‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘

This entry is part of 57 in the series 20030717_Issue

கவியோகி வேதம்


திரும்பியே பார்க்கின்றேன்;தினமும்-யின்று நெஞ்சையெல்லாம்

அரிக்கின்ற நினைவுகளை அலட்சியமாய்ப் போட்டுவிட்டு,

..

திரும்பியே பார்க்கின்றேன்;தெளிந்துவரும் பதநீர்போல்

உரிமையுடன் நம்மனத்தில் உல்லாசம் பொங்குகின்ற

..

அந்தயிளம் நாளையெல்லாம் அசைபோட்டேன் மாடுபோல!

சந்ததமும் பரவசத் தாலாட்டைப் பாடிநின்ற

..

சிறுவனாம்-என் பருவத்தைச் சிறப்பாக எண்ணுகின்றேன்;

சுறுசுறுப்பைத் தூண்டுகின்ற ‘தாம்ரபர்ணி ‘ ஆற்றிலே,

..

மண்டபத்தின் மேலேறி மளார்-என்று கீழ்குதித்து

பண்டையக் கிழவிகளைப் பதற வைத்ததுவும்,

..

சரித்திரச் சான்றெனவே ‘ஒருகையை ‘ யிழந்துநின்ற

அருமை ‘அய்யனாரின் ‘ தோளேறி,.. தொங்கும்-அவர்

..

நீள்நாக்கைத் தடவிமிக நெகிழ்ந்துபோ னதுவும்-அவர்

வாள் ‘தொட்டு, ‘அஞ்சாமல் வளர்ந்தபையன் நான் ‘-என்றே

..

தோழப் பசங்களிடம் சூளுரைத்து நிமிர்ந்ததுவும்,

ஆழநீர்ச் சுனைதனிலே முக்குளித்துப் பெண்களையே

..

பயங்காட்டி,மூச்சடக்கி, பலயிடத்தில் தோன்றியதும்,

அயனான சேதி ‘என நினைவில்தங்கும் அலைகளன்றோ ?

..

மரமேறி ‘கொடுக்காப் புளியுடனே வெல்லமும்

அரைமிளகாய்,உப்பும்கலந்(து) அறுசுவையாய் உண்டதுவும்

..

யிடித்துத் தந்த-அந்த எச்சுமிமுத்தம் பெற்றதுவும்,

பொடி-அளவும் சிதறாமல் பொன்-நினைவாய் நிற்கிறதே!

..

யிலக்கியப் பாடலெல்லாம் யிவ்வயதில் மறக்கிறதே!

கலக்கிய யிளம்பருவக் குறும்புநினை வுகள்மட்டும்,

..

வெண்பாவில் தளைதட்டா வெல்லுசொல்போல் நிற்கிறதே!

கண்சிமிட்டும் நேரத்தில் மாங்காய்த் தோப்பினிலே

,..

பாலருடன் வேலிதாண்டிப் பலகாய் பறித்ததுவும்,

கால்வரைக்கும் புளிக்குமந்த காய்களைத் தின்றதற்காய்

..

பரிசெதுவும் கொடுக்காமல், காவல்-ஆள் அடித்ததுவும்,

கருப்புத் தேன்-கூட்டில் திறமையுடன் கைவிட்டு

..

சிலதுளி தேனுக்காய் சில்மிஷம் செய்துநின்று

கலகலப்பாய்த் தோழருடன் கைநக்கிப் பெருமிதமாய்,

..

கண்ணன் ‘நான்! என்பதுபோல் காலரைத் தூக்கியதும்

திண்ணமாய் என் நினைவுச் செவுளில் அறைகிறதே!

..

அந்தநாள் நினைவெல்லாம் அக்குள்வரை சிலிர்ப்பதனால்,

யிந்தநாள் வெப்பத்தை எப்படியோ சகிக்கின்றேன்!..(கவியோகிவேதம்)

^^^
sakthia@eth.net

Series Navigation