கவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

கரு. திருவரசு


எடுப்பு
கன்னல்தரும் சாற்றை உண்டால்
நாவில் இனிமையே – உன்றன்
கனியிதழின் தேனை உண்டால்
ஞானம் கனியுமே

தொடுப்பு
என்னில் உன்னை உலகம் கண்டால்
எனக்குப் பெருமையே – உன்றன்
இடைநகைகள் அணிய எனக்கும்
உண்டு திறமையே

கண்ணிகள்
சலசலக்கும் ஓடை ஒலியைச்
செவிகள் விரும்பலாம் – உன்றன்
வளையலொலி கேட்டால் சென்ற
இளமை திரும்பலாம்!
பளபளக்கும் கண்கட்குவமை
யாரும் சொல்லாம் – உன்றன்
பார்வையொரு சைகை செய்தால்
பாரை வெல்லலாம்!

யாழ்நரம்பில் விரல்கள் பட்டால்
நாதம் பிறக்கலாம்! – அவை
ஏழைஎன்னைத் தொட்டால் உள்ளம்
மலரை வெறுக்கலாம்!
வேல்விரைந்து பாய்ந்தால் மனிதன்
விழிகள் இமைக்கலாம்! – உன்றன்
விழிகள் நெஞ்சில் பாய்ந்தால் புதிய
உலகம் அமைக்கலாம்!

ஒளிகிடைத்த குருடர் கண்கள்
ஓய்வு கொள்ளலாம்! – உன்றன்
ஒளிரும்மேனி கண்டால் கண்கள்
உறக்கம் தள்ளலாம்!
களிமிகுந்து வாழ்வை உன்றன்
கையில் கொடுக்கலாம் – என்னைக்
காதலித்தால் தமிழே நானும்
கவிதை வடிக்கலாம்!


thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு