மாற்றம்

This entry is part of 30 in the series 20020302_Issue

பொன். முத்துக்குமார்


‘எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ‘
களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்;
‘என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ?
சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ‘
என்றபடி பவ்யமாய் விசாரிப்பார்
கோயிலுக்கு மரம்கொடுக்க
அனுமதியின்றி எங்கள்
கூரைவீட்டுக் கொல்லைக்குள் புகுந்து
மரம் வெட்டிய விவகாரத்தில்
அப்பாவை ‘போடா ‘ என்று விளித்து
என் பதினைந்து வயதில்
என்னிடம் அறைவாங்கி
என்னை உதைத்த
கலியமூர்த்தி;
‘நல்லா யிருக்கியாப்பா ?
அண்ணன் சொன்னான் நீ வந்திருக்கிறதா ‘
என்றபடி ஈரமாய் குசலம் விசாரித்த –
ஓய்வுபெற்றபிறகு
வெறுமையும், தளர்வுமாய்
முன்பற்களிழந்து வலம்வரும் –
கன்னத்திலறைந்து
குவியதூரம் போதித்த
எட்டாம் வகுப்பு ராஜாராமன் சார்
டிகிரி படித்துவிட்டு
ஊர்சுற்றிக்கொண்டிருக்கும்
தன் மகனை நினைவுபடுத்துவார்.
‘கொளத்தங்கர வாத்யார் பையன்;
என்னடா பொடியா எங்க வந்த ? ‘
என்று
நான் டவுசர் நழுவும் வயதில்
டயர் உருட்டிக்கொண்டு போன
அக்பர்பாய்கடையில் விசாரித்த
விடலைகள் தற்போது
புன்னகையோடு வணக்கம்வைத்து
தலையாட்டி
வேகமாய் சைக்கிள் மிதித்துப்போகும்.
யிவ்வளவுக்குமிடையில்
வெளிதேசத்திலிருந்து
வருடங்கள் கடந்து
ஊர்திரும்பியிருக்கும் நான்.

Series Navigation