எழுத / படிக்க

This entry is part of 30 in the series 20020909_Issue

நம்பிராஜன்.


யாருக்காக
எழுதுகிறீர்கள்
யார் படிக்கிறார்கள்
நம்முடைய குடிபடைகளெல்லாம்
சன் டிவி தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
பெரும்பாலான ஆண்கள் பிராந்திக்கடைகளிலும்
பெரும்பாலான பெண்கள் திரையரங்குகளிலும் இருக்கிறார்கள்
கொஞ்சம்பேர்
ராஜேஷ்குமார் பாலகுமாரன் படிக்கிறார்கள்
இன்னும் கொஞ்ச பேர்
ஜ்உனியர்விகடன் நக்கீரன் படிக்கிறார்கள்
வேலைக்குப் போகிற வீட்டிலிருக்கிற பெண்கள்
மங்கையர்மலர் மாத நாவல்கள் வாசிக்கிறார்கள்
நிறையப் பேர்
வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போய்வருகிறார்கள்
குமுதம் ஆனந்தவிகடன் வாசிக்கும்
கலாசாரம் எப்பொழுதும் போல
கவிதையென்றால்
வைரமுத்து அப்துல்ரகுமான்தாம்
எழுத / படிக்க தெரிந்தவர்கள்
எத்தனை சதவிதமாம்
முன்னொரு காலத்தில்
முதியோர் கல்வித்திட்டம் என்றார்களா
அடுத்தாற்போல
அறிவொளி இயக்கம் வந்ததா
தொடர்கல்வி இயக்கம்
தொடர்ந்ததா
சட்டத்தில் இருக்கிறது
கட்டாயக் கல்வி
இலவசக்கல்வி மதிய உணவு சத்துணவென்று
எத்தனையெத்தனை நலவாழ்வுத் திட்டங்கள்
தாய்மொழியைப் பயிற்றுமொழியாக்க
பட்டினிப்போர் ஒருபுறம்
பொதுநூலகங்களில்
நல்ல புஸ்தகங்களே வாங்கப்படுவதில்லை
யார் இலக்கியம் படிக்கிறார்கள்
யாருக்காக எழுதுகிறோம்
முந்நூறு பேரிலிருந்து ஐநூறுபேர் வரை
சீரிய இலக்கியம் படித்தால் அதிகம்
இதில் வேறே
ஒன்பது குருமகராக்கள்
இருப்பத்தேழு
குழுக்கள்
நூற்றெட்டு
அரசியல்கள்
செட்டிகப்பலுக்கு
செந்தூரான் துணை
செந்தமிழ்ச் செல்வத்துக்கு
யார் துணை

***

Series Navigation