விசும்பல்

This entry is part of 30 in the series 20050909_Issue

றகுமான் ஏ. ஜெமில்


ஏன் சுயம் ஒடிக்கும்படியான
ஏந்த அழுத்தங்களும்
அடக்கு முறைகளுமின்றி
மிகவும் செம்மையாக நகர்ந்தது
நேற்றுவரைக்குமானதென் வாழ்வு

ஒரு பூ வாடியுதிரும் கணம்
எல்லோரும் கூடிநின்றழ
என்விதியை சொதப்பியெழுதி
காாியமாற்றிச் சென்றது காலம்

என் அம்மா முதல்
குஞ்சு குரால் வரைக்குமாக
சகுனம் பார்க்கும் பிராணி போலும்
முண்டச்சியென்றும்
அழைத்தெனரென்னை
மிகவும் விரும்பும்படியாக
எந்த உறுத்தலுமின்றி.

யாதேனும் பிறிதொன்று அனுபவிக்கும்
சிறுபுன்னகை
அல்லது இன்பம்
துளியுமென் இதழ்களிலில்லை

சடங்குகளால் வேயப்பட்டதான
அறையொன்றின் மூலையில் முடங்கி
துயர்சூழ்ந்து பாிதவித்து
செத்து சுண்ணாம்பாகி
ஒழுகிக் கரைகிறதென் ஆயுள்.

றகுமான் ஏ. ஜெமில், இலங்கை
—-

Series Navigation