வின்சன்ட் வான்கோவின் இரத்தம்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

யமுனா ராஜேந்திரன்


1.

வர்ணங்கள் கரைந்து மயங்கும், ஒட்டிய கன்னத்துடனான ஓவியன் வின்சன்ட் வான்கோவின் சுயசித்திரத்தை நமக்குள் ஞுாபகமூட்டிக் கொள்ள பொறுத்தமான முகம், கிர்க் டக்ளசின் கன்னம் ஒட்டிய ஒடுங்கிய முகம்.

புகழ் வாய்ந்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளசின் தகப்பனாரும், அமெரிக்காவின் பண்பட்ட நடிகர்களில் ஒருவரும், தனது வாழ்நாள் முழுக்கவுமான திரைப்பட சாதனைக்காக ஆஸ்கர் விருதளித்துக் கெளரவிக்கப்பட்டவருமான கிர்க் டக்ளஸ் நடித்த தியோ அன்ட் வின்சென்ட் எனும் திரைப் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கிர்க் டக்ளஸ் அப்படத்தில் வின்சன்ட் வான்கோவாக நடித்திருந்தார்.

வின்சன்ட் வான்கோ தனது படைப்பு வாழ்வில் இரண்டு முறை இரத்தம் சிந்தினான். முதல் முறை மனநிலை பாதிக்கப்பட் நிலையில் தனது இடது காதை அறுத்துக் கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட அதனைத் துணியில் பொத்திக் கொண்டு விலைமாதர் விடுதிக்கு ஓடி விலைமாதொருத்தியிடம் அதனைக் கையளித்தான் வான்கோ. இரண்டாம் முறை 1890 ஆம் வருடம் ஜூலை மாதம் 27 ஆம் திகதி மாலை நேரத்தில் தான் மிக நேசித்த ஹாலந்து நாட்டின் வயல்வெளியில் வண்ணங்களையும் துாரிகைகளையும் தயார் நிலையில் வைத்து விட்டு தன்னைத்தானே நெஞ்சில் துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு, பிற்பாடு தன் சகோதரன் தியோவின் மடியில் உயிர் நீத்தான் வின்சன்ட் வான்கோ.

2.

மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்தபடி வாய்மூடாது நியூயார்க் இரட்டைக் கட்டிடங்கள் புழுதி பரப்பியபடி வீழ்ந்து கொண்டிருப்பதைப் பாரத்துக் கொண்டிருக்கிறாள் அரபுக் கல்லுாரி மாணவி ஐஸல். விமானத்தின் உள்ளே நுழைவதற்காக நீண்ட தாழ்வாரத்தில் நடந்து வளைவில் திரும்புகிறான் அவள் காதலன் ஜியாத் ஜாரா. கடினமான முகத்துடனும் உறைந்த மெளத்துடனம் எழுந்து விமானிகளின் அறைக்குள் நுழைவதற்குத் தயாராகிறான் மொகமத் அட்டா. வெள்ளை மாளிகையை நோக்கிச் சென்று மோதியிருக்க வேண்டிய விமானம் பென்சில்வேனிய நிலப்பரப்பில் வீழ்கிறது. காதலன் ஜாராவின் முகமும் ஐஸலின் அதிர்ச்சி தோய்ந்த முகமும் விட்டுச் செல்லும் பிம்பங்களுடன் தி ஹாம்பர்க் ஸெல் (The hamburg cell : a channel four film) படம் முடிகிறது.

அட்டா நியூயார்க் இரட்டைக் கடடிடங்களைத் தகர்த்த முதல் விமானத்தை ஓட்டியவன். ஜாரா வெள்ளை மாளிகை நோக்கிச் சென்று தாக்கியிருக்க வேண்டிய விமானத்தை ஓட்டிச்சென்றவன். ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரத்தின் விமானிப் பயிற்சியாளர் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களான அட்டாவும் ஜாராவும் தற்கொலைத் தாக்குதல் மூலம் இரட்டைக் கட்டிடங்களைத் தகர்க்க அவர்களை உந்திய அரசியல் என்ன ? அவர்களது உளவியலின் பின்னிருந்த மதம் அறவியல் தனிநபர் காரணங்கள்தான் என்ன ?

அவர்கள் அடிப்படையில் மனநோயாளிகளா ? அல்லது கற்பித உலகில் வாழ்ந்து மடிந்த யதார்த்தமற்ற மூடர்களா ?

இல்லை என்கிறார் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனியோ பேர்ட். செப்டம்பர் 11 குறித்து வந்திருக்கும் முதல் கதைப் பாணி கொண்ட திரைப்படம் ( featuture length film) தி ஹாம்பர்க் ஸெல். பிரித்தானிய இயக்குனர் அந்தோனியோ பேர்ட் இரண்டு வருடங்கள் தீவிரமான ஆய்வுக்குப்பின் 100 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

மதச்சார்பற்ற லெபனானிய இஸ்லாமிய மாணவனான ஜாரா, அடிப்படைவாதிகளின் வலைக்குள் வீழந்ததற்கான காரணம்தான் என்ன ? மட்டற்ற வகையில் பியர் அருந்திக்கொண்டும் காதலியுடன் உடலுறவிலும் திளைத்த ஜாராவை தற்கொலைத் தாக்குதல் நோக்கி உந்திய காரணம்தான் என்ன ? அட்டாவினதும் ஜாராவினதும் நண்பர்கள் குடும்பத்தினர் கல்லுாரித் தோழர்கள் போன்றவர்களை நேரில் சந்தித்து, தற்கொலையாளிகள் மனநோயாளிகள அல்ல, சாதாரண மனிதர்கள் எனும் சித்திரத்தை தி ஹாம்பர்க் ஸெல் திரைப்படத்தில் கொடுத்திருக்கிறார் அந்தோனியோ பேர்ட்.

அமெரிக்காவின் மீதான இவர்களது தாக்குதல் முதல் தாக்குதல் அல்ல, மாறாக இஸ்லாமிய மக்களின் மீது பொஸ்னியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் செச்சினியாவிலும் இந்தோனேசியாவிலும் ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும், அமெரிக்க அரசும் மேற்கத்திய அரசுகளும் மேற்கொண்ட தாக்குதலுக்கான எதிர்த் தாக்குதலே நியூயார்க் தாக்குதல் என்கிறது அந்தோனியோ பேர்டின் திரைப்படம். திரைப்படம் விமானக் கடத்தல்காரர்களின் தற்கொலைத் தாக்குதலின் பின்னிருந்த காரணங்களை, அவர்கள் தெளிவான சாதாரணமான சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் எனும் அடிப்படையில் சித்தரித்திருக்கிறது.

தீமையின் வடிவமாகவும் வில்லன்களாகவும் மட்டுமே சிித்தரிக்கப்பட்டு வந்த செப்டம்பர் தற்கொலைத் தாக்குதல்காரர்கள், இந்தப் திரைப் படத்தில் மனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது நடவடிக்கைக்கான அரசியல் அறவியல் மதம் சார்ந்த காரணங்களை இந்தப்படம் முதன் முதலாக தேடிச்சென்று திைவெளியில் முன்வைத்திருக்கிறது. இருண்ட இதயங்களின் ஊடே ஒரு பயணம், என இந்தத் திரைப்படம் குறித்துத் தெரிவித்திருக்கும் இயக்குனர் அந்தோனியோ பேர்ட், தற்கொலையாளிகளை வெறுமனே மனநோயாளிகள் எனச் சித்தரிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்குக் கதையெழுதிய ரோனன் பென்னட் இந்தத் திரைப் படத்தில் எந்த நீதியையும் வலியுறுத்தவில்லை. அதைப் போலவே செப்டம்பர் பிரச்சினையில் எந்தப் பக்கச் சார்பையும் அவரது திரைக்கதையில் அவர் முன்வைக்கவில்லை. தி ஹாம்பரக் ஸெல் திரைப்படத்தின் மிகப் பெரிய வலிமையே இதுதான்.

படத்தில் அட்டாவும் சரி ஜாராவும் சரி திட்டமிட்ட பணிகளைச் செய்யும் சாதாரணமான மனிதர்கள் போலவே நடந்து கொள்கிறாரகள். பதட்டம் என்பது அவர்களிடம் காணக் கிடைக்காதது. அட்டா புறப்படும் முன் கண்ணீருடன் தனது தாயைத் தழுவி விடைபெறுகிறான். நண்பனின் அறையிலுள்ள ஆடை களைந்த பெண்ணுடல் கொண்ட நாட்காட்டியை சுவற்றோடு திருப்பி வைக்கிறான்.

ஜாரா பொது மருத்துவ விடுதியில் அமர்ந்து குடிக்கிறான. தனது காதலியுடன் அறையின் கட்டிலில் படுத்துக் கிடக்கிறான். உலகின் சகல மத்தியதர வர்க்கத்தவரின் ஆசைகளும் நடைமுறைகளும் அவர்களிடம் இருக்கிறது. அன்புமயமான மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி செச்சினியா, ஆப்கான், காஸ்மீர், பாலஸ்தீன் சமூக யதார்த்தம் அவர்களை அரசியல் நோக்கி நகர்த்துகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ரஸ்யாவும் இதன் பின்னிருப்பது அவர்களுக்கு வெறுப்பூட்டுகிறது. சகோதரத்துவமும் உலக இஸ்லாம் முறைமையும் பேசும் பின்லாடன் இவர்களுக்கு ஒரு செயல்வெளியை உருவாக்கித் தருகிறான். அதி விஞ்ஞானத் தொழில்நுட்பம் அவர்களுக்குச் சேவகம் செய்யக் காத்திருக்கிறது. ஒரு வகை இறையியல் அவர்களை உந்துகிறது.

ஒரு காட்சியில் இவர்களது நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு நண்பன் திடாரெனத் தனது அறையிலிருந்து வெளிவந்து தனது சக நண்பர்களைத் துாக்கத்திலிருந்து தட்டி எழுப்புகிறான். தான் கட்டிடங்களைத் தகர்த்தபின் நேரடியாக் சொர்க்கத்திற்குப் போகப் போவதாகக் கனவு கண்டதாகவும், அது அற்புதமான அனுபவம் எனவும், சீக்கிரமே தாம் நடவடிக்கைகளைத் தொடர்வோம் என்றும் அவசரப்படுகிறான். தமது சகோதரர்களின் துயரில் விளைந்த அரசியலுணர்வுக்கு உந்துதலான தீவிர இறையுணர்வையும் சர்வதேசியத்தையும் பின்லாடன் இவர்களுக்குத் தருகிறான்.

ஹாம்பர்க் செல் படம் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் செயல் பிரக்ஞைபூர்வமான மனிதர்களின் செயல் எனச் சொல்கிறது. பிரச்சினையின் வேர்கள் இனம் காணப்படாவிட்டால் இந்த அரசியல் தொடரும் என்பதனையே ஹாம்பர்க் செல் படம் செய்தியாக முன்வைக்கிறது. படத்தினைப் பாரத்து முடித்த போது, ஜியாத் ஜாராவின் அமைதியான முகமும், மொகமத் அட்டாவின் உறைந்த கடின முகமும் ஞாபகத்தில் நிறைத்துக் கொண்டு நிற்கிறது. செப்டம்பர் சம்பவத்தின் முரணை ஒரு வகையில் இந்த இருவரதும் குணச்சித்திரம் சித்தரிக்கிறது.

செப்டம்பர் கொலைகளின் பின்னிருக்கும் அரசியல் ஒப்புக் கொள்ளத் தக்கதுதானா எனும் விசாரணையை மேற்கில் திவிரமாக எழுப்பியிருக்கும் ஒரு பிரச்சினை தியோ வான்கோ எனும் ஹாலந்து நாட்டு குறும்பட விவரணப்பட இயக்குனர் கொல்லப்பட்ட நிகழ்வு.

3.

கொலை செய்யப்பட்ட ஒரு திரைப்பட இயக்குனர், கொலை மிரட்டலுக்கு ஆளான ஒரு நாடகாசிரியர், மேற்கில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சி பற்றி வந்த மூன்று திரைப்படங்கள் பற்றிப் பேசுவதினுாடே தியோ வான்கோவின் கொலைக்கான காரணம் குறித்துக் கொஞ்சம் விசாரணை மேற்கொள்வோம்.

இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி பட்டப் பகலில் ஹாலந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், இஸ்லாமில் பெண் அடிமைத்தனம் தொடர்பாகப் பணிதல் – Submission – எனப் பெயர் கொண்ட குறும்படத்தை எடுத்ததற்காகக் கொலை செய்யப்பட்டார் தியோ வான் கோ எனும் திரைப்பட இயக்குனர். தியோ வான்கோ ஹாலந்தின் புகழ் பெற்ற ஓவியனான வின்சன்ட் வான்கோவின் பாரம்பர்யத்தில் வந்தவர்.

வின்சன்ட் வான் கோவின் இரத்தம் அவனது படைப்பு வேதனையில் சிந்தப்பெற்றது. தியோ வான்கோ 2004 நவம்பர் 2 இல் சிந்திய இரத்தததின் பின்னணியில் அவரது வெள்ளை நிறவாதமும், பிறரை அவமானப்படுத்தும் அடிப்படைவாதமும் சிதறிக் கிடந்தது. கொலைச் செயலில் ஈடுபட்டவர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பொன்றுடன் தொடர்பு கொண்ட மொகமத் போயுரி என அடையாளம் காணப்பட்டார். மொராக்கோவைச் சேர்ந்த பெற்றோருக்கு, ஹாலந்தில் பிறந்து வளர்ந்தவர் போயுரி. தாயைப் பறிகொடுத்தவர் போயுரி.

இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு 22 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆசியர்கள் அதிகம் வாழும் பர்மிங்ஹாம் நகரிலுள்ள ரெபோர்ட்டரி தியேட்டர் நாடக அரங்கைத் தாக்கினர் சீக்கிய அடிப்படைவாதிகள். சீக்கிய வழிபாட்டிடமான குருத்துவாராவில் பாலியில் பலாத்காரமும் கொலைகளும் நடைபெறுகின்றன எனச் சித்தரித்த பெஸ்தி, அவமானம் – Dishonour – எனும் பெயர் கொண்ட நாடகத்தினை நிறுத்துவதற்காகவே சீக்கியர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தாக்குதலில் பிரித்தானிய காவல்துறையினர் 15 பேர் காயம்பட்டனர். தனக்கும், தனது நாடகத்தின் நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் உயிராபத்து எனும் காரணத்தினால் நாடகத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார் நாடகாசிரியான குருபிரித் எனும் பெண்மணி.

மேற்கில் கலைத்துறை சார்ந்தவர்களின் மீதான மத அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் முனைப்புப் பெற்று வருகிற இதே காலகட்டத்தில், இங்கிலாந்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி மூன்று திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

1. செப்டம்பர் 11 தாக்குலில் ஈடுபட்டவர்களின் வாழ்வை அரசியல், இறையியல், உளவியல் அடிப்படையில் அணுகிய திரைப்படம் அந்தோனியோ பேர்ட் இயக்கிய The Hamburg Cell

2.இங்கிலாந்தில் வாழும் பங்களாதேசியரான கெனன் மாலிக் இயக்கிய Are Muslims Hated ? இங்கிலாந்தில் முஸ்லீம் துவேச உணர்வு (( Islamophobia ) அதிகரித்து வருகிறது எனும் இஸ்லாமிய மத மற்றும் அரசியல் தலவைர்களின் கூற்று உண்மையானது தானா என புள்ளிவிவரங்களுடன் விவாதிக்கும் விவரணப்படம்.

3.கென்னன் கிளன்னன் இயக்கிய லுயளஅைெ எனும் முழு நீளத் திரைப்படம், 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிற்பாடாக இங்கிலாந்தில் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்களின் மீதான துவேச உணர்வினால் பாதிப்புற்று அடிப்படைவாதம் நோக்கிச் செல்லும் இளைஞுர்களையும், தமது மரபார்ந்த வாழ்வுக்குத் திரும்பும் இஸ்லாமிய இளம் பெண்களையும் குறித்த திரைப்படம்.

சமவேளையில் நான்கு இஸ்லாமியப் பெண்களின் கருத்துக்கள் மேற்கத்திய அமெரிக்கக் கனடிய தகவல் ஊடகங்களில் முனைப்புப் பெற்று வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான யஸ்மின் அலிபாய் பிரவுன், ஈரானைச் சேர்ந்த வழக்கரைஞுரும் மனித உரிமைகளுக்காக நோபல் பரிசு பெற்றவருமான செரின் எபாதி, இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணுரிமையாளரான மரியம் நமாசி, கனடாவைச் சேர்நத பெண்ணுரிமையாளரும் ஈரானிய கம்யூனிஸ்ட்டுமான ஹோமா அர்ஜ்மான்ட் போன்றவர்களே அந்த நான்கு பெண்மணிகள். நான்கு பெண்மணிகளுமே பெண்விடுதலை எனும் நோக்கிலிருந்து இஸ்லாமிய அரசகளையும் மதத் தலைவர்களையும், அரசியல் இஸ்லாம் பேசும் அதிகார வேட்கை கொண்டவர்களையும் நோக்கிக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறவர்கள்.

மேற்கத்திய சமூகத்தின் அறிவுப் பாரம்பர்யம், அறவியல் தளத்தில் மதச்சார்பின்மையையும், அரசியல் தளத்தில் தாராளவாதத்தையும், பொருளியல் தளத்தில் சந்தைப் பொருளாதாரத்தையும் தனது கருத்தியல் வாழ்வியல் தரிசனமாக முன்வைத்து வருகிறது. சந்தைப் பொரளாதாரத்தை நிராகரிக்கிற இடதுசாரிகள் கூட, மதச்சார்பின்மை என்பதனை ஒரு முன்னோக்கிய போக்கு எனவே அங்கீகரிக்கிறார்கள். தற்போது மனித உரிமைகளையும், படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கிற மேற்கத்திய சிந்தனையாளர்கள, மேற்கத்திய கனடிய அரசுகள் பன்முகத்துவம் எனும் பெயரில் அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், மத அடிப்படைவாதிகளின் அழுத்தத்துக்கு வளைந்து கொடுப்பதாக மாறி வருகின்றன எனும் விமர்சனத்தையும் முன் வைக்கிறார்கள். யஸ்மின் அலிபாய் பிரவுன் மற்றும் கெனன் மாலிக் போன்றவர்கள் இத்தகைய அறிவுஜீவுகள். இருவருமே இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தவர்கள். நிறவாத ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்பவர்கள். அதே வேளை இஸ்லாமிய சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமே காரணம் இஸ்லாமிய துவேசம் பரவி வருவுதுதான் என்று இஸ்லாமிய மதத் தலைவர்களும், இஸ்லாமிய அரசியல்வாதிகளும் சொல்வதை இவர்கள் நிராகரிக்கிறார்கள்.

இஸ்லாமிய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு பெண்ஒடுக்குமுறை அச்சமூகத்தில் அதிகரித்துவருவது ஒரு பிரதான காரணம் எனக் குரல் கொடுப்பவர்கள் இவர்கள். இவ்வாறு சொல்வது பிற மதத்தவர்கள் பெண் ஒடுக்கமுறையில் ஈடுபடுவதில்லை எனவும் ஆகாது. இங்கிலாந்தில் அரசு கொண்டு வரவிருக்கும் மத துவேச எதிர்ப்புச் சட்டமும், கனடாவில் கனடிய அரசு கொணர்ந்திருக்கும் மதப்பிரதிகளின் அடிப்படையிலான பல்மத சட்டத் தொகுப்பும், இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டுமல்ல, சகல பெண்களுக்கும் எதிரான சட்டங்கள் என்கிறார்கள் ஹோமோ அர்ஜ்மான்டும், மரியம் நமாசியும். மத அடிப்படைவாதிகளுக்கு பல்கலாச்சார உரிமைகள் எனும் பெயரில் வழங்கப்பெறும் இந்த யாப்பு கலைஞுர்களுக்கும் சுதந்நிர சிந்தனையாளர்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் எதிரானது எனக் கவலை தெரிவிக்கிறார்கள் இவர்கள்.

இங்கிலாந்தில் மதத் துவேசத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுப்படுமானால், முதல் தடை சல்மான் ருஸ்டியின் ‘ ஸட்டானிக் வெர்ஸஸ் ‘ மீதுதான் பிரயோகிக்கப்படும் என இவர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

மதவாதிகளுக்கும் மத ரீதியிலான அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கும் எதிரான தாராளவாதிகளதும் கலைஞுர்களதும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். அடிப்படைவாதிகள் இத்தகைய கருத்துள்ளவர்களை மேற்கத்தியக் கையாட்கள் எனச் சொல்கிறார்கள். மேற்கத்திய சமூகத்திலுள்ள பன்முகத்துவ, பின்நவீனத்துவ கலாச்சாரச் சார்புவாதிகள் இவர்களை நிறவாதத்திற்கு ஆதரவாக எஞ்சுபவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். பிரபஞ்சம் தழுவிய மனித உரிமைகள், பெண் உரிமைகள், கலைஞர்களது கருத்து வெளிப்பாட்டு உரிமை, விமர்சன உரிமை இதனால் மேற்கில் அர்த்தமிழந்ததாக ஆகிவருகிறது.

4.

தியோ வான் கோ ஹாலந்தின் பேச்சுரிமை அடிப்படைவாதி எனத் தன்னைக் கோரிக்கொள்பவர். பிறரை அவமதிப்பதும் கோபமூட்டுவதும் தனது அடிப்படை உரிமை எனக் கோருபவர். இவரது ஆத்திரமூட்டலுக்கு இரையான பத்திரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள் ஹாலந்தில் அதிகம். ஹாலந்து திரைப்படக் கழகத்தில் இவர் திரைப்படம் படிக்க விண்ணப்பித்துக் கொண்டபோது முதலில் நல்ல உளயவியலாளரைப் பார்த்துவிட்டு வருமாறு இவரிடம் கோரப்பட்டது. ஹாலந்து போர்த் தளவாடங்கள் தயாரிப்பதை வரவேற்றவர், இஸ்லாமியர்களைக் கடுமையாக வெறுத்தவர், குடியேற்றக்காரர்களுக்கு எதிரான அரசியல் கொண்டவர் இவர்.

மனித உணர்வுகளின் குரூரத்தையும் அதீதங்களையுமே தனது குறும்படங்களில் சித்தரித்தவர் இவர். இவரது ஒரு குறும்படத்தில் பொண்ணுறுப்பில் நுழைக்கப்படும் கைத் துப்பாக்கியும், வாசிங்மெசனில் கிடந்து சுற்றும் பூனைக்குட்டிகளும் காட்சிகளாக இருந்தன. வெளிப்படையாகவே இஸ்லாமியர்களை ஆட்டக்குட்டியைப் புணர்பவர்கள் என வசை பொழிந்தவர் இவர்.

தியோ வான்கோ தயாரித்த இன்னொரு திரைப்படம் குடியேற்ற எதிர்ப்பாளரும் பாசிசக் கருத்தியலை ஆதரித்தவருமான கொலையுண்ட போர்த்தின் பற்றியது. செப்டம்பர் 11 க்குப் பிற்பாடாக இஸ்லாமியர்கள் மீதான துவேசம் என்பது மேற்கில் அதிகரித்து வருகிறது என்பதில் எந்த விதமான சநதேகமுமில்லை. தியோ வான்கோ ஆத்திரமூட்டுதலின் மூலமும் அவமதிப்பதின் மூலமும் இஸ்லாம் தொடர்பான ஒரு விவாதத்தை ஹாலந்தில் துாண்ட விரும்புவதாகக் குறிப்பிட்டார். இந்த விவாதத்திற்காக இவருக்குத் துணை நின்றவர் சோமாலியாவிலிந்து அகதியாக வந்து ஹாலந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆன ஹிர்ஸி அலி எனும் ஒரு ஆப்ரிக்கப் பெண். இஸ்லாமிலிருந்து வெளியேறிய இவர் இஸ்லாமில் பெண் அடிமைத்தனம் குறித்து எழுதி வந்தவர். அவரது திரைக் கதையில் அமைந்த படம்தான் ஸப்மிசன் எனும் குறும்படம்.

சிறுவயதில் திருமணமாகி கணவனால் அடித்துத் துன்புறுத்தப்படும் பெண், சித்தப்பாவினாலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி வதியும் பெண், எதிர்த்துக் குரல் எழுப்பும்போது பழிச்சொல்லுக்கும் தண்டனைக்கும் ஆளாகிற பெண் எனப் பல இஸ்லாமியப் பெண்களின் அனுபவமும் குறித்தது ஸப்மிசன் திரைப்படம். படத்தில் இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டிய பிம்பம், நிர்வாணமான இஸ்லாமியப் பெண் உடலின் மீது, இஸ்லாமில் பெண்ணை நடத்துவது குறித்த குரான் வாசகங்கள் காயம்பட்ட இரத்த விளாறான உடம்பின் மீது எழுதப்பட்டிருந்ததுதான்.

பட்டப் பகலில் ஆம்ஸ்டர்டாம் பூங்காவொன்றில் தியோ வான்கோவின் கழுத்தை அறுத்துவிட்டு, மார்பில் குத்திய கத்தியில் செய்தி ஒன்றினையும் சொருகியிருந்தார் மொகமத். ஹிர்ஸி அலிக்கான எச்சரிக்கை அது. எச்சரிக்கையில் ஹாலந்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாட்டினர் அழிவை வந்தடைவர் என்றும் எழுதப்பட்டிருந்தது. மொராக்கோவிலிருந்து வந்த அகதிகளுக்குப் பிறந்த மொகமத் ஹாலந்தில் பிறந்தவர். தனது தாயாாின் மரணத்தின் பின் அவர் அடிப்படைவாதத்தைப் போதிக்கும் இஸ்லாமிய இயக்கமொன்றில் உறுப்பினராகிறார்.

ஐரோப்பாவில் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் பால் ஆகர்சிக்கப்படுபவர்கள் அதிகமும் தொழில்துறை மற்றும் விஞ்ஞுானக் கல்வி கற்ற, மேற்கில் பிறந்த இஸ்லாமியத் தலைமுறை என்பதை இங்கே ஞுாபகம் கொள்ள வேண்டும். இது ஒரு புதிய பரிமாணம். மேற்கில் பிறந்து விஞ்ஞுானமும் படித்த, வாழ்க்கை மேம்பாட்டுக்கான அனைத்து வாயப்புக்களும் விட்டுவைக்கபட்டிருக்கிற இஸ்லாமிய இளைஞுர்கள் ஏன் தீவிரவாத நிலைபாட்டை மேற்கொள்கிறார்கள ? இதற்கான விடை போலவும் வந்திருக்கும் திரைப்படம்தான் கென்னன் கிளன்னன் இயக்கியிருக்கும் யாஸ்மின்.

5.

வீதியின் முனையில் திரும்பி தெருவைத் தாண்டி நடக்கும் இஸ்லாமியப் பெரியவரைத் தொடர்ந்து வருகிறான் இளைஞுனான அவரது இளைய மகன். ‘Paki Go Home ‘ என எழுதப்பட்ட இரும்புக் கதவைத் மேலேதள்ளித் திறந்து மசூதியினுள் நுழைகிறார்கள் இருவரும். இளைஞுன் ஒலிபெருக்கி அறைக்குச்னெ¢று இரு காதுகளிலும் கைவைத்து அல்லா ஹோ அக்பர் என்கிறான். வீட்டில் படுக்கையில் சோம்பலுடன் புரண்டு படுக்கிறான் ஒரு தாடிக்கார மத்தியதர வயது ஆண். மலைமுகட்டில் தனது ஹிஜாப்பை விலக்கிவிட்டு மேற்கத்திய மேல்சட்டையும், இறுக்கமாக ஜீன்ஸ் பேணட்டையும் மாற்றிக்கொண்டு காரில் ஏறி வேலை நோக்கிச் செல்கிறாள் யஸ்மின.

பெரியவர் யாஸ்மினின் தகப்பன். இளைஞுன் அவளது சகோதரன். புரண்டு படுத்துத் துாங்கும் ஆண் யஸ்மினின் பாகிஸ்தான் கணவன். கணவன் மீது யஸ்மினுக்கு விருப்பமில்லை. தந்தையின் வற்புறுத்தலுக்காக, பிரித்தானியக் குடியுரிமை பெறுவதற்காக பாகிஸ்தனிலிருந்து வரும் அவனை மணந்து கொள்கிறாள் யஸ்மின். ஆடு மேய்ப்பவனான அவனுக்கு ஆங்கிலமும் தெரிவதில்லை. பிரித்தானிய சமூகத்தில் அவனால் பொருந்திப் போகவும் முடிவதில்லை.

யஸ்மின் தான் வேலை செய்யம் ஆங்கிலத் தொழிற்சாலையில் வாகனச் சாரதியாக இருக்கும் ஒரு ஆங்கிலேய இளைஞுனை விரும்புகிறாள். அவளது திட்டம் தனது கணவனை விவகாரத்துச் செய்துவிட்டு இந்த வெள்ளை இளைஞனை மணந்து கொண்டு, மேற்கத்திய மோஸ்தர் உடைகளும், பொது மதுவிடுதிக் கலாச்சாரமும் அவாவிய பிரித்தானிய வாழ்க்கை முறைக்குள் நகரந்து விடுவது. இந்தக் குடும்பத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில்தான், செப்டம்பர் 11 சம்பவமும் வருகிறது.

பாகிஸ்தானிலுள்ள தனது உறவினர் ஒருவருடன் பேசினான் என்பதற்காக யஸ்மினின் பாகிஸ்தான் கணவனைத் தேடி போலீஸ் அதிரடித் தாக்குதல் நடத்துகிறது. அப்பாவித்தனமாக யஸ்மினின் கணவன் தொடர்பு கொண்ட உறவினான பாகிஸ்தானியர் இங்கிலாந்தில் இயங்கும் காஸ்மீர் விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டவராக இருக்கிறார். காஷ்மீர் விடுதலை முன்னணி பிரித்தானியாவில் தடை செய்யபட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருக்கிறது. யஸ்மினின் கணவர் பயங்கரவாதி எனக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். யஸ்மின் தான் மறுமணம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஆங்கில நண்பனிடம் தனக்குத் திருமணம் ஆன விசயத்தையோ, தான் விவகாரத்துக்கு விண்ணப்பித்திருப்பதையோ தெரிவிப்பதில்லை. யஸ்மினது தந்தை குறைந்த பட்சம் யஸ்மினது கணவனுக்கு நிரந்திர வதிவிடம் கிடைக்கும் வரையாவது அவனை விவகாரத்துச் செய்ய வேண்டாம் என மன்றாடுகிறார்.

செப்டம்பர் 11 க்குப் பிறகு யஸ்மினிடம் அவளது ஆங்கிலத் தொழிலாள நண்பர்கள், ஆண்களும் பெண்களும் பழகும் முறையே வேறாகிறது. அவளது புகைப் படத்திற்கு பின்லாடனின் தாடி மீசை வரைந்து அவளது வேலையிட அறிவிப்புப் பலகையில் பெரிதாக்கி ஒட்டி வைக்கிறார்கள். அவள் மீது வெறுப்பு எங்கும் படர்ந்திருக்கிறது. அவளைக் கூப்பிட்டனுப்பும் தொழிற்சாலை அதிகாரி இரண்டு வாரங்களுக்கு அவளை விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். பொது மதுவிடுதியில் குறைந்த பட்சம் இஸ்லாமியர்களான நீிங்கள் எவரும் ஏன் மன்னிப்புக் கேட்க வில்லை என யஸ்மினிடம் அவளது சக பணியாட்கள் கேட்கிறார்கள்.

நிஜத்தில் யஸ்மினுக்கு பின்லாடன் யார் என்பதே அவ்வளவாகத் தெரியாது.

அர்த்தமற்ற வகையில் அப்பாவியான அவள் மீது, 15 வருடங்களாக மசூதிக்குச் சென்றேயிராத அவள் மீது, இஸ்லாமியப் பயங்கரவாத அடையாளம் திணிக்கப்படுகிறது. அவள் வீடு திரும்புகிறாள். மனமும் உடலும் சோர்ந்து போக சமைக்க மாட்டாது படுக்கையிலேயே வீழ்ந்து கிடக்கிறாள். அவளது ஆங்கில நண்பன் அவளைத் தேடி வருகிறான். யஸ்மினது கணவனைத் தேடி வரும் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப்படையினர், யஸ்மினையும் அவளது காதலனையும் சுற்றிவளைத்து விலங்குபூட்டி கைது செய்து கொண்டு போகிறார்கள். விசாரணையின் போது அதிரடிப்படையினர் சொல்லித்தான் யஸ்மின் மணமானவள் என்பது அவளது ஆங்கிலக் காதலனுக்குத் தெரியவருகிறது. பொய் சொல்பவள் என யஸ்மினை நிராகரித்தும் விடுகிறான் அவளது காதலன்.

யஸ்மினது சகோதரனின் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் போலீசின் அடக்குமுறை புதியதொரு பிரக்ஞையை அந்த இளைஞுனிடம் தோற்றுவிக்கிறது. இரட்டைக் கட்டிங்கள் சரிந்தபோது அதனை நேர்த்தியான தாக்குதல் என்றவன் அந்த இளைஞன். கஞ்ஜா விற்கும் அவன் தனது ஆங்கிலச் சிநேகிதிகளிடம் தன் குறியை அவர்கள் வாய்வைத்துச் சப்பினால், கஞ்ஜாவுக்குச் சலுகை விலை உண்டு என்பவன். அப்பெண்கள் அப்படிச் செய்யவும் செய்கிறார்கள். செச்சினியாவிலும் ஆப்கானிலும் காஸ்மீிரிலும் பாலஸ்தீனத்திலும் இஸ்லாமியர்கள் மேற்கத்தியர்களால் கொல்லப்படுகிறாரக்ள எனும் பிரச்சாரத்திற்கு அவன் ஆட்படுகிறான். அக்காவைப் பிரிந்து அவன் ஆப்கானிஸ்தானுக்குப் பயிற்சிக்குச் செல்லவும் முடிவெடுக்கிறான்.

விவகாரத்துப் பத்திரங்கள் தயாரானவுடன் யஸ்மின் தனது கணவனைத் தேடி சிறைக்குச் செல்கிறாள். சந்தேகத்தின் பெயரில் அவளும் கைது செய்யப்படுகிறாள். சட்டத்தை ஏய்த்து கணவனை மணந்து இங்கிலாந்திற்கு கொணடு வந்ததாய் என அவள் குற்றம் சாட்டப்படுகிறாள். கணவனோடு தான் வாழவே இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் விவகாரத்துப் பத்திரம் இருக்கிறது. சட்டபூர்வமற்ற முறையில் வந்தவன் என அவளது கணவன் மீது புகார் கொடுக்குமாறு காவல் துறை அதிகாரிகள் யஸ்மினைக் கோருகிறார்கள். அப்படிச் செய்தால் பிரச்சினையில்லாமல் அவளது கணவனை பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பி விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

யஸ்மின் அவர்களை நம்பத் தயாரில்லை. அவள் தனது விவகாரத்துப் பத்திரத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, சிறையில் தனக்குக் கொடுக்கப்பட்ட குரானை தன் சட்டைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு, தனது கணவனைப் பார்க்க வேண்டும் என பார்வையாளருக்கான அனுமதி கோருகிறாள். சிறை வாயிலிலேயே இரவும் பகலும் காத்திருக்கிறாள். சில நாட்களின் பின் அவளது கணவன் விடுதலை செய்யப்படுகிறான்.

கணவனை அழைத்துக்கொண்டு வீடு வருகிறாள் யஸ்மின். கணவன் அவளது தோளில் சாய்ந்து குழந்தை போல அழுகிறான். அடுத்த நாள் காலையில் அவனுக்கு தேநீர் கொண்டுவந்து தரும் யஸ்மின் அவனருகில் அமர்கிறாள். மூன்று முறை தன்னை ‘ I divorce you ‘ என அவனது உடைந்த ஆங்கிலத்தில் சொல்லுமாறு அவனை நோக்கிப் பணிக்கிறாள். அவனும் மூன்று முறை அதனைத் திருப்பிச் சொல்கிறான். பிற்பாடாக அவனிடம் வழிச்செலவுக்கெனப் பண கொடுத்து, அவன் பற்றையொன்றிலிருந்து கொண்டு வந்த ஆட்டுக்குட்டியையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அன்பாக விடை கொடுக்கிறாள்.

அவன் பிரித்தானியாவின் அடையாளம் காணாத ஓரிடம் நோக்கி ஆட்டுக்குட்டியைப் பிடித்தபடி நடந்து மறைகிறான். யஸ்மினின் தந்தைக்குத் தான் புறப்படும் முன்பாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அவன் மறைந்து விடுகிறான். அவன் போய்விட்டான் என்கிறார் யஸ்மினின் தந்தை. எனக்குத் தெரியும், நான்தான் அனுப்பி வைத்தேன் என்கிறாள் யஸ்மின். மகளே, எனக்கு முதுமை வந்துவிட்டது எனச் சோர்வாக மகளின் தோள் மீது சாய்கிறார் தந்தை. தந்தையை அணைத்து அவரது முதுகை அன்புடன் தடவுகிறாள் யஸ்மின்.

பிரதான தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும் யஸ்மின் தனது முன்னாள் காதலனைப் பார்த்துத் திரும்புகிறாள். அவளைக் கடந்து சென்ற அவன் திரும்பி நிற்கிறான். தனக்கு மணவிலக்குக் கிதை¢துவிட்டது என்கிறாள். தான் பொதுமதுவிடுதிக்குச் செல்வதாகவும், தன்னோடு வந்தால் அரைவாசி கோப்பை மது அருந்தலாம் என்றும் யஸ்மினை அழைக்கிறான் அவன். அவள், தான் அப்போது மசூதிக்குத் தொழுகைக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், தன்னால் இப்போது வரவியலாது என்றும் பிற்பாடு எப்போதாவது பாரக்கலாம் எனவும் சொல்கிறாள். சாத்தியமில்லை, இனி எப்போதும் சாத்தியமில்லை என்று பதிலுரைத்துவிட்டு விறைப்பாக நடக்கத் தொடங்குகிறான் யஸ்மினின் முன்னாள் காதலன்.

தான் அப்போதுதான் கண்டடைந்த புதிய அடையாளத்துடன் மசூதி நோக்கி நடக்கிறாள் யஸ்மின்.

யஸ்மின் படம் சொல்வது போல இஸ்லாமிய வெறுப்பு என்பது பிரித்தானிய சமூகம் முழுக்கப் புரையோடிப் போயிருக்கிறதா என்ற கேள்விக்கு விடைபோலும் வந்திருக்கிறது Are Muslims Hated ? எனும் கெனன் மாலிக்கின் விவரணப்படம்.

6.

Are Muslims Hated ? படத்தில் கெனன் மாலிக் என்ன சொல்கிறார் ? முதலில் கெனன் மாலிக் பற்றிச் சொல்ல வேண்டும். கெனன் மாலிக் நிறவெறி எதிர்ப்புக் கோட்பாட்டாளர். வர்க்கப் பகுப்பாய்வில் நம்பிக்கை கொண்டவர். பிரிக் லேன் பகுதி பங்களாதேஸ் இஸ்லாமிய மக்களிடையில் தோன்றிய கிளர்ச்சி நடவடிக்கையாளர். மரபணுவியல் குறித்தும், நிறவெறிக்கும் அந்த ஆய்வின் வலதுசாரி வியாக்யானங்களுக்கும் எதிராக எழுதியும் பேசியும் வருகிறவர். பிரித்தானியாவில் ஆப்ரிக்க மக்கள், ஆசியர்கள், இஸ்லாமியர்கள் மீதான நிறவெறியும் ஒதுக்கலும் இருக்கிறது என்பதனை அங்கீகரிப்பவர். அதற்கு எதிராகச் செய்படுகிறவரும் அவர். தனது விவரணப்படத்தில் அவர் மூன்று விடயங்களை முன்வைக்கிறார்.

(அ) முதலாவதாக பிரிட்டிஸ் முஸ்லீம் கவுன்சில் இஸ்லாமிய வெறுப்பு என்பதனை அதீதப்படுத்திக் காட்டுகிறது என அவர் சொல்கிறார். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஆண்டு தோறும் இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொலையுண்டிருக்கிறார்கள். தொண்ணுாறுகளிலும், இருபதின் தொடக்க ஆண்டுகளிலும் அது முற்றிலும் இல்லாததாகியிருக்கிறது என்கிறார் அவர். செப்டம்பர் 11 க்குப் பிறகாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் என்பது வசவுகளாகவும் வாய்மிரட்டல்களாவும்தான் இருக்கிறதேயொழிய காவல்துறை திட்டமிட்டு இஸ்லாமியர்களை வெறுக்கிறது என்பதற்கான ஆதாரம் இல்லை என்கிறார் அவர். அப்படி ஏதாவது இருக்குமானானல் அது ஆப்ரிக்க மக்களின் மீதுதான் புள்ளிவிவர அடிப்படையில் இருக்கிறது என்கிறார் அவர்.

பிரித்தானிய இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்களாக இருக்கும் பாகிஸ்தான் பங்களாதேஸ் இஸ்லாமியர்கள் இந்தியர்களைப் போலவோ அல்லது சீனர்களைப் போலவோ படித்த மத்தியதர வர்க்கத்தலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் வறிய குடும்பத்தலிருந்து வந்தவர்கள். உடலுழைப்பாளர்கள். பிரித்தானியாவில் குறைந்த சதவீதத்தில் பள்ளிக்கல்வி முடிப்பவர்கள் அவர்கள்தான். அவர்களது பல பிரச்சினைகளுக்கும் ஏழ்மை நிலை ஒரு காரணமேயல்லாது அரசின் இஸ்லாமிய வெறுப்பு காரணம் அல்ல என்கிறார் மாலிக். ஈராக் போர் தொடர்பான மிகப் பெரிய எதிர்ப்பு ஆரப்பாட்டம் நடந்ததும், பெரும்பாலுமான மக்கள் இராக் யுத்தததை எதிர்ப்பதும் பிரித்தானியாவில்தான் என்பது இங்கு கவனம் கொள்ளத்தக்கது.

(ஆ) இஸ்லாமிய மத அதிகாரம் கொண்டவர்களும், அடிப்படைவாதத்தை வலிறுத்துகிறவர்களும் பிரித்தானியாவில் பிறந்த 14 வயதேயான இஸ்லாமிய இளம் பெண்களை பலவந்தமாக பாகிஸ்தான் பங்களாதேஸ் மத்தியதர வயதினருக்கு மணம் செய்து வைக்கிறார்கள். இதனை மறுக்கும் பெண்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கெளரவக் கொலை- honour killing – எனும் பெயரில் பெற்றோர்களால் கொல்லப்படுகிறார்கள். இதற்கு அடிப்படைவாதம்தான் காரணமே ஒழிய இஸ்லாமிய வெறுப்பு காரணம் அல்ல எனும் யஸ்மின் அலிபாய் பிரவுன் அவர்களோடு உடன்பாடு காட்டுகிறார் மாலிக்.

(இ). இஸ்லாமிய வெறுப்பு எனும் முகத்திரையின் கீழ் தம்மைக் குறித்து வரும் சகல விமர்சனங்களையும் ஒழித்து விட மத அதிகாரிகள் முனைகிறார்கள். பெண் ஒடுக்குமறை தொடர்பான பழக்க வழக்கங்களைச் சுட்டிக்காட்டுகிற தாராளவாதிகளைக் கூட இந்த மத அதிகாரிகள் நிறவெறியாளர்கள் எனச் சித்தரிக்கிறார்கள். குறிப்பாக தாராளவாதியான கார்டியன் பெண் எழுத்தாளர் பாலி டாயன்பியையும் பாசிஸ்ட்டான பிரிட்டிஸ் தேசியக் கட்சியின் – British Natitonal Party – நிக் கிரிபின்னையும் இவர்கள் நிறவெறியாளர்கள் எனச் சமப்படுத்துகிறார்கள். இது அபத்தம் என்கிறார் மாலிக்.

ஈரான் பெண் ஒடுக்குமுறையை வெளிப்படையாக நடைமுறையில் கொண்டிருக்கும் நாடு. ஈரானிலிருந்து வெளியேறிய பெண்ணிலைவாதிகள் நிறைய மேற்கில் வாழ்கிறார்கள். கனடாவில் அர்ஜூமான்ட், பிரத்தானியாவில் மரியம் நமாசி போன்றவர்கள் ஈரானில் பெண் ஒடுக்குமுறையை விமர்சிக்கிறார்கள். அந்த சமூகத்தின் உள்ளிருந்தே விமர்சித்த முதல் ஈரானியப் பெண் நீதிபதியான செரின் எபாதி, கொமேனியின் புரட்சியை அடுத்து அந்தப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். இன்று வரை அவர் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. அவருக்கு எதிராக வழக்குமன்ற எழத்தர் தவறாக தாக்கீது அனுப்பிவிட்டார் என்று அவர் மீதான மத நீதிமன்ற உத்தரவை சமீபத்தில் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். ஈரானதும் ஸவுதி அரேபியா போன்ற பிற இஸ்லாமிய நாடுகளதும், அதோடு மேற்கிலும் ,கனடாவிலும், அமெரிக்காவிலும் செயல்படும் இஸ்லாமிய மத அதிகாரிகளின், பெண் ஒடுக்குமுறை பழக்கங்களை விமரசிக்கும் நமாசி, எபாதி, அர்ஜீமான்ட் போன்றவர்களை நிறவாதிகளோடு ஒத்துப் பாடுபவர்கள் என அவர்கள் மீது முத்திரை குத்துகிறார்கள். இவர்களது விமர்சத்திற்கும், மத அதிகாரிகள் சொல்கிற இஸ்லாமிய வெறுப்புக்கும் சம்பந்தமில்லை எனும் மாலிக், தங்கள் மீதான எந்தவிதமான விமர்சனத்தையம் இஸ்லாமிய வெறுப்பு எனும் பெயரில் மத அதிகாரிகள் திசைதிருப்புகிறார்கள் என்கிறார்.

சில பின்நவீனத்துவ காலாச்சாரச் சார்புவாதிகளும், இஸ்லாமிய மத அதிகாரிகளின் பின் நிற்கிறார்கள். இவ்வகையிலானவர்கள் தங்களைப் போன்று நியாயமாக விமர்சனம் வைப்பவர்களின் வாய்களைக் கூட அடைக்க நினைக்கிறார்கள் என ஈரானிலிருந்து வெளியேறிய மரியம் நமாசி போன்றவர்கள் தெரிவிப்பதாக மாலிக் சொல்கிறார்.

தம் மீதான சகலவிதமான நியாயமான விமர்சனங்களையும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் என முத்திரை குத்துவதன் மூலம், யூதமதத்தவர்கள் யூதமதவெறுப்பு ( anti-semitism )என்பதனை தமது அரசியல் அதிகாரம் பெறுவதற்கான வழி வகையாகப் பாவித்தது போல, இஸ்லாமிய மதத்தையும் அதிகாரம் பெறுவதற்கான ஒரு வழி வகையாக மத அதிகாரிகள் பாவிக்கிறார்கள் என்கிறார் மாலிக். இது மேற்கத்திய தாராளவாத சமூகம் மேற்கொண்டிருக்கும் ஒரு ஆபத்தான பாதை எனவும் அவர் சொல்கிறார்.

அதிகாரத்தை மத அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வதன் வழி, பல்கலாச்சார சமூகத்தை உருவாக்குவதாகச் சொல்லும் இவர்கள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் மீதும், கலைஞுர்கள் மீதும், பெரும் தாக்குதலைத் தொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்கிறார் மாலிக். இங்கிலாந்தில் அரசு கொணரவிருக்கும் மதத்துவேச தடைச் சட்டம் ( outlaw incitement to religious hatred ) போன்றனவும் கனடாவில் கனடிய அரசு அமல்படுத்தத் தொடங்கியிருக்கும் மதப்பிரதிகளின் அடிப்படையில் விவகாரத்து வழக்குகள் உள்பட தீர்த்துக்கொள்ளும் சட்ட முறைமையும் ( law provides for voluntary faith-based arbitration, which allows Muslims, Jews and members of other faiths to use the guiding principles of their religion in settling private disputes such as divorce, custody issues and inheritances outside the court system) இப்படியான ஆபத்தான தளத்தில் பிரவேசித்திருப்பதாக ஹோமா அர்ஜூமான்ட் சொல்வதை நாம் இங்கு நினைவுகூர முடியும்.

தனிமனிதன் தனது சுதந்திரத்தை மத அதிகாரத்தினின்று மீட்பதற்காக நடத்திய போராட்டம்தான் கருத்துச் சுதந்திரத்தின் வரலாறாகவும், கலைஞுர்களது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் வரலாறாகவும் இருக்கிறது. வரலாற்றுரீதியில் போராடிப்பெற்ற இந்தச் சுதந்திரம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருக்கிறது என்பதனைத் தான் கெனன் மாலிக் தனது விவரணப் படத்தில் முன்வைக்கிறார்.

இங்கிலாந்தில் ஸவுத்தால் பகுதி சீக்கியர்களும் குஜராத்தியர்களும் அதிகம் வாழும் பகுதி. மந்திர்களும் குருத்துவாராக்களும் நிறைந்த பகுதி இது. இங்கு செயல்படும் Southall Black Sisters எனும் ஆசிய பெண்ணுரிமை அமைப்பு, சகலமதப் பெண்களுக்கும் எதிராக மதவாதிகள் புரியும் கொடுமைகளை எதிர்த்துப் போராடிவரும் அமைப்பு மட்டுமல்ல, நிறவெறிக்கு எதிரான போராட்டப் பாரம்பர்யமும் கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பு சீக்கிய மதத் தீவிரவாதிகளால் தடத்து நிறுத்தப்பட்டிருக்கும் பெஸ்தி நாடகத்தின் கருவுக்கு ஆதரது தெரிவித்திருக்கிறது. இந்துக் கோவில் ஒன்றில் முன்பொருமுறை ஒரு பெண், கோவில் பூசாரியால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதையும், சீக்கிய குருத்துவாராவொன்றில் இதே வகையில் பாலியல் பலாத்காரத்துக்கு ஒரு பெண் உட்பட்டதையும், அவர்கள் வெளிப்படையாக முன்வந்து தமது பிரச்சினையை எழுப்பியபோது, அவர்களது சமூகங்கள் அவர்களை அவமானப்படுத்தியது எனவும் இவ்வமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பிரித்தானியத் தமிழ்க் கோவில்களில் இவ்வாறு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதற்காக தமிழ்க் கோவில் பூசாரிகள் கைது செய்யப்பட்ட் சம்பவம் தமிழ் சமூகத்தின் மத்தியில் பிரச்சித்தமான செய்தியாக இருக்கிறது. இச்சூழலில் நிகழ்ந்து வரும் ஒரு பிரச்சினையை ஒரு கலைப்படைப்பின் மூலம் சமூகத்தின் பரந்து பட்ட கவனத்திற்குக் கொண்டு வருவது அவசியமானது என ஸவுத்தால் பிளாக் ஸிஸ்டர்ஸ் அமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பெஸ்தி நாடகம் குறித்த ஆட்சேபனயைாக சீக்கிய மத அதிகாரிகள் முன்வைக்கும் விவாதம் என்ன ? செப்டம்பர் 11 க்குப் பிற்பாடாக சகல சிறுபான்மையின மதத்தவர்கள் மீதும், அவர்களது நம்பிக்கைளின் மீதம் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. அதனது பகுதியாகவே பெஸ்தி நாடகமும் இருக்கிறது என அவர்கள் தெரிவிக்கிறார்கள். இஸ்லாமிய மத அதிகாரிகள் தம் மீது முன்வைக்கப்படும் விமரசனங்களுக்குப் பதிலாக முன்வைக்கும் மதவெறுப்பு எனும் அதே பூச்சாண்டியை இந்த விடயத்தில் சீக்கிய மத அதிகாரிகளும் முன்வைத்திருக்கிறார்கள். பெஸ்தி நாடகத்தை எதிர்த்து நடந்த ஆரப்பாட்டத்தில் கத்தோலிக்க மதக்குருமாாகளும் கலந்து கொண்டது இங்கு கவனம் கொள்ளத் தக்கது. மத அதிகாரிகளையும் அவர்களது நடைமுறைகளையும் விமர்சிக்கக் கூடாது எனும் விடயத்தில் அனைத்து மத அதிகாரிகளும் ஒன்றுகூடியிருப்பது இங்கு கவனம் கொள்ளத்தக்கது. கலைஞர்கள், பெண் உரிமையாளர்கள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் மீது கவிந்து வரும் பெரும் ஒடுக்குமறையொன்றின் பகுதியாகவே பெஸ்தி நாடக ஆசிரியர் குருபிரித் மீது கொலை மிரட்டல் விடப்படுவதும், பெண் உரிமையாளர்கள் மீதுமான தாக்குதல்கள் நடத்தப்படுவதும் என்பதனையே கெனன் மாலிக்கின் விவரணப்படம் தெரிவிக்கிறது.

மேற்போக்காகத் தெளிவுபடாத பல்வேறு பிரச்சினைகள் ஆளுமைகள் குறித்ததொரு சித்திரத்தை முன் வைப்பதன் வழி கலைஞுர்கள், மதச்சார்பற்றவர்கள், பெண்உரிமையாளர்களிடம் ஒரு ஓன்றிணைந்த விவாத்திற்கான வழியைத் திறந்து விட்டிருக்கிறார் மாலிக்.

7.

செப்டம்பர் தாக்குதலை நிகழ்த்திய மொகமத் அட்டா, ஜியாத் ஜாரா போன்றவர்களை இயக்கிய அரசியல், இறையியல் நம்பிக்கைகள் ஒரு புறம், அதன் விளைவான மேற்கத்திய அரசுகளின் பயங்கரவாத எதிரப்பு நடவடிக்கை காரணமாக மதத் தீவிரவாத்தைத் தேரும் யஸ்மினின் சகோதரன் ஒரு புறம், தனது பெண்விடுதலை நம்பிக்கைளுக்கும் தன் மீது பிரித்தானிய சமூகத்தினால் சுமத்தப்பட்ட இஸ்லாமிய அடையாளத்தை வரித்துக் கொள்ளும் யஸ்மின் இன்னொரு புறம், இதுதான் மேற்கத்திய சமூகத்தின் இஸ்லாமிய இளைஞுர்கள் யுவதிகள் முன்னுள்ள, அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்.

பிரச்சினையில் பல்வேறு சக்திகள் இருக்கின்றன. மத அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அரசுகள் செயல்படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தைக் கோருகிறவர்கள் செயல்படுகிறார்கள். கலைஞுர்கள் செயல்படுகிறார்கள். பெண் உரிமையாளர்கள் செயல்படுகிறார்கள். நிறவெறியும் இஸ்லாமியத் துவேச உணர்வுள்ளவர்களும் கூட இதில் செயல்படுகிறார்கள்.

தியோ வான்கோ கொலையில் பல்வேறு சக்திகள் பல்வேறு நிலைபாடுகளை மேற்கொண்டிருக்கின்றன. ஹாலந்து நாட்டின் இடதுசாரிகள், வான்கோ தனது மரணத்தைத் தானே வரவழைத்துக் கொண்டார் எனும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். தாராளவாதிகள் இவ்விடயத்தில் பிளவுபட்டிருக்கிறார்கள். சில தாராளவாதிகள் பல்கலாச்சாரம் எனும் வகையில் எத்தனை துாரம் மதச்சார்பற்ற, தனிநபர் சுதந்திரம் சார்ந்த, கலைஞுர்களின் சதந்திரம் சார்நத, பெண்ணுரிமை சார்ந்த, மேற்கத்திய கலாச்சாரம் வென்றெடுத்து உரிமைகளை மதவாதிகளிடம் சமரசப்படுத்திக் கொண்டே போகமுடியும் என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

தியோ வான்கோவுக்காக ஆம்ஸ்டர்டாம் நகரில் திரண்ட 20000 பேரும் இஸ்லாமிய வெறுப்பினால் திரண்டவர்கள் அல்ல. மாறாக ஹாலந்து நாடு வரலாற்று ரீதியில் கெளரவித்து வந்திருக்கும் கருத்துச் சுதந்திரப் பாரம்பர்யத்திற்காகவே திரண்டவர்கள். அதே வேளை தியோ வான்கோ ஒரு பொறுப்பான இயக்குனராகச் செயல்படவில்லை என்பது மட்டுமல்ல, அவரது கருத்தெடுப்பு முறைகள் ஆத்திரமூட்டுதலையும் ( provoke )அவமானப்படுத்தலையும் (insult) நோக்கம் கொண்டது. இஸ்லாமியர்கள் ஆட்டுக்குட்டியைப் புணர்பவர்கள் goatf..kers) என ஆத்திரமூட்டுதலைச் செய்தவர் அவர். தான் ஒரு பேச்சுரிமை அடிப்படைவாதி (free spech fundementalist) என்று தன்னை அழைத்துக் கொண்டவர் அவர். பிறரை அவமானப்படுத்துவதன் மூலம், தான் விவாதத்தைத் துாண்ட முயல்கிறேன், அது தன் உரிமை எனவும் பிரகடனப்படுத்திக் கொண்டவர் அவர். அவரது விவரணப்படங்களின் பல பிம்பங்கள் ஹாலந்தின் தாராளவாதிகளைக் கூட அதிர்ச்சியடைய வைத்தவை. அவருக்கென ஒரு அரசியல் திட்டம் இருந்தது. வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கு எதிரான அரசியல் கொண்டவர் அவர். நிறவாதக் கருத்துக்களைப் பிரதிநிதிததுவப்படுத்திய போர்தின் பற்றி விவரணப்படம் எடுத்தவர் அவர். அவரது இஸ்லாம் மீதான விமர்சனம் என்பது நிறவாதமும் குடியேற்றக்காரர்கள் மீதான வெறுப்பும் மேவியது எனபதனையும் நாம் அவதானிக்க வேண்டும்.

நவ பாசிசமும் நிறவெறியும் மறுபடியும் ஒரு அரசியலாக மேற்கில் வேகம் கொண்டு வரும் ஒரு சூழலில், எந்த விதமான விமர்சனமோ வரலாற்றுப் புரிதலோ இன்றி இடதுசாரிகள் கறுப்பு வெள்ளையாக, தியோ வான்கோவின் கொலையைக் கண்டிக்க முடியாது. விமர்சனம் பொறுப்புணர்வுடன் செய்யப்பட வேண்டும். அடிப்படைவாதத்திற்குப் பலியான இன்னொரு வகை அடிப்படைவாதி எனத் தான் நாம் தியோ வான்கோவை வரையறுக்க முடியும். மேற்கத்திய சமூகத்தின் அக்கபூர்வமான தாராளவாத மரபைப் பகிர்ந்து கொள்பவர் அல்ல இயக்குனர் தியோ வான்கோ.

8.

மேற்கிலும் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் படித்த இளைஞர்களும் யுவதிகளும் இன்று இஸ்லாமியப் பதாகையின் கீழ் திரள்வதற்கான காரணம் என்ன ? பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு காரணம். இஸ்ரேலியர்களை நிபந்தனையற்று ஆதரிக்கும் அமெரிக்கக் கொள்கை ஒரு காரணம். தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்களை அடுத்து மத்தியக் கிழக்கில் செல்வாக்குப் பெற்ற மார்க்சியம், நிலவிய சோசலிசமாகத் தோல்வியுற்றபோது, இஸ்லாமிய நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சியக் கனவு மூடுண்டதாகியது. மத்தியக் கிழக்கு நாடுகளின் ஆடசியாளர்களை ஆதரித்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், மேற்கத்திய முதலாளித்துவமும் அவர்களது நாடுகளின் வறிய மக்களின் வெறுப்புக்கு உரியதாக ஆகியது. இந்த நம்பிக்கை வீழச்சிக்கான மாற்றை, எதிரப்புணர்வுக்கான மாற்றை வைக்கக் கூடிய சக்தி அடிப்படைவாதிகளுக்கே இருந்தது.

வீடு, சமூகம், நீதி, அறவியல்,அரசு என அனைத்தும் தழுவியதான இஸ்லாமிய இறையியல் அவர்களை இணைக்கும் தளமாக இயல்பாக இருந்தது. விஞ்ஞுானமும், இறையியலும், நம்பிக்கைக்கு மாற்றான தற்கொலையும் விடுதலை விதியாக முன்வைக்கப்பட்டபோது அது படித்த இளைஞுர்களையும் யுவதிகளையும் ஆகர்சித்தது. மேற்கத்திய அமெரிக்க அரசுகளின் குன்டனாமோ, அபுகாரிப் மனித உரிமை மீறல் நடவடிக்கைள் இவர்களை மறுகோடிக்குத் தள்ளியது. இஸ்லாமை ஒரு அரசியல் சக்தியாக இது ஆக்கியது. யதார்த்தத்தில் விடுதலை நோக்கியதாக வேர்கொண்ட இந்த அரசியலின் ஏவுகாரர்களாக அடிப்படைவாதிகளும, மத அதிகாரிகளும் இருந்தனர். தமது சகல ஒடுக்குமுறைகளையும் அவமானகரமான மரபுகளையும் இஸ்லாமுக்கு எதிரான எதிர்ப்பு என்பதின் பேரில் இவர்கள் திரையிட்டு மூடினர். பின்லாடன் ஒரு அடிப்படைவாதி. முல்லா ஒமர் ஒரு அடிப்படைவாதி. இஸ்லாமிய மத அமைப்புக்களை வழிநடத்துகிற பெரும்பாலுமானவர்களின் வியாக்யானங்கள் அடிப்படைவாதம் தான். வரலாற்றுக் காரணங்கள் கொண்ட ஒரு எழுச்சியில் பங்கு பற்றியவர்கள், தமது சகல முரண்களோடும், அடிப்படைவாதிகளின் தலைமையின் கீழ் வந்திருக்கிற ஒரு நிலைமைதான் இன்று மேற்கில் நிலவுகிறது. இதனால்தான் அரசியல் இஸ்லாம் ஒரு விடுதலை இறையியல் அல்ல, அது ஒரு எதிர்ப் புரட்சிகர அழிவுசக்தி என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின்.

இஸ்லாமுக்குள் நிலவுகிற பெண்கள் சம்பந்தமான அணுகுமுறை வேறு வேறு பிரதேசங்களில் வேறு வேறு முறைகளில் வியாக்யானப்படுத்தப்பட்டாலும், அதனது வெளிப்பாட்டு அம்சங்கள் இரு வகையானவைதான்.

(அ) பெண் உடலை வேட்கையைத் துாண்டவதாகப் பார்த்தலும், அவளைப் பலவீனமுள்ளவளாகப் பார்த்தலும், ஆணிண் பாதுகாவலுக்கு உரியவளாகவும், இரண்டாம் பிரஜையாகப் பார்த்தலும், அவளை நல்வழிப்படுத்த வன்முறையையும் அவளது உடல் மீது ஏவலாம் எனப் பார்த்தலுமான ஒரு பார்வை. 1400 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சமூகத்தில் பெற்ற ஆண்களின் அனுபவத்தின் அடிப்படையில் காலங்கடந்தும் மதப் பிரதியை வியாக்யானப்படுத்தி புனிதப்படுத்தும் ஒரு முறை இது. சவூதி அரேபியாவுக்கும் குவைத்துக்கும் சென்ற இந்திய முஸ்லீம்கள் காவி வந்த முறையும், தற்போது இந்துத்துவத்திற்கு எதிரான விவாதத்தில் முன்வைக்கப்படும் இஸ்லாமிய வழிமுறையும் இதுதான்.

(ஆ) இதற்கு மாற்றான ஒரு முறைதான் செரின் எபாதி, அர்ஜீமான்ட், மரியம் நமாசி, யஸ்மின் அலிபாய் பிரவுன், தஸ்லீமா நஸ்ரீன் , நாவல் எட் ஸால்வி போன்றவர்கள் முன்வைக்கும் முறை. கெளரவக் கொலைகளை மறுத்த முறை இது. 1400 வருடங்களுக்கு முன்பான பிரதியை வியாக்யானப்படுத்தும் மத அதிகாரிகளின் நோக்கங்களை மறுத்த முறை இது. பெண்கள் தமது தேர்வுகளை முன் வைக்கும் முறை இது. பொதுவாழ்வில் பெண்களை நிராகரித்தமைக்கு எதிரான முறை. மேற்கத்திய சமூகத்திலும் மூடுதிரையை வலியுறுத்துவதற்கு எதிரான அடோனிஸ் போன்றவர்கள் முன்வைக்கும் முறை. சவுதி அரேபிய, குவைத், ஈரான் போன்றவற்றுக்கு மாற்றாக ஈராக், லிபியா, துருக்கி போன்ற நாடுகள் முன்வைக்கும் விமர்சன முறை. காலமாற்றத்துக்குட்பட்ட இத்தகைய வழிமுறைகளை மாலிக், அலிபாய், ஜியாவுதின் சர்தார் போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். பெண் உடல் வேட்கையைக் காவும் கருவி என்பதற்கான எதிர்முறை இது. மேற்கிலும் அடிப்படைவாத இஸ்லாமியத்துக்கு எதிராகவும் முனைப்புப் பெற்றுவரும் இந்தப் பார்வையை மறுத்தவர்களே அடிப்படைவாத்திற்கான ஊற்றுக் கண்களைத் திறந்து விடுகிறார்கள். இவர்கள் தான் தலிபான்களின் கோட்பாட்டு வாரிசுகள்.

இந்த இரு போக்குகளும்தான் நடைமுறையில் இன்று நிதர்சனமாக இருக்கிறது. மற்றபடி பிரதியை முன்வைத்து வியாக்யானப்படுத்திக் கொண்டிருப்பதும், வேட்கை மிகுந்த பெண் உடல் என்பதனை நிலைநாட்ட விவாதித்துக் கொண்டிருப்பதும் நிச்சயமாக அடிப்படைவாதமின்றி வேறில்லை. நடந்து வரும் விவாதங்களும், திரைவெளியில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களும் நமக்கு சில நிஜங்களை மிகத் தெள்ளென முன்வைத்திருக்கிறது.

அ.செப்டம்பருக்குப் பிற்பாடாக இஸ்லாம் ஒதுக்கப்படுகிறது என்பதனை சமனப்படுத்துவதற்காக மேற்கை ஆளும் அரசுப் பிரதிநிதிகள், பல்கலாச்சாரம் எனும் பெயரில் மத அடிப்படைவாதங்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார்கள்.

ஆ.தமது சமூகம் சார்ந்த சகல முரண்பாடுகளையும் மத அதிகாரிகள் மேற்கின் இஸ்லாமிய வெறுப்பு என்பதன் அடிப்படையில் மறைத்துவிடப் பாரக்கிறார்கள். இதே விதமான முறையை பிற மதத்தவரும் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள். சகல மதத்தவரும், மதங்களில் இயங்கும் பெண் ஒடுக்குமுறையை இதன்வழி திரையிட்டு மூடப் பார்க்கிறார்கள்.

இ.கலைஞுர்கள், பெண் உரிமையாளர்கள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்களின் மீதான தாக்குதல் இதனால் முனைப்புப் பெற்றுவருகிறது. அமெரிக்காவிலும் கிறத்தவ மத அதிகாரிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் தமது சிந்திக்கும் உரிமையைக் காத்துக் கொள்ளப் போராட வேண்டியிருக்கிறது. அடிப்படைவாதங்களுக்கு இடையிலான சமரசத்தின் பலியாடாகக் கலைஞுன் நிறுத்தப்பட்டிருப்பது போன்ற சித்திரம்தான் தற்போது அச்சத்திற்குரியதாக ஆகிவருகிறது.

9.

துயரத்திற்கு என்றும் முடிவென்பதில்லை என்பதனைத் துாரதரிசனம் போலத் தனது சகோதரனிடம் உச்சரித்துவிட்டு மரணமுற்றான் வின்சன்ட் வான்கோ. வின்சன்ட் வான்கோ இருமுறை சிந்திய இரத்தம் அவனது படைப்பு வேதனையின் வெளிப்பாடாக இருந்தது.


Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்