டு மொத்தமாகக் கவிதை என்ற அளவில் சில கவிதைகள் ஈர்க்கத் தவறிவிட்டன.

கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நடுவர்களுக்குப் பெரிய சிரமம் இல்லையென்று சொல்லியிருந்தேன்.ஆனால் அது முதல் சுற்றில் மட்டும்தான். இரண்டாவது சுற்றுக்கு வரும்போது வெறும் 20 கவிதைகளாக அவை சுருங்கிவிட்டன. இந்த இரண்டாம் கட்ட தேர்வு மீள்வாசிப்பிற்கும், கவிதைகளை இன்னமும் இணக்கமாக அணுகுவதற்கும் பேருதவியாக இருந்தது. மீள்வாசிப்பின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கவிதைகளின் மீது மீண்டும் வாசிப்பு செய்து அந்தக் கவிதைகளை அவை படக்காட்சியோடு உடன்படுகிறதா என்ற காரணத்திற்காகவும், கவிதைச் செறிவுக்காகவும், மொழிநடைக்காகவும் மீண்டும் மீண்டும் வாசித்தபின் இந்த முடிவுகளுக்கு வந்தோம்.

வறண்ட மார்புடன்
வானம் பார்த்த பூமி
ஏங்கிக்கிடக்கிறது,
பானையிலிருந்து சிந்தும்
ஒரு துளி நீருக்கு!

தனியாக விளக்கிச் சொல்ல ஏதுமில்லாத வெளிப்படையான கவிதை. நான்கு பக்கத்திற்கு நீட்டி முழக்காமல் நான்குவரிகளில் சொல்லப்பட்டிருப்பதாலேயே இது கவனத்தை சட்டென்று ஈர்த்து விடுகிறது. எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் கவிதையில் முக்கிய பங்கு வகிக்கிறது – . எவ்வளவு நீளமாகச் சொல்கிறோம் என்பதல்ல என்பதை நிரூபித்த கவிதை. அழகான காட்சிப்படுத்துதலைக் கையாண்டிருக்கும் இந்தக் கவிதை மண்ணடி நீரை மனிதன் உறிஞ்சி மண்ணையே தாகத்தால் தவிக்க வைத்திருக்கும் விசயத்தை சூசகமாக எடுத்துரைக்கிறது.
ஆறுதல் பரிசைப் பெறுகிறது இந்தக் கவிதை

****************************************************************************

“தொட்டு விடு!”

பூமி
எத்தனை முறை
மரண தண்டனை வழங்கினாலும்
அழியாமல் இருக்கும்
மனித விதையை யார் போட்டது!

அவன்
தொட்டுத்தொட்டுத் தொடங்கிய
தொடர் ஓட்டத்தை யார் தொடங்கியது!

தொடுவதுதான் வேற்றுமையை
விடுவதின் தொடக்கம் என்பதால்
தொடுவோம்!

தவறுகளை
சுட்டிக்காட்டுவதற்குதான்
விரல்கள் என்று யார் சொன்னது!
உறவுகளை ஒட்டிப் பார்ப்பதற்கும்
தொடுவதுதானே தொடக்கம்!

தீண்டாமையைக் கொளுத்தும்
தீக்குச்சிகளாய் விரல்கள் மாறட்டும்!
ஏனென்றால்
தொடுவது இருக்கும் வரைதான்
இந்த மண்ணில்
மனித நேயம் இருக்கும்!-அதனால்
தொடுவோம்! (47அ)

எதையும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும் அவசியமில்லாத எளிய கவிதை. கவிதைகள் எதனை வேண்டுமானாலும் பாடலாம் என்றிருப்பினும் அதன் ஆதாரமாக நம்பிக்கைகளையும் மனிதருக்குள் விதைக்கும் போக்கை ஆதரிக்காமல் இருக்க முடியாது. இங்கே தீண்டாமை பற்றித்தான் பேச்செழுகிறது. தீண்டாமையைக் குறைக்க தீண்டுதல் போல சிறந்த வழி வேறில்லை என்று சொல்லியிருக்கும் அழகில் இருக்கும் எளிய முரண் இந்தக் கவிதைக்கு அழகு சேர்க்கிறது. இரு கைகள் தொடமுயலும் ஒரு படத்தை வைத்துக்கொண்டு தொடுதலையும், விலகலையும் கவிதையின் ஒரே புள்ளியில் கொண்டு வந்ததற்காகக் கவிஞருக்கு சிறப்பு பாராட்டுதல்கள். இந்தக் கவிதையும் ஆறுதல் பரிசுக்கான தகுதி பெறுகிறது.

************************************************************************************

படம்# 7 – “குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்”

குடம் தண்ணீருக்கு ஒரு
குழந்தை காவலா?
பள்ளிக்கூடம் போகாமலே
பருவங்கள் கரைந்தும்
இழப்பு கொஞ்சமும் உறுத்தாமல்
இயல்பாய் சிரிக்குது பாருங்கள்!

இப்பொழுதே சிரித்துக் கொள்
என் இனிய செல்லமே!
பத்திரப் படுத்திக் கொள்
பாதுகாப்பாய் உன் தண்ணீரையும்…
இனி நீ வளரும் நாட்களில்
உன் செம்பு நீரும் சிரிப்பும்
திருடு போய் விடலாம்…!

மூன்று பக்கமும்
தண்ணீர் சூழ்ந்திருந்தும்
பருக ஒருவாய்
நீரும் கிடைக்காமல் அலைகிறது
ஒரு பெருங் கூட்டம் !

ஆற்று நீரெல்லாம்
ஆலைக் கழிவுகளால்
அமிலமாகிப் போனது;
ஊற்றுப் படுகைகளுக் கெல்லாம்
ஊறு நேர்ந்து
உலர்ந்து வெகு காலமாயிற்று.;
காற்றும் விஷமாவது
கவலை அளிக்கிறது கண்ணே…!

வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில்
பறிபோய்க் கொண்டிருக்கிறது
வறியவர்களின் நீரும் நிலமும்…
ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி
குளிர் பானமென்று
கூவிக்கூவி விற்கிறார்கள்…!

தங்கத்தை விடவும்
தண்ணீருக்கு விலை ஏறுகிறது;
நடக்கிறது நல்லபடி
உலகெங்கும் நீர் வியாபாரம்!

ஆருடம் சொல்கிறார்கள்
அடுத்த உலக மகா யுத்தம்
நீருக்காக இருக்குமென்று…
தடுக்க முடியாமல் போகலாம்
தக்க வைத்துக் கொள் தங்கமே
உன் சிரிப்பையாவது அதுவரை…!

‘கவிதைக்கான ஜீவன் அதன் கடைசி வரையில் ஒளிந்து கிடக்கிறது’ என்று நண்பர் யுகபாரதியை நேர்முகம் காணும்போது சொல்லியிருந்தார்.
அது தொடர்பான கேள்விகள் எஞ்சியிருந்தபோதும் சில கவிதைகளின் கடைசி வரிகளில் தரும் அதிர்வு கவிதைக்கான முழுப்பரிமாணத்தையும் எளிதில் வாசகனிடம் கடத்திச்சென்று விடுகிறது.. உலகமயமாதல், உற்பத்தி பெருக்குதல், இயந்திரமயமாக்கல் என்று மனிதர்கலின் சுயநலங்களால் பூமியின் நீர்வளங்கள் உறிஞ்சப்படும் இன்றைய நிலையை மனதில் வைத்து நாளைய சந்ததியினரைக் குறித்த கவலையாக எழும் இந்தக் கவிதையின் நன்னோக்கம் கவிதையின் மேல் மதிப்பேற்படுத்துகிறது. இன்னமும் நீளத்தைக் குறைத்து வார்த்தைகளைச் செப்பனிட்டு செறிவாக்கியிருந்தால் முதல் பரிசை வென்றிருக்கும் இந்தக் கவிதை. ஆனால், இந்தக் குறைபாடுகளுக்காக இரண்டாவது பரிசைப் பெறுகிறது. உலகளாவிய நீர்வள ஆதாரத்தை முன்னிறுத்திய கவிஞருக்கு வாழ்த்துகள்!!

************************************************************

“ஒரு மனைவியின் விடைபெறல்”

போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது;
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்…

நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்;
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்…
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்!

திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயாணம்
புரியவே இல்லை எனக்கு!

அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை…
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்!

எவ்வளவு முயன்றும் – உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!

வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து…!

இதுவும் ஒரு அலாதியான சிந்தனைதான். நேசமானவர்களாக இருந்து பிரிவதின் ரணமும் வேதனையும் உலகில் வேறெந்த வலியோடும்
ஒப்பிட முடியாது. காதலிக்கும் காலங்களில் புலப்படாத எதிர்குணங்கள் சேர்ந்து வாழும்போது தென்படும்போது விரிசல்கள் இயற்கை. அந்த விரிசல்களை வெல்வதாய் அமையாத நேசம் விடைபெறலில் மட்டுமே முடியும். அந்த விடைபெறலுக்கான காரணமும் ‘புராதன மூளை’யின் வெளிப்பாட்டால் விளைந்தது என்பதைச் சொல்லும்போது இந்தப் பெண்ணின் மனதைரியமும், அடங்கிக் கிடந்தேனும் மீதி வாழ்வைக் கழிக்கத் தேவையில்லாத பெண்ணியச் சிந்தனையும் மிகச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது செறிவான எளிமையான வார்த்தைகளின் வழியே

எவ்வளவு முயன்றும் – உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!

இந்த வார்த்தைகள் சொல்லிவிடுகின்றன பிரிவிற்கான கசப்புணர்வுகளை. இதனை விலாவாரியாகச் சொல்லிக் கொண்டு போய் வாசகனை அயர்ச்சிக்குள்ளாக்கும் பணியைக் கவிஞர் செய்யவில்லை. என்ன நடந்திருக்கலாம் என்பதை வாசகனுக்கு விட்டுச் சென்று விடுகிறார் கவிஞர்.
என்றாலும்,

கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து…!

என்ற வார்த்தைகளின் பின்னிருக்கும் கண்ணீர்ச்சுவையை உணர முடிகிறது நம்மால். இன்னமும் நிழலாடுகிறது அவன் மேலிருக்கும் நேசம். இருந்தாலும் கணவனான பின் அவனது ஆணாதிக்கச் சிந்தனைகளால் அடிமைப்பட முடியாமல் விலகுகிறாள் அவள். விலகும்போதும் அவளால் தன் பழைய நினைவுகளை அகற்ற முடியவில்லை மனதிலிருந்து – மீண்டும் கைகுலுக்க அவளால் முடியும் – கணவனாய் அவன் இருந்த கசப்புகளை மறக்கும்போது மட்டும்.

கவிதை உணர்த்தப்படுவது என்பதை இந்தக் கவிதை ஓரளவு செம்மையாகவே செய்திருக்கிறதென்றே சொல்லலாம். தொடுகையை எல்லாரும் யோசிக்கும்போது ஒரு விடைபெறலுக்கான கடைசி கைகுலுக்கலாக இதனைப் பார்த்திருப்பதற்காகக் கவிஞருக்கு பாராட்டுதல்கள். எல்லாருக்கும்தான் பார்வை இருக்கிறது. ஆனால் காணும் காட்சி என்ன என்பதில்தான் நாம் வேறுபடுகிறோம். நல்ல காட்சியைக் காண விழைந்த கவிஞருக்கு வாழ்த்துகள். ஆகவே, இந்தக் கவிதை முதல் பரிசைப் பெறுவதில் வியப்பேதுமில்லை.

இதே கவிஞரின் புதிய நீதிக்கதையும் ரசிக்கும்படியாக இருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

……….
போட்ட கற்களின் அழுத்தத்தில்
ஓட்டை விழுந்து பழம் பானையில்
ஒழுகிய கொஞ்ச நீரையும்
வறண்டிருந்த நிலம்
வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!

என்ன செய்யும் ஏழைக் காகம்?
தாகம் தணிக்க வழியற்று
பறந்து போய் மறுபடியும் – சிறுவர்களின்
பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
நீதிக் கதை வெளிகளில்
நீந்தித் திரியலாயிற்று!
நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
தொடர்கிறது காலங்கள் தோறும்…!

***************************************************************************************************

கவிதைப் போட்டி என்பது எழுதத் தூண்டும் ஒரு முயற்சிதானே தவிர இந்தப் போட்டி முடிவுகளே முழுமையானதென்று யாரும் கருத அவசியமில்லை. ஒரு போட்டியில் விளையும் கவிதைகளை விடவும் நல்ல கவிதைகளை இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கவிஞர்கள் படைத்திருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் படைக்கலாம்.ஆகவே இந்தப் போட்டியை ஒரு சுய பரிசோதனைக்கான களமாக மட்டும் எடுத்துக்கொண்டு உங்கள் எழுத்து முயற்சிகளில் மேலும் தொடருங்கள். நல்ல கவிதைகளைத் தேடித்தேடி படியுங்கள். நல்ல கவிதைகளைப் பற்றிய விவாதங்களை உங்களுக்குள் நிகழ்த்துங்கள். கவிதைக்கான தளத்தில் கலந்தாலோசனை செய்யுங்கள். நல்ல கவிதைகள் படைத்து உங்களுக்கென ஒரு பெயரை உருவாக்குங்கள்.

இந்தப் போட்டியில் என்னோடு இணைந்து தேர்வாளர்களாக செயல்பட்ட அன்புச் சகோதரர்கள் பாலபாரதி மற்றும் அகிலனுக்கு என் இதய நன்றி!!
மிகக் குறைந்த கால அவகாசமே வழங்கி அவர்களைத் தொந்தரவு செய்தபோதும், கவிதைகளை மீள்வாசிப்பு செய்து மதிப்பெண் வழங்கக் கூறியபோதும் அவற்றை சரியாகச் செய்து தந்து கவிதைகளை தேர்ந்தெடுக்க எனக்குப் பேருதவியாக இருந்த அவர்களுக்கு நன்றி!!

கவிதைப் போட்டிகளுக்காக மிகப்பெரும் களம் அமைத்து அந்தக் களத்தில் எல்லாக் கவிஞர்களையும் எழுதத் தூண்டி இந்தப் போட்டியை மிகப் பெருமளவில் விளம்பரம் செய்து சிறப்பாக நடத்தியதிலும். நடுவர்களுக்கான உதவிகளையும், ஏற்பட்ட ஐயங்களுக்கான தெளிவை நல்குவதில் காட்டிய துரிதத்தையும், நல்ல கவிதைகளே தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதற்காக காட்டிய முனைப்பினையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அன்புடனில் அதிகம் எழுதாமல் ஒதுங்கி இருந்தபோதும் கூட இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த அன்புச்சகோதரனும் கவிஞனுமான ப்ரியனுக்கும், அன்புடனை சிறப்பாக வழிநடத்தும் புகாரிக்கும், சேதுக்கரசிக்கும் அன்புடன் குழும உறுப்பினர்ளுக்கும் எனது வாழ்த்துகள்.

தோழமையுடன்
ஆசிப் மீரான்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை

(ஒலிக்கவிதை – கேட்கச்சுவை – கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.)

*

கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லிச் சுவையை அளித்தல். கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன! சில நாடகமாய் கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சில் முள்ளாய்க் குத்துகின்றன! வாழ்க்கையின் உண்மைக் காட்சிகளை அன்ன நடையிலோ, அல்லது புயல் வேகத்திலோ சொல்லுகின்றன. மகாகவியின் கவிதையில் உலக மெய்ப்பாடுகள், தத்துவங்கள் ஒளிவீசும். சில கவிதைகளில் ஓரிரு வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும்! முடிவு புதிராக மாறிப் புரியாமல் போகும். சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் தெரிந்தாலும் வரிகளின் முழுத் தோற்றம் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றது என்று புரியாமலும் போகும்!

கவிதைகளின் வரிச் சொற்கள் செங்கல் சுவர்போல் அணிவகுத்துக் கட்டப் படாமல், தெளிந்த சிற்றோடை போல் சிரித்தோட வேண்டும். கலைத்துவ மணம் பரப்ப வேண்டும். வரிகளின் மொழிகள் நளினமாக நடனமாடி நாதசுரக் கீதம் போலும், வீணையின் நாதம் போலும் ஒலித்து நெஞ்சில் அரங்கேற வேண்டும்.

கவிதையைப் பற்றிக் கவிஞர் வைகைச் செல்வி கூறுவது:

பாலும், தெளி தேனும், பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துருக்கி,
வார்த்தை விதை ஒன்று,
மூளைக்குள் தெறிக்க,
முளை விட்டு உணர்வுக்குள்
கணுக் கணுவாய்ப் பயிர் வளர,
செங்குருதிப் புனல் பாய,
மண்ணுக்குள் அடிக்கரும்பாய்,
மனசெல்லாம் சர்க்கரையாய்,
நெஞ்சுக் குழிக்குள்ளே,
இறங்கி வழிந்தோடி
உறங்கும் உயிர்ப் பந்தை,
புரட்டுவது கவிதை.

சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை ? வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை ? இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஓர் உன்னதக் கலைக் காட்சிபோல், சர்க்கஸ் ஆட்டம் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை! சுருங்கச் சொல்லிக் கதை புனையும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம். கருத்தாட்சி [Theme], சொல்லாட்சி [Word Power], நடையாட்சி [Style], அணியாட்சி [Simile, Metaphor, Allegory, Alliteration, Antithesis, Irony, Personification (Figure of Speech)] மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதைகள், நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு விடுகின்றன! அத்தகைய உன்னதக் கலைப் படைப்புகள் ஆக்கும் நியதிகளைக் கையாண்டு, ஆழமாய்ச் சிந்தித்து எழுதப் பட்டவையே. கால வெள்ளம் அடித்துச் செல்லாது, கரையான் தின்று செறிக்காது, நிலைத்து நிற்கும் கலைப் படைப்புகள் யாவும் இராப் பகலாய்ச் சிந்தித்து ஆக்கப் பட்டவையே.

“ஒலிக்கவிதைகள்” எனத் தலைப்பு இருந்தாலும் அவை யாவும் முதலில் எழுத்துக் கவிதைகளாகத் தோன்றியவைதான். கவிதைகளை வாசிக்கக் கேட்டாலும், அவற்றை ஒப்பிட்டுத் திறனாய்வு செய்யும் போது எழுத்துரு வரிகளைக் கண்ணாலும், கருத்தாலும் திரும்பத் திரும்பப் பலமுறைப் படித்துதான் முடிவு செய்தேன்.

ஆரஞ்சுப் பழம், ஆப்பிள் பழம், மாம்பழம், பலாப் பழம், வாழைப் பழம் ஆகியவற்றின் சுவைகளை ஆராய்ந்து எந்தப் பழம் சுவை மிக்கது என்று சொல்லுங்கள் என்று மதிப்புக்குரிய சேதுக்கரசி, புகாரி, பிரியன் மூவரும் என்னை வேண்டிக் கொண்டார்கள். நான் பலாப் பழமே மிக்கச் சுவையானது என்று சொன்னால், போட்டியில் பங்கெடுத்த கவிஞர்கள் தங்கள் பேனா முனைகளால் என்னைக் குத்த ஓடி வாராதீர்கள். ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் மூன்றையும் பரிசாகப் பெற்றிடும் தனித்தனி மாந்தரின் கால வேறுபாடுகளைப் பார்த்தால் மிகச் சில மில்லி விநாடிகளே தெரியும். ஆகவே முதற்பரிசு, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசுகள் ஆகியவற்றில் உள்ள ஒப்புமை வேறுபாடுகள் அதிகமில்லை, மிகச் சிறிய கவித்துவக் கருத்தமைப்புகளே.

பரிசு பெற்ற ஒலிக்கவிதைகள்

முதற்பரிசுக் கவிதை

எனது ஆய்வுப் பார்வையில் ” இருட்டிலே ஒரு மெழுகுவத்தி ” என்னும் ஒலிப்பா முதற் பரிசுக்குரிய கவிதையாக தீர்மானம் செய்யப்பட்டது. அதே முடிவை எனது இணைத் தேர்வு நடுவர் கவிஞர் இக்பால் அவர்களும் தெரிவித்தார். முதற்பரிசு மட்டுமல்ல, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசு முடிவுகள் அனைத்திலும் இருவரது ஏகோபித்த உடன்பாடுகள் உள்ளன.

உலகமே இருள் சூழ்ந்தது! பரிதி அதன் கண்மூடித் திறக்கும் மெழுகுவத்தி! விண்வெளியே இருள் சூழ்ந்தது! ஆங்கே மின்மினி போல் விண்மீன்கள் கண்சிமிட்டும் மெழுகுவத்திகள். விரிந்து செல்லும் பிரபஞ்சத்தில் இருள்வெளியே பேரளவானது. ஒளிமீன்கள் விடும் வெளிச்சங்கள் மின்மினிப் பூச்சிகள் வீசும் நுண்ணொளி போன்றவைதான்.

இருட்டைப் போக்கும்
எத்தனையோ மெழுகுவத்திகள்
வெளிச்சத்தைப்
பார்த்ததே யில்லை

ஒரு மெழுகுவத்தி
மகாத்மாவாக
மாறியபோது தான்
உலகம் அகிம்சையைப்
புரிந்து கொண்டது

ஒரு மெழுகுவத்தி
ரோஜாவாக மாறியபோது தான்
விடுதலைப் பத்திரம்
இங்கே எழுதப்பட்டது

வெளிச்சத்தை நாங்கள்
விலைகொடுத்து
வாங்கும் போதெல்லாம்
கதவுக்கு வெளியே
இருள் தானே காத்திருக்கிறது

ஆனால்
மனிதநேயம்
மரணப் படுக்கையில் இருக்கும்போது
வெளிச்சத்தைப் பார்க்கவே
எங்களுக்கு
விளக்கு வேண்டும்

முதற்பரிசு பெற்ற கவிதையின் இந்த முத்துச் சுடர் மொழிகள் என் மனதை முற்றுகை செய்கின்றன. உலகத் தத்துவம், வரலாறு, மெய்ப்பாடுகள் சில வரிகளில் மின்னுகின்றன

இரண்டாம் பரிசுக் கவிதை

” உன்னை நினைக்கையிலே ”

முதற்பரிசுக் கவிதை பிரபஞ்ச இருளையும், மின்மினி மெழுகுவத்தியையும்
விளக்கும் போது, இரண்டாம் பரிசுக் கவிதை காதலர் உலகில் ஒளியேற்றுகிறது.

முட்டிமுட்டிக் குடிக்கும்
கன்றினைப்போல்
உன்னைச் சுற்றிச் சுற்றியே
நினைவு.

உன்னில் நானா
என்னில் நீயா
யாரோடு யார் கலந்தோம்?
ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
பள்ளிப் பாடக் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றே யானது
நம் பள்ளியறைக் கணக்கில்.

நீயும் நானுமில்லாத
உலகைக் கண்டேன்
அங்கு காற்றே இல்லை
நீயும் நானுமில்லாத
நிலவைப் பார்த்தேன்
அதில் ஒளியே இல்லை
நீயும் நானுமில்லாத
கவிதை புனைந்தேன்
அதில் ஜீவனே இல்லை.

உள்ளத்தைத் தேனாக்கும் உன்னதக் காதல் வரிகள் இவை.

ஆறுதல் பரிசுகள்:

1. ” அன்புடன் அபலை ”
2. ” பிடிமானம் ”

1. ” அன்புடன் அபலை ” ஏழ்மையில் வாழ வகையற்ற மாதொருத்தி உடலை விற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு சிறு கதையைக் கூறுகிறது.

யாசிக்கின்றேன்
அன்பை
யோசிக்கிறார்கள்

ஆண்களுக்குத் தேவை
உடல்
பிற
பெண்களுக்குத் தேவை
பணம்
எனக்குத் தேவை
மனம்

அமாவாசை
இருளில்
சிறகு விரிக்கும்
மின்மினியின்
ஒளி போல
நெஞ்சத்தில்
புதைந்து கொண்ட
சின்னச் சின்ன
ஆசைகள்

அஸ்திவாரத்தோடு
நின்றுபோன கட்டிடங்கள்
போல
அனாதரவாய்
மன ஊஞ்சலில்…

குத்து விளக்காய்
குளிர்ந்து நிற்கும்
என் மன அழகு
உண்மை..

திருமண அழகு
தேடும்
பலாச்சுளை போன்ற
என் இனிய பெண்மை
உண்மை..

விலை போகாத
பொற்சிலை நான்..

2. ” பிடிமானம் ” என்னும் கவிதையும் காதல் உலகில் சஞ்சரிக்கிறது.

உளியாய் வந்தாய்
உருகும் உள்ளமறிந்து .
சிதிலமாய்க் கிடந்த கல்லெடுத்து
செதுக்கிச் செதுக்கி சிற்பம் செய்தாய்

காற்றாய் வந்தாய்
காதலில் கசிந்துருகி
எங்கோ கிடந்த தக்கையையெடுத்து
புல்லாங்குழலாய் கீதமிசைத்தாய்

மீட்சியின்றித் தவித்தாலும்
வாழ்கிறேன்
வீழக்கூடாதென்ற உன்சொல்லினைப்
பிடிமானமாய்ப் பற்றிக்கொண்டு…

கவிதையில் வரும் கல் சிற்பம், கசிந்துருகும் புல்லாங்குழல், அண்டத்தின் சிகரம் ஆகியவை பாரையே புதுப் பார்வைக்கு அழைத்துச் செல்கின்றன.

அன்புக்கடல் தமிழ்மணிகளே! ஒலிக்கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடிவில் கூறுங்கள்: மாம்பழம், பலாப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப் பழம் ஆகியவற்றில் எது எல்லாவற்றிலும் சுவையாக இருக்கிறது ? எங்களுக்கு நூறு சதம் தீர்மானமாக ஆய்ந்து தெரிவிக்க முடியவில்லை! அவற்றை எல்லாம் ஆழ்ந்து ஒப்பிட்டு எங்கள் தராசில் நிறுத்து, எங்கள் உள்ளம் முடிவு செய்த ஒலிக்கவிதைகளைப் பரிசுக் கவிதைகளாக உங்கள் முன் வைக்கிறோம்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு