தமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

ஜோதிர்லதா கிரிஜா



(“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு தீபாவளியன்று காலமானார். அவரது நினைவாக அவரை நன்கு அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று, கல்கண்டின் தற்போதைய ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் அதன் தீபாவளி இதழில் அதை வெளியிடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வரிசையில் வெளியான கட்டுரை கீழே வருகிறது.)

மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்

எங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையின் விளைவாக, என் இள வயதில், ஒரு நாள் அடுப்பு எரியாத சூழ்நிலை உருவாயிற்று. காலை பத்தரை மணி வரையிலும் மூட்டப்படாத அடுப்பை எரிய வைத்த பெருமை என் உடன் பிறவாச் சகோதரராக நான் கருதிய தமிழ்வாணன் அவர்களைச் சாரும்! இந்த உண்மை அவருக்கே தெரியாது!

இதைப் பற்றி விரிவாகச் சொல்லுவதற்கு முன்னால், கொஞ்சம் தன்வரலாற்றில் ஈடுபட வேண்டியதிருக்கிறது. வாசகர்கள் மன்னிக்க.

“குமுதம்” குடும்பத்துச் சிறுவர் இதழாகிய “ஜிங்லி”யில், திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களால் நான் அறிமுகம் செய்யப்பட்டேன். மாணவப் பருவத்தில் கதைகள் எழுதுவதில் என் அப்பாவுக்கு உடன்பாடில்லை. அடிக்கடி அவரிடம் திட்டுகள் வாங்கிவந்தேன். ஜிங்லி நின்ற பிறகு, அதுகாறும் மாதமிருமுறை இதழாக இருந்து வந்த கல்கண்டு வார இதழாக மாறியது. ஜிங்லி நின்று போனதில் என் அப்பாவுக்கு ரொம்பவே நிம்மதி. ‘இனிமேல் கதை எழுத மாட்டாய்தானே?”’ என்று சொல்லிச் சிரித்தார். ஆனால் நான் அவருக்குத் தெரியாமல் கல்கண்டுக்கு ஒரு கட்டுரையை எழுதி யனுப்பினேன். அதைத் திருப்பி யனுப்பிய தமிழ்வாணன் தனியாக ஒரு கடிதமும் எழுதினார். ‘அன்புள்ள தங்கைக்கு’ என்று தொடங்கிய அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எனக்குத் தலைகால் தெரியவில்லை. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

எனக்கு அண்ணன் இல்லை. நான்தான் மூத்தவள். என் தோழியரில் சிலர் தங்கள் அண்ணன்மார்களின் பிரதாபங்களை அளந்து மகிழும் போதெல்லாம் எனக்கு ஓர் அண்ணன் இல்லையே என்கிற ஏக்கம் என்னுள் கிளர்ந்ததுண்டு! தமிழ்வாணன் ‘அன்புள்ள தங்கைக்கு’ என்று தொடங்கியிருந்த கடிதத்தைப் பார்த்ததும் எனக்குத் தலைகால் தெரியாத மகிழ்ச்சி ஏற்பட்டதற்கு அதுதான் காரணம்!

குழந்தைகளின் ஆர்வங்களைத் தடுக்கும் எண்ண முடையவர் அல்லர் என் தகப்பனார். கதை எழுதுவதற்கான வயது இல்லை என்பதோடு, தாள்கள் வாங்குவது, தபால் செலவு இவற்றில் எல்லாம் நான் காசை வீணாக்குகிற அளவுக்கு எங்கள் குடும்பத்துப் பொருளாதார நிலை வளமாக இல்லை என்பதும் அதற்குக் காரணமாகும்.

தமிழ்வாணன், அந்தக் கடிதத்தில், என் கட்டுரையைத் திருப்பி யனுப்பி யுள்ளதாகவும், கட்டுரைகளுக்குப் பதில் கதைகள் எழுதி யனுப்புமாறும் குறிப்பிட்டிருந்தார். ‘உன்னால் முடியாததா? முயன்றுபார்’ என்று அவர் எழுதியிருந்த உற்சாகமூட்டும் சொற்கள் அன்றெல்லாம் என் காதுகளைச் சுற்றிச் சுற்றி ஒலித்தன. திரும்பிவந்த அந்தக் கட்டுரை தபால்காரரின் கையிலிருந்து நேரடியாய் என் அப்பாவின் கையில் கிடைத்துவிட, வழக்கம் போல் வசவு கிடைத்தது. எனினும் நான் சோர்வடையவில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் மூன்று கதைகளை எழுதி, என் தங்கை சரோஜாவின் உதவியுடன் தபாலில் அவற்றை யனுப்பினேன். அனுப்பியபின் ஒரு வாரம் கழிந்த நாள் தொடங்கி, தெருவில் தபால் காரர் குரல் கேட்கும் போது நாள்தோறும் அவளை அப்பாவுக்குத் தெரியாமல் வெளியே அனுப்பிவைப்பேன். கதை திரும்பி வந்திருப்பின் ஓசைப்படாமல் பெற்றுக்கொண்டு வருவதற்காகத்தான்!

ஆனால் அவை திரும்பிவரவில்லை. அவற்றைத் தமிழ்வாணன் கல்கண்டில் வெளியிட்டார். அதை அப்பாவுக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.

இது இப்படி இருக்க, ஒரு நாள் அம்மா வழக்கம் போல் அடுப்பு மூட்டிச் சமையலைத் தொடங்கவில்லை. அழுதுகொண்டு, கூடத்தின் ஓர் ஓரத்தில் படுத்திருந்தார். வீட்டில் மணியரிசி கூட இல்லை யென்றும், (ஓய்வு பெற்ற பள்ளியாசிரியரான) என் அப்பா படிப்புச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த பிள்ளைகள் மறு நாள்தான் சம்பளம் கொடுப்பார்கள் என்றும், அரிசி வாங்க அப்பாவிடம் காசில்லை என்றும் தெரிய வந்தது. யாரிடமும் கடன் கேட்க முடியாது என்று அப்பா மறுத்து விட்டதாகவும் அம்மா சொன்னார்.

அப்பா இரேழியில் படுத்தவாறு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தார். நாங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பத்தரை மணி வரையில் அடுப்பு மூட்ட முடியாத நிலை முதன் முதலாக அன்றுதான் ஏற்பட்டது. எனக்குத் ‘திக்’ என்றது

வீடே ஒரு மாதிரி இறுக்கமான அமைதியில் ஆழ்ந்திருந்தது. பத்தரை மணிக்கு மேல் தபால்காரர் வந்தார். அப்ப எழுந்து உட்கார்ந்தார்.

“பாப்பாவுக்கு மணி ஆர்டர் வந்திருக்கு, சார்!” என்ற தபால்காரர் கூடத்திலிருந்து எட்டிப் பார்த்த என்னை நோக்கிச் சிரித்துவிட்டு, “வாம்மா, பாப்பா. உனக்குத்தான் மணி ஆர்டர் வந்திருக்கு. வந்து கையெழுத்துப் போட்டு வங்கிக்க!” என்றார்.

கையெழுத்துப் போட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது என்னுள் பொங்கிய உணர்ச்சிகளை விவரிக்க எந்தச் சொல்லுக்கும் ஆற்றல் இல்லை! மூன்று கதைகளுக்குரிய சன்மானம் ஒன்பது ரூபாயில் பணவிடைக் கட்டணம் மூன்று அணாக்கள் போக மீதி எட்டு ரூபாய், பதிமூன்றணா அனுப்பப்படுவதாகக் கல்கண்டின் உதவி ஆசிரியர் ப.ச. சுந்தரம் கூப்பனில் குறிப்பிட்டிருந்தார்.

தபால்காரர் போனபின் அப்பாவிடம் எட்டு ரூபாய் கொடுத்து, “அரிசி வாங்கிண்டு வாங்கப்பா!” என்று நான் சொன்னதும் அப்பாவுக்கு அழுகை வந்துவிட்டது. அதற்கு முன்னால் அவர் கண் கலங்கி நான் கண்டதில்லை.

இப்படியாக எங்கள் வீட்டில் அடுப்பு எரிவது நின்று போகாது தடுத்ததோடு, கதை எழுதுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த என் அப்பாவின் வாய்க்குப் பூட்டும் போட்ட பெருமை தமிழ்வாணனுகு உண்டு!

கொஞ்ச நாள் கழித்து, என் அப்பாவழிப் பெரியம்மா (என் அப்பாவின் அண்ணன் மனைவியார்) என்னைத் தம்முடன் தாம் தம் மகன்களுடன் வாழ்ந்து வந்த ஐதராபாத்துக்கு அழைத்துச் சென்றார். தமிழ்நாட்டின் அளவுக்கு ஐதராபாத்தில் வேலை யில்லாத்திண்டாட்டம் இல்லை யென்றும், அங்கு எளிதாக எனக்கு வேலை கிடைக்கு மென்றும் கூறி என்னைக் கூட்டிச் சென்றார். என் அப்பா-அம்மாவின் பலத்த எதிர்ப்பை மீறிக்கொண்டு நான் அவருடன் சென்றேன். ஆனால், பெரியம்மா சொன்னது போல் வேலை கிடைப்பது எளிதாக இல்லை.

இதற்கிடையே, எங்கள் குடும்பத்து நபர் ஒருவரிடமிருந்து எனது ஐதராபாத் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. ‘என் புடைவைகள் எல்லாம் கிழிந்து விட்டன. இவ்வளவு கந்தலை உடுத்துக்கொண்டு வரக் கூடாதென்று பயிற்சிப் பள்ளியின் முதல்வர் என்னைக் கூப்பிட்டு எச்சரித்தார். ஒரு புடைவை வாங்க எனக்குப் பணம் அனுப்ப முடியுமா?” என்று கேட்டது அந்தக் கடிதம். இருபது ரூபாயாவது வேண்டுமே! (அந்நாளில் அச் சிறு தொகையில் நல்ல புடைவை வாங்கலாம்.) என்னிடம் இருந்ததெல்லாம் கைச் செலவுக்கென்று அம்மா கொடுத்து வைத்திருந்த பணத்தில் செலவானது போக மீதமிருந்த பத்து ரூபாய்தான். எனக்கு உடனே தமிழ்வாணனின் ஞாபகம்தான் வந்தது. அந்தக் கடிதத்தையே அவருக்கு அனுப்பி வைத்தேன் ‘பதினைந்து ரூபாய் கடனாக அனுப்பினால் உதவியாக இருக்கும். எனக்கு வேலை கிடைத்ததும் திருப்பிக் கொடுத்துவிடுவேன். ஆனால் மொத்தமாகக் கொடுக்க முடியாது. ஐந்து, ஐந்து ரூபாயாகத்தான் மூன்று தவணைகளில் தருவேன்” என்று என் கடிதத்தில் குறிப்பிட்டேன். (கடன் கேட்டதுப் போதாதென்று திருப்பித் தருவதில் நிபந்தனை வேறு.)

மறு தபாலில் பணவிடை வந்தது. கூப்பனில், ‘அன்புள்ள தங்கைக்கு. வாழ்த்துகள்’ எனும் வரிகள் மட்டுமே இருந்தன. . . . வேலை கிடைத்த பிறகு ஐந்து, ஐந்து ரூபாயாக அத்தொகையை மூன்று தவணைகளில் அவருக்குத் திருப்பி யனுப்பினேன்.

கொஞ்ச நாள் கழித்துச் சென்னைக்கு மாற்றல் கேட்டுக்கொண்டு வந்த பிறகு, செய்தியைத் தமிழ்வாணனுக்குத் தெரிவித்தேன். ஒரு நாள் அவரிடமிருந்து தொலை பேசி யழைப்பு வந்தது. தமது தி.நகர் முகவரிக்கு வரச் சொல்லிப் பணித்தார். சென்றேன். நிறைய வார இதழ்களில் தொடர்கதைகள் எழுதத் தமக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும், கல்கண்டின் எல்லாப் பக்கங்களையும் நிரப்புவதற்குத் தமக்கு இயலாதிருப்பதாகவும், எனவே வாராவாரம் நான் கதை எழுத வேண்டும் என்றும் பணித்தார். ஒரே நேரத்தில் ஐந்தாறு வார இதழ்களில் தொடர்கள் எழுதும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுக் கெல்லாம் தமிழ்வாணன்தான் முன்னோடி.

“உங்க வழக்கமான பேர்ல நீங்க வரிசையா எழுத முடியாது. பல புனை பெயர்கள் வச்சுக்கணும். இல்லாட்டி, வரிசையா உங்க கதைகளையே நான் போட்றதா எல்லாரும் நினைப்பாங்க. அதனாலதான்!” என்று சொல்லி, என் இணக்கத்தைப் பெற்ற பின், தொடர்ச்சியாய்ச் சில கதைகளைக் கல்கண்டில் வெளியிட்டார்.

ஒரு நாள், “ உங்களுக்குப் பிழைக்கத் தெரியில்லே. யாராரோ பெரிய பத்திரிகைகள்லே எழுதறாங்க. நீங்க ஏன் இன்னும் முன்னுக்கு வராமலே இருக்கீங்க? எல்லாரும் தமிழ்வாணன் இல்லேம்மா. பத்திரிகை அலுவலகங்களுக்கு ரெண்டொரு விசிட் அடிக்கணும். ஆசிரியர்களைச் சந்திக்கணும், இப்படி ஒதுங்கி இருக்கக் கூடாதும்மா. ரிசர்வ்டா இருக்காதீங்க.. .” என்று அறிவுரை கூறினார். கூடியவரையில், பிறமொழிச் சொற்களைத் தவிர்க்குமாறும் யோசனை சொன்னார்.

ஒரு தரம், பேச்சு வாக்கில், “ எனக்கு ரெண்டு பிள்ளைங்கம்மா. ரெண்டும் பாட்டி வீட்டுல வளருதுங்க. இங்க வச்சுக்கிட்டா தொல்லை. ‘குழலினிது, யாழினிது’ ங்கிறதெல்லாம் குறள் படிச்சு ரசிக்க மட்டுந்தான்!” என்று தமக்கே உரிய வெடிச் சிரிப்பைச் சிரித்தார் (லேனாவும் ரவியும் மன்னிக்க.)

அன்பும் பண்பும் மிக்க தமிழ்வாணன் மீது நான் வைத்திருந்த பாசம் அலாதியானது. உடன் பிறந்தால்தான் சகோதரன் என்பதில்லை என்பதை எனக்கு உணர்த்திய உறவு அது. கதைக்கு அவர் அனுப்பின சன்மானத்தால் எங்கள் மானம் பிழைத்தது பற்றி நான் அவருக்குச் சொன்னதில்லை. சொல்லத் தோன்றியதில்லை. சொல்லியிருந்திருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். கடிதம் எழுதி அவரது உதவியைப் பெற்றிருந்தவள்தானெனினும், நேருக்கு நேர் வறுமையைப் பறை சாற்ற விரும்பாத தன்மானம் தடுத்திருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதை ஒதுக்கிவிட்டு, நான் சுமாரான நிலைக்கு முன்னேறிய பிறகு சொல்லி யிருந்திருக்கலா மல்லவா? சொல்லியிருந்தால் மகிழ்ச்சி யடைந்திருப்பாரே! ஏனோ சொல்லாதிருந்து விட்டேன்.

தமிழ்வாணன் அவர்களே! என்னை மன்னியுங்கள்.

jothigirija@vsnl.net
ஜோதிர்லதா கிரிஜா

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா