அதிகாரி ஸார்

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தமிழ்மகன்அவரால் ஒரு ஆபத்தும் இல்லை என்று நன்றாகத் தெரிந்தும் அனைவருக்கு அதிகமாகவே பயப்பட வேண்டியிருந்தது. சொல்லப் போனால் இன்று இரவுக்குள் அவர் நரகத்துக்குப் போய்விட்டால் (அங்குதான் போவார் என்பதில் உறுதியாக இருந்தனர்) தங்கள் வாழ்க்கையின் பெரும் தொல்லையெல்லாம் ஓர் நாளில் ஒழிந்ததென்று கொண்டாடவும் தயாராக இருந்தனர்.
அவர் மரணம் எப்படி அமைய வேண்டும் என்று சகலருக்கும் ஒரு தனித்தனியே ஆசைகள் இருந்தன.

அவர் போகிற கார் குப்புற கவிழ்ந்து பாழுங்கிணற்றில் விழுந்து ஒருவாரம் கழித்துதான் அவரை கண்டெடுக்க வேண்டும் என்பது ஃபோர்மேன் சதாசிவத்தின் கனவாக இருந்தது.

ஆஸ்திரேலியா போகும்போது விமானம் ஹைஜாக் செய்யப்பட்டு தீவிரவாதிகளால் இவர் முதல்பலியாக வேண்டும் என்பது மானேஜர் பிரகாஷின் ஆசை.

“கத்தி எடுத்துக் குத்திட்டு ஜெயிலுக்குப் போறேன்டா.. மத்தவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்” என்பான் மிஷின் ஆபரேட்டர் செல்வராஜ்.

பாதைகள் வேறுவேறாக இருந்தாலும் எல்லோருடைய இலக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. அவரவர் நிலைமைக்கு ஏற்பத்தானே நினைவுகளும் இருக்கும்….? வெள்ளத்தனையது மலர் நீட்டம்.

அந்த மனிதர் மீது அப்படியென்ன கோபம்? என்னதான் மன வருத்தம் இருந்தாலும் ஒரு மனிதன் தான் விரோதித்த மனிதன் இறந்து போய்விட வேண்டும் என்று நினைப்பானா? மனித நாகரீகம் இதுகாரும் கற்பித்த சகிப்புத்தன்மையும் நேயமும் இதைத்தானா? என்று பதறுபவர்கள் மட்டும் மேற்கொண்டு இக்கதையைப் படியுங்கள்.

நீங்கள் பார்க்கத் துடிக்கும் அந்த நபரின் பெயர் பஞ்சாபகேசன். தென்னிந்தியாவில் பெயிண்ட் தயாரிக்கும் மிகவும் பெயர் பெற்ற நிறுவனத்தின் ஐந்து டைரக்டர்களில் மூத்தவர். சொத்து சமாசாரத்துக்காக வயதில் மூத்த அவரையும் ஒரு டைரக்டராகச் சேர்த்து அவருக்கும் பிரம்மாண்டமாய் ஒரு அறையும் அட்டண்டரும் சமத்துவமான அந்தஸ்தும் கொடுத்திருந்தாலும் மற்ற நான்கு பேர் எடுக்கிற முடிவுதான் முடிவு. இவர் ஒப்புக்குச் சப்பாணி மாதிரிதான்.

பெயிண்ட் தயாரிப்பு பற்றியோ, அது எங்கெல்லாம் அனுப்பி வைக்கப்படுகிறதென்றோ, ஷேர் நிலைமை எப்படி இருக்கிறதென்றோ, ஆண்டு வருமானம் எவ்வளவு என்றோ அவர் கிஞ்சித்தும் அறிந்தவர் இல்லை. அப்படியிருக்கும் ஓர் அப்பிராணியை எதற்காக
எல்லோரும் இப்படி நிந்திக்க வேண்டும்?

தினமும் அவர் அலுவகத்துக்கு வருவார். வந்ததும் வராததுமாக அழைப்பு மணியை ஆவேசமாக அழுத்தி தலைமுழுகிப் போகிற காரியம்போல அட்டண்டரை அழைப்பார்.

“அவனைக் கூப்பிடு” என்பார். அட்டண்டர் ஒரு போதும் “எவனை?’ என்று எதிர் கேள்வி கேட்டதில்லை. அப்படி கேட்டவன் எல்லோரும் ஒருவாரம் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். சஸ்பென்ட் என்பதைத்தான் அவர் டிஸ்மிஸ் என்பார்.

“என்னையே எதிர்த்து கேட்கிறீயா நீ? உனக்கு நான் சம்பளம் தர்றேனா… இல்லை எனக்கு நீ சம்பளம் தர்றீயா? கூப்படச் சொன்னா கூப்பிட வேண்டியதுதானேடா மடையா. நீ என் கண் முன்னாடி நிக்கக் கூடாது. ஒருவாரம் டிஸ்மிஸ்… நீ போய் அவனைக் கூப்பிடு”
மீண்டும் “எவனை?’ என்று கேட்டு இன்னொரு வாரம் டிஸ்மிஸ் ஆகும் தைரியமில்லாமல் சின்ன முதலாளியைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி இரண்டொரு நாள் அவர் கண்ணில் படாமல் வேறு ஒரு டிபார்ட்மண்டில் வேலை பார்ப்பான் அட்டண்டர்.
ஆகவே “கூப்பிடு அவனை’ என்றால் எவனையாவது எதிரில் போகிறவனைக் கூப்பிட்டு “சார் கூப்பிட்டாரு” என்பதுஅட்டண்டரின் வழக்கம்.

அன்றொரு நாள் சிக்கியவன் அக்கவுண்ட்ஸ் மேனேஜர்.

அட்டண்டர் சொன்னதின்பேரில் உள்ளே போனவனை, “நீ ஏன் உள்ள வந்தே?” என்றார். அக்கவுண்ட் மேனஜர் புதிதாக வேலைக்கு வந்தவர். “நீங்கதான் கூப்பிட்டீங்கன்னு அட்டன்டர் சொன்னான்” என்றான்.

“எவனாவது சொன்னா உள்ள வந்திட்றதா? சரி.. சரி.. நீ என்ன வேலை செய்யறே?”

“அக்கவுண்ட்ஸ் மேனேஜர்”

“கணக்கு வழக்கெல்லாம் நல்லா தெரியுமா?”

“தெரியும்.”

“சரி. நான் ஒரு கணக்கு சொல்றேன்… அஞ்சு ரூபா குடுத்தா மீதி எவ்வளவு?”

“……”

“தெரியும்னா தெரியும்னு சொல்லு. தெரியாதுனா தெரியாதுனு சொல்லு. இந்த முழி முழிக்கிறே?”
ஆசாமி கிண்டல் செய்கிறாரா, கிறுக்கனா, நமக்குத்தான் கேள்வி புரியவில்லையா என்ற பல்வேறு வாய்ப்புகளையும் யோசித்து முடிப்பதற்குள் “முட்டாப் பயலையெல்லாம் வேலைக்கு எடுத்திருக்காம்பா” என்று சகட்டுமேனிக்கு ஏறி அடிக்க ஆரம்பித்தார்.
“அஞ்சு ரூபா கொடுத்து என்ன வாங்கச் சொன்னீங்கன்னே சொல்லையே சார்…”

“நீ என்ன கம்பெனிக்கு சேமிக்க வந்தியா? செலவழிக்க வந்தியா? சரி போ.. நீ போய் அவனை வரச் சொல்லு.”
அக்கவுண்ட்ஸ் மேனேஜர் இதை ஒரு புகாராக ஜெனரல் மேனேஜரிடம் சொல்ல… “அவர் அப்படித்தாம்பா. நீ கண்டுக்காதே” என்றார்.
அப்படி கண்டு கொள்ளாமல் விட்டவர்கள் இங்கு நெடுங்காலமாகப் புலம்பியபடியே வாழ்ந்துவந்தனர். கண்டு கொண்டவர் வேறு வேலைக்குப் போய்விட்டனர்.

அன்றொரு நாள் பஞ்சாபகேசன் ரவுண்ட்ஸ் வரும்போது, லாரிக்காரன் கிடங்கின் வாசலிலேயே எண்ணெய் ட்ரம்மை இறக்கி வைத்துவிட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்றார். “டேய் இதை ஓரமாகத் தள்ளி வைடா” என்றார் எதிர்பட்டவனை.
அந்த எண்ணெய் ட்ரம்மின் மூடியைக்கூட தள்ளும் திராணியற்றவன் அவன். அவன் அனுபவப்பட்டவன். அடுத்த வினாடி அவன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டு தம் பிடித்து ட்ரம்மைத் தள்ள முயற்சி செய்தான். அதாவது ஒரு கோழியின் இறகைத் தள்ளும் அளவுக்குக்கூட அழுத்தம் கொடுக்கவில்லை. வெறும் பாவனை மட்டும் செய்தான்.

இப்படியான விசுவாசமான ஊழியனை அவர் மனதார நேசித்தார். தன்னால் முடியாவிட்டாலும் சிரமப்பட்டு முயற்சி செய்கிறானே என்று பூரித்துப் போனார். “ஏண்டா மடையா, ஒரு ஆளால தள்ள முடியுமாடா… போய் நாலு பேரைக் கூட்டிக் கிட்டு வாடா”
போனவன், அந்தப் பக்கம் இருந்த நாலுபேரை “ஐயா கூப்பிட்றாரு’ என்று அனுப்பிவிட்டு வேறு பக்கம் கம்பி நீட்டினான்.
உண்மையில் இந்த மாதிரி ட்ரம்முகளை லாவகமாக நகர்த்து வைப்பதற்கென்றே லிஃப்ட் வாகனங்கள் அங்கு இருந்தன. அதைப் பயன்படுத்தலாம் என்று கருத்து சொன்னால் என்ன பின் விளைவுகள் ஏற்படுமோ என அந்த நால்வரும் சொந்த சக்தியாலேயே நகர்த்தி முடித்தனர்.

யோசித்துப் பார்த்தால் அவருக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் எல்லோரையும் வேலை வாங்க வேண்டுமென்று அவர் விரும்பினார். நாம் ஒரு நாள் கம்பெனிக்குள் செல்ல வில்லையென்றாலும் எல்லாமும் குட்டிச் சுவராகிவிடும் என்று அவர் நம்பினார். ஊழியர்களுக்கு அவர் ஒரு நாள் வரவில்லையென்றாலும் தீபாவளியாக இருந்தது. இந்த மாதிரி ஒரு நபரை மற்ற டைரக்டர்கள் எதற்காக கம்பெனிக்குள் அனுமதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது. இந்த மாதிரி ஒரு அதட்டலுடன் ஒரு பெருசு உலாவிக் கொண்டிருப்பதும் நல்லதுதான் என்று அவர்கள் விட்டுவிட்டார்கள் போலும்.

ஏதோ கிறுக்கன் என்று அவரை உதாசீனப்படுத்திவிடவும் முடியாது. அவர் உணரும் விதமாக அவரை அவமானப்படுத்திவிட்டால் போச்சு. அதோடு சீட்டைக் கிழித்துவிடுவார்கள். தான் அவமானப்படுவதை அவர் எந்தச் சந்தர்ப்பத்தில் உணர்வார் என்பது தெரியாது. மேலே சொன்ன சம்பவத்தில் முதலில் அந்த ட்ரம்மை தள்ளியவன் சொல்லிக் கொள்ளாமல் கம்பி நீட்டி விட்டது அவரை அவமானப்படுத்திய செயல் என்று நினைத்தால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஐந்து ரூபாய்க்கு என்ன வாங்க வேண்டும் என்று திருப்பிக் கேட்டவன் அவமானப்படுத்தியவன் ஆகிறான். அவர் அவமானப்படும் மையம் மற்றவர்களின் இயல்பில் இருந்து மாறுபட்டிருந்தது.
இந்தக் கம்பெனியில் பணியாற்றுவதற்குப் பெயிண்ட் தயாரிப்பு முறை தெரிந்திருந்தாலோ, கம்பெனி நிர்வாகம் தெரிந்திருந்தாலோ, வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தாலோ போதுமானதாக இல்லை. பஞ்சாபகேசனின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது முக்கியமானதாக இருந்தது.

மனித மனம் எப்போதும் சுதாரிப்போடு இருக்க முடியுமா?

ஒரு சில நேரங்களில் “அவர் பார்வையில்’ எதிர்த்துப் பேச வேண்டியதாகவும் அவரை அவமானப்படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. குறைந்த பட்சம் இந்த டிபார்ட்மென்டில் இருந்து இன்னொரு டிபார்ட் மென்டுக்குத் தூக்கி எறிவது முதல் அல்லது நாமாக வேலையை விட்டுப் போவது வரை நடந்துவிடுகிறது. அதனால் எப்போதும் நித்தியகண்டம் பூர்ண ஆயுசு நிலை. இந்தக் கிறுக்குப் பயலுக்காக வேலையை விட்டுவிட வேண்டுமா என்று நினைப்பவர்கள், வேறு போக்கிடம் இல்லாதவர்கள், எந்த கம்பெனிக்குப் போனாலும் இப்படி ஒரு லூஸýப் பயல் இருக்கத்தான் செய்வான். இப்படியெல்லாம் சமாதானம் சொல்லிக் கொண்டவர்கள் மட்டும்தான் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இச் சூழல் நிமித்தமாகத்தான் பஞ்சாபகேசன் இந்த பூமியில் இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஊழியர்கள் எண்ணுவதற்குக் காரணம்.

செல்லமுத்துவுக்கு ஒரு குறைந்த பட்ச ஆசை இருந்தது. பஞ்சாபகேசனை ஒரு அசந்தர்ப்பமான நேரத்தில் சட்டென செருப்பைக் கழற்றி அடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தான். தனியாக இருக்கும் நேரத்தில் அப்படி செய்துவிட்டால் பதிலுக்குத் திருப்பி அடிப்பானா, அல்லது வேலையைவிட்டு நீக்குவானா? அல்லது கழுத்தை வெட்டி விடுவானா, போலீஸில் சொல்லி ஜெயிலில் தள்ளுவானா என்று நீண்ட நாள்களாக யோசித்து வைத்திருந்தான்.

இரவு எட்டு மணி வாக்கில் தாமதமாகப் புறப்பட்டார் பஞ்சாபகேசன். கம்பெனி இருந்த வளாகத்திலேயே பின் பக்கத்தில் அவருக்கு வீடு. நடந்துதான் போவார். வெளிச்சம் கொஞ்சம் இருந்தால் அந்த தூரத்தையே இரண்டு நடையாக நடந்து வாக்கிங் பயிற்சி போலவும் செய்வார்.

தொந்திக்கு மேல் அரிசி மூட்டைக்கு பட்டை கட்டியது மாதிரி பெல்ட் கட்டியிருந்தார் பஞ்சாபகேசன். கம்பெனிக்கு வருவதற்கு மட்டும்தான் பேண்ட், சட்டை. மற்ற நேரங்களில் எப்போதும் முழங்கால்வரை தூக்கிக் கட்டிய நாலூ முழம் வேட்டி மட்டும்தான்.
கிளம்பி வெளியே போனவர் இருட்டைப் பார்த்துவிட்டு திரும்பினார். மனிதருக்குப் பேய் பயம் அதிகம். “”டேய் யாருடா?” அங்கே என்றார்.

செல்லமுத்து இந்த மாதிரி தருணத்துக்காகத்தான் காத்திருந்தான். பேச்சு கொடுத்தபடியே நடந்தார்.

“இந்த ஷிப்ட்ல எத்தனை பேரூ?”

“12 பேர் இருக்கோம்யா”

“உம் பேர் என்ன சொன்னே?”

பார்க்கும் போதெல்லாம் கேட்கிற வழக்கம்தான். சொன்னான். பின்பக்கமாகவே அடித்துவிடலாமா என்று யோசித்தான். கிழம் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்தது. நின்று செருப்பைக் கழற்றுவதற்குள் திரும்பிவிட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கொக்கி வைத்த செருப்பு. சட்டென்று அவசரத்துக்குக் கழலுமா என்பதே சந்தேகமாக இருந்தது. செருப்பையும் அவருடைய பின் மண்டையையும் பார்வையால் அளந்து கொண்டான்.

“என்னடா கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்?”

“என்னங்கய்யா?”

“எத்தனை பசங்க உனக்குன்னேன்? இந்த உலகத்திலேயே இல்ல போல…”

“ரெண்டு. பையன் ஒண்ணு. பொண்ணு ஒண்ணு.”

செல்லமுத்து குனிந்து செருப்பை…

“என்னடா… செருப்பு அருந்துப் போச்சா” என்பது மாதிரி நின்றார். வீடு கிட்டத்தில் வந்துவிட்டது. இனி பயமில்லை அவருக்கு.

“நீ என்டா என்கூட வந்தே? வேலை நேரத்தில என் பின்னாடி அலையறே?”

“ஐயா நீங்க பேசிக்கிட்டு வந்தீங்க. நானும் பதில் சொல்லிக்கிட்டு வந்துட்டேன்யா”

“அடப் பயித்தியக்காரா… உனக்கு எத்தனைக் குழந்தைங்கங்கிறது அவ்வளவு முக்கியமா… நாளைக்குப் பொழுதோட கேட்டுத் தெரிஞ்சுக்க மாட்டனா? சரி.. ஓடு.”

பேச்சுத் துணைக்கு இழுத்து வந்துவிட்டு இப்படி பழி போடுகிறானே என்ற ஆத்திரமும் சேர்ந்து கொண்டது செல்லமுத்துக்கு. அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்த பஞ்சாபகேசனை விரட்டிச் சென்று செருப்பால் ஒரு போடு போட்டுவிடவேண்டும் என்ற சிந்தனை உடலில் உஷ்ணத்தைக் கிளப்பியது. வினாடியில் ஜுரம்போல கொதித்தது உடம்பு. கண்கள் ஜிவ்விடுவது தெரிந்தது. செருப்பைக் கழிற்றிக் கொண்டான். இந்த லூஸýப் பயலை எதற்காக அடிக்க வேண்டும். அப்படி என்ன கெட்டது பண்ணிவிட்டான் நமக்கு என்றும் தோன்றியது. அவரை நோக்கிப் போகலாமா, வேலையைப் பார்க்கப் போகலாம் என்ற மனக் குழப்பம். கால்கள் முன்னும் பின்னுமாக நடைபோட்டுப் பின்னிக் கொண்டது. கையில் செருப்போடு மாயக் கயிறு கொண்டு கட்டப்பட்டவன் மாதிரி தத்தளித்தான்.

“டேய் என்னடா இன்னும் நிக்கிறே….?”

இந்த நேரத்தில் பின் வாங்குவது மிகப் பெரிய கோழைத்தனமாக இருந்தது அவனுக்கு. சட்டென பஞ்சாபகேசனை நோக்கி வேகமாக நகர முற்பட்டான். நிலை தடுமாறி பொத்தென்று கீழே விழுந்தான். கால் இடறியதா? நினைவு தப்பியதா? கல் எதுவும் தட்டியதா ? சட்டென உணரமுடியவில்லை. “என்னடா ஆச்சு… பாத்து வரப்படாது” என்று ஓரடி நெருங்கி வந்தவர், செல்லமுத்து தலையைப் பிடித்துக் கொண்டு துடிப்பதைப் பார்த்து பதறினார். கல் பாய்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“டேய் யாருடா அங்கே?” என உரத்துக் குரல் கொடுத்தார்.

காக்கிச் சட்டை பேண்டுடன் ஒருவன் ஓடிவந்தான்.

“யாருடா நீ?”

“செக்யூரிட்டி”

“செக்யூரிட்டியா நீ..? அப்பிடித்தான் சொல்லிக்கிட்டு திரியறயா..? செக்யூரிட்டினா என்ன மீனிங் தெரியுமாடா உனக்கு..? யாராவது என்னைச் சுட வந்தா நீ முன்னாடி வந்து உயிரைக் கொடுக்கணும். நீ எனக்காக உயிரைக் கொடுப்பியா..? சும்மா ஒரு பேச்சுக்காகவது சொல்லேன் பாக்கலாம். ம்… சரி.. சரி. ஓடு. அதோ அங்க ஒருத்தன் மயக்கம் போட்டு விழுந்துட்டான். மானேஜர் கிட்ட சொல்லி அவனை அஸ்பித்திரில சேக்கிற வழிய பாரு. அவன் உயிரையாவது காப்பாத்துவியான்னு பார்க்கிறேன்” உலகத்தின் அத்தனை தொழிலாளர்கள் மீதும் சலிப்புற்று வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

வாசலில் ”செவிட்டுக் கிழம்… எத்தனைவாட்டி கூப்பிட்றது? அங்க என்ன செக்யூரிட்டிகிட்ட பேச்சு” – அது அவருடைய மனைவியின் குரல்.

“வேலையெல்லாம் முடிச்சுட்டு வரணுமில்ல?” என்று இரண்டடி ஓர் அடியாகத் தாவி ஓடினார் பஞ்சாபகேசன்.


tamilmagan2000@gmail.com

Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்