கடிதம் ஜூலை 8,2004

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

அக்னிப்புத்திரன்


அரசியல் அங்கலாய்ப்பு!

அரசியல் ஆடுகளத்தில், திமுக கொஞ்சம் உயர்வான நிலைக்கு வரும்போது எல்லாம் ஒரு சில அரசியல் ஞானிகளுக்கும்( ? ? ?) அறிவுஜீவிகளுக்கும்( ? ? ?) அடிவயிற்றில் அமிலக் கரைப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது! நச்சுக்கருத்தைக் கக்கும் நாகப்பாம்புகளாக மாறிவிடுகின்றனர். இப்படி விஷ அம்புகளை வீசும் வீண் பழி வீணர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவினர் எஸ்.எஸ் சந்திரன் போன்ற நாலாந்தர அரசியல்வாதிகள். இவர்கள் எப்போதும் மட்டரகமான முறையில் விமர்சிக்கக்கூடிய மலிவான அரசியல் வியாதிகள். இவர்களைப் பற்றிப் பேசுவதோ எழுதுவதோ பயன் ஒன்றுமில்லை. ஆனால், மற்றொரு பிரிவினர் இவர்களிடம்தான் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தர்க்க ரீதியாகப் பேசுவது போலவும், ஆதாரங்களை அள்ளி வீசுவது போலவும் எழுதியும் பேசியும் மக்களை குழப்பி விடுவதில் கைதேர்ந்தவர்கள். ஒரு சில நேரங்களில் இவர்கள் சிலவற்றைப் பாராட்டியும் வைப்பார்கள். அப்புறம் மிகவும் மோசமாக விமர்சிக்கும் போது, அப்போது அதை நான் பாராட்டியவன்தான் இதை இப்போது எதிர்க்கின்றேன் என்று நயவஞ்சகத்தனத்துடன் நடுநிலையாளனாகக் காட்டிக்கொள்ள முற்படுவார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் ‘துக்ளக் ‘ சோ இராமசாமி.

திமுகவையும் கலைஞரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்வதின் வழியாக அவர்களுக்கு ஏற்படும் அரிப்புக்கு மருந்து போட்டுக்கொள்கிறார்கள். அவர்களின் அண்மைய அரிப்புக்குக் காரணம் என்ன தெரியுமா ? இளைஞரான தயாநிதி மாறன் மத்திய மந்திரியாக்கப்பட்டதுதான் இவர்களை ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிக்க வைக்கின்றது. தேடிக்கண்டுபிடித்துப் பற்பல புதிய புதிய காரணங்களை முன் வைக்கின்றனர்.

இது ஜனநாயகத்துக்கு விரோதமானது, திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை.. இச்செயல் பாசிசத்தின் ஊற்றுக்கண்..அப்படி இப்படி என்று அங்கலாய்த்துக் கொண்டு வயிற்று எரிச்சலில் வசை மழை பொழிகின்றனர்ி. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக்கப்பட்டது அப்படி என்ன மாபெரும் குற்றமா ? குறைகளைத் தேடி அலையும் குறைமதியாளர்களுக்கு இப்போது இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை போலும். அதுதான் இதைப்பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். ஜனநாயகத்தைக் காக்க புறப்பட்ட புரவலர்கள் என்று ‘புதுவேஷம் ‘ கட்டுகிறார்கள். பிறப்பின் அடிப்படையிலான அரசியல் நடக்கிறது என்று ‘பிலிம் ‘ காட்டுகிறார்கள். என்னமோ இந்திய அரசியலில் இதுவரை இப்படி நடந்தே இல்லை என்பது போல ‘பாவ்லா ‘ காட்டிப் பாய்கிறார்கள். இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அரசியலில் அறிமுகம் ஆக, பிறப்பு அடிப்படையிலான அரசியல் அறிமுகம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே! ஆசியஜோதி நேருக்குப் பிறகு அன்னை இந்திராகாந்தி…அவருக்குப் பிறகு அரசியலில் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்த ராஜீவ் காந்தி இந்திய நாட்டுக்கே பிரதமராகவில்லையா ? இப்படி எண்ணற்ற எடுத்துக் காட்டுகளைக் கூறலாம்.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சரானதில் என்ன தவறு ? இந்திய திருநாட்டில் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரில் மக்களின் அமோக ஆதரவு பெற்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார். அவரது கட்சி அவரை அமைச்சராக்கியுள்ளது. இதில் எதிலுமே சம்பந்தப்படாத மூன்றாவது நபர்களின் முக்கல் முனகல்கள்தான் இந்தப் புலம்பல்கள். வாக்களித்த மக்களுக்கு வராத வருத்தம் பாவம் இவர்களை வாட்டி வதைக்கின்றது. அந்தோ பரிதாபம்!

மேலும், என்னவோ கலைஞர் பிரதமர் ஆகி அவரது தலைமையில் மத்தியில் மந்திரிசபை அமைத்திருப்பது போல, சிறுபான்மையினருக்கும் தலித்துக்கும் மந்திரி பதவி தரவில்லை. நாடாருக்குக் முக்கியத்துவமில்லை, தென் மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் தரவில்லை என்றும் வருந்தி வருந்தி, ஏங்கி ஏங்கி ஒரு சிலர் தவியாய்த்தவிக்கிறார்கள். உங்கள் வருத்தம் ஏக்கம் எல்லாம் 2006-ல் தமிழகத்தில் திமுக அமைச்சரவை அமைக்கும்போது தீர்த்து வைக்கப்படும். அதுவரை உங்கள் வாட்டத்தையும் வருத்தத்தையும் கொஞ்சம் தள்ளி வைக்கவும்.

ஞாநியின், கலைஞருக்குக் கடிதம் இந்த வகையைச் சார்ந்த ஒன்றுதான்!

அவரின் கலைஞருக்குக் கடிதம் என்ற பகுதியில் ஒரு பகுதியைப் பாருங்கள்!!

பி.ஜே.பியுடன் உறவு கொண்டு பரதேசிப் பண்டாரக் கட்சியை நீங்கள் வளர்க்கத்தொடங்கிய காலம் முதல் நிஜமாகவே வயிறெரியும் எனக்கு , தி.மு.கழகம் திருக்குவளை பாதையிலிருந்து ஈரோட்டுப் பாதைக்குத் திரும்ப வாய்ப்பே இனி இல்லையோ என்று வருத்தம் கொண்ட எனக்கு- ஆறுதலாக அமைந்தது என்ன தெரியுமா ?

“முரசொலி, அண்ணா அறிவாலய வளாகங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல மூலைகளிலிருந்தும் உங்களுடைய பல உடன்பிறப்புகள் என் விமர்சனத்தைப் பாராட்டியல்ல, நன்றி தெரிவித்து நேரிலும் தொலைபேசியிலும் சொன்ன வார்த்தைகள்தான். ‘ நாங்கள் சொல்ல முடியாமல் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் எழுதிவிட்டார்கள். நன்றி ‘ என்ற அந்த வார்த்தைகள் கழகத்துக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கும் உள்ளக் குமுறல்களை உங்களுக்கு இனியெனும் உணர்த்தினால் சரி.”

இது ஞாநியின் கடிதத்தின் ஒரு பகுதி!

திமுக தலைமை அலுவலகம் அறிவாலயமா அல்லது ஞாநியின் அலுவலகமா ? இவரிடம் சென்று திமுக தொண்டர்களும் கட்சிக்காரர்களும் குமுறினார்களாம். நல்ல வேடிக்கை. 2004-ல் சிறந்த நகைச்சுவைத் துணுக்கு. இவரின் விமர்சனத்தைப் பாராட்டினார்களாம், நன்றி தெரிவித்தார்களாம்.. கேப்பையில் நெய் வடிகின்றது என்றால் கேட்பாருக்கு மதி எங்குப் போயிற்று ? மேற்கூறிய கருத்துக்களை எவ்வளவு உடன்பிறப்புகள் உங்களிடம் கூறினார்கள் என்ற புள்ளிவிபரத்தைக் கூற முடியுமா ? கலைஞரை விமர்சித்து குறை கூறும் ஒருவரை எந்தத் திமுக தொண்டனாவது பாராட்டுவானா ? ஓரிரு புல்லுருவிகள் திமுக தொண்டன் என்ற போர்வையில் கூறியதையெல்லாம் எடுத்துக்கொண்டு கட்டுரை எழுதி புளங்காகிதம் அடைந்து இருப்பதாகவே தோன்றுகின்றது. பாவம் அரசியல்ஞானிக்கும் அடி சறுக்கியுள்ளது.

கலைஞர் எடுக்கும் ஒவ்வொரு அரசியல் முடிவுகளையும் திமுக தொண்டன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றான் என்பதே அழுத்தம் திருத்தமான உண்மையிலும் உண்மை. அதன் விளைவுதான் தமிழகம் நிறைந்த மாபெரும் வெற்றி!

நேற்று பெய்த மழையில், அரசியலில் இன்னும் முளைக்கவே முளைக்காத நடிகர் விஜயகாந்துக்கு அரசியலில் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அரசியல் பாலப்பாடம் நடத்தும் (விஜயகாந்த் இன்னொரு ரஜினிகாந்த்தா என்ற ஞாநியின் கட்டுரை) ஞாநி அவர்களுக்கு என் வினா இதுதான் ?

தயாநிதி மாறன் மந்திரியானதில் தலைகுப்புற விழுந்து தாவும் உங்களுக்கு சினிமா பாப்புலாரிட்டியை வைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு பதவியை அடைய நினைக்கும் நடிகர் விஜயகாந்துக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வகுப்பு நடத்துவது மட்டும் சரியான செயலா ? டிசினிமாக் கவர்ச்சியை மூலதனமாகப் போட்டு முதலீடு செய்யத்துடிக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு அரசியல் ஆலோசகராக மாறிய மர்மம் என்ன ? எதிர்காலத்தில் யாருடன் எல்லாம் கூட்டணி சேர வேண்டும் என்று கணக்குப் போட்டுக் காட்டும் கருணைக்கடலாகக் காட்சியளிப்பது ஏன் ? வருங்கால வழிகாட்டியாக விளங்க வரிசையில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கத்துடிக்கும் துடிப்பு ஏன் ?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேர்மையான பதில் உங்களிடமிருந்து கிட்டும் என்ற நம்பிக்கையில்தான் கேட்கின்றேன். தயவுசெய்து பதில் அளிக்கவும்.

ரஜினிகாந்தை விட சிறப்பான நிர்வாகத் திறமை உடையவர் என்றும் பலமான ரசிகர் மன்ற அமைப்பு உடையவர் என்றும் நடிகர் விஜியகாந்தைப் புகழ்ந்தும் போற்றியும் அதே சமயம் நடிகர் ரஜினியை மட்டம் தட்டியும் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். நடிகர் விஜயகாந்தை அரசியலுக்குள் இழுக்க முயற்சிக்கும் உங்கள் எண்ணப்போக்குப் புரிகின்றது. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்க வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்!

அண்மையில், திண்ணையில் வெளிவந்த “நடிகர்கள் அரசியலில் ஈடுபடலாமா ?” என்ற எனது கட்டுரையின் கருத்துக்களை எண்ணற்றவர்கள் பாராட்டியும் எனது கருத்தை ஆதரித்தும் ஏற்றும் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். நடிகர் விஜயகாந்த் அவர்களும் அரசியலில் ஈடுபடும் தனது எண்ணத்தை மறுபரிசீலனை செய்கின்றார் என்றே தோன்றுகின்றது. “என்னை அரசியலில் ஈடுபடச்சொல்லுபவர்கள் நான், அரசியலில் தடுமாறிக் கீழே விழும் சூழல் வந்தால் என்னைக் காப்பாற்ற ஓடோடி வருவார்களா ?” என்று இப்போது விஜயகாந்த்தும் கேள்வி எழுப்பியுள்ளார். நிலமை இப்படியிருக்க தூண்டில் போட்டு மீன் பிடிக்க நினைக்கும் துஷ்டக்குணம் ஏன் ?

அரசியல் அங்கலாய்ப்புகளை ஓரம் கட்டிவிட்டு உருப்படியான கருத்துக்களை முன் வைக்க அனைவரும் முன்வர வேண்டும்!

-அக்னிப்புத்திரன்.

சிங்கப்பூர்.

agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்