எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

பாவண்ணன்


நான் கல்லுாரியில் சேர்ந்திருந்த சமயம். பிரான்சிலிருந்து எங்கள் இளைய தாய்மாமன் வந்திருந்தார். புதுச்சேரிக்கு வந்திருந்தவர் அம்மாவைப் பார்ப்பதற்காக எங்கள் கிராமத்துக்கும் வந்திருந்தார். அப்போது ஒரு சிறிய கூரைவீட்டில் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம். ஊருக்குத் திரும்பும் சமயத்தில் ஒரு வீடு கட்டுவதற்குத் தேவையான அளவில் மனையொன்றை வாங்கித் தருவதாக அவர் அம்மாவிடம் வாக்களித்துவிட்டுப் போனார். விலை விசாரித்துத் தெரியப்படுத்துமாறு சொல்லியிருந்தார். அப்போதுதான் கிராமத்தில் சந்தைத்தோப்பு என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு பெரிய தென்னந்தோப்பு வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட இருப்பதாகச் செய்தி கிடைத்தது. அத்தோப்புக்குச் சொந்தக்காரர் அக்கிரகாரத்தைச் சேர்ந்தவர். பெரிய ஐயர் என்ற செல்லப்பெயருடன் அழைக்கப்படுபவர். அவரையே நேரில் கேட்டுவிடுவதற்காக எங்கள் பெரியப்பா கிளம்பினார். அவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். பெரிய ஐயருடன் சகஜமாகத் தன்னால் பேசமுடியும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவத்தார். பல வருஷங்களாக அவருடைய வீட்டிலும் தோட்டத்திலும் நிறைய வேலைகளைச் செய்து தந்திருப்பதாகவும் அதனால் அவருக்கும் தனக்கும் நல்ல பழக்கம் உண்டென்றும் சொன்னார். துணைக்கு நானும் செல்லவேண்டியதாயிற்று.

அது காலை நேரம். ஐயர் வீட்டில்தான் இருந்தார். பெரியப்பாவுக்கு இருந்த பழக்கத்தின் காரணமாக வாசலில் யாரும் அவரை விசாரிக்கவில்லை. ‘சாமி சாமி ‘ என்று கூப்பிட்டபடி கூடத்துக்குச் சென்றுவிட்டார். சற்றே கலவரமான மனநிலையுடன் அவரை நான் பின்தொடர்ந்து சென்றேன். கூடத்தில்தான் அவர் செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தார். ‘என்னடா சாமிக்கு ஏலம் உடற ? என்ன விஷயம் ? ‘ என்றபடி ஐயர் பெரியப்பாவைப் பார்த்தார். அவர் முகத்தில் சிரிப்பு. பெரியப்பா ஐயரைப் பார்த்ததும் மறுபடியும் கும்பிட்டார்.

‘தோப்ப மனயா பிரிக்கறதா காதுல உழுந்திச்சி. அதான் ஒங்கள பாக்கலாம்ன்னு வந்தன். ‘

ஐயர் அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு ‘சரிசரி, வா வராந்தாவுல உக்காந்து பேசுவோம். நல்லா காத்தோட்டமா இருக்கும் ‘ என்றபடி உடனடியாக எழுந்தார். கையில் செய்தித்தாளைச் சுருட்டி எடுத்துக்கொண்டு முதல் ஆளாக வாசலை நோக்கி நடந்தார். நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம். திண்ணையில் சாய்ந்த நிலையில் உட்கார்ந்தார் ஐயர். நாங்கள் துாணோரமாக நின்றுகொண்டோம். முதலில் கேட்டதெல்லாம் மறந்துபோன மாதிரி ‘என்னடா கேட்ட நீ ? ‘ என்று மறுபடியும் கேட்டார் ஐயர். பெரியப்பா சொன்னதையே திரும்பிச் சொன்னார்.

‘அது ரொம்ப வெலையாச்சேடா ? ஒனக்கு எப்படிடா கட்டுப்படியாகும் ? ‘ ஐயர் பிடிகொடுக்காமல் பேச்சைத் தொடங்கினார்.

‘நீங்க ஒரு வெலை சொல்லுங்க சாமி. ஏழைபாழைங்கன்னு பாத்து சொன்னா ஒங்க புண்ணியத்துல நாங்களும் பொழைச்சிட்டுப் போறம். ‘ பெரியப்பாவின் குரல் தாழ்ந்து ஒலித்தது.

‘ஒரு மனை ஐயாயிரம்டா வேணு. அதையே அதிகம்ன்னுதானே இதுவரைக்கும் எவனும் வெலைகேட்டு வரலை. ‘

‘கொஞ்சம் கொறைச்சிக்கக் கூடாதா சாமி ‘

‘அதனாலதான் மொதல்லியே நான் சொன்னன், இதெல்லாம் ஒனக்குக் கட்டுப்படியாகாதுன்னு. நீதான் கேக்கலை. ‘

‘அதுக்கில்ல சாமி. ஒரு வார்த்தைக்குத்தான் கேட்டன். பணம் மிச்சப்பட்டா வீடு கட்டற செலவுக்கு ஆவுமில்லயா ? நீங்க சொல்ற வெலைக்கே வாங்கிட்டா போவுது சாமி. ‘

‘ஐயாயிரம்டா ‘

‘இருக்கட்டும் சாமி. வாங்கணும்னு முடிவு கட்டிட்டப்பறம் அதயெல்லாம் பாத்தா முடியுமா ? ‘

‘யாருக்குடா மனை ? ‘

‘என் தம்பிக்கு சாமி. அவன் சம்சாரத்துடைய தம்பி பிரான்சிலேருந்து வந்திருக்காரு. ஒரு மண்ணு வாங்கித் தரணும்ன்னு அவரு பிரியப்படறாரு. பாத்துச் செய்ங்கன்னு சொல்லிட்டுப் போயிருக்காரு ‘

‘நல்ல ராசியான மண்ணுடா அது. ஓஹோன்னு இருப்பாங்க ‘

பெரியப்பா இடுப்பு மடியில் சுருட்டி வைத்திருந்த ஐந்நுாறு ரூபாயை எடுத்து ஐயரிடம் நீட்டினார். ‘இத அட்வான்சா வச்சிக்குங்க சாமி. பாக்கிய பதியும்போது தந்துர்றேன். லெட்டர் எழுதிப்போட்டு அங்கேருந்து பணம் வரதுக்கு ஒரு மாசமாவது ஆவும். ‘

ஐயர் ஒருமுறை பெரியப்பாவை நிமிர்ந்து பார்த்தார். ‘வாங்கறது உறுதிதானே ‘ என்று மறுபடியும் கேட்டார். ‘ஆமாம் சாமி ‘ என்றார் பெரியப்பா. ‘சரி மொதல்பேரா ஒன் பேர எழுதிக்கறேன். முன்பணம்தான் குடுத்துட்டம்ன்னு நாள இழுத்துடாதடா. ஒன் கொணத்துக்கு முன்பணம்லாம் தேவையே இல்ல. இது இல்லாமயே ஒன் பேர எழுதிக்குவேன். ஆனா இத ஒன் கையில விட்டுவச்சா செலவு பண்ணிடுவேன்னுதான் வாங்கிக்கறேன் ‘

மீண்டும் ஐயரைக் கும்பிட்டுவிட்டுத் திரும்பினோம். தன் குணத்தின்மீது ஐயர் வைத்திருக்கிற நம்பிக்கையை நினைத்துப் பெரியப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். சந்தோஷத்தில் அவருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் பேசுவதற்காகக் கூடம் வரை வந்துவிட்ட ஆளை வராந்தாவுக்குப் போவலாம் என்று அழைத்துவந்து பேசியது உறுத்தியது. அதற்குச் சாதியைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்கமுடியும் என்று தோன்றியது. முதலில் பெரியப்பாவுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு அது சரிதான் என்கிற நிலைக்கும் சென்று வாதிட்டார். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நண்பர்கள் வீடுகளில் வாசலிலேயே உட்கார வைத்து அல்லது நிற்கவைத்துப் பேசித் திருப்பி அனுப்பப்பட்ட அனுபவங்கள் மனத்தில் நிழலாடின. அவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது பழகுவதற்கும் பேசுவதற்கும் கூட பலருக்குப் பெரிய மனத்தடையாக சாதி இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. என் எண்ணம் எவ்வளவு துாரம் சரியென்று என்னால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகள் கழித்துப் படிக்க நேர்ந்த கதையொன்று அதை உறுதிப்படுத்தியது. அதில் ‘வராந்தாவுக்குப் போய் பேசலாம் ‘ என்று சொல்கிற ஐயர் இல்லை. மாறாக, ‘நிலவொளியில் ஆற்றுமணலில் உட்கார்ந்து பேசலாம் ‘ என்று சொல்லும் சைவப்பிள்ளை வீற்றிருந்தார்.

மேடைப் பேச்சாளர் ஸ்ரீமான் சிவப்பிரகாம் அவர்களைப்பற்றிய சித்திரத்துடன் தொடங்குகிறது சிறுகதை. அன்று மாலை நடைபெற்ற மதுஒழிப்புக் கூட்டத்தில் சிங்கத்தைப்போல அழகுத்தமழில் அனல்பறக்கப் பேசிவிட்டு வந்திருக்கிறார். வந்ததும் பசி. சாப்பிட்டு முடிக்கிறார். பிறகுதான் களைப்பு அடங்குகிறது. உணவின் ருசியில் நாவைத் திளைக்கவிட்டபடியே உள்ளே இருந்த ஓர்குலம் பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு வெளிவிறாந்தையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மின்விளக்கின் ஒளியில் படிக்கத் தொடங்குகிறார்.

ஒரு பத்திகூட வாசித்திருக்காத நிலையில் வெளியே யாரோ கூப்பிடும் குரல் கேட்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே பத்துப் பன்னிரண்டு பேர்கள் வருகிறார்கள். ஒருவன் மட்டும் நெருங்கிவருகிறான். அருகில் வந்ததும் அடையாளம் தெரிகிறது. ‘அடடே நீயா கந்தா, என்ன சேதி ? ‘ என்று கேட்கிறார். ‘உங்களைத்தான் காணவேண்டுமென்ற வந்தோம். இந்த மதுவிலக்கு சம்பந்தமாக…. ‘ என்று தயக்கத்துடன் பேசத் தொடங்குகிறான் கந்தன். ‘ஆகா அதற்கென்ன, நல்லாப் பேசலாமே ‘ என்று உற்சாகம் கொள்கிறார் சிவப்பிரகாசம். உடனே அவன் மற்றவர்களையும் அங்கே அழைக்க முயற்சி செய்கிறான். சிவப்பிரகாசம் ஒருகணம் தடுமாறுகிறார். மனத்தில் ஒரு பரபரப்பு. தடுமாற்றம். திடாரென அவனை நிறுத்தி, ‘இதெல்லாம் இரண்டாம்பேர் அறியக்கூடாத விஷயங்கள் கந்தா. நமக்காக மனைவி மக்களை ஏன் தொல்லைக்குள்ளாக்க வேண்டும் ? அதோ பார், வெளியே நல்ல நிலவு. அத்துடன் பால்போன்ற மணல். வா, அங்கேபோய் பேசிக்கொள்ளலாம் ‘ என்று அவன் பதிலை எதிர்பாராமல் கீழே இறங்கி நடக்கிறார். கந்தனும் மற்றவர்களும் அவரைத் தொடர்ந்து செல்கிறார்கள்.

வந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். கள் சேர்ப்பது அவர்கள் தொழில். மதுஒழிப்புக் கூட்டத்தில் சிவப்பிரகாசத்தின் பேச்சைக் கேட்டபிறகு தம் வாழ்வின் எதிர்காலத்தைப்பற்றி ஆலோசிப்பதற்காக வந்திருக்கிறார்கள். தம் தொழிலில் உள்ள சிரமங்களையெல்லாம் அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிரைப் பணயம் வைத்து வாழவேண்டியிருப்பதையும் சொல்கிறார்கள். ஆனாலும் அதை விட்டுவிட்ட பிறகு எதை மாற்றுத் தொழிலாகக் கொள்வது என்கிற கேள்விக்குப் பதிலற்ற சூழலைத் தயக்கத்துடன் முன்வைக்கிறார்கள். ‘இதென்ன பிரமாதம் ? இந்தப் பரந்த உலகத்தில் தொழிலுக்கா பஞ்சம் ? ‘ என்று கேட்கிறார் சிவப்பிரகாசம். அதையெல்லாம் அறிந்தவர்கள்தாம் அவர்கள். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களான அவர்கள் ஒரு தேநீர்க்கடை வைத்தால் யார் வந்து தேநீர் குடிப்பார்கள் ? ஒரு பலசரக்குக் கடை வைத்தால்கூட யார் வந்து வாங்குவார்கள் ? ஒரு இரும்புக்கடையில் கூட கூலியாளாக வைத்துக்கொள்பவர்கள் யார் ? இப்படிப் பல கேள்விகள் அவர்கள் முன் நிற்கின்றன. அவர்களை அமைதிப்படுத்தும் சிவப்பிரகாசம் ‘அதெல்லாம் வேறு விஷயம், இவைதாம் தொழில்களா ? வேறு கைத்தொழில் செய்யலாமே ‘ என்று சொல்கிறார். அதைக்கேட்டு நடுவயதில் உள்ள ஒருவருக்குக் கோபம் வருகிறது. ஐம்பது வயதுக்குமேல் ஒரு புதிய தொழிலைக் கற்றுத் தேர்ச்சியடைவதற்கும் மரணம் வந்து தழுவிக்கொள்வதற்கும் சரியாக இருக்கும் என்று சலிப்புடன் சொல்கிறார். புதிய தொழிலில் பயிற்சி கிட்டும் வரையில் குடும்பத்துடன் பட்டினியுடன்தான் இருக்க வேண்டுமா என்று கேட்கிறார். ஆபத்தான கட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட சிவப்பிரகாசம் ‘ஆத்திரப்படாதீர்கள். உங்கள் குறைகளை அரசிடம் முன்வைத்துப் பாருங்கள். கள் இறக்குவதற்கு மாறாகக் கருப்பநீர் இறக்குங்கள். ஒரு சீனித்தொழிற்சாலை நிறுவித் தரும்படி உங்கள் தொழில் அமைச்சரைக் கேளுங்கள் ‘ என்று நொண்டிச்சமாதானம் சொல்கிறார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுகிறது. கள் இறக்குவதால் கிட்டும் வருமானத்தால் தாழ்த்தப்பட்ட சாதி சற்றே முன்னேறத் தொடங்குகிறது. அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள்தான் மதுவிலக்கு வேண்டுகிறார்கள். காந்தியின் பெயரைச்சொல்லி வாழ்வைப்பறிப்பதால் பசியால் மரணமே அதிகரிக்கும். பசியால் தாமே தாழ்த்தப்பட்டவர்கள் இறந்துபோனால் தீண்டாமையையும் சேர்த்து அழித்துவிட்ட மாதிரி ஆகிவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்தமாதிரி இருக்கும். அதே நேரத்தில் ஜின்னும் பிராந்தியும் மருந்துக்கடைகளில் மருந்து என்கிற பெயரில் விற்பனைச் சரக்காக மாறிவிடும். மதுஒழிப்பு கோஷத்தின் மறுபக்கத்தை அலசுகின்றன அவன் வார்த்தைகள். அதைக்கேட்டு சிவப்பிரகாசம் தடுமாறுகிறார். ‘சைச்சை, அது தவறான வாதம், அப்படி எண்ணவே கூடாது ‘ என்று பதற்றமடைகிறார். ‘பின் எப்படி எண்ணுவது ? தீண்டாமையும் மதுவிலக்கும் காந்தியின் கொள்கைகள்தாமே ? மதுவிலக்கில் காட்டுகிற ஆர்வத்தைத் தீண்டாமையில் ஏன் காட்டுவதில்லை ? முதலில் அதை ஒழிக்கலாமே ‘ என்று மீண்டும் உயர்கிறது அக்குரல். சிவப்பிரகாசம் சிலையாகி விடுகிறார். பேச்சு இத்திசையில் மாறிப்போகும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. வந்தவர்கள் எழுந்துகொள்கிறார்கள். மதுவிலக்கு அவசியம் வேண்டும், அதே நேரத்தில் வாழ்க்கைப் பிரச்சனையையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் யோசிக்குமாறு சொல்லிவிட்டு வெளியேறுகிறார்கள். அத்துடன் கதை முடிவடைகிறது.

இது மிகப்பெரிய கதை இல்லைதான். வெறும் கருத்தியலே இதன் வடிவமாக மாறியிருக்கிறது. ஆனாலும் இக்கதைக்கு வலிமையேற்றுவது மனஉணர்வின் வெளிப்பாடாக வரும் வார்த்தைகளையே மனத்தின் படிமமாகக் கச்சிதமாகக் காட்டியிருப்பதுதான். கதையின் எந்த இடத்திலும் அது சாதியின் வெளிப்பாடாகக் காட்டப்படவில்லை, மாறாக வாசிக்கும்போது உணர்ந்துகொள்ளத்தக்க இடைவெளியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மனிதர்களைத் தோண்டத்தோண்ட சாதியின் அடையாளமாக அவர்களிடம் நிறைந்துள்ள பல்வேறு பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ளலாம். இரட்டைத் தம்ளர் முறை, தனிச்சுடுகாடு என்பதெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற பழக்கங்கள். சிறிதும் வெளியே புலப்பட்டுவிடாதபடி உள்முகமாகவே பின்பற்றப்படும் பல பழக்கவழக்கங்கள் உண்டு. சாப்பாட்டுக்குப் பரிமாறும் இலைகளில் கூட சாதி பார்த்துப் பரிமாறும் விதத்தை கன்னட எழுத்தாளர் அரவிந்த மாளகத்தியின் சுயசரிதையைத் தமிழாக்கம் செய்தபோது படித்து மனம் நொந்ததுண்டு. உட்கார்ந்து பேசுவதிலும் சாதி பார்க்கிற சங்கதியை இக்கதை அம்பலப்படுத்துகிறது.

*

இலங்கையின் மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பிறகு தோன்றிய முற்போக்கு இலக்கியக் காலத்தில் எழுதியவர்களுள் முக்கியமானவர் என்.கே.ரகுநாதன். பொதுவுடைமை இயக்கத்தின்பால் ஏற்பட்ட ஈடுபாடும் தீண்டாமைக்கு எதிரான கோபமும் பள்ளிக்கூட ஆசிரியரான ரகுநாதனை மானுடநேயமும் தீவிரத்தன்மையும் கொண்ட படைப்பாளியாக்கிவிட்டன. ‘நிலவிலே பேசுவோம் ‘ என்கிற கதை அவருக்குப் பெரும்புகழைத் தேடிக்கொடுத்தது. இவருடைய பெயருக்கு முன்னால் ஓர் அடைமொழியாக நின்றுவிடும் அளவுக்கு இக்கதையின் புகழ் நிரந்தரமானது. 1951 ஆம் ஆண்டில் இக்கதை எழுதப்பட்டது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே இவரது சிறுகதைகள் வெளியாகின. இக்கதையின் தலைப்பிலேயே இவரது சிறுகதைத் தொகுதி 1963 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்