தனது அறைக்கு வந்திருந்த வாப்பா

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த
நள்ளிரவில்அது நடந்தது.
சுவரில் மாட்டப்பட்டிருந்த
சட்டகத்தின் கண்ணாடி வழியாக
புகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி
தனது அறைக்கு வந்திருந்தார்.
அறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில்
மூத்தமகன் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன்மீதுகாலைத்தூக்கிப் போட்டு
பேத்தியும் படுத்திருந்தாள்.
பேத்தி நிரம்ப பாசம் வைத்திருந்தவள்
பிறரின் அந்தரங்கமான அறையில்
அத்துமீறி நுழைவது என்னவோ
வாப்பாவின் மனசுக்கு பிடிக்கவில்லை.
தனது மனைவியை அந்த அறையில்
தேடிவந்தவர் என்பதால்அதிகமொன்றும்
குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை
பீரோ பூட்டப்படாமல் திறந்திருந்தது.
கதவைத் திறந்துபார்த்தபோது
தான்முன்பு போட்டிருந்த வேட்டியும் சட்டையும்
கீழடுக்கு மூலையில்
அடுக்கு குலைய வைக்கப்பட்டிருந்தது.
துவைத்து வெளுத்திருந்தாலும் அதில்
தன்வியர்வையின்மணம் தங்கியிருந்ததை
அவரால் உணர முடிந்தது.
அறையின் ஒவ்வொரு பொருட்களும்
இடம் மாறிப் போயிருந்தன.
தானிருந்த வீடுபோல்தெரியவில்லை
தன் அனக்கம் கேட்டும்
உறக்கத்திலிருந்துவிழித்து தன்னை யாரும்
ஏறிட்டு பார்க்காத வருத்தத்தில்
விரக்திமேலிட நின்ற வாப்பா
புகைப்படத்திற்குள்
திரும்பிச் செல்லமுயற்சித்தபோது
உள்நுழையமுடியவில்லை.
நாற்புறகண்ணாடிபிரேமிலும்
மின்சாரம் பாய்ச்சப்பட்ட
முள்வேலி போடப்பட்டிருந்தது.
வெளியேறிய வாப்பா
இப்போது வெளியேற்றப்பட்டுவிட்டார்.

நன்றி

நமது முற்றம் மாத இதழ்

பிப்ரவரி 2010
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்