இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

சுப்ரபாரதிமணியன்


திருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம் தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம் முன்னணியில் நிற்கிறது. முதலிடம் சீனாவிற்கு.. வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தி குறித்த ஆய்வுக்காக 12 பேர் கொண்ட குழு டாக்கா சென்றது அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அது.
வங்காள தேசம் பரப்பளவில் குறுகியது. அரசாங்கம் தரும் அபரிமிதமான சலுகைகள், தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு, ஏற்றுமதியாகும் பஞ்சு. நூல், துணி போன்ற மூலப்பொருட்களின் தாராளமும் , குறைந்த உழைப்புக்கூலியும் பின்னலாடை ஏற்றுமதிக்கு துணையாக இருக்கின்றன. நிதி உதவி, வரிச்சலுகையும் கூட, டாக்காவின் 5000 பின்னலாடை தொழிற்சாலைகளில் 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 80 சதத்தினர் இளம் பெண்களாவர். தொழிலாளர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் சுமார் 60 அமைப்புகள் உள்ளன. தொழிற்சங்கங்கங்கள் பலவீனமாக இருக்கின்றன. நிர்ணயக்கப்பட்ட தற்போதிய சம்பளம் 1663 டாக்கா மட்டுமே ( 1 ரூ =1.1 டாக்கா) அது நவம்பர் முதல் 3000 டாக்காவாக உயரயிருப்பதாகக் கூறுகிறார்கள். விலைவாசி கடுமையாக உள்ளது. அரிசி 40 டாக்கா. பருப்பு 110 டாக்கா, பால் 60, வெங்காயம் 35 டாக்கா. இந்நிலையில் விலைவாசியை சமாளிக்க தொழிலாளி அதிக நேரம் உழைக்க வேண்டி உள்ளது. மலின உழைப்பு.. மலின உழைப்பு… இதுவே பின்னலாடை வெற்றியின் ரகசியம்.
தொழிற்சங்க ஈடுபாடு குறைவாக இருக்கிறது. தொழிற்சங்கபிரதிநிதிகள் கொடுமைப்படுத்தப்படுவதும் , சிறையிலடைக்கப்படுவது சாதாரணம், சான்றிதழ் தரம்., கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு, நியாய வணிகம் அதிகம் பேசப்படும் காலத்தில் மலின உழைப்பு சாதாரணமாகத் தென்படுகிறது. நவீன கொத்தடிமைத்தனத்துள் தொழிலாளி வர்க்கம் மாட்டிக்கொண்டுள்ளது. திருப்பூர் 80 ஆண்டுகளில் பெற்றிருக்கும் வளர்ச்சியை வங்காள தேசம், டாக்கா 5 ஆண்டுகளில் பெற்றிருக்கிறது .தரச்சான்றிதழ் பெற்ற ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் 3 மட்டுமே உள்ளன. அவையும் வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ள தொழிற்சாலைகளே.
டாக்காவில் தொழிற்சங்கப்பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், தரச்சான்றிதழ் அளிக்கும் நிறுவனங்கள், அவற்றின் ஆடிட்டர்கள், தொழில் அதிபர்கள், பின்னலாடைத்தொழிலாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்தோம்.டாக்காவை ஒட்டிய 11ம் நூற்றாண்டு பழமை வாயந்த டாக்கீஸ்வரி கோவில், பூனம் நகரம், டாக்கா பல்கலைக்கழகம், பார்லிமெண்ட் கட்டிடம், , மொழிப்போராட்ட நினைவுச்சின்ன வளாகம்,, பூரி கங்கா பகுதி , மிர்பூர் போன்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றிப்பார்த்தோம். நாவலாசிரியர் தஸ்லீமா நஸ்ரின் லஜ்ஜா நாவலில் விவரிக்கும் இந்து மக்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றினோம்.
அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான நாளில் சற்று திகிலுடன் தான் டாக்காவில் திரிந்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் டாகாவில் பல கோவில்கள் இடிக்கப்பட்ட்தையும், இந்துக்கள் துன்புறுத்தப்பட்ட்தையும் லஜ்ஜா நாவல் விவரிப்பதாலேயே நஸ்லிமா நஸ் ரினுக்கு பத்வா தண்டனை வழங்கப்பட்டது. 1992 டிசம்பர் 7 ஒரு அவமான நாள் என்கிறார் நஸ்லிமா;தாதிபசார் டாக்காவில் இந்துக்கள்
அதிகம் வசிக்கும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக்குடியுருப்புகளும் நாசமாயின. நஸ்லிமா நஸ் ரீனின் ஒரு கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.:

இது எனது நகரம் இல்லை.
என்னுடையது என ஒரு போதும்
நான் சொல்லிக் கொண்ட மாதிரியிலான நகரம் இல்லை இது.
குள்ளத்தனமான அரசியல்வாதிகளுடையது
இந்த நகரம்
பழிவாங்களுக்கு அஞ்சாத வியாபாரிகள்,
சதை வியாபாரிகளின் .,
கூட்டிக்கொடுப்பவர்களின் ., பொறுக்கிகளின்,
வன்புணர்வானவர்களின் நகரமேயல்லாது இது
அது எனது நகரமாக இருக்க முடியாது.
சந்தர்ப்பவாதிகளின் நகரம் இது.
இதனை இனி ஒரு போது
எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்.
இனி ஒரு போதும்.

subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்