இந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

சின்னக்கருப்பன்


ஜெயலலிதாவின் வெற்றி

40 சதவீதத்துக்கும் மேற்பட்டு கிரிஸ்தவர்கள் வாழும் சாத்தன்குளத்தில் (சாத்தான்குளம் தேவன்குளம் இன்ன வகையறா இல்லை. சீத்தலை சாத்தனார் மாதிரியான ஒரு சாத்தன் வெட்டிய குளம்) ஜெயலலிதாவின் வெற்றி பலருக்கும் இன்னும் புரிபடாமல் இருக்கிறது. எல்லா சர்ச்சுகளிலும் வெளிப்படையாக ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று பாதிரியார்கள் பேசினார்கள். சர்ச்சுக்கு ஓட்டு கேட்டு வந்த அதிமுக ஆட்களை விரட்டினார்கள். வழக்கம்போல அரசாளும் கட்சிக்காக தகிடுதித்தங்கள் நடந்தாலும், பெருவாரியான வாக்குகள் அதிமுகவுக்கே விழுந்து அதிமுக ஜெயித்திருக்கிறது. ஜாதிமதம் பார்க்கக்கூடாது என்று பேசியவர்கள் தெளிவாக கிரிஸ்தவர்கள் அதிமுகவை புறக்கணிக்க வேண்டும் என்று பேசினார்கள். இந்து ஓட்டு வங்கியை ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பியவர்கள், ஜாதிமத பேதம் பார்க்காமல் அதிமுகவுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று பேசினார்கள். வினோதமான காட்சிகளுக்கு இடையில் பொதுமக்கள் வேறொரு விஷயத்துக்காக அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். எம்ஜியாரின் பெண்கள் ஓட்டு, இன்று ஆண்களை காலடியில் கும்பிடவைக்கும் ஒரு பெண்ணுக்காக போகிறது என்றே என் கருத்து. ஜாதி மதம் அல்ல இங்கு முக்கியம். ஆண் பெண் பேதம் முக்கியமாகிவிட்டது என்றே நான் கருதுகிறேன். (நான் எந்த கருத்துக்கணிப்பும் எடுக்கவில்லை. எடுத்தாலும் அது உண்மையாக இருக்காது என்றே நினைக்கிறேன்) என் நண்பர் இந்த செய்தியைக் கேட்டுவிட்டு, திமுக ஜெயிக்க வேண்டுமென்றால் கனிமொழியை திமுகவுக்குக் கொண்டுவர வேண்டுவதுதான் வேறு வழியில்லை என்றார். வந்தாலும் உதவாது. கனிமொழியின் காலில் ஆண்கள் விழுவது போல போட்டோ எடுத்து பத்திரிக்கையில் வெளியிட்டால் ஒழிய. சுயமரியாதை இயக்கம் தலைகீழாகிவிட்டது.

***

மாயாவதியின் அப்பட்டமான ஊழல்

மாயாவதிக்கு அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு அவருக்கு தலித்துகள் மத்தியில் வெகுவாக ஆதரவு பெருகும் என்றே கருதினேன். அது உண்மைபோல, அமேதி பாராளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதியில் அவரது பகுஜன் கட்சி வெற்றிவாகை சூடியிருக்கிறது. (பாஜகவும் போட்டியிட்டு மூன்றாவதாக வந்தது). ஆனால், சமீபத்தில் அவர் வீடியோவில் பதிவு செய்யும் அளவுக்கு பொதுவாழ்வு ஒழுக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து, எம்எல்ஏக்கள் அவர்கள் தொகுதி முன்னேற்றத்துக்கு அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் ஒரு பகுதியை பகுஜன் கட்சிக்குக் கொடுக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார்.

சட்டமன்றத்தில் ‘அந்த வீடியோவில் இருப்பது நானே அல்ல ‘ என்றும் உளறியிருக்கிறார். எல்லாம் கேட்டுப்பழகியதுதான். வீரப்ப மொய்லி அந்த ஒலிநாடாவில் பேசியிருப்பது நானே அல்ல என்று ஆரம்பித்தது, இன்று அந்த கையெழுத்து நான் போடவில்லை, அந்த வீடியோவில் இருப்பது நானல்ல என்று பரிணமித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் போனால், அந்த 5 வருடம் நானே ஆளவில்லை, அது வேறு யாரோ எனக்குத் தெரியாது. இப்போது நான் கேட்கிறேன், எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்பார்களோ என்னவோ ?

இரட்டையரில் ஒருவனைப்பார்த்து, ‘உன் சகோதரன் செத்துப்போய்விட்டான் என்று கேள்விப்பட்டேனே, செத்துப்போனது நீயா, உன் தம்பியா ? ‘ என்று கேட்டதுபோல நம்மை தலையை பிய்த்துக்கொள்ளும்படி ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை போலிருக்கிறது இந்த அரசியல்வாதிகளுக்கு.

மாயாவதி பதவி இறங்கவேண்டும். பகுஜன் கட்சியில் இருந்து வேறொருவர் முதலமைச்சராக வேண்டும். சமீபத்தில், என் ஜாதிக்காரன் என்றால் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம் என்ற குரலும், தலித்துகள் தவறு செய்தால் அதனைக் கண்டுகொள்ளக்கூடாது என்றும் ஒரு குரல் வந்துகொண்டிருக்கிறது. இரண்டுமே சரியல்ல. தலித்துகளால் பொது வாழ்வில் ஒழுக்கமாக இருக்கமுடியாது என்ற சாதிய சிந்தனையே அதன் அடித்தளம்.

***

சவர்க்கர் படத்திறப்புவிழா குழப்பங்கள்

வீர சவர்க்கர் என்றழைக்கப்படும் வினாயக் தாமோதர் சவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். இந்துத்வா என்று இன்றழைக்கப்படும் அரசியல்கொள்கைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர். ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களில் ஒருவர். காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆதாரம் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டவர். நாதுராம் கோட்ஸே சவர்க்கரின் செக்ரரட்டரியாக இருந்தான்.

அவரது படத்தை பாராளுமன்றத்தில் திறக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் பாராளுமன்ற குழுவில் இருந்த காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் முடிவெடுக்கும்போது ஆதரித்துவிட்டு, படத்தை திறக்கும்போது ஜனாதிபதியை அதில் கலந்துகொள்ளக்கூடாது என்றும், திறப்புவிழாவின்போது பகிஷ்காரமும் செய்வது பரிசுத்தமான சாக்கடை அரசியல். பாராளுமன்றக்குழு முடிவு செய்யும்போதே தங்கள் எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டும், அரசியல்வாதிகளுக்கு வாயா இல்லை. திறப்பு விழா அன்று, இப்படி கத்தினால் யார் ஒப்புக்கொள்வார்கள் ? சொல்லும் காரணங்களோ அபத்தமானவை. காந்திகொலைக்கு சவர்க்கர் காரணம் என்று யாரும் சொல்லவில்லை. ஏனெனில் அது நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்படவில்லை. அவர் ஆங்கில அரசுக்கு மன்னிப்பு கோரும் கடிதம் எழுதிக்கொடுத்து வெளியே வந்தவர் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் கப்பலோட்டிய தமிழனையும் நாம் கவுரவிக்க முடியாது. வஉசியாவது வெளியே வந்ததன் பின்னர் எழுதிக்கொடுத்தபடி அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். சவர்க்கர் எழுதிக்கொடுத்து வெளியே வந்தும் தன் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியாவின் சுதந்திரம் கருதி செய்துகொண்டுதான் இருந்தார். (சொன்ன சொல் தவறிவிட்டார் என்றாவது காரணம் சொல்லியிருக்கலாம்) வன்முறை மூலம் இந்திய சுதந்திரம் பெற்றாலும் தவறில்லை என்றுதான் கருத்துக்கொண்டிருந்தார். அது தவறு என்ற காரணமென்றால், பகத் சிங்கையும் நாம் கவுரவிக்க முடியாது. பிரிட்டிஷாருக்கு மன்னிப்புகடிதம் எழுதிக்கொடுத்து உயிர்தப்பித்ததை உபாயமாகக் கருதிய சவர்க்கருக்கு தகுதி இல்லையென்றால், பாகிஸ்தான் கொள்கையை முன்னிருத்தி சுதந்திரம் வருவதற்கு முன்பே லாகூருக்குச் சென்றுவிட்ட இக்பால் பாடிய சாரே ஜஹாங் சே அச்சாவை ஏன் இந்தியா முன்னிருத்த வேண்டும் ? திராவிடஸ்தான் கேட்ட பெரியாருக்கு என்ன மதிப்பு ? வெள்ளையருக்கு ஆதரவாக இருந்த பெரியாரையும் அம்பேத்காரையும் அங்கீகரிக்கும் இந்தியா ஏன் சவர்க்கரை அங்கீகரிக்கக்கூடாது ? தலித்துகளுக்கு கல்வி கொடுத்ததற்காக பிரிட்டிசார் மீது கோபம் கொண்டு ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன் கவுரவிக்கப்படும்போது தலித்துகள் கோவில் பூசாரிகளாக வேண்டும் என்று போராட்டம் செய்த சவர்க்கர் ஏன் கவுரவிக்கப்படக்கூடாது ? இஸ்லாமியர்களையும் கிரிஸ்துவர்களையும் உண்மையான இந்தியர்கள் இல்லை என்று சொன்னார் என்றால், அதற்கு அவர் வாழ்ந்த காலகட்டத்தையும், அன்று இந்து முஸ்லீம் கலவரத்தையும், கிரிஸ்துவர்கள் பிரிட்டிஷார் ஆதரவில் உயர்பதவிகளில் இருந்ததையும் அல்லவா கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் ? .ஒவ்வொரு கட்சியினருக்கும் வணங்க வேண்டிய சிலைகள் இருக்கின்றன. அவரவர் ஆட்சிக்கு வரும்போது அந்தந்த பிம்பங்களை உயர்த்துகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சோஷலிஸ்ட் யாருமே விதிவிலக்கல்ல. இதுவரை காங்கிரஸ் கட்சியின் பிம்பங்களான நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் முதன்மைப்படுத்தப்பட்டு, நேதாஜி, பட்டேல், சாஸ்திரி ஆகியோர் உதாசீனம் செய்யப்பட்டார்கள். இப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்கள் முன்னிறுத்தப்பட்டு காங்கிரஸ் பாரம்பரிய பிம்பங்களின் இலையுதிர்காலம்.

என்னைக்கேட்டால், பாகிஸ்தானிய மாநிலங்கள் இந்தியாவோடு சேருமென்றால், முகம்மது அலி ஜின்னாவுக்கும் மரியாதை செய்வதில் தவறில்லை என்பதே என் கருத்து. தன் இறுதிக்காலம் தவிர மற்ற நாட்களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அங்கமாக இருந்து, காங்கிரஸின் பெரும் தலைவர்களோடு இணைந்து இந்திய சுதந்திரத்துக்காக உழைத்தவர் அவர். இந்திய சுதந்திரப்போராட்டம் ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. அதன் பின்னர் நடந்து கொண்டிருக்கும் தேச நிர்மாணமும் ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. அவற்றை அங்கீகரிப்பதே முறை.

யாருடைய பிம்பங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும், ஒரு அரைநிர்வாண பக்கிரியின் வரலாற்று பங்கும், மக்கள் மனதில் இருக்கும் இடமும் எங்கும் போய்விடாது.

***

இந்தி மைல்கல்.

மழைவிட்டாலும் தூவானம் விடாது என்பதுபோல, இந்தி கொள்கையை ஊத்தி மூடிவிட்டாலும், அவ்வப்போது இந்தி மொழி பிரச்சாரம் பல வழிகளில் வந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழில் எல்லா தமிழ்நாட்டு மைல்களும் எழுதப்படவேண்டும் என்பதில் தமிழ்நாட்டுக்குள் இரண்டு கருத்து இருக்க முடியாது.( திமுக பிரதிநிதிகள் குரல் கொடுத்தபோது எதிர்த்து கத்தியவர்கள் சமாஜ்வாதி கட்சியினர் மட்டுமே என்பது ஒரு ஆறுதல். அவர்களது பிராந்தியத்தில் அவர்களும் ஒரு மாதிரி திமுகதான்). பெங்களூரில் சில காலம் வாசம் செய்தவன் என்பதால் சொல்கிறேன். பெங்களூரில் கன்னட எண்களில் பஸ்களில் எழுதுகிறார்கள். உலக மகா மடத்தனம் இது. இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை. பொதுமக்கள் புழங்கும் இடங்களில் ரோமன் எண்களில் இந்தியா முழுவதும் எழுதவேண்டும் என்று எல்லா மாநில அரசுகளையும் மத்திய அரசு கட்டாயப்படுத்தவேண்டும். ஆங்கிலத்திலும் பிராந்திய மொழியிலும் எல்லா சாலை போக்குவரத்து உதவிப்பலகைகளும் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவேண்டும்.

மக்களுக்கு உதவியாக இருக்கும் இப்படிப்பட்ட விஷயங்களை விட்டு விட்டு, இந்தியை தமிழ்நாட்டில் போட்டுத் திணிக்கும் முயற்சிகள் எதிரான விளைவையே ஏற்படுத்தும்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்