In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்தியா ஏவுகணைகளைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை அமைப்பை நிறுவி , எதிரி நாடுகளிலிருந்து வரும் ஏவுகணைகளைப் பற்றிய முன்கூட்டிய அறிவைப் பெற முனைந்துகொண்டிருக்கிறது. இந்த முன் எச்சரிக்கை அமைப்பு ஏற்கனவே பல நாடுகளில் – ஹிண்டு பெரிதும் நேசிக்கும் சீனா உட்பட – உள்ளது. இப்போது ஹிண்டு இந்தியாவின் ராணுவ அமைப்பிற்கும் , பிரதமருக்கும் ஓர் வேண்டுகோளை விடுத்துள்ளது. அந்த வேண்டுகோள் – ஏவுகணைகளைப் பற்றிய முன் எச்சரிக்கை அமைப்புகளை இந்தியா நிறுவக் கூடாது என்பது தான். இந்த அறிவுரையை விடுப்பதற்குக் காரண காரியங்கள் என்ன ?

இந்த அறிவுரைக்கு ஆதாரமாக இரண்டு நிபுணர்கள் ஹிண்டுவில் எழுதிய ஒரு கட்டுரையை ஹிண்டுவின் தலையங்கம் மேற்கோள் காட்டுகிறது. அந்த நிபுணர்கள் : எம் வி ரமணா ஆய்வாளர். அணுசக்தி ஆயுதங்கள் பற்றி எழுதி வருபவர். – ஆர் ராஜாராமன் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பணி புரிபவர்.

 • ரமணா – ராஜாராமனின் கட்டுரை

  இந்தக் கட்டுரை அரசியல் கட்டுரை அல்ல. இந்தக் கட்டுரை முன்வைக்கும் வாதம் இது தான். முன் எச்சரிக்கை அமைப்புகள் தவறு செய்ய வாய்ப்புண்டு. இதனால் தவறுதலாக அணுசக்தி ஆயுதங்களை ஏவுவது நடக்கக் கூடும். பாகிஸ்தான் – இந்தியாவின் அருகாமை காரணமாக, இந்த விபத்தைத் தவிர்ப்பது இயலாமல் போகலாம். (காண்க : குறிப்பு 1)

  ஆனால் இந்தக் கட்டுரையை தன் அரசியல் நோக்கங்களுக்காக ஹிண்டு பயன்படுத்திய விதம் தான் மிகக் கேவலமானது. பாகிஸ்தானுடன் அணுஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திய இந்தத் தலையங்கத்தில் இடம் பெற்ற வாசகங்கள் இவை. கவனியுங்கள் இது ஹிண்டுவின் தலையங்கம். ஹிண்டுவின் அதிகார பூர்வமான நிலைப்பாடு இது.

 • ஹிண்டுவின் தலையங்கம்

  The second is that it should stop installing early warning systems that clearly, in the specific South Asian context where the response time is dangerously short, increase the risk of accidental or unauthorised nuclear war. These two positive elements could constitute the basis of a common nuclear doctrine with Pakistan — and prove far more credible, as confidence building measures, than repetitions of the `no-first-use ‘ mantra that has virtually no practical value. But a red herring must be got out of the way: the quest for some kind of nuclear parity with China, which is in a different league and poses no strategic threat of any kind — any more than nuclear weapons in the hands of the United States, the United Kingdom, France or Russia threaten India.

  அணு ஆயுதங்களை முதலில் இந்தியா பயன்படுத்தாது என்ற அறிவிப்புக்கு நடைமுறையில் எந்த வலுவும் இல்லை என்று சொல்லும் ஹிண்டு பாகிஸ்தானுடன் நம்பிக்கையைக் கட்டுவிக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று தெரிவிக்கிறது. அந்த முயற்சிகள் என்னவாய் இருக்கலாம் என்று எந்த ஆலோசனையும் இல்லை. ஆனால் இந்த தலையங்கத்தில் சீனா இழுபடவேண்டிய அவசியம் என்ன ? red herring -ஐ முதலில் நீக்கிவிட வேண்டுமாம். red herring என்றால், மைய விவாதத்திற்குச் சம்பந்தமில்லாத ஒரு விஷயம் முன்னிறுத்தப்படுவதாய் அர்த்தம். அதாவது பாகிஸ்தான்- இந்தியா அணுஆயுத விவாதங்களில் ‘தேவையில்லாமல் ‘ சீனா இழுக்கப் படுவதாய் கற்பனை செய்துகொண்டுள்ள ஹிண்டு தன்னுடைய – அல்லது சீன எஜமானர்களின் – ஆலோசனையை தாராளமாய் வாரி வழங்குகிறது.

  இந்தத் தலையங்கத்தில் இன்னொரு முக்கிய சொற்றொடர் : in a different league. இது ஒரு அமெரிக்க வார்த்தைப் பிரயோகம். அதாவது ஒருவர் இன்னொருவரைக் காட்டிலும் மிக வித்தியாசமாக, உயர்ந்தவராக, இணை சொல்ல முடியாதபடி வேறொரு தளத்தில் இருப்பவர். இருவரையும் இணைத்துச் சொல்வதே தவறு என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தைப் பிரயோகம் நடக்கிறது.

  ஹிண்டு சொல்ல முனைவது என்னவென்றால் , இந்தியா தன்னை சீனாவிற்குச் சமதையாய்க் கருதிக்கொண்டுவிடக்கூடாது, பிசாத்து இந்தியா சீனாவின் உச்சத்தை எட்ட முயல்வதே பாவம் என்பது இதன் பொருள். இந்தப் பொருள் மறைபொருளாக , விளங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தினாலோ என்னவோ, இன்னமும் அழுத்தமாய் ஹிண்டு இந்த வாதத்தை நீட்டிக்கிறது. அதாவது சீனாவை, அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ் , பிரிட்டன் போன்ற ராணுவவலிமை மிக்க நாடுகளுடன் தான் ஒப்பிட முடியும், இந்த வளர்ந்த நாடுகள் அணுஆயுதம் வைத்திருக்கின்றன, இந்த ஆயுதங்களால் இந்தியாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த வலிமை மிக்க நாடுகளைப் போலவே சீனாவும் அணுஆயுதங்களை வளர்த்துக் கொள்ளட்டும். சீனாவினால் இந்தியாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதனால் சீனாவிற்குச் சமதையாய் ஆயுதங்களை வளர்க்கும் எந்த முயற்சியிலும் இந்தியா ஈடுபடவேண்டாம் என்று மிக வெளிப்படையாகவே ஹிண்டு சொல்கிறது.

  இதன் பொய்கள் சாதாரணமாக இந்தியா-சீனா உறவினைப் பார்ப்பவர்களுக்குக் கூடப் புரியும். பாகிஸ்தானுடன் இந்தியா சண்டை மூண்டபோதெல்லாம், சீன பாகிஸ்தானுக்குப் பக்கபலமாக நின்றிருக்கிறது. சீனாவைன் தலைவரே எங்கள் தலைவர் என்று முழங்கிய இந்திய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கத்திற்கு உதவிகளும், ஆயுதங்களும் வழங்கிவந்திருக்கிறது. நேபாளத்தில் மாஒயிசக் கிளர்ச்சியாளர்களிடம், இந்திய எதிர்ப்பை விதைப்பதிலும் வளர்ப்பதிலும் முன் நிற்கிறது. அருணாசலப் பிரதேசம் சீனாவின் பகுதி என்று சீனா சொல்லி வருகிறது. பாகிஸ்தான் கேட்டபோதெல்லாம் அணுகுண்டுகளை வழங்கியிருக்கிறது. அணுகுண்டு வெடிப்பதற்கு முன்னர் கூட பாகிஸ்தான் பிரதமர் நேரே பீகிங் சென்று பேச்சு வார்த்தை நடத்தி அனுமதி வாங்கிக்கொண்டுவந்துதான் வெடித்தார்கள். சீனாவுக்கு மிக நெருங்கிய ஸ்டாலினிஸ்ட் நாடான வட கொரியாவிடமிருந்து வாங்கிய நாடோங் ஏவுகணைகளை தான் பாகிஸ்தான் அடிக்கடி ‘பரிசோதனை ‘ பண்ணிப் பார்க்கிறது. அதாவது சீனா நேரடியாக இந்தியாவுடன் போட்டி போடும் அளவுக்கு ‘தாழ்ந்து ‘ போகாதாம். அடியாளுக்கு ஆணையிட்டு அடிக்கும் பண்ணையார் மாதிரி. கேட்டால் மத்தியஸ்தம் பண்ண தி ஹிண்டு. ‘நீ அந்த அடியாளுடன் சமாதானமாகப் போ. பண்ணையாருடன் பேச நீ யார் ? உனக்கு என்ன அருகதை ? பண்ணையார் இருப்பது In a different league ‘

  இதெல்லாம் இருந்தாலும், ஒரு பக்கம் இருக்கட்டும், சீனாவிற்குச் சமமாக இந்தியா தன்னைப் பாவிக்க முயற்சி செய்யக் கூடாது என்பது ஹிண்டுவின் வேண்டுகோள். மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து இந்த வேண்டுகோள் வைக்கப் பட்டதா அல்லது, சீனாவே வாசகங்களை எழுதிக் கொடுத்துவிட்டதா என்று தெரியவில்லை.

  குறிப்பு 1 :

  விஞ்ஞான பூர்வமாக இந்த முன் எச்சரிக்கை அமைப்புகளைப் பற்றியும், பாகிஸ்தான் – இந்தியாவிற்கு இடையில் நிறுவப்பட்டால் மிகக் குறுகிய கால இடைவெளியில் – ஐந்து நிமிடங்களில் – முன் எச்சரிக்கையை தெளிவுபடுத்திக் கொண்டு பதிலடி கொடுக்கத் தயார் செய்ய வேண்டும். எனவே ஒரு விபத்தே போல அணுஆயுதம் ஏவுவது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இந்தக் கட்டுரையின் கருத்து. இந்தக் கட்டுரையின் விஞ்ஞான அடிப்படைகளையும், இந்த இருவரும் ஜியா மியானுடன் இணைந்து எழுதிய கட்டுரைகளையும் கீழ்க்கண்ட தளத்தில் காணமுடியும்.

 • ஜியா மியான், எம் வி ரமணா, ராஜாராமன் கட்டுரை

  Series Navigation

 • மஞ்சுளா நவநீதன்

  மஞ்சுளா நவநீதன்