கடலுக்கு மடல்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

கோவி.கண்ணன்


1.

கடல் தாயே! என்றழைத்த எங்களுக்கு
இதுதான் உன் அசுர அணைப்பா ?

உப்புக்கு உன்னிடம் பஞ்சமா ?
எங்கள் கண்ணீரையும் சேர்த்தெடுத்து சென்றாய்!

கொடுவாய் மீன் தெரிந்த எம்மக்களுக்கு !
உன் சுனாமி கொடுவாய் தெரியாது!

வஞ்சிரமீனுக்கு வலைவீசத்தெரிந்த நாங்கள்
உன் வஞ்சக அலையின் விலை தெரிந்திருக்கவில்லை!

சுறா மீன் பிடிக்க வலை செய்த நாங்கள் உன்
சுனாமி மீனுக்கு வலை செய்ய கற்றுக்கொள்ளவில்லை !

உன்னில் செம்மீன் பிடித்த எம்மக்களை
விண்மீன் பிடிக்கவா விண்ணுக்கழைத்தாய் ?

கடலாடிய கட்டு மரங்கள்
கடல் (நீ) ஆடியதால் கவிழ்ந்தது !

இலங்கை கேட்கிறது.
இன்னும் எந்த இராவணனுக்காக
இப்படியொரு படையெடுப்பு ?

செந்தமிழகம் உன்னால்
வெந்த தமிழகமானது!

மாலத்தீவு மரண ஓலத்தீவானது!

நாகப்பட்டினம்
உன்னால் சோகப்பட்டினமானது!

வேழம் புகுந்த சேளக்காடானது
ஈழம் !

தோணி மிதக்கும் தாய்லாந்தும் உன்
கோணிவாய்க்கு தப்பவில்லை !

அழகு அந்தமான் உன்னால் வேட்டையாடப்பட்ட
அலங்கோல மான னது!

வங்க தேசத்திற்கும் கிடைத்தது உன் சேத
பங்கு !

சோகங்களை சுமக்கும் சேமாலியாவிற்கு
நீ கொடுத்தது தான் மேலும்
சோகம் !

உன் அலைகளின் வலிமையை நீ உணராமல்
பர்மா சென்று தேக்கின் வலிமையையும்
அசைத்து பார்த்தாயா !

இந்தோனேசிய சுமத்ரா உன்னால் அழிந்தது தான்
அந்தோ பரிதாபம் !

நீ அளித்த உணவுக்கும்
உப்புக்கும் எங்கள்
உயிர்,உறவுகள்,உடைமைகள் ?
உன் விலை ரொம்பவும் அதிகம்!

அழிந்துவிட்டோம் என்று எண்ணாதே!
மீண்டும் எழுவோம்!

இப்புத்தாண்டில் உன் அலைகளைப்போல
பன்மடங்கு!

2.
அரவணைக்கும் அன்னையான நீ
அரவ அன்னை யானதேன் !

அளித்து மிளிர்ந்த உன் மேனி
அழித்து சிவந்ததேன் !

ஆரவார உன் அலைகள் பேர்
அரவ ஆரமாக மாறியாதேன் !

தைப் பொங்கல் வருவதற்கு முன் காலன்
மார்கழியில் செய்த கடல் பொங்கலா உன் சுனாமி !

சிற்றலை, பன்பலை வானொலிகளும் உன்
பேரலை பற்றி எங்களுக்கு உரைக்கவில்லையே !

கூறு போட்டு மீன் விற்ற உன் மக்கள் இன்று கூக்
குரலிட்டு கூட்டமாக குழிக்குள் !

மணல் வீடுகளை மட்டும் கரைத்து செல்லும் நீ
மணல் வீடு கட்டும் சிறார்களையும் அழித்து சென்றதேன் !

ஆழிக்குள் எழுந்த (சுனாமி) ஆலத்தை நீலகண்டன்
விழுங்காமல் தடுத்த பார்வதியா நீ !

மெழுகேற்றி பக்தி செய்த மக்களுக்காக உன்னால் மேரிமாதாவும்
மெழுகு பத்தி ஏற்றினாள் !

சாம்ராணி வாசம் செய்யும் நாகூர் உன்னால் சவ
சாம்பலும் வாசம் செய்தது !

புத்த விகார் நிறைந்த நன் நாடுகளின்
புத்திரர்கள் உன்னால் செத்து விகார மானார்கள் !

உன் மோச அலையில் உயர் துறந்தவர்களின்
உறவினர்களுக்காக
எம் உதவி நேச காரம்
உன் உயர அலைகளை விட
நெடிது நீளும் என்று நாங்கள் நிரூபிப்போம் !

கோவி.கண்ணன்
geekay@singnet.com.sg
சிங்கப்பூர்

Series Navigation

கோவி.கண்ணன்

கோவி.கண்ணன்