அக்கா

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

தமிழ்மகன்மனசு கூடத் திரிந்து போய்விடுகிற அளவுக்குக் குப்பென்று அடிக்கிற புளித்த வீச்சத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேலையில் சேர்ந்த அன்று பயங்கரமாக வாந்தி எடுத்தேன்.

முதலாளி கூப்பிட்டு “ஒத்துóகலைனா வீட்டுக்குப் போயிருப்பா” என்றார்.
வாந்தி எடுத்ததற்காக வேலையிலிருந்து அனுப்பி விடுவார்களோ என்று பயமாக இருந்தது. என்னுடன் இன்னும் மூன்று பேர் அந்தச் சாராயக் கடையில் வேலை செய்து வந்தார்கள். அவர்கள் எல்லாம் இலவசமாகக் குடிக்க முடிவதையே ஒரு பாக்கியமாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் அந்தப் புளித்த நாற்றமே பெரிய போதையாகவும், தாள முடியாத தலைவலியாகவும் இருந்தது.
போதாத குறைக்கு 24 மணி நேரக் குடிகாரன் நாராயணன் வந்தால், சாராயத்தைவிட அதிகமாகவே நாற்றமடிப்பான்.
இன்னொரு சங்கடமும் உண்டு. எங்கப்பா வேலை செய்யறே? என்று யாராவது கேட்டுவிட்டால், இந்த எட்டாம் நம்பர் கடையை எடுத்துச் சொல்லி விளக்குவதற்குள் உடம்பும் உள்ளமும் தத்தளித்துப் போகும்.
அக்கா சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதைப் பார்க்கையில் இது எவ்வளவோ மேல்தான். சின்ன வயசில் தனபாக்கியத்தோடு (அப்போதெல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) நானும் சாப்பாட்டுக் கூடை தூக்கிக் கொண்டு போயிருக்கிறேன்.
சாப்பாட்டுக் கூடை என்றால் பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். சந்தடிச் சாக்கில் ஏற்றிவிட்டாலும் விசலடித்துக் கீழே இறக்கி விடுவார்கள். அக்கா பல்லைக் காட்டி, அப்படி இப்படிச் சோக்கெல்லாம் காட்டி, பஸ் பிடிப்பாள். கண்டக்டர்களின் கிண்டல்களைச் சகித்துக் கொள்வாள்.
லேட் ஆனதால் ஆபீஸர்களிடம் திட்டு வாங்கி, அவர்கள் வைக்கிற மிச்ச மீதியைத் தின்று சே… எட்டாம் நம்பர் கடை கிட்டத்தட்ட கோயில். நாற்றம்தான் நகர வேதனையாக இருக்கிறது. மற்றபடி ஒரு டீக்கடையில் வேலை செய்வது மாதிரிதான்.
குடிகாரர்களைக் கிண்டல் செய்வது முதலாளிக்குப் பிடிக்காது. எவ்வளவு போதையில் இருந்தாலும், அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்.
இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை. போதை ஏற, ஏற அவர்கள் வேறொரு மனுசனாக மாறுவதைப் பார்த்து ஒரு புன்முறுவலாவது வராமல் போகாது. ஆறுமுகம் போதை ஏறிவிட்டால், ஏதோ சொல்லப் போவது போல் கையையும் காலையும் உதறிக் கொண்டே வந்து ஆள் காட்டி விரலை நீட்டி, சிறிது யோசனைக்குப் பிறகு “பச்’ என்று அலுத்துக் கொண்டு போய் விடுவான். அவனால் ஒரு வாக்கியம்கூட அமைக்க முடியாது. பச் என்பதைக் கூட ஏதோ ஏப்பம்போல விடுவான்.
அப்பா ஒரு தினசு. ” எங்கடா போனே?’ என்று கேட்க ஆரம்பித்தாரானால், அதையே வெவ்வேறு வகையாகக் கேட்டு உயிரை வாங்கி விடுவார். அக்காதான் எப்படியோ சமாளித்துத் தூங்க வைக்கும்.
மில் சம்பளம் அவருக்குப் போதுவதில்லை. மாதா மாதம் லோன் போடுவார். எனக்கு டி.பி. என்று சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய்க் காண்பித்து லோன் வாங்கியிருக்கிறார். டி.பி.தான் என்று சர்டிபிகேட் கொடுக்கும் வரை என்னை இருமச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்றும் தெரியாத வயசு. அப்பா தன் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது. டி.பி.யா? அதைவிட மோசமான வியாதியா? என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருமினேன்.
அக்காவுக்குக் கல்யாணம் என்று கூட சொல்லி லோன் வாங்கிவிட்டார். லோன் அப்ளிகேஷனோடு கல்யாண அழைப்பிதழ் ஒன்றையும் இணைக்கச் சொல்லியிருந்தார்கள். யாரோ ஒருத்தன் பெயரை மணமகன் என்று போட்டு ஒரு பத்து அழைப்பிதழ் அடித்துக் கொண்டு வந்தார்.
மில்லில் சமர்ப்பித்த ஒரு அழைப்பிதழ் போக மீதி அழைப்பிதழெல்லாம் வீட்டில் இங்குமங்குமாக இறைந்து கிடந்தது. பிறகு ஒன்றையும் காணவில்லை. ஒருமுறை அகஸ்மாத்தாக அக்காவோட பெட்டியில் அவற்றைப் பார்த்தேன்.
அக்காவுக்குக் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து எட்டு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. கல்யாணம்தான் இன்னமும் ஆகவில்லை. மூன்று வருஷத்துக்கு முன்னால் அம்மா சீக்கில் விழுந்து செத்துப் போன போது அப்பா அவசரமாய் டெத் சர்டிபிகேட் வாங்கி லோன் போட்டார். அக்காதான் எல்லாமாக இருந்து கவனித்துக் கொண்டாள். விடாப்பிடியாக என்னைப் பத்தாவது வரை படிக்க வைத்ததும் அக்காதான்.
காலை முதல் இரவு வரை மாடாக உழைத்தாள். ஒரு சீக்கென்று படுத்தவில்லை. திடீரென்று அவளுக்கு ஒன்றானால், வீடு அதோ கதிதான். இப்படி பத்து மணிக்கு ஷிப்ட் முடிந்து வீட்டுக்குப் போனதும், திடுக்கென்று விழித்து சாப்பாடு போட வருவாள்.
மணி பத்தாகப் பத்து நிமிடம் இருந்தது. குடிகாரர்கள் தீவிரமாக வர ஆரம்பித்தார்கள்.
ராமலிங்கம், “டேய் கணேசா, சினிமாவுக்குப் போலாம் வரியா?” என்றான்.
“என்ன படம்?”
“ரஜினி…”
“பச்… எனக்குத் தூக்கம் வருது.”
பழனியும், சுரேந்தரும் வந்ததும், கடையை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். நாற்றமின்றித் தூங்க வேண்டும் என்று வெறியாக இருந்தது.
தெரு வெறிச்சோடி போயிருந்தது. கார்ப்பரேஷன் விளக்குகள் ஆர்வமின்றி ஒளி வீசின. தெரு நாய் ஒன்று குரைத்துக் கொண்டே ஓடிவந்து வாலாட்டியது.
திடீர் பாசம். நாய்க்கு ஒரு பொரையாவது வாங்கித் தர வேண்டும் என்று தோன்றியது. கடைதான் ஒன்றுகூடத் திறந்திருக்கவில்லை. வீட்டின் அருகே டீக்கடை ஒன்று திறந்திருக்கும். நாய் கொஞ்ச தூரம் என்னைப் பின்பற்றிவிட்டு, நம்பிக்கையிழந்து திரும்பிவிட்டது.
ஜூþ என்று கூப்பிட்டாலும், அது அவநம்பிக்கையோடு திரும்பிப் பார்த்துவிட்டு எதிர்திசையில் போய்க் கொண்டிருந்தது.
வீட்டுத் திண்ணையில் அப்பா படுத்திருந்தார். அவரிருந்த கோலத்தைப் பார்த்து அவர் நிதானத்தில் இல்லை என்பது புரிந்தது.
“சாப்டாச்சாப்பா?” என்றேன்.
எங்கேயோ கேட்ட குரல் போல பார்த்தார். திடுதிப்பென்று என்னிடம் பேச வேண்டும் போல் சிரமப்பட்டார்.
“உங்க அக்கா வன்ட்டாளா?” எனóறார்.
“எங்க போயிருக்குது?” என்றபடி வீட்டைப் பார்த்தேன். விளக்கேற்றப்படாமல் இருந்தது. இவ்வளவு வயசில் இதுதான் முதல்முறையாக, வீட்டில் விளக்கெரியாமல் இருப்பதைப் பார்க்கிறேன்.
அப்பா எதுவும் சொல்லாமல் இமைக்காமல் பார்த்தார். முறைத்தார் போலவும் இருந்தது. கண்களிரண்டும் குங்குமமாய்ச் சிவந்திருந்தது. திண்ணையைச் சுற்றிலும் பீடித்துண்டுகளாக இறைந்து கிடந்தன.
“எங்க போயிருப்பா…?” போயிருக்கிற இடம் அவருக்குத் தெரியும் போல கேட்டார். “உடம்பு திமிரெடுத்தா சும்மா இருக்குமா… கெடந்து அலையறா… எங்க போவா…? போவட்டும்”
திகைத்துப் போனேன். பயம் பரவியது. என்ன சொல்கிறார்?
“அவ கிடக்றா வுட்றா” என்றார். “அவ போனா போறா. சனியன் ஒழிஞ்சிதுன்னு வுடு”
அப்பா சொல்வது எந்த அளவுக்கு உண்மையென்று உணர முடியவில்லை. அக்கா இப்படிச் செய்திருப்பாள் என்று நம்ப முடியவில்லை. அக்கா செய்தது சரியா…?
“நீ போய் சாப்புடு” என்றார்.
அங்கிருந்து அகன்றால் போதும் என்றிருந்தது. உள்ளே நுழைந்து ட்ரங்க் பெட்டியின் மீது சாய்ந்து உட்கார்ந்தேன்.
“…. தப்பா?’ என்று தீர்மானிக்க முடியவில்லை. அக்கா யாரிடமாவது ஏமாந்துவிட்டாளா? யாருடன் போனாள் என்று தெரியவில்லை. அதைப் பற்றியெல்லாம் முடிவெடுப்பதற்குக்கூட அவளுக்கு யாருமில்லாமல் போய்விட்டது. திரும்பி வந்து விட்டால் நன்றாக இருக்குமே என்று இருந்தது.
அவளுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வக்கில்லாமல் போய் விட்டது. எனக்கு இருபத்தி நாலு என்றால்.. என்னைவிட அஞ்சு வயசு பெரியவள் என்று அம்மா சொல்லியிருக்கிறாள்… அப்படியென்றால் இருபத்தி ஒன்பது. அக்கா வயசுப் பொண்ணுங்களெல்லாம் மூன்று குழந்தை பெற்றுவிóட்டார்கள். பவானியோட பையன் ஆறாவது படிக்கிறான்.
மணி பத்தரைக்கு மேல் இருக்கும் போல் தோன்றியது. சினிமா விட்டுப் போகிற ஜனங்களின் பேச்சுக் குரல்கள் கேட்டன.
கருவாட்டுக் குழம்பும், கொஞ்சம் சோறும் மட்டும் இருந்தது. அப்பா சாப்பிட்டாரா? என்று தெரியவில்லை. இருமிக்க கொண்டிருந்தார். தற்கொலை முயற்சி மாதிரி பீடி பிடித்துக் கொண்டு இருந்தார்.
பசித்தது. சாப்பிட பிடிக்கவில்லை. வயிற்றுக்குள் திராவகத்தை ஊற்றியதுபோல எரிந்தது. திடீரென்று அக்கா வந்து “ஏண்டா இன்னும் சாப்பிடாம இருக்கறே?” என்று கேட்டால்…
இனி எப்படி வாழ்வதென்று குழப்பமாக இருந்தது. அக்கா வரவே மாட்டாள் என்று நினைப்பது பக்கென்றிருந்தது. கண் கலங்கியது. என்கிட்ட கூட சொல்லிக்காம போறதுக்கு எப்படித்தான் மனசு வந்திச்சோ?
பாயை விரித்துப் போட்டேன். தலையணை காணவில்லை. ட்ரங்க் பெட்டிக்கு அந்தப் பக்கம் இருக்கலாம். அக்காவின் துணிமணிகள் எதையும் காணவிóல்லை.
எங்க போனேக்கா?
“கணேசா…” என்று சத்தமாகக் கூப்பிட்டார் அப்பா. எதிரில் போய் நின்றேன்.
“சாப்டியா?” என்றார்.
“ம்…”
அபóபாவும் நிலை குலைந்து போயிருந்தார்.
“சாப்டியா நீ?” என்றார்

“சாப்டம்பா”
“அப்ப எனக்கும் போட்றா… நீ சாப்ட்டாதான் நானும் சாப்புடுவேன்…”
“……”
“நமக்கு யார்றா இருக்கறாங்க” என்று கலங்கினார். எனக்கும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. உள்ளே நுழைந்து, சட்டியில் சோற்றைப் போட்டு குழம்பூற்றிக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தேன்.
“உண்டை புடிச்சித் தரேன் சாப்ர்றியா…?”
“நா சாப்ட்ம்ப்பா…”
“உங்க அக்கா…” என்று ஆரம்பித்து எதுவும் முடிக்காமல் விட்டுவிட்டார். சோற்றைப் பிசைந்து கொண்டே இருந்தார்.
“நா போறேம்ப்பா…”
“எங்கடா வேலைக்கா…?”
“ஆமா… நைட் ஷிப்டு…”
“சரி இதை உள்ளே எடுத்துப்போய் வெச்சிடு” என்று சாப்பிடாமலே கை கழுவிக்கொண்டார்.
சாராயக்கடை நோக்கி நடந்தேன். பாலாஜி டீ ஸ்டாலில் நின்று டீ குடித்தேன். நாளையிலிருந்து யார் சமைப்பார்கள் என்று தெரியவில்லை. அக்கா நிஜமாகவே வரமாட்டாளா?
டீ சாப்பிட்டு விட்டு வெளியேறும்போது இரண்டு பொரைகள் வாங்கிக் கொண்டேன்.


tamilmagan2000@gmail.com

Series Navigation