இந்த வாரம் இப்படி – ஜனவரி 6 ,2002

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

மஞ்சுளா நவநீதன்


ஐந்தாவது படிக்கும் குழந்தைகளுக்கு அரசு தேர்வு

உலகம் முழுவதிலும் ஒரு சீரான தேர்வுகள் அனைவருக்கும் நடத்தி அதனை அடிப்படையாய்க் கொண்டு மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்யும் பழக்கம் பல கல்வியாளர்களால் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறது. பல நாடுகளில் எட்டாவது வரையில் வடிகட்டும் முறையிலான தேர்வுகள் ஒழிக்கப் பட்டுவிட்டன. குழந்தைகள் குழந்தைகளாய் இருக்க அனுமதிக்கப்படவேண்டும் அவர்கள் மீது பாடங்களைச் சுமையாய்த் திணிக்கக் கூடாது என்று எல்லா கல்வியாளர்களும் சொல்கிறார்கள். நம் தமிழ்நாட்டில் மட்டும் நமது அரசு பின்னோக்கி நடை பயில்கிறது. ஐந்தாவது வகுப்பில் அரசு பரீட்சை என்ற உன்னதமான எந்த சாம்பிராணியின் மூளையில் உதயமாயிற்று என்று தெரியவில்லை. சத்துணவு போன்ற திட்டங்களால் கொஞ்சம் போல ஏழை மக்கள் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் அவர்களை மீண்டும் பள்ளிக்கூடங்களை விட்டு விரட்ட இது ஒரு வழி.

ஐந்தாவது பரீட்சை குழந்தைகளுக்கு வைப்பதற்கு முன்னால் நம் முதல்வர், எம் எல் ஏக்கள், எம் பிக்களுக்கு வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதில் தேறினால் தான் பதவி என்று சொல்லலாம்.

**********

பாகிஸ்தானின் கைது நாடகம்

பாகிஸ்தான் பல பயங்கரவாதிகளைக் கைது செய்வதாய் நாடகம் ஆடுவது அமெரிக்க அரசைத் திருப்தி செய்யத்தானே தவிர உண்மையான அக்கறையினாலோ அல்லது இந்தியாவின் மீதுள்ள அபிமானத்தாலோ அல்ல. சீனாவிற்கு இரண்டு வாரத்தில் இரண்டு முறை முஷரஃப் போய் வந்திருக்கிறார். சீனாவிற்கே கூட பயங்கரவாதத்தினால் பிரசினை என்பதால் என்ன பதில் கிடைத்திருக்கும் என்று ஊகிக்கலாம். சீனாவிலும் தற்கொலைப்படையினர் அட்டூழியம் ஆரம்பித்து விட்டது. எதிரியின் எதிரி நண்பன் என்ற மாதிரி பாகிஸ்தான்-சீனா நட்பு முறிவதற்கான வேளை வந்து விட்டது போலும். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா சீனாவுடன் உடன்பட்டுப் பிரசினைகளை எதிர்கொள்ள வேண்டும்.

********

நீட்டிய கரங்களும் , நீளமான முட்பாதையும்

லாகூர் பயணம் தொடங்கி , சார்க் மாநாடு வரையி;ல் இந்தியாவின் நீட்டியகரங்கள் மீண்டும் மீண்டும் பாகிஸ்தானால் அவமதிக்கப்பட்டுத் தான் வந்திருக்கின்றன. இருந்தும் மீண்டும் மீண்டும் இந்த நாடகம் தொடர்கிறது. இது இந்தியா மனமுவந்து செய்தாலும் சரி, உலக நாடுகளின் பார்வைக்காகச் செய்தாலும் சரி இனி இந்த நாடகம் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை. குட்டக் குட்டக் குனிகிற ஒரு விதத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தான் இந்தியாமீது கொடுத்துள்ள இந்த மறைமுக யுத்தத்தில் சாதாரண மக்களுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் தான் ஆபத்தே தவிர பாகிஸ்தானுக்கு எந்த விரயமும் இல்லை. அதனால் பாகிஸ்தான் உளவு நிறுவனமோ, அல்லது ராணுவமோ பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. நேரடியான யுத்தத்திற்கு பயந்து, விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில் பாகிஸ்தானின் சிறைக்கைதிகளையும், மதரஸாக்களில் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்களையும் இந்தியாவிற்கு அனுப்புகிறது பாகிஸ்தான். இது மற்ற உலக நாடுகளுக்குத் தெரியாதது அல்ல. இந்தப் பிரசினையில் பாகிஸ்தானுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அமெரிக்காவும் , ஐரோப்பிய நாடுகளும் உதவி வந்துள்ளன.

***********

ஜெயலலிதாவை எதிர்த்து ராதிகா

சித்தியால் புகழ் பெற்ற ராதிகா, அண்ணியென்று முன்னால் அறியப்பட்ட ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கலாம் என்று தெரிகிறது. சினிமா மாயையை, சினிமா மாயையை வைத்துத் தான் வெல்ல வேண்டுமா அல்லது வேறு வழிகள் உண்டா என்று தெரியாத நிலையில் கருணாநிதி எடுத்த முடிவு போலும் இது. ம தி மு க ஏற்கனவே தனித்து நிற்பதாய் அறிவித்துள்ளது. மற்றக் கட்சிகளின் ஆதரவு எப்படிப் பிரியும் என்று தெரியவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க பணபலத்தின் விளையாட்டு அதிகமாகும். கட்சிகள் பிளவுபடும். ஏற்கனவே பா ம க-வின் எம் எல் ஏ ஒருவர் விலகுவதாய் உள்ளது. காங்கிரசிலும், த மா கவிலும் கூட ஜெயலலிதா அணி என்று ஒன்று உருவாகிவிட்டது. மூப்பனார் இல்லாத நிலையில் த மா கவை ஒருங்கே வைத்திருப்பது கஷ்டம். சிதம்பரம் த மா க-விற்குத் தலைமை ஏற்க முடிந்தால் கொஞ்சம் கெளரவம் மிஞ்சும்.

**********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்