“மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

உஷாதீபன்


ஜனவரி 14 2009. அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். மகிழ்ச்சியான இந்தத் தமிழர் திருநாளில், இனிப்பான பொங்கலைச் சுவைத்துக் கொண்டிருக்க வேண்டிய தருவாயில், மிகவும் கசப்பான அனுபவங்களோடு, மிகுந்த மன வேதனையில், நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் மன வேதனைகளை யாரிடமேனும் கொட்டித் தீர்க்க வேண்டுமென்று நான் யோசித்தபோது, அதை உடன் தோள் கொடுத்துச் சுமக்க என் மனைவி தயாராயிருந்தாள் எனினும், இந்தச் சமூகத்திற்கு எவ்வகையிலேனும் அது போய்ச் சேர வேண்டும் என்று என் மனம் தீராத ஆற்றாமையில் வெந்து கொண்டிருந்ததை எந்த வழியில் தீர்த்துக் கொள்வது என்று மன உளைச்சலோடு நான் நிம்மதியற்று அலைந்து கொண்டிருந்தபோது, அதற்கும் வழி சொன்னவள் என் துணைவியார்தான் என்பதை நான் இங்கே பெருமையோடு சொல்லிக் கொள்வேன். குடும்பம் என்கிற அருமையான அமைப்பில், இந்தப் பெண்களின் பங்கு எத்தனை பொறுப்புமிக்கதாய் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த முக்கியமான கால கட்டத்தில் என் மனைவி மூலம்தான் நான் உணர நேர்ந்தது. இதை எழுதுவதற்கு முந்திய பல மாதங்களில் கூட இவைபற்றியெல்லாம் ஒருவகையான கேலித்தன்மை என்னிடம் படிந்திருந்தது என்பதை நான் மனமுவந்து ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அம்மாதிரியான ஒரு விட்டேற்றியான மனப்பான்மை என்னிடம் படிவதற்கு எனது வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைந்திருந்தது என்பதையும் இங்கே நான் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த இடத்தை நான் எழுதும்போது ஒரு பழைய திரைப்படப் பாடல் என் நினைவுக்குத் தவிர்க்க முடியாமல் வருகிறது. கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – மானே வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி…! பத்திரிகை, தொலைக்காட்சி என்று ஊடகங்கள் எத்தனையோ வகைகளில் மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளைக் கொண்டு செல்கிறதெனினும், மனித வாழ்க்கையின் உள்ளீடுகளைப் பிரதிபலிக்கும் வகையில், வாழ்க்கையின் அடி நாதமான, ஆதார ஸ்ருதியான விழுமியங்களைப் போற்றுவனவாக அவை அமைவதில்லை என்பதை ஆத்மார்த்தமாக நான் உணர முற்பட்டபோதுதான், என் மன உணர்வுகளை யாரிடமேனும் கொட்டித்தீர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்தேன். இந்த விழுமியங்கள் பற்றியதான பிரக்ஞை எனக்கே இதுநாள் வரை இல்லாமல்தான் இருந்தது என்பதை வெட்கமின்றி ஒப்புக் கொள்கிறேன். அவையெல்லாம் வெறும் உபயோகமற்ற பழங்கதை என்றும், காலத்துக்கும் மாறாத புலம்பல்கள் என்றும், …………2……………. – 2 – கால விரயத்தை உண்டு பண்ணுபவை என்றும், மனிதர்களின் சுதந்திரத்தைப் பறிப்பவை என்றும், அவற்றினால் எள்ளளவும் பயனில்லை என்றும்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவை வாழ்க்கையின் வௌ;வேறு படிமங்களைப் பொறுப்புடன் எதிர்கொள்வதற்கும், மன தைரியத்துடன் கடந்து செல்வதற்கும், தன்னம்பிக்கையோடு தளராது, தன் முனைப்போடு செயல்படுவதற்கும், கைகோர்த்துக்கொண்டு நம்மோடு வாழ்நாள் ப+ராவும் கூட வருபவை என்பதைப் பின்னால்தான் உணர நேர்ந்தது. இன்றும் கூட நான் இந்நிலையை எட்டாவிட்டால் அதை நினைத்து உருகுவேனா என்பதைச் சொல்லமுடியாதுதான். எட்டுவது என்பது உயரங்களைத் தொடுவது மட்டும்தான் என்று கற்பனை செய்து கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கீழே விழுவதும் கூடத்தான் இல்லையா? ஆனால் ஒன்று எனது இன்றைய நிலையில் எனக்கு உறுதுணையாக நிற்பவை அவைதான். என் தன்னம்பிக்கையைத் தளராது பிடித்து நிறுத்தியிருப்பவை அவைதான். மிக மிகச் சாதாரண விஷயங்கள்தான். கடைப்பிடிக்க முடியாது என்று எதுவுமேயில்லை. “நேரம் காலத்தை ஒழுங்கு செய்து கொள். அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயல்படு…எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கைக் கட்டாயமாக, பிடிவாதமாகக் கடைப் பிடி…” இப்படியெல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்ட சிறு சிறு காரியங்களைக் கூட நான் அலட்சியம் செய்ததால், அவை நான் கற்கும் கல்விக்கு முற்றிலும் சம்பந்தமில்லாதவை என்பதாகத் தவறுதலாக உணர்ந்து கொண்டு ஒதுக்கியதால், அந்த அடிப்படையான ஒழுக்க சீ;லங்களை நான் கற்க மறுத்ததன் விளைவினைப் பின்னால் அனுபவித்தேன். வாழ்வின் உயரத்தில் எவையெல்லாம் என் துணை நின்று உதவி புரியுமோ, என்னை முன்னெடுத்துச் செல்லுமோ, அவை எனக்கு உதவாமல் போய் விட்டன என்பதுதான் உண்மை. வாழ்ந்து முடித்த, அனுபவத்தின் உச்சத்தில் இருந்த என் தந்தையின் வழிகாட்டுதல்களை, அதன் அடிப்படையான மெய்ம்மைகளை நான் படிப்படியாகத்தான் உணர்ந்தேன். பலருக்கும் பின்னால் இருந்த என் திறமைகள், என் உழைப்பு, அதன் மேன்மை, இவையெல்லாமும் மேற்சொன்ன அடிப்படை ஒழுங்குகளை நான் சீராகக் கடைப்பிடிக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்குள் தன்னம்பிக்கை தளிர்விட்டு வளர்ச்சி பெறுவதும், ஊக்கமுடன் செயல்படுவதும், உத்வேகம் பெற்றதும் ஆன நடவடிக்கைகள் என்று நான் சொல்வேன். ஆனால் அப்படியான வெற்றிமுகத்தை நோக்கிய என் பயணத்தின் போது இப்படியானதொரு திடீர் வீழ்ச்சி ஏற்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. பள்ளிப் பருவ காலத்திலேயே இந்த முறைமைகளையெல்லாம் நான் பின்பற்றியிருப்பேனாகில், ஒரு வேளை இன்றைய என் செயல்பாடு எல்லோரையும் பின் தள்ளிக்கொண்டு ரொம்பவும் முன்னே நிற்பதாக அமைந்திருக்கக்கூடும். என் திறமைகளைப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தக் கூடிய ஒரு முழுமையான, தவிர்க்க முடியாத நபராக நான் இருந்திருப்பேனோ என்று இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன். அம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் எனக்கு இன்றைய பின்னடைவு ஏற்பட்டிருக்காதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. எதையோ சொல்ல வந்து என் சொந்தக் குமுறல்களையெல்லாம் சற்று அதிகமாகவே கொட்டித் தீர்த்து விட்டேன் என்று நினைக்கிறேன். அவையும் சொல்லப்பட வேண்டியவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காகத்தானே இந்தக் கடிதமே துவக்கப்பட்டது. ………..3…………………. – 3 – மனித வாழ்க்கை எந்த அஸ்திவாரத்தில் கட்டமைக்கப்படுகிறது என்கிற ரீதியில் நாம் சிந்திக்க முற்பட்டோமானால், எல்லாவிதமான நற்பண்புகளையும், மதிப்புமிக்க விழுமியங்களையும், பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே நிற்பது பணம்தான். பணம் என்பது வாழ்க்கையின் ஒரு காரணி. அதுவே வாழ்க்கையல்ல என்கிற நேர்மை, ஒழுக்கத்தின்பாற்பட்ட தத்துவார்த்தங்களெல்லாம் இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டவையாய் இருக்கின்றன. அவையெல்லாம் வெறும் பிதற்றல்கள் என்பதுதான் சரி என்ற நிஜம்தான் இன்று முன்னே நின்று கோலோச்சுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சுவாசிப்பதற்குக் காற்று, குடிப்பதற்குத் தண்ணீர், அதுபோல் வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு உபயோகப்படுவது பணம் என்பதாகக் கொள்ள ஒருவரும் தயாரில்லை என்பதுதான் இன்றுள்ள சத்தியமான உண்மை. பணத்தை முன் வைத்து அந்தப் புள்ளியிலிருந்துதான் கிளைகள் பிரிகின்றன. இந்த எல்லாவற்றிற்கும் ஆதாரமான பணம் என்கிற காரணி, அறிவியல் தொழில்நுட்பம் தலை தூக்கி நிற்கிற இந்தக் காலகட்டத்தில் எத்தனை மதிப்புமிக்கதாய் நம் இளைஞர்களையும், இந்த சமுதாயத்தையும் ஆட் கொண்டிருக்கிறது? ஆட்டிப் படைக்கிறது? பணம் ஒன்றுதான் வாழ்க்கையின் எல்லாவிதமான சந்தோஷங்களையும் அளிக்கவல்லது என்று நடப்பு உலகின் எல்லா இளைஞர்களையும் போலத்தான் நானும் இயங்கிக் கொண்டிருந்தேன். வாழ்க்கை சந்தோஷமிக்கதுதான், அதில் எள்ளளவும் சந்தேகமில்லை, அதை இயன்றவரை அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும் என்கிற நோக்கில்தான் எனது குடும்ப வாழ்க்கையும் நேற்றுவரை பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்படியொரு திடீர் வீழ்ச்சி என் வாழ்க்கையில் ஏற்படும் என்று கனவிலும் நான் கருதவில்லை. எந்த உயர்வினைப் பார்த்து என் பெற்றோர் மகிழ்ச்சியிலும், நிறைவிலும் திளைத்தார்களோ, எந்த மேன்மையைக் கண்டு என் உற்றாரும் மற்றோரும் மனதுக்குள் பொறாமைப் கொண்டார்களோ, எந்த வசதி வாய்ப்புக்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோ, எந்த ஆதாரம் எனது அன்றாட நிகழ்வுகளை சந்தோஷ மயமாக்கியதோ, எந்தக் தேவை தன்னை எப்படிப் பயன்படுத்திக் கொண்டாலும் குறையாத அட்சய பாத்திரமாக நின்று என்னை யோசிக்க விடாமல் பண்ணியதோ, எந்த ஆதாரப் புள்ளி என்னை உற்சாகமாகவும், ஊக்கமாகவும் இயக்கியதோ, அதுவே இன்று என் காலடியில் படுத்து, தன் படத்தைச் சுருக்கிக் கொண்டிருக்கிறதை நினைக்கிறபோது, எனக்கு நானே ஆறுதல் சொல்ல முடியாதவனாக என்னை நானே தேற்றிக் கொள்ள இயலாதவனாக நின்று கொண்டிருக்கிறேன். பணத்தை முன்வைத்து எங்கெல்லாம் காரியங்கள் நிகழ்த்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் எல்லா போற்றுதல்களும் தன் மதிப்பிழந்து நிற்கும் என்பதற்கு எனது இன்றைய நிலையே சாட்சி. எனது திறமைகளின் அடிப்படையில்தான் இவையெல்லாம் மதிப்புப் பெற்றன என்ற இறுமாப்பில் இருந்தேன் நான். அந்த வீரியத்தில்;தான் இத்தனை நாட்கள், இத்தனை வருடங்கள் பணியாற்றினேன். எந்த நிறுவனம் எனது எல்லாத் திறமைகளுக்கும் அடிப்படையாக இருந்ததோ, எந்த நிர்வாகம் எனது திறமைகளனைத்தையும் வெளிக் கொணர உற்சாகப்படுத்தியதோ, எந்த ஆதாரம் எனது வாழ்க்கையின் சுய நிர்ணயத் தடத்தை உறுதிப்படுத்தியதோ, எதை முழு மனதோடு கொடுத்தோமானால், எதில் நம்மை முழுமையாக அர்ப்பணித்தோமானால் மேலே மேலே செல்ல முடியும் என்று ………..4……………… – 4 – எனக்கு நானே நிர்ணயித்துக்கொண்டு என்னை நானே முழுமையாக அர்ப்பணித்தேனோ, அந்த இடம் எனக்கில்லை என்றபோது நான் ஆடிப் போய் விட்டேன். இதை பகிரங்கமாக இங்கே வெளியிட்டுக் கொள்வதில் எனக்குத் துளியும் வெட்கமில்லை. இதை உங்களிடம் சொல்வதுதான் பொருத்தம் என்றுதானே எழுதத் துணிந்தேன். எனது பணியில் நான் நேரம் பார்த்ததில்லை. காலம் கணித்ததில்லை. என் உடல் சோர்வு, மனச் சோர்வு, சொந்தச் சூழல், இப்படி எதையுமே பொருட்படுத்தியதில்லையே! இது என் பணி. எனக்கான பணி. என் வாழ்வாதாரத்திற்காக, அதன் சந்தோஷத்திற்காக, அதன் மேன்மைக்காக, எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய பெரும் சொத்து. இதை நான் உண்மையாக, நேர்மையாக அணுக வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என்னைக் கொடுக்க வேண்டும். என்னை முழுமையாக இதன் முன்னேற்றத்திற்காக, வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். உழைப்பு, உழைப்பு. உழைப்பு அது ஒன்றுதான் என் மனதில் படிந்திருந்தது. ஆனால் இன்றோ எல்லாம் பொய்யானது. எல்லாமும் கைவிட்டுப் போனது. எதுவும் மதிக்கப்படவில்லை. எதுவும் பொருட்படுத்தப்படவில்லை. எதுவும் நினைக்கப்படவில்லை. “உறல்லோ…” என்று எது துள்ளலோடு கை கொடுத்ததோ அதுவே கையைப் பட்டென்று உதறிக் கொண்டது. தோளில் விழுந்த கைகள் தானே விலகிக்கொண்டன. பார்த்து, சிரித்து, பழகி, கை கொடுத்து மகிழ்ந்த நண்பர்கள் இன்று பார்க்காதது போல் விலகிப் போகிறார்கள். உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் அவர்களின் பார்வை கவனிக்காததுபோல் கடந்து செல்கிறது. யார் யாருக்கெல்லாம் நான் வழிகாட்டியாய் இருந்தேனோ, எவர் எவரெல்லாம் என் ஆலோசனைகளை அவ்வப்போது பெற்றார்களோ, அவர்களெல்லாம் என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன் பணியில் கவனமாகி விட்டார்கள்.மென் பொருள் இளைஞர்கள் மென்மையற்றுப் போனார்கள். மேன்மையற்றும் பிறழ்ந்தார்கள். பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே, இதைபார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே…என்று ஒரு பாடலை என் தந்தை அடிக்கடி வீட்டில் பாடிக் கொண்டிருப்பார். அப்பொழுதெல்லாம் அதை அழுகுணிப் பாட்டு என்று நினைத்தவன் நான். அதற்கான முழு அர்த்தம் சமீபத்தில்தான் எனக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். “இன்னிக்கு அ+பீஸ் போறேன்…திரும்பி வரும்போது என்னமா வருவேன்னு சொல்ல முடியாது…” – இப்படித்தான் சொல்லிவிட்டு என் மனைவியிடம் விடை பெற்றுக் கொண்டேன் நான். எந்த அதிர்ச்சியை என் மனையாளுக்குக் கொடுத்துவிட்டு நான் வீட்டை விட்டுக் கிளம்பினேனோ, அதே அதிர்ச்சி என் அலுவலகத்தின் வாசலிலேயே எனக்காகக் காத்திருந்தது. அந்தச் செய்தியே அதிர்ச்சிதான். அப்படி நிகழலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் நானே என்னை இயக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது எனக்கு அறிவிக்கப்பட்ட விதம், அதன் மேன்மை, அப்பப்பா…! என்னைச் சுக்கு நூறாக நொறுக்கிப் போட்டுவிட்டதய்யா!! தினமும் உள்ளே நுழைகையில் கால்களை அட்டென்ஷனில் வைத்து சல்ய+ட் செய்யும் அந்த செக்ய+ரிட்டி சொன்னார்: “சார், நீங்க கொஞ்சம் காரிடார்ல வெயிட் பண்ணுவீங்களாம்…” ……….5……….. – 5 – “எதுக்கு…?” “தெரியாது சார்…இப்டி இருங்க…” அதற்கு மேல் எந்த உரிமையோடு நான் உள்ளே அடியெடுத்து வைப்பேன்? நான் ஓடியாடித் திரிந்த அந்த நிறுவனம், அந்தக் கணத்திலேயே எனக்கு இல்லாமல் போனதுதான் பெரிய சோகம். என்னைக் கடந்து செல்லும் என் நண்பர்கள் ஒரு உறலோ கூடச் சொல்லாமல், அதற்கான அவசியமில்லை என்பதுபோல், பார்வையில் படாதவனாகச் சென்று கொண்டிருந்தார்கள். எந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் நான் உழைத்தேனோ, மற்ற எவராலும் நிகர் செய்ய முடியாத உழைப்பைக் கொட்டினேனோ, அந்த நிறுவனம் ஒரு நிமிடத்தில் என்னைத் தூக்கிக் கடாசி விட்டது மூலையில். மிகக் கேவலமான முறையில் வாசலிலேயே நிறுத்தி விட்டது எந்தவொரு முன்னறிவிப்புமில்லாமல். எந்தவொரு சைகையுமில்லாமல். எந்தவொரு பண்பாடுமில்லாமல். ஒரு தொழிலாளிக்கான எந்தவொரு மரியாதையுமில்லாமல். என் உழைப்பு நினைக்கப்படவில்லை, மதிக்கப்படவில்லை. என் செயல்களுக்கான அங்கீகாரம், என் திறமைகளுக்கான ஒப்புதல், என் தன் முனைப்பிற்கான பீடம் எல்லாமும் அடித்து நொறுக்கப்பட்டன. எல்லாமும் தராசில் நிறுத்து மூலையில் போடப்பட்ட பழைய பேப்பர்க் கட்டுகளாயின. எனக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய கூலி கூட ஏமாற்றப்பட்டது. “அக்ரீமென்ட்ல சைன் பண்ணியிருக்கீங்களே, கவனிச்சதில்லையா…? ஒன் தேர்ட் இஸ் அலவ்ட்…தட்ஸ் ஆல்…” எப்பொழுது என்னை அவர்கள் வேண்டாம் என்றார்களோ, எப்பொழுது என்னை உதற முற்பட்டார்களோ, பிறகு எனக்கென்ன வந்தது? எல்லாமும் அறிவேன் நான்…அனைத்தும் உணர்ந்துதான் இந்த நிறுவனத்திற்குள் அடியெடுத்து வைத்தேன் என்பதுபோல் எனது உரிமைக்காகக் போராடினேன். எனது பக்க நியாயங்களை முன் எடுத்து வைத்தேன். அதில் அவர்கள் தோற்றதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வாங்கிக் கொண்டுதான் நான் என்னை விடுவித்துக் கொண்டேன். அங்கே எனது போராட்டம் ஒரு மாபெரும் சக்தியாக மிளிர்ந்தது. எனது உரிமைகள் பறிக்கப்பட்டபோது எனக்குள் கிளர்ந்தெழுந்த கோபம், அந்தத் தார்மீக நெறி அவர்களைச் சுட்டிருக்க வேண்டும். அவர்களால் எதுவும் பேச முடியாமல் போயிற்று. எதுவும் செய்ய இயலாமல் நிலையற்றுப் போனார்கள் அவர்கள். இந்த நேரத்தில்தான், இந்த இடத்தில்தான், நான் அதை நினைத்துக் கொண்டேன். இந்த நியாயமான உரிமைகளுக்கென்று ஒரு அமைப்பு இருந்திருக்குமேயானால் எனக்கு, என்னைப் போன்ற பல்லாயிரம் பேருக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? என்று சிந்திக்க முற்படுகிறேன் நான். அதை ஏன் ஏற்படுத்த முடியாது? ஏன் ஏற்படுத்தக் கூடாது? என்ற கேள்விகள் என் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. தனி மனிதனாகப் போராடி, எனக்கான ஏமாற்றுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்ட நான், ஒரு அமைப்பாக இருந்து செயல்பட்டிருப்பேனேயானால் ……………6……………. – 6 – எத்தனை பேருக்கு என்னால் இயன்றதைச் செய்திருக்க முடியும்? எத்தனை பேர் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்? எத்தனை பேருடைய நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும்? எனது சிந்தனைகள் நியாயமானவைதான் என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். இவற்றை ஏனோ உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது எனக்கு. இந்தச் சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றியிருக்காது என்று அல்ல. ஒத்த சிந்தனைகளோடு உள்ளவர்களோடுதான் கலந்து கை கோர்க்க முடியும் என்ற நேச உணர்வோடு, மனித நேயச் சிந்தனையோடு தோன்றிய கருத்து இது. எனது இந்தக் குமுறல்களைத் தயவுசெய்து உங்கள் இதழில் வெளியிட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும். இது சத்தியம். கடைசியாக ஒன்று. இன்றைய இறக்க நிலையை நான் அடைந்த இந்த வேளையில்தான் எனக்கே இந்தச் சிந்தனை வந்திருக்கிறது என்பதை வெட்கமின்றி இங்கே உங்கள் முன் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக மனமார வருந்தவும் செய்கிறேன். தொட்ட பின் பாம்பு என்றும், சுட்டபின் நெருப்பு என்றும், பட்டபின் அறிவதே என் பழக்கமென்றானபின்பு… என்ற கவியரசரின் பாடல் வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன. நன்றி! அன்புடன், வேணு கார்த்திக். முகவரி அற்றவன்.

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்