தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

சின்னக் கருப்பன்


தனிமனிதர் ஆட்சி செய்யக்கூடாது சட்டம் ஆட்சி செய்யவேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு ரீதியான ஜனநாயக ஆட்சிமுறை.

இன்று அரசியலமைப்புச் சட்டத்தில் செருகப்படும் இடைச்செருகல்கள் போடா ஆகவும், கஞ்சா கேஸ்களாகவும், சந்தேகக்கேஸ்களாகவும் சட்டத்தை மதிக்காமல் தனிமனித ஆட்சி நடத்த ஏதுவாகின்றன.

இப்படிப்பட்ட சட்டங்கள் அடிப்படை உரிமைகள் மீதான அடிப்படையில் பரிசோதிக்கப்படவேண்டும். அடிப்படை உரிமைகளை புதிய சட்டங்கள் மீறும்போது அவை உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படவேண்டும்.

இன்று போடாவும், சந்தேகக்கேஸ்களும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களும் எதிர்கட்சியினரை துன்புறுத்தத்தான் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை அறிய பெரும் ஞானம் வேண்டாம். வெண்கலக்கடையில் யானை போல தெளிவாகக் கேட்கும் விஷயம் இது.

ஜெயலலிதா அரசு சட்டத்தை மீறுகிறது, சட்டத்தை வளைக்கிறது. சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகிறது என்பது தெரிந்தும். மத்திய அரசு வாளாவிருக்கிறது. மத்திய அரசு கைகட்டி நின்று கொண்டிருப்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள். அதில் தலையாயது, மத்திய அரசுக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லை என்பது. மூன்று மடங்கு ஜெயலலிதா ஆட்சியான லல்லு பிரசாத் ஆட்சியை தூக்க முடியவில்லை தேசிய முன்னணி கூட்டணியால். காங்கிரஸ் அரண் போல இருந்து லல்லுபிரசாத் ஆட்சியை காப்பாற்றுகிறது. ஜெயலலிதா ஆட்சியும் அதுபோன்றதே. சொல்லப்போனால், பலவிதமான காரணங்களால், இந்த அரசால் ஒருமுறைகூட ஒரு மாநில அரசை கலைக்கவும் இல்லை, பீகாரில் கலைக்க விரும்பியும் முடியவில்லை, கலைஞர் ஆட்சியை கலைப்பதற்கு ஒரு உத்திரவாதம் கொடுக்கமுடியாது என்று தன்னுடைய அரசையே மத்தியில் பாஜக இழந்தது.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பது போல, அஞ்ச வேண்டாதவைக்கு அஞ்சுவதும் பேதமை. ஜெயலலிதா ஆட்சி உடனே பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். வெளிப்படையான போலீஸ் அராஜகங்கள், முதலமைச்சருக்கு எதிரான வழக்குகளில், முதலமைச்சரால் நியமிக்கப்படும் அரசாங்க வழக்கறிஞரே, முதலமைச்சருக்கு எதிராக வாதாடுவது, சட்டத்துக்கு புரம்பான நடவடிக்கைகளை அரசே செய்வது, பாரம்பரியம் மிக்க கட்டிடங்களை உடைப்பது, மக்கள் எதிர்ப்பு சட்டங்களை விவாதங்கள் இன்றி நிறைவேற்றுவது, எதிர்கட்சியினரை சட்டசபையில் பேசமுடியாமல் தூக்கி எறிவது ஆகியவை கண்டும் இங்கு ஒரு ஜனநாயக அரசு நடக்கிறது என்று பேசுபவர்களை என்ன சொல்ல ?

சட்டத்தின் ஓட்டைகள் எல்லாவற்றையும் அரசியல் சட்டம் எழுதிய நாளன்றே பரிசுத்தமாக, அடைத்திருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அனுபவம், ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் ஒவ்வொரு பாடம். அந்த பாடத்தின் வழியே ஜனநாயகரீதியில், சட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற நோக்கில் திருத்தி எழுதப்படும் சட்டங்கள்… இவைதான் ஜனநாயகத்தின் ஊற்றுகள். இந்த ஊற்றுகள் அடைத்துக்கொள்ளும்போது வெகுவிரைவிலேயே அது வேறொரு இடத்தில், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற மக்களின் வன்முறையாக புட்டுக்கொள்ளும்போது, அதனையும் அரசாங்க வன்முறை கொண்டு அடைக்க முயலும்போது இன்னும் அவநம்பிக்கையையும் வன்முறையையுமே விளைவிக்கும்.

அதனைத்தான் நம் ஊரில் பழமொழியாக சொல்லிவருகிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தலைவிரித்தாடும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு அது ஞாபகம் இருக்கவேண்டும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. பட்டும் தெரியவில்லை என்றால் என்ன சொல்ல ?

***

தா கிருட்டிணன் கொலை எந்த அளவுக்கு வன்முறை கலாச்சாரம் புரையோடிப்போய் இருக்கிறது என்பதைத்தான் சொல்கிறது. ஒரு சாதாரண உள்கட்சித் தேர்தலில் இத்தனை வன்முறையா ? ஏன் இதற்கு போட்டா போட்டி ? உள்கட்சித்தேர்தலில் ஜெயிப்பதால் என்ன நன்மை ? அடுத்த தேர்தலில் நிச்சயம் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பதால் இத்தனை போட்டியா ?

நியாயம் செய்யப்படுவது மட்டுமல்ல, நியாயம் வழங்கப்படுகிறது என்ற எண்ணமும் மக்களிடையே எழுவது மிகவும் அவசியம். தா கிருட்டிணன் கொலையில் மு க அழகிரி மீது உண்மையிலேயே சந்தேகம் எழுந்திருந்தால் அந்தக் காரணத்தாலேயே, அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அதுதான் ஓர் உண்மையான ஜனநாயக அரசின் செயல்பாடாய் இருக்க முடியும்.

ஒரு தனிமனிதர் கொலை செய்யபப்டுவது என்பது எந்தக் கலாசாரத்திலும் தவிர்க்க முடியாது. ஆனால் அரசியல் கொலை என்பது மாஃபியா கொலைக்கு ஒப்பான ஒரு குழுச்சண்டையின் எதிரொலி. அதனாலேயே அப்படிப் பட்ட கொலைகள் மிகத் தீவிரமான உத்வேகத்துடன் நியாய உணர்வுடன் அணுகப்படவேண்டும். இந்தத் தீவிரம் என்பது உடனே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அடுத்த குழுவின் தலைவரைக் கைது செய்வது மட்டுமல்ல.

தமிழ்நாடு ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமென்றால், தலைவர்கள் ஜனநாயக அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆளும் கட்சி ஆகிவிட்டதாலேயே வானுயர அதிகாரம் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, ஆட்டம் போடுவது சரியல்ல. கருணாநிதி குடும்பத்தைப் பழிவாங்கும் ஒரே நோக்கத்துடன் ஜெயலலிதா செயல்படவேண்டும் என்று ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

இந்த அராஜகங்கள் ஒழிய வேண்டும் என்றால் ஒரே வழி, காவல் துறையை சுதந்திரமான துறையாக, நீதித்துறையைப் போன்றே ஆக்கினால் தான் ஜனநாயகம் காப்பாற்றப் படும். சொல்லப் போனால் காவல் துறை அரசியல்வாதிகளின் கீழே இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு கடந்த 50 ஆண்டுக்கால இந்திய வரலாறு சாட்சி சொல்கிறது. ஆட்சியில் இருப்பவர்களின் அராஜகத்தைக் காணாமல் இருப்பதும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் கிளையாக காவல் நிலையங்கள் செயல்படுவதையும் தடுக்க இது ஒன்றே வழி.

***

திமுக இன்று குடும்பக்கட்சியாகி வருகிறது என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஏற்கெனவே ஆகிவிட்டது என்றுதான் சொல்வார்கள்.

இன்று திமுகவின் பின்னே நிற்பவர்கள் அண்ணாவின் நினைப்பாலும், பெரியாரின் நினைப்பாலும், கருணாநிதி என்ற பெரும் போராட்டக்காரரும் பேச்சாளியின் ஞாபகத்தாலும் நிற்பவர்கள்தான். அவர்களுக்கு இன்று முக அழகிரி பின்னாலும் ஸ்டாலின் பின்னாலும் நின்று நிலையை காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு வந்தபின்னால், ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் என்ன உறவு என்று கேட்கலாம். சோனியா காந்திக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவுதான்.

ஒரு புறம் நம் மக்களால், இன்னும் மன்னராட்சியை மறக்கமுடியவில்லையோ எனத் தோன்றுகிறது. இந்த மன்னருக்கு நான் ராஜ விசுவாசி அந்த மன்னருக்கு அவர் ராஜ விசுவாசி என்ற அளவுக்கு நாம் ஜனநாயகத்தை புரிந்து வைத்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இந்த புற்றுநோய் எங்கிருந்து ஆரம்பித்தது ? நேரு தன் மகளை காங்கிரஸில் திணித்தபோது அல்லது காமராஜ் நேருவின் மகளை காங்கிரஸ் பிரதமராக்கியபோது நிகழ்ந்தது என்றுதான் தோன்றுகிறது. இன்று ஜாதிவாரியாக தமிழகத்திலிருந்து உத்தரபிரதேசம் வரைக்கும் கட்சிவிசுவாசம் பிரிந்து கிடக்கிறது.

இந்த மொழிவாரி மன்னராட்சி வம்சங்களை ஒழிக்க, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களை இன்னும் சின்னதாக இரண்டாக மூன்றாக உடைக்கவேண்டும். அதுவே மக்கள் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அரசுகள் தோன்ற முடியும் எனத் தோன்றுகிறது. இந்தியா டுடே இதழில் செய்த ஆராய்ச்சிப் படி சிறு மாநிலங்களே வெகுவாக மக்கள் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றன.

தமிழகம் பாண்டித்தமிழகமாகவும், சோழத்தமிழகமாகவும், பல்லவத்தமிழகமாகவும் பிரிந்தால் நல்லதுதான். (சேரத்தமிழகம் ஏற்கெனவே கேரளாவாக ஆகிவிட்டது.. அதனையும் இரண்டாக உடைத்தால் இன்னும் நிம்மதி). ஒவ்வொரு பிள்ளையையும் ஒவ்வொரு பகுதிக்கு ராஜாவாக பட்டம் கட்டி விட முயற்சி நடக்கத்தான் செய்யும். அதனைத் தாண்டி கொஞ்சம் ஜனநாயகப்படுத்தல் நடக்கவும் வாய்ப்பு இன்றைய நிலையை விட அதிகமாகவே இருக்கும்.

****

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்