‘கொண்டாடு – இல்லாவிட்டால் … ‘ – உரைவெண்பா

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


ரஷ்யர்களுக்கு எதையுமே அரசாங்க அதிகாரம் மூலம் செய்து தான் பழக்கம்.

பாட்டாளி மக்களின் சர்வாதிகாரமாக அது சமுதாய வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்புமுனையை உண்டாக்கியது லெனின் காலத்தில்.

சோவியத் யூனியன் செல்வத்தில் கொழிக்கவில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்களா என்று தெரியாது. ஆனால் நிம்மதியாக இருந்தார்கள். எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகளான உணவும், உடையும், இருப்பிடமும் கிடைத்தன.

தனிமனித சுதந்திரம். அதைத் தருகிறேன் என்று வந்தார் கார்பசேவ். எல்சின் ஒருபடி முன்னால் போய் சுதந்திரம் என்ற பெயரில் சோவியத் கூட்டமைப்பைச் சுக்குநூறாக்கிப் போட்டார்.

‘மாகாளி பராசக்தி ருசிய நாட்டில் கடைக்கண் வைத்தாள். ஆகாவென்று எழுந்ததுபார் யுகப் புரட்சி ‘ என்று பாரதி பாடிய யுகப்புரட்சியின் சுவடெல்லாம் தற்போது கவனமாக அழிக்கப்பட்டு விட்டது. லெனின்கிராட் பழையபடி பீட்டர்ஸ்பர்க் ஆகி விட்டது. லெனின் சிலைகளைத் தேடித்தேடி உடைத்துப் போட்டாகி விட்டது. ரஷ்யாவில் மக்கள் தனிமனித சுதந்திரத்தோடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவும், உடையும், இருப்பிடமும் கிடைக்காவிட்டால் என்ன ? தனியாக வசிக்கும் முதியவர்களுக்குப் பழைய அரசாங்கம் ஒதுக்கிய வீடுகளைப் பிடுங்குவதற்காக அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டால்தான் என்ன ? மெக்டொனால்டும், கோக்கோகோலாவுமாக மாஸ்கோவும் இன்னொரு ஐரோப்பிய நகரமாகி விட்டது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

கடந்துபோன டிசம்பரில் மாஸ்கோவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரவாரமாக இருக்கவேண்டும் என்பதில் ரஷ்ய அரசாங்கம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. முக்கியமாக மாஸ்கோ நகரத்துக் கடைவீதிகள் சரிகைத் தோரணங்களும், மின்னும் விளக்குகளும், காகிதப் பூக்களுமாக விழாக்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது அரசாங்க எதிர்பார்ப்பு. உடனே அதிகாரத்தோடு தடபுடலான அரசாங்க அறிவிப்பு.

எல்லாக் கடைகளும் விழாக்கால உற்சாகம் பளிச்சென்று தெரியும் வண்ணம் சிங்காரிக்கப் பட்டிருக்க வேண்டும். இதை மேற்பார்வை செய்யத் தனி பொலீஸ்படை சுற்றி வரும். அலங்காரம் செய்யாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

நடைபாதைக் கடைகளும் சீவிச் சிங்காரித்து இருக்க வேண்டும் என்று அதிகாரம் செய்கிறார்களே. எங்களிடம் அதற்குச் செலவு செய்யப் பணம் இருந்தால் ஏன் நடைபாதையில் கடைபோட்டுக் குளிரில் குந்தியிருக்கிறோம் ?

இப்படிச் சொன்ன மாஸ்கோ நகரச் சாமானியர்களைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். இவர்கள் மேல் இன்னொரு முறை மாகாளி பராசக்தி கடைக்கண் பார்வை படுமா என்று தெரியவில்லை.

தாடிலெனின் சிற்பம் தகர்த்தோம் தளராதே
ஆடிய செங்கொ டியறுத்தோம் – நாட்டிலே
பண்டிகை நேரம் பசியுடன் கொண்டாட
எண்டிசையும் ஏற்று விளக்கு.

அன்புடன்,
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

பின்குறிப்பு :

‘உரைநடையில் தொடங்கி வெண்பாவில் முடிக்கும் இந்த எழுத்து வடிவம் நன்றாக இருக்கிறது. தொடரவும் ‘ என்று குருநாதர் அன்புக்
கட்டளையிட்டிருக்கும் காரணத்தால் இது இனியும் வரும்.

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்