சில சந்தேகங்கள்.

This entry is part [part not set] of 15 in the series 20010325_Issue

கிறிஸ்


இது படிமமா ?

கூக்குரலிட்டு
ஆங்காரமாய்
விரையும்
ரயில் வண்டியின் வேகத்தை
பயணிக்கு
அமைதியாய்
அறிவித்து
பின்னோக்கி நகர்ந்து
கண்ணை விட்டு
மறைந்து ஒடிப்போகும்
தண்டவாளத்து
அண்மையில்
நகராது
நிற்கும்
மரம்.

இது போஸ்ட்மாடர்னிசமா ?

அங்கே தெரிவது ஆனையோ ?
கொசுக்கடித்து
ஆனைக்கால் வியாதி வந்து
கால் மெலிந்து
குச்சியாகி
தொழு நோயில்
தும்பிக்கை தொலைத்து
காது சிறுத்து
சோகையில் நிறம் தொலைத்து
வெளிரிப் போய்
முகம் மாறி
தந்தம் கொம்பாக மாறிப்போன
ஆனையோ ?
அல்லது கொசுக் கடி பட்ட காளையோ ?

என் சின்ன அண்ணனுக்கு,
கருப்பு அண்ணனுக்கு,
என் செல்ல அண்ணனுக்கு
எப்போதும் அறிவாகப் பேசும் அண்ணனுக்கு

இப்போது
அது கொசு கடி பட்ட கொசுவாம்.

இது போஸ்ட்மாடர்னிசப் படிமமா ?

அமைதியாக
செல்லும் ரயில் வண்டியை
தண்டவாளத்து
அண்மையில்
ஓடும் மரங்கள்
ஆர்ப்பாட்டமாய்
ஆட வைத்து
கூக்குரலிட்டுக்
கதற வைக்குதே ?

Series Navigation

கிறிஸ்

கிறிஸ்