ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ருத்ரா


(கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)

ஆயிரம் பாடல்களே! ஒரு
ஆயிரம் நிலவாய் வா!
என்று
அந்த வானத்தையே
தன் ஜிப்பாப் பையில்
வைத்துக்கொண்டு
ஆணையிட்ட‌
வைரமுத்துக்கவிஞனே
உன் பெயரை
உச்சரித்த பிறகு
அந்த வைரங்களும் முத்துகளும்
வெறும் கூழாங்கற்கள்
ஆகிப்போயின!

திரை மின்னல்களை
உருட்டித்திரட்டி
ஊர்வ‌ல‌ம் விட்ட‌வ‌னே!
உன் பாட‌ல்க‌ளுக்கு
ஏக்க‌ம் கொண்ட‌ இந்த‌
இசைக்க‌ருவிக‌ள்
உன் மீது கொண்ட‌ காத‌ல்
உன‌க்குத் தெரியுமா?

உன‌க்கோ
“ப‌தினாறு வ‌ய‌திலே” முத‌ல்
“எந்திர‌ன்” வ‌ரை
உன் பேனா தானே
எந்திர‌த்துப்பாக்கி!
அதன் காத‌ல் குண்டுக‌ளை வைத்து
எங்க‌ளையெல்லாம்
ச‌ல்ல‌டை ச‌ல்ல‌டை ஆக்கிய‌வ‌ன் நீ!

சினிமாவின்
ஒலைக்கொட்ட‌கையைக்கூட‌
ச‌ங்க‌த்த‌மிழின்
ஓலைச்சுவ‌டிக‌ளைக்கொண்டு
மிடைந்து
அழ‌கு பார்த்த‌வ‌ன் நீ!

த‌மிழ்
புதுக்க‌விதையாய்
புல்ல‌ரித்து புள‌காங்கித‌ம் அடைய‌
உன்னிட‌ம் அல்லவா வ‌ந்த‌து!
அதை
உல‌க‌மெல்லாம்
அமிழ்த‌மாக்கிய‌
அற்புத‌க்க‌விஞ‌னே!

எதைச்சொல்வது?
எதை சுவைப்ப‌து?
ம‌ன‌தால்
எதை ச‌வைப்ப‌து?
தொல்காப்பிய‌ன்
மிச்ச‌ம் வைத்துவிட்டுப்போன‌
இல‌க்க‌ண‌ இல‌க்கிய‌
மூலைக‌ளுக்குள் எல்லாம்
மூண்டு எரிந்த‌
உன் எழுத்தின் வெளிச்சம்
ஒரு புதிய எண்ணத்தின்
வான‌வில் சுள்ளிக‌ளை
வைத்து வ‌ள‌ர்த்த‌
த‌மிழ் வேள்வி அல்லவா!

எத்தனை விருதுகள் தான்
உனக்கு கொடுப்பது?
களைத்துப்போய்
அவை ஒய்ந்து கிடக்கின்றன.

இருப்பினும்
மனித நம்பிக்கைக்குள்
வாசம் வீசிக்கொண்டிருக்கும்
விஞ்ஞானத்துக்கு வெற்றி கூறும்
“கடலும் கடலும் கை தட்டும்”எனும்
உன் “எந்திர‌ன் வ‌ரிக‌ள்”
வெறும் எந்திர‌த்த‌ன‌மான‌து அல்ல‌.
“டென் க‌ம்மாண்ட்மென்ட்ஸ்”
ஆங்கில‌ப்ப‌ட‌க்காட்சியாய்
க‌ட‌ல்க‌ளே உன‌க்கு
க‌ம்ப‌ள‌ம் விரித்து
வ‌ழி பிள‌க்கும் வ‌ரிக‌ள் அவை.

கடல் கொள்ளாத கவிதையே!
உனக்கு
கவிப்பேரரசு பட்டம் கூட‌
வெறும் கொட்டாங்கச்சி தான்.
அதனால்
நோப‌ல் ப‌ரிசுக‌ள்
உன் வீட்டுக்க‌த‌வை
தட்டட்டும்.
அதன் மூலம்
தமக்கு அவை
நோபல் பரிசுகள்
வழங்கிக்கொள்ளட்டும்.

வாழ்த்துக்களுடன் ருத்ரா
=======ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா