அழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

மஞ்சுளா நவநீதன்


‘ஸ்டாலினிசமும் இலக்கியக் கூட்டணியும் ‘ என்ற தலைப்பில் எஸ். வி. ராஜதுரை அவர்கள் எழுதிய காலச்சுவடு கட்டுரைக்கான எதிர்வினை இது.

ஸ்டாலினிசம் பற்றிய எஸ் வி ராஜதுரை அவர்களது கட்டுரை பலவிதங்களில் இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் மனநிலையைப் பிரதிபலிப்பதாய்க் கொள்ளலாம்.

இது போன்ற ஒரு பதிவை யமுனா ராஜேந்திரனும் ‘பதிவுகள் ‘ இணைய இதழில் செய்திருந்தார். இந்தக் கட்டுரையை அணுகுவதன் மூலம் , இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் மனநிலையைப் புரிந்து கொள்ள முயல்வது என் நோக்கம்.

ஸ்டாலினைப் போற்றுகிற ஒரு கட்டுரையின் துவக்கப் புள்ளி மகாத்மா காந்தியிலிருந்து தொடங்குவதன் அபத்தம் எஸ் வி ராஜதுரைக்குப் புரிந்திருக்காது என்று நான் நம்பவில்லை. எஸ் வி ராஜதுரை, காந்தி பற்றிய விமர்சனம் செய்தவர்களுடன் ஸ்டாலினை விமர்சிப்பவர்களை ஒரே நேர்கோட்டில் வைப்பதன் அடிநாதம் ஸ்டாலினும், காந்தியும் ஏதோ ஒரு புள்ளியில் இணையானவர்கள் என்று நிறுவி, அதன் மூலம் ஸ்டாலினை மீட்டெடுக்கும் முயற்சி என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

எஸ் வி ஆரின் தொடக்கம் இது :

‘இந்தியாவில் காந்தி பற்றிய கடுமையான விமர்சனங்களைச் செய்தவர்களைச் சற்று எளிமைப்படுத்தி இரு பிரிவினராகப் பிரிக்கலாம்: (1) பகத்சிங், பெரியார், அம்பேத்கர், எம்.என்.ராய், சுபாஸ் சந்திரபோஸ், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த ஈ. எம். எஸ்., சுனித் குமார் கோஷ் போன்றோர் ஒரு பிரிவினர் (2) வி.டி. சாவர்க்கர், நாதுராம் வினாயக் கோட்ஸே, தெகாடியா மற்றும் சங்கபரிவாரத்தினர் மற்றொரு பிரிவினர். காந்தி கொலையுண்டபோது கதறியழுதவர் பெரியார்; இனிப்பு வழங்கி மகிழ்ந்த கூட்டத்தைச் சேர்ந்தவர் சாவர்க்கர். ‘

விளக்கம் : ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினிச மறைவிற்காக மகிழ்பவர்கள் சாவர்க்கர் போன்ற ‘தீய ‘ சக்திகள். ஸ்டாலின் மறைவிற்கு துக்கம் காப்பவர்கள் பெரியார் மற்றும் பொது உடைமையாளர்களுடன் இணை சொல்லக் கூடிய ‘நல்லவர்கள் ‘. காந்தி எப்படி பார்ப்பன பனியா கும்பலின் பிரதிநிதி ,அவர் ஒரு வர்க்க எதிரி என்று ஆயிரம் பக்க விளக்கம் எழுதியவர், வர்க்க எதிரிகளை ‘களை ‘ எடுக்கும் லெனினிய சித்தாந்தத்திற்குக் கொடி தூக்குபவர், இன்று காந்தி மறைவிற்காக அழுதவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஆச்சரியம்தான். லெனினிய சித்தாந்த வாதிகள், தங்கள் வழக்கம்போல, காந்தியையும் ‘களை ‘ எடுத்திருந்தால், எஸ் வி ராஜதுரை அவர்கள் இவ்வாறு காந்தி மறைவிற்காக அழுதவர்களுடன் தன்னை இணைத்துக்கொண்டிருப்பாரா என்பதும் எனக்கு சந்தேகமே.

***

எந்த அடிப்படையில் இந்த இரண்டு பிரிவினரும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் சற்றே எஸ்விஆர் அவர்கள் தெரிவித்திருக்கலாம்.

ஆனால், திரு எஸ் வி ராஜதுரை அவர்கள் இந்த வரிகள் மூலம் சொல்ல முனைவது என்ன ? சங்க பரிவாரத்தினர் வன்முறை வழியை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதும், எம்.என்.ராய் இதர காந்தி விமர்சகர்கள் வன்முறை வழியை எடுக்காதவர்கள் என்பதுமா எஸ் வி ராஜதுரை கூறுவது ? அதுவும் நிச்சயம் அல்ல. சுபாஸ் சந்திர போஸ் அவர்களும், பகத்சிங் அவர்களும் வன்முறை வழியை எடுத்தவர்கள்தாம். சங்க குடும்பத்தினரும் சுதந்திர போராட்டத்தின்போது வன்முறை வழியை எடுத்தவர்களே. ஆகவே எந்த அடிப்படையில் இந்த பிரிவை உருவாக்குகிறார் என்பதுதான் நான் அறிய இயலாதது.

இந்தியா சுதந்திரமடைவது என்ற கருத்து ஒன்றாக இருந்தாலும், அதனை அடையும் வழிமுறைகள் வித்தியாசப்பட்டவை என்பதை அன்று இருந்த அனைவரும் புரிந்திருந்தார்கள். சுபாஸ் சந்திரபோசும், காந்தியும், பகத்சிங்கும் வெவ்வேறு வழிமுறைகள் மூலம் அந்த சுதந்திரத்தை அடைய முயன்றார்கள். ஆனால் அதற்காக தன்னோடு ஒத்துப்போகாத மற்ற தலைவர்களைக் கொல்ல முயலவில்லை. இந்த சுதந்திரப்போராட்டத்தில் இடதுசாரிகள் விளிம்புநிலை இயக்கத்தினராகத்தான் இருந்தார்கள். அதனாலேயே அவர்கள் இன்று சாந்த சொரூபி வேடம் பூணவும் முடிகிறது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் மார்க்ஸிஸ்டுகள் மாவோயிஸ்டுகள் லெனினிஸ்டுகள் ஸ்டாலினிஸ்டுகள் என்றுமே வன்முறை விரும்பாத சாந்த சொரூபிகளாக வேறெந்த நாட்டிலும் இல்லை. அந்த வேடம் கூடப் புனைய முடியாத அளவுக்கு அவர்களின் வெறியாட்டம் உலகெங்கும் நடந்திருக்கிறது.நரமாமிசம் தின்னும் அளவுக்கு சீனப் பொதுமக்களை துரத்திய சோசலிஸ சைனாவிலிருந்து, குடும்பம் என்பதையே அழித்துவிட முனைந்த எண்ணற்ற அழிவைச்செய்த போல்பாட்டின் கம்போடியாவிலிருந்து, இனப்படுகொலையையும் கருத்து வேற்றுமைகளுக்காகக் கொல்வதையும் தொடமுடியாத உச்சநிலைக்குக் கொண்டு சென்ற ஸ்டாலினிய சோசலிஸ சோவியத் குடியரசுகள் என்று தொடரும் படுகொலைகள் நடத்திய பின்னர் காந்தியைப் பற்றி பேச என்ன அருகதை இந்த சோசலிஸ்டு/மார்க்ஸிஸ்டுகளுக்கு என்பதுதான் எனக்குப் புரியாத புதிர்.

இன விடுதலை என்ற பிளவுவாதச் சாக்கடைக்கு அணி சேர்க்க பகத் சிங்கையும், நேதாஜியையும் துணைக்கழைப்பது. எஸ் வி ஆர் போன்றவர்களின் பாணி. இதன் மூலம் தம்முடைய போராட்டங்களுக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்திக் கொள்ள முயலும் இவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் சத்தான மற்ற பகுதிகளை மறைக்கச் செய்யும் முயற்சி கேவலமான ஒன்று. இவர் மிக ஜாக்கிரதையாக வாஞ்சிநாதனைத் தவிர்ப்பதை இங்கு குறிப்பிட வேண்டும். வாஞ்சிநாதன் பிராமணர் ஆயிற்றே ?

இந்திய விடுதலை இயக்கம் உலக விடுதலைப் போராட்ட இயக்கங்களிலேயே மிகுந்த ஜனநாயகத் தன்மை கொண்டது. வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் சிலர் இருந்தனர் என்றாலும், அது வெள்ளையர்களை ‘வர்க்க எதிரியாய் ‘ நிரந்தர ப் பகைவர்களாய்ச் சித்தரித்ததில்லை. குறியீட்டளவில் வெள்ளையர்கள் மீதான இந்தத் தாக்குதல், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றம் செய்யப் பயன் படும் என்று நம்பினர். ஆனால், இவர்களே கூட சகோதர இயக்கங்களில் இருந்தவர்களைக் கொலை செய்ததில்லை.

பகத்சிங் தூக்கிலிட எதிர்ப்புத் தெரிவித்த காந்தியின் ஆத்மார்த்தமான ஈடுபாடு ஒரு புறம். இன்றோ ராஜீவ் கொலையாளிகள் தூக்கிலிடப்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, மரண தண்டனை எதிர்ப்பாளிகள் என்று மனித உரிமை வேடமிடும் எஸ் வி ஆர் போன்றவர்கள் இன்னொரு புறம். ஸ்டாலினின் படுகொலைகளை சோஷலிசம் என்ற உன்னத லட்சியத்தைக் காப்பாற்றச் செய்த சிறு தவறுகள் என்று பேசுவோர், உரிய நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்பு வழங்கப்படும் மரண தண்டனையை எதிர்த்துக் கொடி உயர்த்தும் தாத்பரியம் எனக்குப் புரியவில்லை.

சோஷலிஸ்டு வரலாற்றில் ஸ்டாலினின் இடத்தைக் காப்பாற்ற முனைந்த கட்டுரையில் எதற்கு காந்தி சாவு பற்றிய முன்னுரை என்பதும் எனக்குப் புரியாதது. தன் குழந்தைகளுக்கு உபநயனம் செய்வித்த, சாவர்க்கர் படத்தை நாடாளுமன்றத்தில் வைக்க ஆதரவு தெரிவித்த சோமநாத் சட்டர்ஜியையும் அத்வானியையும் ஒப்பிடக்கூடாது. (ஏனென்றால் சோமநாத் சட்டர்ஜி மீது கம்யூனிஸ்ட் என்ற லேபிள் தொங்குகிறது.) ஆனால், சோசலிஸ்ட் புரட்சித்தலைவர் ஸ்டாலினையும், ‘வர்க்க எதிரி ‘ ‘பார்ப்பன பனியா பிரதிநிதி ‘ காந்தியையும் இணையாகப் பேசலாமா ?

***

ஆனால், காலச்சுவடுக்கும் அடுத்து எச்சரிக்கை ஸ்டாலினிய பாணியில் வருகிறது.

எஸ் வி ராஜதுரை ஜனநாயகம் , பன்மைத்துவம் என்ற பெயரில் என்ன செய்யக் கூடாது என்று மிகத்தெளிவாகவே சொல்லி விடுகிறார். ஸ்டாலின் பற்றிய இருண்ட சித்திரத்தைத் தீட்டி தன்னுடைய ஜனநாயகத்தன்மையை காலச்சுவடு காப்பாற்றிக் கொண்டுவிடக்கூடாது என்ற கவலை எஸ் வி ஆருக்கு .

**

ஸ்டாலினிடம் 70 சதவீத உடன்பாடான அம்சங்கள் இருந்ததாக மாவோ ‘மதிப்பிடுகிறார் ‘. அருமை அருமை. எந்த உடன்பாடான அம்சங்கள் ? மாவோவிற்கு ஸ்டாலினை ஒத்துக் கொள்ளமுடியாத அந்த 30 சதவீதம் என்ன ? கோடிக்கணக்கில் மக்களைக் கொன்றதா ? அல்ல. சைபீரியாவில் ‘வர்க்க எதிரிகள் ‘ என்று பெயரிட்டு தன்னுடன் உடன்படாத தோழர்களை உழைப்பு முகாம்களில் அடைத்ததா ? அல்ல. பொருளாதாரம் ‘முதலாளித்துவ ‘ மதிப்பீடுகளைக் கொண்டிருந்ததாம். மனிதர்களை கோடிக்கணக்கில் கொல்லலாம். ஆனால் பொருளாதாரம் முதலாளித்துவ மதிப்பின் விதிக்கு கட்டுப்பட்டிருப்பதுதான் மாவோவின் பெரும் பிரச்னை. அதுதான் திரு எஸ் வி ராஜதுரை அவர்களின் பிரச்னையும் கூட. நீ எத்தனை பேரைக் கொன்றாய் என்பது என் பிரசினை அல்ல. சோஷலிசத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் உன் படுகொலைகளை மன்னித்துவிடலாம். ஆனால் பொருளாதாரத்தை முதலாளித்துவம் பாவிக்க மட்டும் விட்டு விடாதே என்பது தான் எஸ் வி ஆர் சொல்ல வருவது.

***

ஸ்டாலினின் சாதனைகள் மற்றும் மேதாவிலாசத்தை எஸ் வி ஆர் பட்டியலிடுகிறார்.

1) சோவியத் யூனியன் என்ற சாம்ராஜ்யத்தை 40 ஆண்டுகள் முட்டாளால் நிர்வகித்திருக்க முடியாது. (ஸ்டாலின் பாராட்டும் இவான் த டெரிபிளும் ஸ்டாலின் போலவே நிர்வகித்தற்காக பாராட்டு பெறுவாரா ? (இணைப்பு 1) 1547-1584 )

2) பாஸிஸ்டுகளை வீழ்த்திய பெருமை (சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் – முதலாளித்துவ , ஏகாதிபத்திய ஆட்கள் – இந்த பெருமையில் சேர்த்தியா என்று எழுதலாம்.)

3) நாற்பது வருடங்களாக ஜனநாயகம் சிறிது கூட அல்லாமல் தனிநபர் ஆட்சி செய்தது நிச்சயம் எஸ் வி ஆர் பாராட்டிற்குத் தகுதியானது தான். காஸ்ட்ரோ, ஃப்ரான்கோ நீரோவிற்கும், சவூதி அரேபியாவில் ஒற்றைக் குடும்ப ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ? சோஷலிசம் வாழ்க என்ற முழக்கம் தவிர ?

***

சோசலிஸத்துக்கான விளக்கத்தை 75 வருட பழைய வரிகளில் – ரொமாண்டிக் தன்மை தோய்ந்த , யதார்த்தத்துடன் தொடர்பற்ற முறையில் எழுதுகிறார் எஸ் வி ராஜதுரை.

‘வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத் தாழ்வுகளையும் பாலின ஒடுக்குமுறையையும் முடிவுக்குக் கொண்டுவந்து மானுட சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அதை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையே சோசலிசம். ‘

**

இதனை எப்படி ஸ்டாலின், லெனின், போல்போட், மாவோ ஆகியோர் சாதித்தனர், அல்லது சாதிக்க முயற்சித்தனர் என்பதை சற்றேனும் விளக்க முடியுமா ? மாவோவின் சீனாவிலும், காஸ்ட்ரோவின் கியூபாவிலும் , ஸ்டாலினின் கீழும் ‘மானிட சுதந்திரம் ‘ எப்படி உறுதிப்படுத்தப்பட்டது அல்லது விரிவுபடுத்தப்பட்டது என்று விளக்கவுரை எஸ் வி ஆர் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை. அப்படி விரிவடைந்த மானிட சுதந்திரத்தை மறுத்து ஏன் சாதாரண மக்கள் அயல்நாடுகளுக்கு அடக்குமுறையிலிருந்து தப்பவும், பிழைப்புத் தேடியும்ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எழுதினால் இன்னும் நலம்.

**

இன்னும் விவரிக்கிறார் எஸ் வி ராஜதுரை.

‘குடிமை உரிமைகளுக்கு சட்டவகைப்பட்ட உத்திரவாதங்கள்; முறையாகவும் அரசிடமிருந்து சுயேச்சையாகவும் சுயாதீனமாகவும் நிலவும் பொது மக்கள் கருத்து; மூடிய கதவுகளுக்குப் பின்னாலன்றி வெளிப்படையாக நடத்தப்படும் அரசியல்; ஒரு சுதந்திரமான பத்திரிகை உலகம்; பல்வேறு கருத்துகளுக்கு இடம் கொடுக்கக் கூடிய ஓர் அரசியல் கட்டமைப்பு ஆகியனதான் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலுமுள்ள அற்பத்தனமான அல்லது அப்பட்டமான சர்வாதிகாரங்களுக்கு முடிவு கட்டும்; திரை மறைவு சூழ்ச்சிகளின்ருந்தும் சொல்ஜாலப் புரட்டுகளின்ருந்தும் பொதுமக்களைக் காப்பாற்றும். அதாவது, பொதுவாகச் சொல்லப்போனால் நீதிக்கான தேடலையும் மானுடவாழ்வின் உண்மையான இலக்குகளுக்கும் இலட்சியங்களுக்குமான தேடலையும் அரசியல் செயல்பாட்டின் முதன்மையான குறிக் கோளாக ஆக்க வேண்டும். ஒப்பீட்டு நோக்கில் முன்னைக் காட்டிலும் கூடுதலான பொருளாதார வளர்ச்சியை, பொருளாதாரச் செழிப்பை, பொருள்களின் பகிர்வில் ஓர் அதிகரிப்பைச் சோசலிசம் இல்லாமலேயே சாதிக்க முடியும். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் இதைத்தான் செய்துள்ளன. ஆனால் மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள் வெறும் பொருள்களுக்கிடையே உள்ள உறவுகளாக, அவர்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ளும் உறவுகளாக இருப்பதை மாற்றியமைத்து அவற்றை மானுடத்தன்மையாக்குவதே சோசலிசம். ‘

**

பொருளாதார வளர்ச்சியை , பொருளாதாரச் செழிப்பை , பகிர்வில் அதிகரிப்பை சோசலிஸம் இல்லாமலேயே சாதிக்க முடியும் என்றும், பல்வேறு வழிமுறைகளில் சாதிக்க முடியும் என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார் திரு எஸ் வி ராஜதுரை அவர்கள். ஆனால் ஒரே விஷயம் ‘ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ளும் உறவுகளாக இருப்பதை மாற்றியமைத்து அவற்றை மானுடத்தன்மையாக்குவதே சோசலிஸம் ‘ என்று வரையறுக்கிறார்.

இரண்டு மனிதர்களுக்கு இடையேயான ஒரு உறவு பொருள்களுக்கு இடையேயான உறவு அல்லது பொருள்களுக்கு இடையேயான உறவு அல்ல என்பதை எங்ஙணம் நிரூபிப்பீர்கள் ? ஒரு உறவு மானுடத்தன்மையானது என்பதன் அறிகுறி என்ன ? அப்படிப்பட்ட உறவுகள் இன்று இல்லை என்பதற்கோ அல்லது எப்போதும் இருந்ததில்லை என்பதற்கோ அல்லது உங்களது சோசலிஸக் கனவுலக சமுதாயத்தில் இருக்கும் என்பதற்கோ என்ன நிரூபணங்கள் ?

அப்படிப்பட்ட மானுடத்தன்மை வாய்ந்த உறவுகளை நிறுவுவதற்கு செய்யப்பட்ட அனைத்து சோசலிஸ முயற்சிகளும் ஏன் பெரும் இனப்படுகொலைகளிலும், அழிவுகளிலும் முடிந்திருக்கின்றன. ? குடும்பம் என்பதே அடக்குமுறைவடிவம் என்று கருதி, குடும்பம் இருப்பதால்தான் உறவுகள் மானுடத்தன்மை கொண்டவையாக இல்லை என்று கருதி மாவோயிஸமும் அதன் துணை போல்போட்டும் குடும்பங்களை அழித்தனர். அப்படிப்பட்ட அழிவு தெரியவந்தபோது, இதே ஸ்டாலினிஸ்டுகளும், போல்போட்டிஸ்டுகளும் போல்போட் ஒரு கம்யூனிஸ்டே இல்லை என்ற ஆகாசப்புளுகை மேற்கொண்டனர். குடும்ப உறவுகள் என்ன எழவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். தயவு செய்து இப்படிப்பட்ட வீணாய்ப்போன கனவுகளில் இளைஞர்களை மூழ்கடித்து நாசம் செய்யாதீர்கள்.

**

எல்லா மதபோதனைகளும் விசுவாசக்கூட்டங்களும் இப்படி வேதப்புத்தகங்களை மேற்கோள் காட்டாமல் முடியக்கூடாதே என்று கார்ல் மார்க்ஸ் மேற்கோளைக் காட்டியிருக்கிறார் திரு எஸ் வி ராஜதுரை அவர்கள். நிச்சயம் சோசலிஸம் ஸ்டாலினிஸத்தோடு முற்றுப்பெறவில்லை. அது வருத்தம் தரும் விஷயம்தான். போல்போட், மாவோ, ஸ்டாலின் , காஸ்ட்ரோ, வடகொரியா, கம்யூனிஸ்ட் பேரைத் தக்க வைத்துக்கொண்டு மூலதனத்தைப் பேணும் இன்றைய சீனம் போன்றவை கட்டமைத்த சோசலிஸ சமூகங்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களிலேயே மிகவும் இருண்ட பக்கங்கள். ஆனால், அதனை உருவாக்க வழி அமைத்துத் தந்த மார்க்ஸிஸமும், லெனினிஸமுமே மிகப்பெரிய குற்றவாளிகள். அந்த கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் எஸ் வி ராஜதுரை போன்றவர்களே , இந்த நசிவுக் கருத்துகளுக்கு அறிவின் அரண் கொடுத்து தூக்கி நிறுத்துவதால், குற்றவாளிகள். அவரை எதிர்த்து எழுதும் நானும் என் பங்குக்கு ஒரு கார்ல் மேற்கோளை சுட்டிக்காட்டுகிறேன். கார்ல் மார்க்ஸ் அல்ல கார்ல் பாப்பர்.

Love, Trust, Happiness, Subjective Values, Moral Duty, Constitution

This, of course, is not the only argument against the idea of a rule of love. Loving a person means wishing to make him happy. (This, by the way, was Thomas Aquinas ‘ definition of love.) But of all political ideals, that of making the people happy is perhaps the most dangerous one. It leads invariably to the attempt to impose our scale of `higher ‘ values upon others, in order to make them realize what seems to us of greatest importance for their happiness; in order, as it were, to save their souls. It leads to Utopianism and Romanticism. We all feel certain that everybody would be happy in the beautiful, the perfect community of our dreams. And no doubt, there would be heaven on earth if we could all love one another. But, as I have said before (in chapter 9), the attempt to make heaven on earth invaliably produces hell. It leads to intolerance. It leads to religious wars, and to the saving of souls through the inquisition. Ant it is, I believe, based on a complete misunderstanding of our moral duties. It is our duty to help those who need our help; but it cannot be our duty to make others happy, since this does not depend on us, and since it would only too often mean intruding on the privacy of those towards whom we have such amiable intentions. The political demand for piecemeal (as oposed to Utopian) methods corresponds to the decision that the fight against suffering must be considered a duty, while the right to care for happiness of others must be considered a privilege confined to the close circle of their friends. In their case, we may perhaps have a certain right to try to impose our scale of values—our preferences regarding music, for example. (And we may even feel it our duty to open to them a world of values which, we trust, can so much contribute to their happiness.) This right of ours exists only if, and because, they can get rid of us; because friendships can be ended. But the use of political means for imposing our scale of values upon others is a very different matter. Pain, suffering, injustice, and their prevention, these are the eternal problems of public morals, the `agenda ‘ of public policy (as Bentham would have said). The `higher ‘ values should very largely be considered `non-agenda ‘, and should be left to the realm of laissez-faire. Thus we might say: help your enemies; assist those in distress, even if they hate you; but love only your friends.

(chapter 24 : The revolt against reason)

‘ எல்லா அரசியல் நோக்கங்களிலும் மிகவும் அபாயமான நோக்கம் மக்களை மகிழ்ச்சியானவர்களாக ஆக்கும் நோக்கமே. இது வேறு வழியின்றி, நமது ‘உயர்ந்த ‘ நியமங்களை மற்றவர்கள் மீது திணிக்கும் முயற்சிக்கே இட்டுச் செல்கிறது; அவர்களது மகிழ்ச்சிக்கு எது மிகவும் முக்கியமானது என்று நாம் கருதுகிறோமோ அதனை அவர்களும் அறிந்து கொள்ள வேண்டியும் அவர்களது ஆன்மாக்களை காப்பாற்றவும் முனைகிறது. இது உடோபியனிஸத்துக்கும் ரொமான்டிஸிஸத்துக்கும் ( கனவுவாதத்துக்கும் ) இட்டுச் செல்கிறது. நமது கனவில் தோன்றும் சமூகத்தில் எல்லோரும் மிகவும் சந்தோஷமாக அழகாக இருப்பார்கள் என்று உணர்கிறோம். சந்தேகமின்றி ஒருவரை ஒருவர் அன்புசெலுத்தினால் பூமியில் சொர்க்கம் தோன்றும். நாம் முன்னமே அத்தியாயம் 9 இல் எழுதியதுபோன்று, சொர்க்கத்தை பூமியில் படைக்க விரும்பும் அனைத்து முயற்சிகளும் வேறுவழியின்றி நரகத்தையே உற்பத்தி செய்கின்றன. இது சகிப்புத்தன்மையை அறவே அழிக்கிறது. இது மதப்போர்களுக்கும், மதவிசாரணை inquisition மூலம் ஆன்மாக்களை ‘காப்பாற்றவும் ‘ இட்டுச்செல்கிறது. இதற்கு நமது ஒழுக்க கடமைகளை மிகமிகத்தவறாகப் புரிந்துகொண்டதுதான் காரணம் என்று கருதுகிறேன். யாருக்கு உதவி வேண்டுமோ அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். மற்றவர்களை மகிழ்ச்சியாக ஆக்குவது நமது கடமை அல்ல. ஏனெனில் அது நம்மைச் சார்ந்து இல்லை. நாம் யார் மீது நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கிறோமோ அவர்களது சொந்த அந்தரங்கத்துக்குள் நுழைவதையே இது பெரும்பாலான நேரங்களில் குறிக்கிறது. துன்பங்களுக்கு எதிரான போரில் நாம் அரசியல் பூர்வமாக போராடுவது நமது கடமை. ஆனால் மற்றவர்களது சந்தோசத்துக்காக வேலை செய்வது என்பது அவர்களது நெருங்கிய நண்பர்களுக்கு அவரவர்கள் கொடுத்திருக்கும் சலுகை. அங்கு ஒருவேளை அந்த நண்பர்கள் தங்களது நியமங்களை தங்கள் தங்கள் நண்பர்கள் மீது திணிக்கலாம். (உதாரணமாக இசை பற்றிய மதிப்பீடுகள்) அது அவர்களது மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் எனக் கருதலாம். இந்த உரிமை இருப்பதன் ஒரே காரணம் நண்பர்களை விரட்டிவிடலாம் என்பதால்தான். ஏனெனில் நட்புகள் முடிக்கப்படலாம். ஆனால், நமது நியமங்களை மற்றவர்கள் மீது திணிப்பதற்கு அரசியல் வழிகளை நாடுவது என்பது வேறு விஷயம். ‘

**

உண்மையான மானுட சுதந்திரம் என்று தம்முடைய கைகளில் ஒரு புத்தகத்தை உயர்த்திப் பிடித்து , இதில் எழுதியதே நிரூபணம் என்று மதவாதிகளும், மதவாதப் போர்வையற்ற மதவாதிகளும் பல காலமாக நம்மிடம் பலவேறு போதனைகளை செய்துவந்திருக்கிறார்கள். அன்றாடப் பிரச்னைகளின் நெருக்கடியும் மோசமான சமூக நிலைகளும் இந்த போதனைகளுக்கு பல வேளைகளில் ஏராளமான ஆதரவை மக்களிடம் உருவாக்கியிருக்கின்றன. ஆனால் இந்தப் புத்தகங்கள் சொல்லும் மானிட சுதந்திரங்கள் இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகளே என்பது அனுபவித்தவர்களே கூறினாலும் அது மண்டைக்கு ஏறாத பல அறிவுஜீவிகள் இன்னும் இதுபோன்ற போதனைகளை கடவுள் காட்டும் சொர்க்கம், வரலாற்று பொருள்முதல் வாதம் காட்டும் சொர்க்கம் என்று பரப்பி வருகிறார்கள். அவை இன்னும் இன்னும் நரகத்துக்கே இட்டுச் செல்கின்றன. இவையே வர்க்க எதிரிகளைக் களை எடுப்பதையும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களைக் கொல்வதையும், நியாயப்படுத்திவிடுகின்றன. அதுவே இன்னும் விரிந்து, நான் கொல்வது நல்லதற்கு அவன் கொல்வது கெட்டதற்கு என்று கொலைகளையும் ரத்த ஆறையும் நியாயப்படுத்தவும் அறிவுஜீவிகளை தூண்டுகின்றன.மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் நாங்கள் மக்களை தேர்ந்தெடுக்கிறோம் என்பதே இவர்களது கோஷமாக இருந்துவருகிறது. கடந்த காலத்தை மட்டுமே ஆராய முடியும். எதிர்காலத்தைக் கணித்து ‘விஞ்ஞான ரீதியாகச் ‘ சொல்வது அனைத்துமே ஜோதிட வகையறாக்களே என்பது சற்று சிந்திப்பவர்களுக்குக் கூடத் தெரியும். ஆனால் சீரிய மூளை உள்ளவர்கள் கூட, வார்த்தைகளாலும், வாய்ப்பாடுகளாலும் கோஷங்களாலும் மூளைச் சலவைச் செய்யப்பட்டுவிடுகிறார்கள். சோஷலிச ‘நம்பிக்கை ‘ , மார்க்ஸிய ‘ நம்பிக்கை ‘ மறைந்தபாடில்லை.

கருத்துருவங்களின் மையத்திற்கு அப்பால் இடதுசாரி இயக்கங்கள் பலவும் இந்தியச் சூழலில் ஜனநாயகப்படுத்துதலையும், நிலச்சீர்திருத்தங்களையும், தொழிற்சங்க உரிமைகளையும் சாதித்துள்ளன என்று தான் நான் கருதுகிறேன். ஆனால், வெகுஜன செயல்திட்டங்களில் நம்பிக்கையற்ற எஸ் வி ஆர் போன்றவர்கள் உயர்த்திப் பிடித்த விளிம்பு நிலை இடதுசாரி இயக்கங்கள் , கருத்துப் போராட்டங்கள் என்ற பெயரில் நிகழ்த்திய ஸ்டாலினிசச் சார்பு நிலைகள், வன்முறை இயக்கங்கள் மக்களை இடதுசாரி இயக்கங்களிலிருந்து அன்னியப் படுத்தி விட்டன என்பதும் என் எண்ணம்.

புஷ்ஷின் ஏகாதிபத்திய அபிலாஷைகளைப் பூச்சாண்டி போல் காட்டி ஸ்டாலினிசத்திற்கு அணி சேர்ப்பது, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுக்கு என்றும் உதவப் போவதில்லை. புஷ்ஷின் அமெரிக்க மேலாண்மைக்கு மாற்று , வர்க்கப் போராட்டம் என்ற பெயரில் நிறுவப்படும் சர்வாதிகாரம் அல்ல.

**

http://www.geotamil.com/pathivukal/yamunaonsurya.html

நானும் ஸ்டாலினிஸ்ட் தான் என்ற யமுனா ராஜேந்திரனின் வாக்குமூலம்.

இணைப்பு 1

http://www.revolutionarydemocracy.org/rdv3n2/ivant.htm

செர்ஜி ஐஸன்ஸ்டானும் ஸ்டாலினும் பேசுவதன் மொழிபெயர்ப்பு .செர்ஜி ஐஸன்ஸ்டான் எடுத்த இவான் தி டெரிபிள் என்ற படத்தைப் பற்றிப் பேசும்போது சொன்ன வாக்கியங்கள் இவை. இவான் தி டெரிபிள் படம் ஸ்டாலினைப் பகிடி செய்வதாய் உள்ளது என்பதால் சோவியத் யூனியனில் தடை செய்யப்பட்டதும் உண்டு.

Stalin. Your tsar has come out as being indecisive, he resembles Hamlet. Everybody prompts him as to what is to be done, and he himself does not take any decision… Tsar Ivan was a great and a wise ruler, and if he is compared with Ludwig XI (you have read about Ludwig XI who prepared absolutism for Ludwig XIV), then Ivan the Terrible is in the tenth heaven. The wisdom of Ivan the Terrible is reflected by the following: he looked at things from the national point of view and did not allow foreigners into his country, he barricaded the country from the entry of foreign influence. By showing Ivan the Terrible in this manner you have committed a deviation and a mistake.

(ஸ்டாலின் : உங்கள் ஜார் ஹாம்லெட் போன்று முடிவுகள் எடுக்கத் திணறும் ஒரு ஆளாய் சித்தரிக்கப் பட்டுள்ளான். மற்றவர்கள் சொல்லைக் கேட்டு தீர்மானங்கள் செய்வது போலும், தானாய் தீர்மானிக்க முடியாதவனாய்க் காட்டியுள்ளீர்கள். ஜார் இவான் சிறந்த , அறிவுக்கூர்மையுள்ள அரசன். 11-ஆம் லுட்விக் அரசனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெரியும். இவான் தி டெரிபிளின் அறிவுக் கூர்மையை இது கொண்டு மதிப்பிடலாம். : அவன் தேசீய நலனை முன்வைத்து செயல் பட்டான், வெளிநாட்டினரை உள்ளே விடவில்லை. வெளிநாட்டுப் பாதிப்பு இல்லாமல் நாட்டைப் பாதுகாத்தவன். இவான் தி டெரிபிளை இப்படிக் காட்டியதன் மூலம் நீ தவறு செய்திருக்கிறாய்.)

**

கார்ல் பாப்பரின் மேற்கோள்:

http://members.mcnon.com/potatis/Q.Popper.html

****

ஸ்டாலின் பற்றிய சிறு குறிப்பு:

http://www.biography.com/search/article.jsp ?aid=9491723

—-

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்