பெண்ணியம்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

கோகுலன்பெண்ணியம் என்ற இந்த தமிழ் வார்த்தையை நான் மிக சமீபமாய்த்தான் அறிந்தேன். அதற்கான விளக்கம் மிக நன்றாக புரிந்தாலும் அதற்கு சமமான வேறு தமிழ்வார்த்தை என்னவென்று தேடிப்பார்த்ததில் சமூகத்தின் பெண்ணினம் என பொருள் கொள்ளுவது பொருந்துமென நம்பினேன்..

இந்த கட்டுரையின் மூலம் வெகு நாட்களாக எனக்குள்ளே நான் திரும்ப திரும்ப யோசித்துக்கொண்டிருக்கும் பெண் இனத்தின் மீதான எனது சிலபல கருத்துக்களை உங்கள் முன் இறக்கிவைத்துவிடுவதே என் நோக்கம்.

பெண்ணியம் பற்றி பேச வேண்டுமானால் சங்ககாலம், புராணகாலமென்ன, மனிதன் தோன்றிய அந்த ஆரம்பநாளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதுதான் சரியான தொடக்கப்புள்ளியாக இருக்கும். இந்த பரந்த உலகத்தில் ஒளி எவ்வளவு இன்றியமையாததோ அப்படித்தான் இந்த மனித சமுய்தாயத்திற்கு பெண்மையும் முக்கியமானது. ஆம், பெண்கள்தான் சமூகத்தின் ஒளி. இதை முழுமனதுடன் ஒத்துக்கொள்ளும் எத்தனை பேருண்டு நம்மில்? ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அதுதான் மறுக்கமுடியாத உண்மை.

இன்றுவரைக்கும் இந்த சமுதாயம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கற்பனை உலகத்தில் பெண்ணை வெகு உயரத்தில் தூக்கி வைத்துக்கொண்டாடி வந்திருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில், யதார்த்ததில் பெண்களை சமமாய் பாவிக்க முன்வரவில்லை. விண்ணை பெண்ணென்கிறார்கள். மண்ணையும் பெண்ணென்கிறார்கள். நதியையும், மதியையும், கடவுளும் பெண்ணென்கிறார்கள். ஆனால் தன்னுடனே குடித்தனம் நடத்தும் பெண்ணை மட்டும் சகமனுஷியாக பார்க்கத்தெரிவதில்லை.

கி.மு வில் எங்கோ தொடங்கி கி.பி இருபத்தியோராம் நூற்றாண்டுவரைக்கும் ஓடிவந்துள்ள இந்த மனித சமுதாயத்தின் ஆரம்பத்தை ஆராய்ந்தோமேயானால், மனிதன் முதலாய் கற்ற தொழில் வேட்டையாடல். அந்த வேட்டையாடித்திரிந்த காலத்திலேகூட பெண்ணின் கைதான் ஓங்கி இருந்திருக்கிறது. அன்றெல்லாம் பெண் இரண்டாவது பாலினமாகவோ, இரண்டாம் பட்சமாக இருந்திருக்கவில்லை. அதிதியும் அவளது வீரமுமே அதற்கு சான்று. அப்பொழுது முதலே பெண்ணின் பெருமையை சகிக்காத ஆண்கள் அடுத்த புராண இதிகாச காலத்திலிருந்தே பெண்ணை அடிமைத்தனம் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். அடுக்களையிலும் படுக்கையறையிலும் பூட்டிவைக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அன்று தொடங்கி இன்று வரைக்கும் சுயநலம் மிகுந்த தன் ஆதிக்கக் கொடியை பெண்ணினத்தின் மீது நிலைநாட்டிக்கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தின் திறமை மீது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் இருப்பதும் உணமைதான்.

அன்று முதலே ஆணாகப்பட்டவன் எழுத்து உரிமையை தான் எடுத்துக்கொண்டான். அரசியல் உரிமையும் ஆண் வர்க்கத்திற்கு மட்டும் என்றான். அவனே பெண்ணும் சேர்த்து சட்டங்கள் இயற்றினான். தன் சுயநலத்திற்கெனவே அவற்றில் பெண்களை அடக்கி வைத்தான். பிள்ளைபெறுவதும் அடுப்பூதுவதும் மட்டுமே பெண்களின் பணியாக நேற்றுவரை இருந்திருக்கிறது. இன்றும் கூட அனைவரும் அந்நிலையிலிருந்து மீண்டபாடில்லை.

இராவணனின் தவறால், இராமனின் சந்தேகத்தால் தீக்குளிக்க கட்டாயப்படுத்தப்பட்ட சீதைமுதல், பிரம்மனின் தவறால், இந்திரனின் மோகத்தால், கௌதமனின் சாபத்தால் கல்லாய் சபிக்கப்பட்ட அகலிகை முதல், ஆண்களின் இச்சைக்காய் பெண் வம்சங்களே இரையாக்கப்பட்ட தேவதாசிமுறை வரை, கணவனின் சடலத்துடன் உயிருடன் கொளுத்தப்பட்ட உடன்கட்டை முறையின் கடைசிப்பெண் வரைக்கும் பெண்ணினம் நசுக்கப்பட்டதற்கான சுவடுகள் தான்.

இன்றும் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றான கற்பிலக்கணத்தை அதிகம் காப்பாற்றி வருபவர்கள் பெண்கள் என்றால் யாஅரும் மறுப்பதுண்டோ?

இன்றும் ஆண் வர்க்கத்திலிருந்து பெரியார் போன்ற சிலர் மனம் மாறியிருக்க வில்லையென்றால், பெண்படும் துயரங்கள் குறித்து துடித்திருக்கவில்லையென்றால் இன்றும் உடன்கட்டைமுறை மாறியிருக்காது. நடுத்தெருவில் பெண்ணின் மானம் வெளிச்சமாக சூறையாடுப்படுவதைக் கண்டு முத்துலட்சுமி அம்மையார் வெகுண்டெழுந்திருக்காவிட்டால் இன்றைக்கும் தேவதாசிமுறை அழிந்திருக்காது.

‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்றுதான் இன்றும் பாடிக்கொண்டிருந்திருக்கும் வார்க்கத்தின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் இன்றும் நிறைந்திருக்கும். அவ்வளவு ஏன், பெண் விடுதலைக்காக ஒரு முண்டாசுக்கவிஞனின் குரல் கேட்பதற்கே எத்தனையாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன இந்த நாட்டிற்கு. இத்தனைக்கும் உலகினுக்கே வாழ்வியல் இலக்கணம் சொன்ன வள்ளுவனும், சூரியனுடன் உடன் பிறந்த தமிழையும் கொண்டவர்கள் நாம். ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த உலகுக்கே நாகரிகம் சொன்னவர்கள். உலகின் முதல் பல்கலைக்கழகம் கொண்டு கல்வியிலும் புத்தர் மகாவீரரைக் கொண்டு ஆன்மீகத்திலும் இமயப்புகழ் கொண்டவர்கள். இப்படியாக நான் பழம்புகழ் பேச ஆரம்பித்துவிட்டேன் என் நினைக்க வேண்டாம். என் ஆதங்கத்தைதான் சொல்ல முயல்கிறேன்.

பழக்காலத்திலிருந்தே தொடர்ந்துவந்த பெண் சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளும் குற்றங்களும் சில புரட்சிக்குரல்களால் களையப்பட்டாலும் காலத்திற்கு ஏற்றபடியான புதிதுபுதிதான அநீதிகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. தேவதாசிமுறையும், உடன்கட்டை முறையும் தீர்ந்ததென பெருமூச்சு விட்ட மறுபொழுதே வரதட்சணைக் கொடுமை முதலாக பெண் சிசுக்கொலை மற்றும் ஈவ்டீசிங் எனப்படும் பெண்கள் மீதான கேலிப்பிரச்சினை ஈறாக எத்தனை புதிய பிரச்சினைகள்.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் பெண்ணை கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை. இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மனித சமுதாயத்தின் பெண்ணினத்தின் மீதான புதிய சாதனை. நாகரிக வளர்ச்சியில் இந்த கொடுமைகள் இன்று கொஞ்சம் மறைவது போல் தோன்றினாலும் காலத்திற்கு ஏற்றபடி பெண்ணினத்தின் மீதான புதிய பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்பொழுதுமே இந்தெ பெண்குலத்தின் மீதான அடக்குமுறைகளும் அநீதிகளும் வேரறுக்கப்படுவதில்லை. காலத்திற்கேற்ப புதியதாய் அவதாரம் எடுக்கின்றன.

பொதுவாகவே இந்த சமூகம் ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்’ என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும். எனக்கென்னவோ இந்த வாக்கியம் கேட்கும் பொழுதெல்லாம் பெண்ணின் வெற்றியை ஆண்கள் தட்டிப்பறித்து பெருமைப்பட்டுக்கொள்வதாக தோன்றும். அதென்ன வெற்றிக்கு பின்னால்?, அதாவது, வெற்றி ஆணுக்குத்தான் வேண்டும். ஆனால் அதற்கு சொந்தக்காரி அந்த ஆணுக்குப் பின் நிற்க வேண்டும் என்பதா அதன் உட்கருத்து? வேண்டுமென்றால் பெண்ணையும் சமமாய் பாவித்து ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருந்து பார்க்கட்டுமே. என்னே இந்த சமுதாயத்தின் சாதுர்யம்! இப்பொழுது நீங்கள் கூட இந்த சமுதாயத்தின் சாதுர்யம் கண்டு வியக்கலாம். ஆச்சரியபடுவதற்கில்லை.

இந்த சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் அன்புக்கும் பாசத்திற்கும் முதன்மையான ஆன்மாவாக, தாயாக ஒரு பெண் வேண்டும். காதலும் காமமும் பகிர்ந்து இனிமையான வாழ்க்கைக்கு மனைவியாக ஒரு பெண் வேண்டும். இரண்டாம் பாதி வாழ்க்கையின் காரணமாகவும் மகனை விடவும் அதிக பாசம் பொழியவும் மகளாக ஒரு பெண் வேண்டும். ஆனால் அந்த பெண் தனக்கு சரிநிகராக மட்டும் இருந்துவிடகூடாது என்பதில் தான் என்ன நியாயம் இருக்க முடியும்?

உங்களில் யாரேனும் சொல்லக்கூடும், பெண்கள்தான் இன்று அனைத்து துறைகளிலுமே கால் பதித்து விட்டார்களே. பெண்ணுரிமை கிடைத்தாயிற்றே என. நான் இல்லையென்றும் சொல்லவில்லை. ஆனால் நாடே இமாலய உயரம் ஏறவேண்டியிருக்கவேண்டிய பட்சத்தில் அவர்கள் ஏறியிருப்பது முதல் சில படிகளே என்றுதான் சொல்கிறேன். இன்றுவரை ஒரு இந்திராகாந்தி, ஒரு கல்பனா சாவ்லா என ஒருசிலர் தானே கண்களுக்கு தென்படுகிறார்கள்.

இன்றும் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சம்பள கவரை பிரிக்காமலே கணவனிடம் கொடுக்கும் மனைவிமார்கள். சென்ற தலைமுறையில் வாழ்ந்த என் உறவினர் ஒருவருக்கு அவரது சம்பளம் எவ்வளவு என்றே தெரியாது. அப்படியே கணவர் வாங்கிக்கொள்வார். இன்றும் தனது ஆசிரிய மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்த, வீட்டில் சும்மாவே முடங்கிகொடக்கும் கணவர் எங்கள் அண்டைவீட்டிலே உண்டு. இதை பெண்ணுரிமையென எப்படி சொல்ல இயலும்?

இன்றைய சமுதாயத்தின் பெண்ணினமே! ஒவ்வொரு முறையும் உங்களுக்கு குரல்கொடுக்க ஏன் பாரதி தேடுகிறீர்கள்.ஆமைபோல் ஆண்களின் அதிகார ஓட்டுக்குள் இன்னும் எத்தனை காலம் அடங்கியே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் அடங்கியே இருப்பதால்தான் இந்த சமுதாயமும் உங்களை நகர அனுமதிக்காத பொழுதுகளில் எல்லாம் எளிதாக கழித்துப்போட்டுவிடுகிறது.

உலகின் இன்னும் படிக்கப்படாத பக்கங்கள் எத்தனையோ இருக்க, இன்னும் அழும் தொடர்கள் தானே உங்கள் மாலைகளை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. உலகின் அனைத்திலுமே உங்களுக்கும் சம உரிமை உண்டெனெ முதலில் உணர்ந்திடுங்கள். வீடும் அலுவலகமும் தவிர உலகில் இருக்கும் அனைத்தையும் எப்பொழுது கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?

புதுமைப்பெண்களென பாரதி கண்ட கனவுப்பாதையில் ஒரிரு கால்த்தடங்கள் தான் தெரிகின்றன. பெண்ணினத்தின் ஒவ்வொரு பாதச்சுவடும் அப்பாதையில் தடம் பதிக்கட்டும்.

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யாவர்க்கும் அஞ்சாத ஞானச்செருக்கும் —
இங்கே பிறக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமாகட்டும். அடங்கிகிடப்பதும் முடங்கிகிடப்பதுவுமா கலாச்சாரம்? வீட்டுப்படி தாண்டாதிருப்பதா பண்பாடு? சுய ஒழுக்கத்துடனான யாவரும் தொடுவானம் சென்றுவர உரிமையுண்டு. புதுமைப்பெண்களாய் வீறுகொண்டு நடங்கள். இயற்கைகூட உன் திறமை அறிந்துதான் சமூக வளர்ச்சிக்கான பெரும் பொறுப்பான தாய்மையை உன்பால் கொடுத்துள்ளது. ஆணுக்கு நாடென்றும் பெண்ணுக்கு வீடென்றும் பிரிக்கப்பட்ட பழைய சட்டம் உடைத்தெறியப்படட்டும்.

இன்றைய சமுதாயமே! நீங்கள் இதுவரை திறமையாய் கட்டிக்காத்த உங்களின் சாதுர்யங்களையும் புத்திசாலித்தனம் என நினைக்கும் உங்கள் தந்திரங்களையும் வரும் போகியோடாவது கொழுத்திவிடுங்கள். உங்களின் வக்கிர சூழ்ச்சிகளிலிருந்தும், உங்களால் பூட்டப்பட்ட விலங்குகளிலிருந்தும் பெண்ணினத்தை விடுதலை செய்து விடுங்கள். உங்கள் ஒருகாலுக்கு விலங்கிட்டு ஒர் காலால் ஒலிம்பிக்கில் ஓடி வெல்ல ஆசைப்படுவது போல சரிபாதி பெண்ணினத்தை அடுக்களையில் பூட்டிவைத்து விட்டு இந்தியாவின் வல்லரசு கனவு காணாதீர்கள். அப்படியிருப்பின், அதைப்போல் ஒரு முட்டாள்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது.

நட்புடன்,
கோகுலன்
gokulankannan@gmail.com

Series Navigation

கோகுலன்

கோகுலன்