அல்லாவுடனான உரையாடல்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


கண்களின் பார்வையில்
தப்ப முடியாத உலகம்
வேகமான தூரத்தில்
புள்ளியாய்
மறைய
உயர மேலும் உயர

எனது பிரக்ஞையில் மழை நீரருவி
பாய்கிறது
சலசலப்புடன்
உனது காலில் மிதிபட்டு கிடக்கும்
இறுதிநாளை
நோக்கிய தவிப்புடன் காலம்

மணலை குழைத்து
நானுன்னை உருவாக்கினேன்
காலத்தை பூசி
அழகான வேலைப்பாடுகளுடன்
உன்னை அச்சாக
வார்த்தேன்
நான் நினைத்து பார்க்காத
கணம் வந்து
என்னோடு உரையாடுகிறாய்.
நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது ?

உனக்கும் எனக்குமான
தூரம் பிளந்த போது
ஆகாயம் ஒரு காலில்
பாதாளம் ஒரு காலில்
முடிவுற்ற பரப்பில்
வெளியை புதைத்து
நட்சத்திரங்களை நோக்கி
புன்முறுவலுடன்
நெடிதுயர்ந்து நிற்கும்
தோற்றமென.

எனது தேகமும்
அறிவும் யாவற்றையும்
பிடரி நரம்புகளின்
அருகிலிருந்து
கவனிக்கிறாய்.

என் உயிரை பற்றியிழுக்கும்
மரணதேவன்
அகப்படாத வெளியில்
நின்று கொண்டு
உனது உயிரை வாங்க
துடிக்கிறான்

எனக்கிது புரியவில்லை
அற்புதமான வலிமையுடைய
உன்னை
மணலாக உருவாக்கிய போது
தான் மரண தேவன்
வருகிறான்
மரணத்தை கொண்டு


இஸ்லாம் மற்றும் வல்லின மெல்லினங்கள்

ஒன்று

சாந்தியின் கழிவுப்பொருட்கள்
ஜோடனைகளின் இயக்கத்தில்
(அமைதி,சமாதானம் இன்னபிற பெயர்களில்)
ரகசியத்தின் விளிம்பில்
நின்றொரு இதயம் தொடும்
அழகிய உரையாடல்
ஆதியில் தொடங்கி மீதி கூட
இல்லாமல் காலத்தின்
ஒரு விசித்திர சுழற்ச்சி
கவனிப்பு இல்லாமல்
ஆயிரம் நாவுகளில் விரியும்
ஜ்வாலை கீற்றுகள்
சாந்தியின் உருமாற்றத்தில்
அனல் கக்கும் ஒரு சொல்
பாதாளத்தின் கதவிடுக்கிலிருந்து
துருத்திக்கொண்டு
வெளியே
சொற்களுக்கான அர்த்தங்கள்
மொழியில்
ஒவ்வொருபேரின் உடும்பு பிடிக்குள்
உதறி தள்ளி ஓடவே விரும்புகிறேன்
கலையும் வெண்மேகத்தில்
பிரியும் கணங்களில்
வெளியே
எனக்கான சொற்களுடன்

இரண்டு

சொல்லியாச்சா ?
இனி வாயை கழுவு
துர்நாற்றத்தை களை
பூமியில் மணம் மட்டுமல்ல
துர்நாற்றமும் உண்டு
அதனதன் தன்மையுடன்
புரண்டு அழுக்கை அப்பிக்கொண்டு
புழுதியில் நடப்பது
உனக்கு பிடித்திருக்கலாம்
புழுதிவாரியிறைக்கும்
துர்நாற்றங்களின்
தீட்சண்யம்
பூமிக்குள் வேர்விட்டு
படரும் வேகத்தில்
ஒரு மெய்.

மூன்று

நான் போகவே விரும்புகிறேன்
உயிரை உறிஞ்சி
குருதியில் நனைந்து
பெருத்து வளர்ந்து
வெளியே வரும் அட்டையை
காண மனசில்லாமல்

நான்கு

எல்லோருக்குமான அறிவு அவரவர்
ஆழத்தில் வீற்றிருக்கிறது
என் தலையில் மூத்திரம் பெய்யும்
உன் சாமர்த்தியம்
பழக்கப்பட்ட நெறிமுறைகளுடன்
ஒன்றில் துவங்கி
இன்னொன்றுடன் சேர்ந்து
தானொன்றை ஈன்று
வென்று,கொன்று,தின்று
இரண்டிரண்டாகவோ
மும்மூன்றாகவோ
நாநான்கவோ
குறிகளை பிடித்துக்கொண்டு

எனக்கான
குழியில் மரணத்தை
வெட்டிக்கொண்டு
தனிமையுடன்
தேவர்களுடன் உரையாடுகிறேன்
நேர் அநேர் வழிகளை குறித்து.

சூரியனின் சுழற்ச்சியும்
சந்திரனின் உதயமும்
நெருப்பிலிருந்து உருவான
சாத்தானின் துயரமான
தீமையுடையதாக்கும் மேகங்களின்
நடுவிலிருந்து
காயங்களின் வலிகளுக்கு
அமைதியை எட்டிப்பார்க்கும்
துயரசம்பவங்களின் மொத்த
வடிவமான நான்
விலங்குடைய பூட்டுகளை
அதிகரிக்க தேவையான
நம்பிக்கையின்
மழை கண்களுடன்

தருவாயறிந்து கண்களின்
உறுத்தல் ஈரமான போதுதான்
மயக்கமான ஏழுவானங்களின்
நடுவில்
புகைப்போலொரு நீ

மரணகுழியில் வெட்டியெடுத்த
மண்துகள்கள் பரவி
ஏழுவானங்களின் கண்களை மறைக்கிறது
அமைதி பரப்பில் காலூன்றி நிற்கும்
என் கால்களில்
தூசிகளின் பொடிக்கூட்டம்
மேகங்களின் முனையை செதுக்கிய
வர்ண பிரவாகம்
செந்நிறமாய்
மண்துகளில் ஜொலிக்கும்
குழியை வெட்ட வெட்ட
அதன் ஆழம்
எல்லாவற்றையும் தாண்டிப்போகிறது
ஆழத்தில் வீற்றிருக்கும்
இருமையின் அடர்த்தியையும்
கடந்து.

எச்.முஜீப் ரஹ்மான்

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்