சுற்றம்..

This entry is part of 23 in the series 20021221_Issue

– மோகனா


சுற்றி நின்று சுகம் கெடுக்கும்
உன்னை உன் மனசாட்சியை விடவும்
உன்னிப்பாய் உற்று நோக்கும்.

முகம் கண்டால் பல் இளிக்கும்
முதுகின் பின்னால் பரிகசிக்கும்
சிரிக்க பேசினால்
அடக்கம் அற்றவள் என ஏசும்
அளந்து பேசினால்
முகம் கொடுக்காது முசுடு எனும்.

எல்லோரிடமும் நட்பு கொண்டால்
உன் கற்பு சந்தேகிக்கும்.
ஒருவனிடம் நட்பு பாராட்டினால்
காதல் என ஒலிபரப்பும்..

தனித்து வாழ தலை கொண்டால்
படித்த திமிர் என தலைத் தட்டும்.
உத்தியோகத்தில் உயர்ந்தால்
உன் பெண்மையை காரனமாக்கும்.

உன் தன்னம்பிக்கையை
தகர்த்து எரிய – இரட்டை நாக்குடன்,
முகத்திரைக்குள் தலை விரிகோலமாய்
சுற்றித் திரியும்..

பிணம் தின்னும் கழுகை போல
உடன் இருந்தே
உன் வலிகளை
கிளறி சுகம் தேடும் சுற்றம்..

இது என்றால் அது என்றும்
நல்லது என்றால் கெட்டது என்றும்
தடித்த வார்ததைகளால்
உன் செய்கையை விமர்சிக்கும்.

உன்னை நொண்டி குதிரையாய்
பின்னுக்கு தள்ள
எல்லா சாகசமும் செய்யும் – நீயோ
பந்தய குதிரையாய் ஓடு.

புலிகளின் பாய்ச்சல்களுக்கு
பதுங்கலாம் – ஓநாய்களின்
ஊளைகளுக்கு நீ ஏன்
செவி சாய்க்க வேண்டும்..

காரனம் இல்லாமல்
கரையும் காக்கை போல
கரைந்து கரைந்து
தானே அடங்கட்டும்
இல்லை வேறு செவி தேடி
செல்லட்டும்..

உன் நியாயங்களை
முயற்சியின் முந்துதல்களை
சுற்றம் எனும் சுயநல
கூட்டத்துக்காய் பலி கொடுக்காதே!

T_Mohana_Lakshmi@eFunds.Com

Series Navigation