உணவுச் சங்கிலிகள்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

ஸ்ரீமங்கை


—-
பன்னிரெண்டு வினாடிகளாகப் பார்க்கிறேன்…
செங்கால் நாரைபோல் அற்புதமாக பறந்து இறங்கி,
முன்னங்கையில் நான் உணராமல் கவனமாகக் கால்பரப்பி,
மெதுவாக சிறகுகள் விரித்து, அடக்கி,
கைதேர்ந்த செவிலிபோல, உதட்டு ஊசி
தோல்மேல் புகுத்தி
ஒருசொட்டுக் குருதி குடிக்கும் கொசு…

கொசுவுக்கு சாதி தெரியாது, சமூகம் புரியாது.
சாக்கடை நீர் சொட்டும் பன்றியின் முதுகும்,
சவலைக்குழவியின் தொப்பூளும்,
இரத்தைத்தைப் பாலாக்கிக்
கொடுக்கும் தாயின் முலையும்,
குருதி கொப்புளிக்குமாயின்
கொசுவுக்குக் கொண்டாட்டம்.

சுரீரென வலிக்கையில் சிறு கோபம் சீறியது.
‘காக்கைக்குத் தெரியுமா எருதின் புண் ? ‘

‘எருதுக்குப் புரியுமா காக்கையின் கொடூரப் பசி ? ‘
யாரது ? எதிரொலியாய்…. ?

உற்றுப்பார்த்தேன், முன்னங்கையினை..
இறகுகளுக்கு நடுவில், மேனேஜர் தெரிந்தார்…
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை