‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

நாகூர் இஸ்மாயில்


ஓவர் டோஸ் என்று நினைக்கிறேன். சிரித்து வயிறெல்லாம் புண்ணாகி விட்டது. ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி குறிப்பிடுகிறேன். ஆஜானா.. பொட்டிய பிச்சானா.. என்று எங்கள் ஊரில் பாடுவார்கள். இந்த கதை பொட்டிய பிச்சு கந்தலாக்கி போட்டிருக்கு. ஆமா பொட்டிய பிக்கிறது என்றால் என்ன..? ஆபிதீன் நானாவிடம் கேட்பதா? அல்லது நாங்கோரியிடம் கேட்பதா? – நாகூர் இஸ்மாயில்


abubackar@ntuclearninghub.com

Series Navigation

நாகூர் இஸ்மாயில்

நாகூர் இஸ்மாயில்

நாங்கோரி என்ற உறுப்பினர்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

ஆபிதீன்


‘நிழல் மிருகத்தின் தொகை அதிகமாகும் போது அது நூறு கால்கள் கொண்டு தெருவில் இறங்கி பிணவெளியில் பசியாறும் என நினைக்கிறபோது மனசுக்குள் பதற்றமாக இருக்கிறது’ – யமுனா ராஜேந்திரன்.

‘ஜாலிஜமால்’ என்று குஸ்கா பிரியர்களால் செல்லமாக இப்போதும் அழைக்கப்படும் திருச்சி கல்லூரியில் , முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த அனைத்துக் கல்லூரி இசைவிழா ஒன்றில் நான் ‘ஜும் பரா பர்’ பாடி முதல் பரிசு பெற்று, பின் ஆயிரக்கணக்கான மாணவமணிகளின் விருப்பத்திற்கேற்ப SPBயின் ‘சம்சாரம் என்பது வீணை’ , கிஷோரின் ‘ருக்ஜானா’ பிறகு என் விருப்பமாக SMA காதரின் ஒரு தும்ரி பாடி கரகோஷங்களை ஒரேயடியாக அள்ளிய இரண்டாம் நாள் எனக்கு வந்த – ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்த -ஒரு மொட்டைக் கடுதாசி , ‘உங்களின் அபாரமான குரல்வளத்தில் மயங்கி விட்டேன்; இந்த இளம் வயதில் இப்படி ஒரு திறமையா? உங்களைப் போல் பாட இனி யாராலும் முடியாது’ என்று ஒரேயடியாகப் புகழ்ந்து , இறுதியில் இப்படி முடிந்தது: ‘ஆமாம், நீங்கள் ஏன் ஜங்ஷனிலோ அல்லது சிதம்பரம் பஸ் ஸ்டாண்டிலோ போய் பாடிப் பிழைக்கக்கூடாது ?’

சத்தியாகச் சொல்கிறேன், தோளில் ஒரு டால்டா டப்பா தொங்கும் உணர்வு வந்ததேயொழிய அன்று கோபமே வரவில்லை. நான் என்ன தமிழ்நாட்டின் தம்புராவா?
ஆனால் மிகவும் கெத்தாக, விழாவின் அடுத்த நாள், டோல்கேட் டீக்கடையில் ‘ஷோலே’ கேட்டுக் கொண்டிருந்த – இப்போதும் கெயிட்டியில் அது ஓடிக்கொண்டிருகிறது – சில ரசிகர்கள் , ‘ஈயெம் கலி·பா உங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தாரா?’ என்று கேட்டபோது ‘அவர் எதுவும் சொல்லித் தராததால்தான் இப்படி..’ என்று பந்தா பண்ணிக் கொண்டிருந்தேன். மாபெரும் தப்லா மாஸ்டரான ‘நரி’ என்று அழைக்கப்படும் நவாப்ஜான் போன்று தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பக்கவாத்தியக்காரர்களை சோற்றுக்கே தாளம் போட வைத்த அந்தப் பாதகன் எல்லாம் பாடகனா? என்ன, இவர்கள் என்னைக் கேலி செய்கிறார்களா?

ஒரு துணுக்கு: ‘நரி’ என்று ஏன் பெயர் வந்தது நவாப்ஜானுக்கு? தர்ஹா வித்வான் காதர்மாமாவிடம் கேட்டேன் ஒருமுறை. ‘ஹ, அப்பப்ப தப்லாட ‘டங்கா’வை சொரண்டுவான் தம்பி அவன். நாந்தான் வச்சேன் பேரை’ என்றார்கள்.

கடிதம் அத்தனை சரியாக , ஆத்மாவிலிருந்து – ஆஸ்த்மாவிலிருந்து அல்ல – புறப்படாத என் குரலையும் அதன் பாவத்தையும் கண்டுகொண்டிருக்கிறதே…அவனா , அவளா? அவன்தான். ‘சம்சாரம்…’ பாடும்போது , ‘மணம்… குணம்…’ என்று நான் குழைந்ததும் ‘காரம்?’ என்று கூட்டத்திலிருந்து கேள்வி வீசியது ஆண்குரல்தான். அதுவாகத்தான் இருக்கும்.

என் குரலின் பலவீனத்தை அந்தக் கடிதம் சரியாக சுட்டிக் காட்டியதால்தான் உலகப் பிரச்சனைகள் எதற்கும் அன்றிலிருந்து நான் குரல் கொடுப்பதில்லை.

தவிர, ·பத்வா கிடங்குகளிலிருந்து விஷ அம்புகளை இஷ்டத்திற்கு உருவி எழுத்தாளர்கள் மேல் விடும் மௌலவிகளை நினைத்தாலே மனதுக்குள் குலை நடுக்கம்.

‘நீந்தத் தெரிந்த’ தஸ்லிமாவும் தெரியாது; சுகமான ‘போர்வை’ போர்த்திய சுக்தாயும் தெரியாது எனக்கு. ‘வெள்ளித் தட்டில் அழகிய ஆம்லெட்’ போடும் சல்மாவை தெரியும். என் பெரிய மாமி அது. போதிமரமென்று நினைத்து போதைமரத்தின் கீழமர்ந்த ரசூலும் உறவுதான். நான் நேசிக்கும் இவர்கள் , குளவிக்கூட்டில் தானே கைவிட்டு ‘குய்யோ முய்யோ’ என்று கத்தினால் என்ன செய்ய முடியும்?

அதுவும், என் குரலே ஒரு தகரடப்பா என்று தெரிந்துவிட்டபிறகு யார் உதவி வேண்டி கத்த? டமாரச் செவுடர்களிடமா? அவர்களோ , வியாழக்கிழமை இரவு மாத்திரம் வோட்காவில் ஆரஞ்ச் ஜூஸ் கலந்து அடிக்கும் என்னைத் தண்டிக்க சாட்டையோடு அலைகிறார்கள்.

நான் ரொம்ப எச்சரிக்கை இப்போதெல்லாம், தெரியுமா? ‘எழுத்தாளர் சா…’ என்று ஒரு விசிறி ஆரம்பித்ததுமே ‘டக்’கென்று ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டேன், ‘வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று.

‘இல்லண்ணே.., அவர் உங்களை பார்க்க விரும்புகிறார்’

‘இதையும் நான் கண்டிக்கிறேன்’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு, நானே அந்த எழுத்தாளரைப் போய்ப் பார்த்து விட்டேன். இருவருமாக சேர்ந்து அட்டூழியம் டாட் காமுக்கு சென்று உலகம் தோன்றிய நாளிலிருந்து இதுவரை நடந்த அத்தனை கொடூரங்களுக்கும் எதிரான எங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு வந்தோம். ‘ட்சுனாமியைக் கண்டிக்கிறோம்’ என்பதை மட்டும் ஒதுக்கியிருக்கலாம்.

கொஞ்சம் கதைக்கு வரவா?

குறைகளை உடனே ஒத்துக்கொள்ளும் பழக்கம் துரதிர்ஷ்டவசமாக அப்போதே இருந்தது. சிரித்துக்கொண்டே , கடிதத்தை ரூம் மேட்டிடம் காட்டினேன். ‘மெட்ராஸ் பஸ் ஸ்டாண்ட்லாம் கண்ணுக்குத் தெரிலையா அந்த ஹராம்ஜாதாவுக்கு?’ என்று கோபப்பட்டான்… ஒருவேளை , எழுதியது இவனாக இருக்குமோ? இல்லை. இது நல்ல ஆங்கிலமாயிற்றே..

அதற்கு முந்தைய வருடம், பாடாமல் இருந்ததால் முதல்பரிசு பெற்ற நண்பன் ஞாபகத்துக்கு வந்தான். நாங்கோரில் அவன் ஒருவனுக்குத்தான் ஆங்கிலம் நன்றாக வரும். இங்கிலீஷ் வாத்தியார் இமானுவேல் சாரே அவனிடம்தான் சந்தேகம் கேட்பார். அப்படி ஒரு ஞானம். சமயத்தில் அதை தமிழ் இலக்கணத் தேர்விலும் காட்டி விடுவானே தவிர விஷயதாரி. அவன்தான் நாங்கோர் ஹைஸ்கூலில் நடைபெற்ற பாட்டுப்போட்டியில் நான் ‘யஹாங் வஹாங் சாரே’ பாடிப் பரிசு வாங்கியவுடன் பி.யூ.சி படிக்க ஜாலிஜமாலுக்கு இழுத்து வந்தவன். அங்கே உமர் சார் நல்ல குரல் ஒன்றுக்காக காத்திருக்கிறாராம். பொன்மலையிலும் BHEL அரங்கத்திலும் பரிசுகளை இந்த முறை அள்ள வேண்டுமாம். ஆட்கொள்ளும் இலக்கியத்திற்கு ஆல்பர்ட் சார் , மன்சூர் சார், ஆங்கிலத்தில் அலம்பல் செய்ய கூத்தாநல்லூர் அலி சார்…யஹாங் வஹாங் சாரே…

புத்தியுள்ள யாராவது வெறும் பாடம் படிப்பதற்காக கல்லூரிக்குப் போவார்களா?

‘ஒனக்குலாம் கவலையே இல்ல மரைக்கான். தர்ஹா வாசல்லெ ‘தில்கோ தேக்கோ’ பாடியே பொளச்சுக்குவே. ஏன் போறே?’ என்று கேட்கும் ஊர் நண்பர்கள்..

ஊரின் கேலி அந்தக் கடிதத்தில் இருந்தது. அது நிச்சயமாக நாங்கோர்காரனின் கடிதம்தான். ஆனால் நண்பனோ ‘குர்ஆன் மேல் ஆனை’யாக பூனை போல் மறுக்கிறான்.

பின், யார்தான் அது?

இன்று யோசித்துப் பார்க்கும்போது , நான் தேடிக் கொண்டிருக்கும் நாங்கோரியாகத்தான் அது இருக்கும் என்று படுகிறது. ‘யார் இவர்?’ என்று நான் பல வருடங்களாத் தேடும் லிஸ்டில் – ஒரு ஆன்மீக டச் : இதில் நானும் அடக்கம் – இந்த நாங்கோரிதான் முக்கியமானவர். இரண்டாமவர் பெயர்: மாக்கான். ஒரு சமயம், நெருங்கிய நண்பனொருவனால் திடீரென நான் படுகுழியில் தள்ளப்பட்டு, அதிலிருந்து மேலேற முயற்சிக்கும்போது என் தலையில் குட்டியவர்களைத் திட்டியவர் இந்த மாக்கான். குட்டியவர்களின் நோக்கம் உண்மையிலேயே என்னைத் திருத்துவதுதான் என்று நான் சொன்னபோது அன்பின் மிகுதியால் , ‘துப்பு கெட்டவன்’ என்று என்னையும் திட்டியவர். ‘நீ துப்புன எச்சிலை நான் முழுங்கிட்டேன். எச்சில் எச்சிலோட போச்சு. நமக்குள்ள சண்டை வாணாம்’ என்று வீரத்தோடு பின் தங்கியவனுக்குத்தானே துப்பு கெட்டவன் என்று பெயர்? சரியாகத்தான் நம்மைச் சொல்கிறார் என்று சும்மா இருந்து விட்டேன். ஆனால் அவர் யார் என்று தேடுவதை மட்டும் விடவில்லை இன்று வரை.

மொய்தீன்bye, பட்டுக்குருவி, புர்காஉருவி என்று மேலும் சில அன்பு உள்ளங்கள். ஆனால் இந்தக் கதையின் நாயகர் நாங்கோரி அல்லவா?

இவர்தான் அந்த மொட்டைக் கடிதத்தை அன்று எழுதியிருக்க வேண்டும். விழாவன்று அவர் வந்திருக்கிறார் என்றே நம்புகிறேன்.

கடிதத்திலிருந்த ‘வெடை’ நாங்கோருக்கே உரியது. சின்னவர் பெரியவர் என்று வித்யாஸமில்லாத கிண்டல்.. அது நகைச்சுவையாக உங்களுக்குத் தெரியவில்லையென்றால் வாழ்க்கையில் உங்களுக்கு கஷ்டமோ குழப்பமோ இல்லையென்று அர்த்தம். கொடுத்து வைத்தவர் சார் நீங்கள். ஆமாம், உங்கள் முகவரி என்ன? ‘வவுத்துலெ ‘மொய் மொய்’ண்டு இக்கிது புள்ளே’ என்று அஜீரணக் குழப்பத்தோடு அஸ்மாவிடம் கேட்டபோது ‘மயிர் மொளச்சிக்கும் போலக்கிது’ என்று சொன்னதை உங்களுக்கு எழுதி அனுப்ப வேண்டும்.

பேசவே தெரியாத கிழவர் மம்காசிம் மாமாவைப் பற்றியும் சொல்லலாம்.

அடித்துப் பிய்த்துக்கொண்டு பேய்மழை பெய்த ஒருநாளில் , அவரிடம் வியந்து போய் சொன்னேன் : ‘என்ன மாமா, இப்படி பெய்யுது’

அமைதியாக, மிகவும் நி தா ன மா கச் சொன்னார் அவர்: ‘மள இப்படித்தான் தம்பி பெய்யும்’

சொல்லிக் கொண்டே போகலாம். எதற்கும் என் நாவல் வெளிவரும் வரை பொறுத்திருங்கள். மவுத்தானதும் கண்டிப்பாக வெளியிடுவேன்.

அது இருக்கட்டும், ஆமாம், அதென்ன நாங்கோரி? மீங்கோரிதான் தெரியும் எனக்கு. ப.சிங்காரம் நாவலில் : மீகொரெங். வேகவைத்த நூடுல்ஸ்-இல் அதற்கான பிரத்யேகமான மெல்லிய மசாலா சேர்த்து , சில முளைப்பயிர்களையும் இட்டு, எண்னெயில் வதக்கி ஸோயா குழம்பை மேலே கொஞ்சம் தெளித்தால் அதுதான் மீங்கோரி. ‘கோரிங்’ என்றால் பொரிப்பது என்று சொல்லியிருக்கிறார்கள் மலேசியா சபராளியான என் வாப்பா. ‘நாஸிகோரி’ என்று போர்டில் போட்டிருப்பதைப் பார்த்து ஆசையுடன் ஒருமுறை கேட்டார்களாம். வந்தது நூடுல்ஸ¤க்கு பதிலாக சோற்றைப் பொரித்த சமாச்சாரம். நாஸி என்றால் சோறு. மலேசியா எழுத்தாளர்கள் என்னைத் திருத்த வேண்டும் – ஒரு பிளேட் மீங்கோரியோடு. பியரும் இந்த மீங்கோரியும் அவ்வளவு ·பேமஸாம் சிங்கப்பூர் மலேசியாவில். சாப்பிடுவதோடு சரி, ஊரில் அப்படி ஒரு கடை திறக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத கிழச் சபராளிகள்… அங்கே ஆப்பமும் சூப்பும் ஒரு ஆடிப்போன பெஞ்சில் வைத்து வியாபாரம் பண்ணத் தெரியும். இப்போதுதான்…. துணிச்சலான இளம்தலைமுறையினர் வெட்கம் பார்க்காமல் நாங்கோர் தர்ஹா வாசலுக்கு முன் மீங்கோரி கடை போட்டு…சூடாக வியாபாரம் செய்கிறார்கள். பக்கத்து கிராமத்தில் பெட்ரோல் எடுக்க வந்த வடநாட்டான் அங்கே மண்டுகிறான்.

எனக்கு துணிச்சலும் திறமையும் கிடையாது. பிழைக்க அரபு நாடு வந்து , துபாய் அரபி என்னை இப்போது மீங்கோரி போட்டுக் கொண்டிடுக்கிறான். போதும் இந்த வாழ்க்கை என்றுதான் இடையில் புறப்பட்டுப் போனேன் லண்டனுக்கு. அங்குள்ள கொடூரமான குளிரும் நல்ல வேலை கிடைக்க நான் பட்ட பாடும் , எல்லாவற்றுக்கும் மேலாக புத்தி சொல்ல ஆரம்பித்த விட்ட சொந்தங்களும்… ஒரு லண்டன் தமிழ் எழுத்தாளர் விவரித்தது போல புளித்த இட்லி மாவும் சலித்த சட்னி வாடையும் அடிக்கும் தமிழ்ச் சூழல்… கூடவே , ‘கிலா·பத்’ஐ கொண்டு வந்தே தீரவேண்டும் என்ற – ஹிஸ்புல்தஹ்ரீர் (Hizb ut-Tahrir)ல் இணைந்த – இலங்கை முஸ்லிம் நண்பர்கள் வேறு…’கிலா·பத்’ வந்தால் இருக்கிற குழப்பம் இன்னும் அதிகமாகிவிடாதா? நான் எதுவும் பேசுவதில்லை. அதில் சிலர் – ஏழெட்டு வருடங்களுக்கும் மேலாக குடும்பத்தைப் பார்க்காமல் – அகதி என்ற பெரும் அவலம் நீக்க குடியுரிமை கோரி பைத்தியம் போல் நடித்தார்கள். நானாக இருந்தால் நடிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அப்படித்தான் ஆனேன். வினோதமான அனுபவங்கள்…

‘Hell is a city much like London’ – நீயூஹாம் நூலகம் தவிர. அங்கேதான் அம்புலிமாமா கதைகள் நிறையப் படித்தேன்.

‘ஒன்னுக்கு எளுவது நன்மையாச்சே..லண்டனை விட்டா வந்தீர்கள்?’ என்று நிலைமை தெரியாமல் ரொம்பவும் கரிசனத்தோடு துபாயில் விசாரிப்பவர்களிடம் – ‘ஒன்னுக்கு எம்ப்ளது தீமையும் இக்கிது’ என்று உள்ளுக்குள் முனகியவாறே – ‘இங்கிலீஷ் தெரியாம போய்டுச்சி..’ என்று சொன்னேன்.

அதில் உண்மை இல்லாமலில்லை. என்னுடைய ஆங்கில அறிவு அவ்வளவுதான்.

டிரைவிங் லைசன்சுக்கான டெஸ்டில் , பிரிட்டிஷ்காரன் பொரிந்து தள்ளினான். ஒரு எழவும் புரியவில்லை. நாலெழுத்து சொல் மட்டும் நாற்பது முறை கேட்டது.

நிறுத்தி, மெதுவாகப் பேசுமாறு சைகையில் சொன்னேன்.

‘You’ – ஆரம்பித்தான்.

‘Yes’

‘are’

‘Yes’ – புரிந்த மகிழ்ச்சி எனக்கு.

‘Fail…’

ஏன் நிற்கிறேன்? உறைந்து போன சொற்களையும் பக்கங்களையும் உயிர்ப்பித்து பின்பொருநாள் முழு லண்டன் கதையையும் சொல்கிறேன். இப்போது என் நேரம் சரியில்லை. உங்களின் பொறுமையை சோதிக்க வேண்டிய அவசியமும் எனக்கிருக்கிறது.

‘இதோ பார்.. எனக்குத் தெரியும் அந்த குளிர்; உன் வயசுக்கு ஒத்து வராது; பிரச்சனை என்றால் வந்து விடு திரும்பி. இங்கு உனக்கு சீட் ரெடியாகவே இருக்கிறது’ என்று டெலி·போன் செய்த அரபி முதலாளியின் கனிவான வார்த்தையை நம்பி மீண்டு(ம்) வந்தேன். வந்தால்தான் தெரிகிறது ரெடியாக இருந்தது சீட் அல்ல, சட்டி என்று. வறுபடும் மீங்கோரி..

இதுதான் என் பிரச்சனை, உணவைப் பார்த்தும் அங்கேயே நின்று விடுவது. நாங்கோரிக்கு வருகிறேன்…

ஊரோடு ஒரு ‘ஊரி’ சேர்த்தால் அந்த ஊர்க்காரர் என்று அர்த்தம். அஜ்மீரைச் சார்ந்தவர் அஜ்மீரி என்பது போல் நாங்கோரைச் சேர்ந்தவர் நாங்கோரி. அவுலியாக்களை நேசிப்பவர்கள்தான் அப்படிப் போட்டுக் கொள்வது வழக்கம். அல்லது என்னைக் குழப்புவதற்காகவே பிறவி எடுத்திருப்பவர்கள்.

ஆனால் , அவர் முதன்முதலாக ‘நாங்கோரி’ என்ற தன் புனை பெயரை போயும் போயும் ‘நாங்கோர் பிஸாது கிளப்’-ல் வெளியிட்டிருக்க வேண்டாம்.

பிஸாது என்றால் வதந்தி, அவதூறு. நல்ல தமிழில் : பழிதூற்றல். ‘கிசு கிசு’ என்று அந்துமணிகள் கிளுகிளு பத்திரிக்கையில் எழுதும் அல்லவா, அதுதான்.

அடுத்தவர் பற்றி புறம் பேசுவது தன் சொந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிப்பதற்குச் சமம் என்பார்கள் எங்கள் நாயகம் (ஸல்). ஹதீஸ் எண்….

Stop

‘உங்களிடம் உள்ள அதீத மதப் பிரக்ஞை குமட்டுகிறது…’ – மென்மையாகச் சொன்னார் ஒரு வாசகர். ‘குர்ஆன்லெ அல்லா என்ன சொல்லியிக்கிறாண்டா..’ என்று ஆரம்பித்தேன். திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக் கொண்டே ஒடினார் அவர்.

Go

இதற்கு ஒரு இணையத்தளமா?

Gossip Glub… நட்சத்திர ஹோட்டல்களில் இப்படிப் பார்த்ததுண்டு – வாசலில்தான். இணையத்தில் , அதுவும் ஊர் பெயரைப் போட்டு பார்த்தது அதுதான் முதல் முறை. உடனுக்குடன் பின்னூட்டமிடும் வசதியும் சர்வ சுதந்திரமும் கொண்ட ஓங்கோரி, மன்னிக்க, ஒருங்குறி வலைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் இந்த நாளில் அது ஒரு பெரிய விஷயமாக உங்களுக்குப் படாமலிருக்கலாம். ஆனால் அப்போது – நம் அபிப்ராயங்களை உடனே அந்த பிஸாது பக்கத்தில் உள்ளிட முடியும் என்பதெல்லாம் – புதுமையாகவே இருந்தது. FrontPageஇல் உள்ள GuestBook Template மூலம் அதை உருவாக்கியிருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொன்னார்கள். பிஸாது கிளப் இருந்த தளத்திலேயே அப்படி ஒரு சேவை உண்டு என்றும் சொன்னார்கள். ஒன்றும் புரியவில்லை.

‘கலப்பை’யெல்லாம் தெரியாது. கம்ப்யூட்டரே அப்போதுதானே தெரிந்தது…அறிவில் நான் அவ்வளவு பின் தங்கியிருந்தேன். தென்கச்சியார் சொல்வது போல கியூவின் முனையைத் தொட ஒரு விமானம் வேண்டும்.

ஒரு ‘தல்லிப்பொலி’ பிரிண்டிங் பிரஸில் ஓவியனாக ஒன்பது வருடம் ஓட்டிவிட்டு , சம்பளத்தை வரைந்தே எடுத்துக் கொள்ளச் சொன்னதால் விலகி , நாங்கோர் முதலாளியின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போதுதான் பார்த்தேன் அந்த அசுரனை.

நேர்முகத்தின்போது, ‘கம்ப்யூட்டர் தெரியுமா?’ என்றுதான் கேட்டார். தெரியும் என்றேன். சேர்ந்தால் அதை இயக்கச் சொல்கிறார். ஐயோ, எனக்கு உடம்பெல்லாம் நடுங்கி விட்டது.

‘தெரியும்டு சொன்னீங்களே தம்பி’

‘இது கம்ப்யூட்டர்ண்டு தெரியும் காக்கா. அதைத்தான் சொன்னேன்’. ‘அரபி தெரியும்’ என்று பம்பாய் இன்டர்வியூவில் சொன்னவன் சவுதிக்கு போனதும் அரபி டைப்பிங் செய்யாமல் முழித்துவிட்டு , தெருவில் போன அரபி ஒருவனைக் காட்டி அவனைத்தான் குறிப்பிட்டதாகச் சொன்னானாம். அதுவும் நான்தான்.

‘அடச் சே’ என்று அலுத்துக் கொண்டவர் , ‘சலீம்….இந்தப் பையன் சம்பளத்துலெ ஆயிரம் திர்ஹம் கட் பண்ணு மாசாமாசம்’ என்று அக்கவுண்டன்டிடம் உத்தரவு போட்டார். எனக்கு சந்தோசமாக இருந்தது. ஏனெனில் என் சம்பளம் 900 திர்ஹம்தான்.

ஒருவழியாக மலையாளி சலீமின் உதவியால் அக்கவுண்ட்ஸ் கற்றுக்கொண்டு , 100 MB மெகா ஹார்டு டிஸ்க் கொண்ட ஒரு 386 பொட்டியில், ‘கோவாலு’ மொழியில் வடிவமைக்கப்பட்ட ஒரு அக்கவுண்டிங் ஸா·ப்ட்வேரை படுவேகமாக இயக்கத் தெரிந்து கொண்டேன். பிரபலமான ரட்டன்ஜி ஆடிட்டிங் கம்பெனி தயாரித்த பிரமாதமான ஸா·ப்ட்வேர். வாடிக்கையாளர்களுக்கு Credit Sales Invoice போட்டால் அது அவர்களின் லெட்ஜரில் Credit Sideல் போய் உட்காரும்.

இணையத்தொடர்பும் அந்த அலுவலகத்தில் அப்போதுதான் வந்து உட்கார்ந்தது.

அது வந்தது வியாபாரத்தை பெருக்க அல்ல என்ற ரகசியத்தை சலீம் போட்டு உடைத்தான்.

நாங்கோர் பிஸாது கிளப்-ஐ பார்க்கத்தான் அதாம்..

யாரால், எப்படி அந்த site பற்றி கேள்விப்பட்டார் காக்கா என்று தெரியவில்லை. இணையத் தொடர்பு வந்ததிலிருந்து தினமும் பதறிக் கொண்டுதான் இருந்தார்.

முதல் பிஸாதே அவர் குடும்பத்தைப் பற்றி இருந்தால் பின் என்ன செய்வார்?

தமிங்கிலத்தில் எழுதப் பட்டிருந்த அந்த பிஸாது , ஊரில் முத்தவல்லியாக இருக்கும் அவர் அண்ணன் செய்த திருட்டை அம்பலப்படுத்தியிருந்தது. இது எல்லா முத்தவல்லிகளும் செய்வதுதானே என்று காக்காவால் சும்மா இருக்க முடியவில்லை. விஷயத்தை பிரிண்ட் செய்து நாங்கோர் பள்ளிவாசலில் யாரோ நாறடிக்கிறார்களாம். இனி எந்தெந்த பூதம் வருமோ…

எனக்கு விசா பிரச்சனை வந்தது.

தினம் பதினாறு மணி நேரம் வேலை பார்க்கும் அந்த நரகத்திலிருந்து தப்பித்தேன். இப்போதைய அரபியின் கம்பெனியில் பதினைந்தே மணி நேர வேலைதான். இணையத்தை தினமும் பத்து நிமிடம் ‘லொடக் லொடக்’ டயல்அப்-இல் பார்க்கும் சுதந்திரமும் கூட.

அந்த பத்து நிமிடத்தில் நாங்கோர் பிஸாது கிளப்-ஐ பார்க்க இப்போது நான் மறக்கவில்லை. துபாயிலுள்ள நாங்கோர்வாசிகள் அன்றைய நாங்கோர் பிஸாது என்ன என்று என்னைத்தான் கேட்கிறார்கள்… ஆண்டவர் சினிமா கொட்டகையின் புதிய படம் என்ன? ‘இப்ராஹிம் மரைக்காருக்கு புள்ளெ பொறந்திக்கிது. அத போடலாமா?’…

எனக்கு பரிதாபமாக இருந்தது. நாங்கோருக்கு என்று எவ்வளவு பெருமைகள் இருக்கின்றன..அதன் அவுலியாக்கள், எழுத்தாளர்கள், அதன் மொழி, கலாச்சார அழகு, விழா, நகைச்சுவை, தர்ஹாவில் வலம் வருகிற கஞ்சா, தினமும் கடைசி டிரெயினில் ஒரு பைத்தியம் ஊருக்கு வருவது…

ஒன்றும் வேண்டாம், வறண்ட பக்கத்து கிராம விவசாயிகளின் கஷ்டங்கள் பற்றிய கரிசனம் அல்லது ஒரு விமர்சனமாக, மத நல்லிணக்கம் கொண்ட இந்த நாங்கோர் கொடூரமான முகத்துடன் எப்படி மாறிப் போனது என்பதையாவது…

எழுதி , மதவன்முறையின் மூலம் எங்கே என்று கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். எங்கே இருக்கும்? பின்பக்கத்தில்தான் இருக்கும். எனக்கு மூலம் வந்தபோது, ஒரு உறவினர் ‘கவனிச்சிப் பாருப்பா’ என்றார். கஷ்டப்பட்டு கழுத்தை வளைத்து, ‘கவனிக்க முடியாத எடத்துலெ இக்கிது மாமா’ என்று இயலாமையோடுதான் சொன்னேன். ஆனால் உத்தேசமாக அந்த இடம்தான். ‘மூலம்’ பற்றி ரத்தம் சொட்டச் சொட்ட எழுத என்னிடம் ஏராளமான தகவல்கள் உண்டு. பிறகு காட்டுகிறேன்.

அட, ஊரைப் பற்றி எழுத வேண்டாம், உலகத்தில் எத்தனையோ அயோக்கியத்தனங்கள் நடக்கின்றன… முக்கியமாக ஈராக் விவகாரம்… விபரமாக எழுதலாம் இல்லையா? வீராவேசமாக நான் கூட – இரண்டாம் வளைகுடாப் போர் நிகழப் போவதற்கு முதல்நாள் – துணிச்சலான துபாய் அரசு காட்டிய ஒரு நிமிடக் குறும்படம் பற்றி எழுதவில்லையா – அந்த ‘புத்தகப் புல்லு’ இணையக் குழுமத்தில்? அதென்ன எழுத்துரு, TSCIIயா?

இரண்டு புத்திசாலிக் குரங்குகள் சேர்ந்து களிமண்ணால் ஒரு சிலை வடிக்கின்றன. வசனமெல்லாம் இல்லை. வேடிக்கையான பின்னணி இசை மட்டும்தான். சிலையின் பின்பக்கம் மட்டும்தான் மங்கலாக நமக்குத் தெரிகிறது. தட்டித் தட்டி ஒருமாதிரியாக சிலை உருவாகி விட்டது. ‘டக்’கென்று சிலையின் முன்பக்கம் தெரிகிறது இப்போது நமக்கு.

வடிக்கப்பட்டதும் ஒரு குரங்கு.

அடுத்த நொடியில் செய்திநேரம் ஆரம்பமானது. புஷ்ஷ¥ம், பிளேரும் அறிக்கை விடுக்கிறார்கள் – ஈராக்கில் ஜனநாயகத்தைக் கொண்டுவர போர் தொடுப்பதாக.

அசந்து விட்ட அத்தனை உறுப்பினர்களில் ஒரே ஒருவர் மட்டும் உடனே எழுதினார் : ‘அந்த குறும்படத்தில் அருமையாக நீங்கள் நடித்திருந்தீர்கள்’

எனக்கென்னமோ அந்த உறுப்பினர்கூட நாங்கோரியாகத்தான் இருக்கும் என்று இந்த நிமிடத்தில் தோன்றுகிறது. அந்த கிண்டல்…இல்லை, அவரேதான். பெயர் போடாவிட்டால் என்ன? ‘இன்னொரு குரங்கு அவரா?’ என்று கேட்டால் கூட ஈகோ பிரச்சனையில்லாமல் ஈஸியாகத்தான் எடுத்துக் கொள்வார் என்றே படுகிறது. நான்தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உடனே அன்று கண்ணாடி முன் நின்றேன். அவர் சொன்னதே எவ்வளவோ தேவலை என்று பட்டு விட்டது.

நாங்கோர் பிஸாது கிளப் உறுப்பினர்களோ… இளைஞர்களாக இருந்தார்களே தவிர பெரும்பாலும் அப்பாவிகளாக இருந்தார்கள். வறுமை தெரியாமல் வளர்ந்த மிதப்பு தெரிந்தது. சிலரின் புகைப்படமும் இருந்தது. நிஜமாகவே அது அவர்கள்தானா என்று சந்தேகம் வந்தாலும் பெயர்களைப் பொறுத்தவரை நாங்கோரின் நகைச்சுவையைக் கண்டு கொள்ள முடிந்தது. கரிப்பொட்டிமாப்புள, குண்டபீங்கான், குண்டாசோறு, குசுவுட்ட சாபு…

ஆனால் , எழுதும் இரண்டொரு வரியில் அவர்களின் அறிவும் சுவாரஸ்யமும் வெளிப்படவில்லையே.. ஓரிரு நாள் ,’TwinSisters’ என்ற பெயரில் வலம் வந்தவர்களைப் பார்த்து வழிந்தார்கள். மற்றபடி…உலக சினிமாவும் இல்லை; உலக்கை குத்தும் தமிழ் சினிமாவும் இல்லை, இலக்கியமும் இல்லை; இன்டெர்நெட் டிப்ஸ¤ம் இல்லை. மிஞ்சிப்போனால் , அல்லா நமக்கு மட்டும் நேர்வழியைக் காட்டிவிட்டான்; கந்தூரியை தடை செய்ய வேண்டும்; இன்று இரவு இந்த ஊரில் இத்தனை மணிக்கு மார்க்க விளக்கம்..

அதாகப்பட்டது , 1400 வருஷமாக யாருக்கும் முழுசாக விளங்கியபாடில்லை.

அடுத்த பக்கத்திலும் உண்மையுண்டு என்பதை உணராமல் என்ன இது…

எல்லாமே தப்பு, பின் எப்படி வாழ்ந்து முடிந்தால் என்ன?

அப்போதுதான்….அங்கே உயிரூட்ட வந்தார் இந்த நாங்கோரி. தமாஷாக ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை இவரிடம்தான் கற்றேன். இவர் குறிப்பிட்டுத்தான் அந்த இலங்கை எழுத்தாளரையும் சிரிக்கச் சிரிக்க படித்தேன். ஊஹ¥ம், நீங்கள் நினைக்கிற நவாப் நல்லமுத்து இல்லை, அவருக்கும் நாற்பது வருஷத்துக்கு முன்பே எழுதிய கவிஞர் அப்துல் காதர் லெப்பை. செய்னம்பு நாச்சியார் மான்மியம் எழுதியவர்.

வாருங்கள் என் குருவே…

‘யாருடியம்மா இந்த நாங்கோரி? சொல்லித் தொலைங்களுவமா…படியவுளுந்துடுவாளுவோ..’ என்று கேட்கும்படி வந்தார்.

இனி தேவைப்பட்ட இடங்களில் மட்டும் நான் கொஞ்சம் விளக்கம் தருவேன். அதாவது , தேவைப்படாத இடங்களுக்கு அதிக விளக்கம் தருவேன். எல்லா உறுப்பினர்களும் அப்போது த/திமிங்கிலத்திலேயே எழுதினார்கள் – நாங்கோரியைத் தவிர. ஊருக்கான கொச்சை வரும் இடங்களில் , குழப்பம் தவிர்க்க தமிழில் எழுதியிருக்கிறேன். தேதி, நேரம் எல்லாம் தேவையில்லாதது என்றும் கருதினேன். மன்னிக்கவும். குறிப்பாக, புறாட்டாவை ‘பிதுக்கப்பம்’ என்றுதான் சொல்லவேண்டும் என்று அடம்பிடிக்கும் தமிழ் ஆர்வலர்கள் அமைதி காக்கவும்.

இது வெறும் கதை அல்ல. ஒருவகையில், முழுக்க என் கதையும் அல்ல. பாராட்டு வந்தால் – செஞ்சிகிஞ்சிடப் போறீங்க..- அது நாங்கோரிக்குத்தான் சேரும். தவறுகள் அத்தனையும் என்னுடையவை.

1.

‘வாங்கனி’, ‘போங்கனி’ என்று எல்லாவற்றுக்கும் ஒரு ‘கனி’ போட்டு நாங்கோரில் பேசுவதற்கு நாங்கோரியின் விளக்கம் :

Hi folks! We are all familar in Nagore with the popular dialect ‘Waangani’ ‘Pongani’ ‘Enngangani’. Do you exactly know how it was derived and what does it mean? Let me give you a brief explanation. You might have observed the Brahmins way of taking ‘Ennangaanum’ ‘Vaanganum’ ‘ Ponganum’. It is a way of dialect significant only to the so called high class Brahmin community living in ‘Agrahaaram’. So as this.. If you observe the way of talking in Karaikal, you can notice ‘Vaambiley’ ‘Pombiley’ ‘Ennambaley’. Vaa+Aaan Pillai= Vaambiley. I couldn’t find any special features or a matter of interest in calling a man ‘Aambiley’ while everyone knows that he is a ‘He-Man’. But surprisingly in Nagore when we call someone ‘Ennangani’ it does has a special meaning and as well as a blessing wish. Let me tell you how..? ‘GHANI’ in Arabic means ‘RICH PERSON’. The word ‘GHANI’ in the course of time changed into ‘GANI’. When you call someone ‘Ennangani, Sowkiyama?’ – it means ‘What richman. Are you fine?’ . Can you feel the hospitality, courtesy, a word of blessing in this context. Do you..? So, now do you understand how rich is our culture?..How kind are our words..? Keep it up and God bless you.

– Naangori –

2.

‘தங்கச்சி…நாங்கோரிமா…நீங்க யாரு? இவ்வளவு அறிவு எங்கிருந்து வந்துச்சு? மண்டய போட்டு உடைக்கிறேனே.. சொல்லுங்க புள்ளே என் சீதேவி’ என்ற உறுப்பினர் ஒருவருக்கு அவர் எழுதியது கீழே வருவது. வசைச் சொற்களுக்கு விளக்கம் கொடுக்கிறார் நாங்கோரி. ‘களிச்சல்ல’ வேறு , ‘ஒரு களிச்சல்ல’ வேறு.

Dear Friend, Nice to have response from you. By the by I am not a ‘Sinthanai Chemmal’. I do come from Nagore. Personally I know all you guys. Let me keep myself anonymous. You have given me a nice thread to think about some ‘Vasai Mozhi’ come in Nagore. I strongly feel it is the worst form of extreme curses to anyone. For eq.

கொல்லையிலே போவொ – Die in Plague disease
களிச்சல்ல போவொ – Die in Cholera
ஒரு களிச்சல்ல போவொ – Die in Cholera at the first instance
கருமம் கொள்ளுவாஹா – You shall get Leprosy

Now , Do we folks understand how extrreme curse are these words? We have angels around us. When we ask Dua then also they say ‘Aameen’. When we curse anyone, then also they say ‘Aameen’. On this day let us take an oath that we shall never curse any of our brothers. Let only blessing and good words come out of our mouth.

நாங்கோர் பொண்டுகளால் சொல்லப்படும் சில வண்ணங்கள் :

காக்கா முட்ட கலரு – Violet
பிஸ்கட் கலரு – Beige
ஆனந்தா கலரு – Sky Blue
மருவண்டி கலரு – Dark Red
ஹேந்தி கலரு – Orange
ஹ¥தா கலரு – Blue
ரோஸ¤ கலரு – Pink
காப்பி கொட்டை கலரு – Brown

– Naangori –

3.

‘ஒரு வரத்துலெ வர்றாஹா’, ‘கட்டயிலெ போவ’ என்பதற்கான விளக்கம் :

Dear Unknown friend, You have asked me explanation for ‘Oru Varathuley Varraahaa’ and ‘Kattaiyilae Pova’. I am happy to give you explanation.

Explanation No.1 : for ‘ORU VARATHULAE VARRAAHAA’ ..You might have heard the word ‘POKKUVARATHU’ which means Traffic and also Transport. Traffic is the one which is keep on moving. It is unstable. Hurry Burry, Buzzing, Full of Tension and o on. Some people when they get frustrated they don’t know what to do. They will be unstable and full of tension. Their behaviour will be in a funny way (Say like Mr. Bean). In this kind of situation, this context ‘ORU VARATHULEY VARRAAHA’ is applied. This saying is usually uttered by ladies in a most attractive and a musical form of dialect. It is much more interesting to watch ladies murmouring this dialogue with their folded fist on their chin allowing one of their fingers on their nose in a form of question mark.

Explanation No.2 : for ‘KATTAILEY POVA ‘..Many people think that this curse just means Go and Die. The Sandhook ( Arabic word for wooden box) which is used to carry us for our last journey is made out of wood. When people curse these words they think it means just go and die. But it has still more extreme meanings for this curse. As I have explained in my earlier posing – Die in Cholera, Die in Plague, Die in Leprosy…This curse also has effective meaning . ‘KATTAILEY POVA ‘ actually means die in an unconscious state. That means Go and Die in the Coma Stage. To die in the Coma stage is the horrible destiny of death. The reason behind this is that you can’t even recite your ‘Kallima’ in your last moment of your life. Is it not a horrible way of death? Friends, if my words have touched your heart and if you feel how effective are these cursing, my request is don’t curse anyone. May God Bless All of Us.

– Naangori-

4.

நாங்கோரியின் Bio-Data இது:

My Full Name : ————-
My Pet Name : Naangori
My favourite Music : ‘Shenai’ or Naayanam played in Nagara Modai
My favourite dish : Kothu Parotta
My favourite snacks : Beef Pakoda
My favourite Drink : Nannari Sarbath
My favourite Fish : Surumbu
My favourite Dryfish – Koduva
My favourite Bird : Ullaan
My favourite picnic spot : Silladi
My favourite sweet : Paruthikkottai Halwa
My favourite fruit : Naaval Pazham
My favourite eatable : Elanda vadai
My favourite friend : You.

– Naangori-

5.

Some unheard Definitions…

எட்டு முழ துப்பட்டி : An uniform worn by ladies to disguise themselves so as not to be recognised who is who (Even then some jollu guys identify guessing at their foot steps).
மல்லிய பத்திஸ¤ தாவணி : A never changing pattern till Qiyamath with crescent and star.
கைலி : A comfortable gents garment used to hide PAALKOVA to his dear wife without the notice of other house members
பிரியாணி வாடா : An eatable invented by our ancestors to use the unwanted wastage biriyani prepared before a day or two.
கொத்து பறாட்டா : A dellicious dish that can be ordered round the clock at the advent of the instant guests.
அலங்கார வாசல் : A place where we can purchase Beef Pakota, Sundal, Ice More, Parotta Urundai etc..
தர்ஹா மார்க்கெட் : A place where we can leave our unwanted cats wrapped in sack.
ஆண்டி குளம் : A giant dust bin where we can dump and pour all our waste materials

– Naangori-

6.

இஸ்லாமியப் பெயர்களின் முக்கியத்துவம் :

Dear Friends, As we all know Prophet Mohammad (p.b.u.h) has guided us with beautiful names to keep for our children. All of our names have meanings and blessings in it. It is very pity to note that we are spoiling those names with irrelevent pronounciation which becomes mockery. Hence it is in Arabic it should be rightly pronounced. In this regard let me mention few names common in Nagore.

ஜொஹ்ரா – Zahra
ஹைஜான் -Khadija
ஐஷான் – Ayisha
ஜஹபரு – Jaffar
ஆட்டுகால் மரைக்கார் – Abdul Qadir Maraicar
மம்மூசா மரைக்கார் – Mohamed Hussain Maraicar
செய் மைதீன் -Syed Mohideen
ஹஸ் குஸ் மாலிம் – Hassan Quddus Malim
மம்மூட்டி – Mohammad Kutty…

Just imagine , Are we calling these names in a right way? We shall remember that on the day of Qiyamath we will be called upon with our own names. The names have that much significance. Let us keep meaningful names.

‘உம்மனைகள்’கள் வந்த விதம்:

Those were the days when some one in our family goes to Haj they will name “Haji Ummanai’, and to those born when built New house ‘Puthu Oottu Ummanai’. Now thing are changing. We have awareness. Ladies are not dumb and foolish as it is in the public opinion.

– Naangori-

7.

‘நூதனமா பேசுறாஹா’ :

Dear Friend, You have mentioned about the dialect ‘Noodanama Pesuraha’. Noodanama is pure Tamil word. Hundreds of rare Tamil words is in our daily usage which is not common with non-muslims. For eg: Aanam instead of Kozhambu for Gravey, Thirappu instead of Chaavi for key, Thethani (Theyilai Thanneer) instead of Chaaya for Tea, Vilakku Maaru instead of Thudaippam for Broom Stick, Sooli instead of Karpini for pregnant lady, Soru instead of Saadam for Rice. Molavu Thanni (Milagu Thanneer) for Rasam and many more words.

‘ஜோட்டால அடிப்பேன்’ :

‘Jottaaley Adippaen’ is again an interesting thread. ‘Jottaaley Adippaen’ means I will beat with both the slippers, ‘Jottu’ derived from the word ‘Jodi’ which means PAIR.

‘ஆவு கெச்சேனு’:

Above all, ‘Aavu Kecheno’ is an exceptional and interesting dialect. It has been derived from the word ‘Aang Ketteno’ which means ‘Have I been doomed to disastrous?’. In Silappadigaaram, Paandiya Nedunchezhiyan says these words, when Kannagi proves her husband’s innocence. In course of time this exclamatory remark has been used to express the feeling equivalent to ‘Oh my God!’. The word ‘Ponduvo’ to mean ladies also been derived from ancient Tamil which means ‘Pendeer’. In this context let me conclude with a funny saying dedicated only to Nagore :

‘Ponduvala Ponduvala Nandu Kadikka, Aaambilaivola Aaambilaivola Allah Vachu Kaappatha !’

– Naangori-

8.

மேலும் சில ஸ்பெஷல் நாங்கோர் வார்த்தைகள்:

தீம்பா – Bucket
கோயான் – Fool
பேயன் – Idiot
லஹ¥ட்டு பேயன் – Extreme Idiot
பவுமானம் – Pride, Ego
செம்சட்டி – Coppet Pot (Big)
பராக்கு – Site Seeing
ஹப்பி (Hubbby) – Very Old
பே துப்பா – Good for Nothing
காண்டா (Gaanda )- Chilli Potota Fry, Water Can

Idioms :
அஹடம் பஹடம் – This & That

– Naangori –

9.

I have just imagined the following names popular in nagore irrelevant to their names. This is just an imagination. Please don’t get offended :

சின்னமரைக்கான் – who is fat, gigantic and hefty.
ஹல்வாசாபு – Who has sugar in his blood.
தங்கலாத்தா – who has recently mortgaged all her jewels
செவத்த மரைக்கார் – As black as Rajini
கண்ணுவாப்பா – Who had an eye operation.

– Naangori –

சாம்பிள்கள் போதுமா?

நம் கோபத்தை நாசூக்காக காட்ட வேண்டும் ; கருத்தை கருத்தோடு மோதவேண்டும் என்பதற்கு அவர் சொன்ன அம்பயர் உதாரணத்தை கடைசியாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அராஜகமாக சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றிய அம்பயரிடம் அந்த ஆட்டக்காரன் கேட்டானாம்:

‘உங்களை நான் அறிவுகெட்டவன் என்று சொல்வது தப்புதானே?’

‘கண்டிப்பாக’

‘பைத்தியக்காரன் என்று சொன்னால் அபராதம் விதிப்பீர்கள்’

‘ம்’

‘நான் அப்படி எதுவும் சொல்லப்போவதில்லை’

இந்த நாங்கோரி இன்னும் எவ்வளவோ எழுதியிருப்பார். மலையாள மணம் கமழ , ‘சேச்சி’ என்று பெண்கள் அழைக்கப்படுவது நாங்கோரில் – அதுவும் குஞ்சாலித்தெருப் பக்கம் மட்டும் – ஏன், ‘செறாங்கு’ யார்… ‘சோனவமீன்’ என்று ஒரு மீனுக்கு ஏன் பெயர் வந்தது…- எல்லாம் சொல்லியிருப்பார். அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருந்தன. உறுப்பினர்களின் தகுதி தெரியாமல், மூச்சோட்டம் சம்பந்தமான பயிற்சிகளில் மூச்சை எங்கே நிறுத்த வேண்டும் என்று ஒரு வரி அவர் எழுதிய ஞாபகமும் இருக்கிறது. அது பலரும் செய்வது போல் ‘ஹல்க்’ எனப்படும் தொண்டையில் அல்ல. ஆனால் இம்மாதிரி ஆன்மீக விஷயங்களை அவர் தொடர்வதற்கு முன் யாரோ ஒரு உறுப்பினர் , ரஷ்டிக்கு ·பத்வா கொடுத்தது சரிதான் என்று கடுமையாக எழுதப்போக… நாங்கோரி ஒரு ஒரு வரி , ‘ ருஷ்டி , Midnight Children போன்ற நல்ல படைப்புகளும் கட்டுரை/கதைகளும் எழுதியிருக்கிறான்; அதையும் சேர்த்து நாம் பரீசீலிக்க வேண்டும்’ என்று எழுதி…

இங்கே, கிளப்-ன் மதிப்பை இழந்தார் நாங்கோரி.

‘இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் கா·பிர்கள் இங்கே வர வேண்டியதில்லை’ என்று எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டார். நான் மட்டும் தைரியமாக , ‘இதைக் கண்டிக்கிறேன்’ என்று எழுத அங்கே நுழையும்போதெல்லாம் இணையத்தின் தொடர்பு அறுந்தது. அது என்ன தொழில் நுணுக்கமோ தெரியவில்லை. இந்த பிரச்சனை நீங்க என் அரபி முதலாளி பில் கட்டியிருக்க வேண்டும் என்றார்கள்.

அதிலிருந்து நாங்கோரி அங்கே எழுதுவதில்லையாம். நானும் பார்க்கப் போவதில்லை. அவரில்லாத கிளப் என்ன கிளப்? வெண்டைக்காய்.

அவரை தேடிக்கொண்டும் , பலரிடமும் விசாரித்துக் கொண்டும் இருந்த நான் துவண்டு போனேன். என் கதைகளில் இருந்த அநியாய சோகத்திற்கு அதுதான் காரணம். அதை நீங்கள் படிக்காமலேயே உணர்ந்திருக்கலாம். ‘கட்ட பொம்மனை தூக்கில் போட்டதற்கு அவன் பேசிய வசனம்தான் காரணம்’ என்பது போன்று யாராவது எழுதினால் இவர் நாங்கோரியாக இருப்பாரோ என்று எண்ணம் ஓடும்.

எங்கே இருக்கிறார் அவர்?

ஒரு ஊகமாக , பஹ்ரைனில் இருக்கிறார் என்கிறார்கள். அல்லது தன்னைத் தண்டித்துக் கொள்ள சவுதி போய்விட்டாரா? அவர் ‘கப்ப சபர்’ செய்பவர்தானா அல்லது ஊரோடு இருப்பவரா?

கிளப்கள் தொலையட்டும், இத்தனை வருடங்களுக்குப் பிறகு வலைப்பதிவுகள் எத்தனை சுதந்திரவெளி கொண்டதாக மாறிவிட்டது. எந்தப் பெரிய பத்திரிக்கையின் தயவும் தேவையில்லாமல், தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடும் விதமாய் எவ்வளவு பேர் அற்புதமாக எழுதுகிறார்கள். இந்த அ, த, சு, வெ மற்றும் அந்த க,பெ,ர,சியின் தமிழும் பன்முகத் திறமையும் மலைக்க வைக்கிறது. காலை எழுந்ததுமே தன் கடன்களைக் கூட முடிக்காமல் கருத்து சொல்ல புறப்பட்டு விடும் வெட்டி வீரர்களைப் போலல்லாமல் விஷய ஞானத்தோடு எழுதுகிறார்கள். பிறமதத்தினரை மதிக்கும் இவர்கள் மேல் பெரும் மரியாதை வருகிறது. இவர்கள் தொடாத துறையும் இல்லை…

இவர்களில் ஒளிந்து இருப்பாரோ?

ஏன் ஒளிய வேண்டும்?

அழகுக்காகவோ சிரிப்புக்காகவோ புனைபெயர் வைத்துக் கொள்பவர்கள் போலில்லாமல் துவேஷம் பரப்புவதற்காகவும் பரபரப்பிற்காகவும் அலையும் பெயரற்றவர்களைக் கண்டு பயப்படுகிறாரா?

எழுதியது உண்மையிலேயே யார் என்று தெரியாமல் இருப்பது பெரும் கொடுமைதான். இதையே நாங்கோரி விஷயத்திலும் கேட்கலாமோ?

ஒரு நண்பர் , தன் வலைப்பூவில் யாரோ நரகலை கழிந்து விட்டுப் போயிருக்கிறான் என்று புலம்பினார்.

‘எழுதுனவன் பேர் என்னய்யா?’

‘உன் உம்மாவை ஓ…வன்’

தூக்கிவாரிப்போட்டது.

எப்போதும் வன்முறைக்கு ஆளாவது பெண்கள்தான்…

இவ்வளவு நல்லவன் போல் பேசும் நானும் வன்முறை செய்ததுண்டு. அஸ்மாவை கல்யாணம் செய்யும் முடிவைச் சொல்கிறேன். அவளும் பதிலுக்கு வன்முறை செய்தாள் ; அதற்கு ஒத்துக் கொண்டாள்.

ஐ.பி , பொய்.பி என்று கம்ப்யூட்டரை கரைத்துக் குடித்தவர்களுக்கு எப்படி முகமூடி/போலிகளைக் கண்டு பிடிப்பதென்று தெரியலாம். நாங்கோரி போன்றவர்கள் என்ன செய்வார்கள்? அல்லது அவருக்கும் தெரிந்துதான் இருக்குமா?

சென்றமாதம் ஊர் சென்றிருந்த நான் , ‘இஸ்லாம் – ஒரு எலியின் அறிமுகம்’ (கீழ்மேற்கு பதிப்பக வெளியீடு) எழுதிய பிரபல எழுத்தாளர் நாங்கோர் நஜ்மியை ஒருவழியாகக் கண்டு , ‘நாங்கோரி பற்றி எதுவும் தெரியுமா நானா?’ என்று கேட்டேன். அவருக்கு தெரியவில்லை. எதிர்பார்த்ததுதான்.

அடுத்து, மிகச் சிறந்த துப்பறிவாளனின் பாவத்தோடு ஒரு கேள்வியைக் கேட்டேன்:

‘உங்களை தீவிரமாக இணையத்தில் எதிர்த்து எழுதும் பூனைநேசன்… அது நீங்கள்தானே?’

அவர் ஒரு ஆன்மீக சிரிப்பு சிரித்து விட்டு ‘ஆல்·பா’ தியானத்தில் ஐக்கியமானார்.

இது வேலைக்கு ஆவாது.

துபாய் திரும்பிய நான் , நேற்றிரவு டி.வியில் எனக்குப் பிடித்த ‘Star Singer’ நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன்.’ ஸ்ருதி அம்மா, லயம் அச்சன், மகளட பேரோ சங்கீதம்’ பாடிய பெண்ணைப் பார்த்து போட்டியின் நீதிபதிகளில் ஒருவரான இசையமைப்பாளர், ‘சுருதி சேர்த்து பாடனும் மவளே..; அதுதான் சுகம்; அப்போ தெய்வம் முன்னே வந்து நிக்கும்’ என்று சொல்லி ஒரு ‘ஆலாப்’ பாடிக்காட்டினார்.

பாடிவிட்டு, ‘சரிதானே நாங்கோரி?’ என்றார் என்னைப் பார்த்து.

(முற்றும்)

நன்றி : ஹய்யும் (Qaiyum), சேட்
உதவி: நாகூர் பிஸாது கிளப்

***

abedheen@yahoo.com
http://abedheen.wordpress.com/
http://abedheen.googlepages.com/main.html

Series Navigation

ஆபிதீன்

ஆபிதீன்