கே ஆர் விஜய்
ராமு – ஆர். இ. சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவன்.
வாழ்க்கையில் எதையுமே ‘லைட் ‘டாக எடுத்துக் கொள்பவன். அவனுடைய அப்பாவின் பாஷையில் அவனைப் பற்றிச் சொல்வதானால், கோணிப்பைத் தைக்கக் கூட லாயக்கில்லாத தடிமாடு — எவ்வளவோ தடவை இதே திட்டு வாங்கியும் ராமு ஒருமுறை கூட கோணிப்பை தைக்க முயற்சி செய்ததில்லை என்பது வேறு விஷயம்.
பன்னிரண்டாம் வகுப்பில் எவ்வளவோ சொல்லியும் படிக்காம அலைஞ்சானே உன் மகன் … இப்பவாவது திருந்தியிருக்கானா பார்த்தியா ? காலைல வீட்டை விட்டு வெளியே போயிட்டு நைட் பத்துமணிக்கு வர்றான்.
ஏங்க காலேஜ் போனதுக்கப்புறமும் நீங்க அவனைத் திட்டுறதை நிறுத்தமாட்டாங்களா. தோளுக்கு மேல வளர்ந்தப் பையனைப் போய்த் திட்டிக்கிட்டு
…
ஏண்டி சொல்லமாட்ட! கஷ்டப்பட்டு சேர்த்து வைச்ச பணம் மூன்றரை லட்சத்தை சொலையா அவுத்தேன் பாரு! என்னை …இதற்கு மேல் எதுவும் சொல்லாமால் ராமுவின் அப்பா அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.
ஏன்டா! ராமு நீயாவது
போதும் நிறுத்துங்கம்மா. வந்து சாப்பாடு போடுங்க! தூக்கமா வருது. போயி தூங்கணும்.
டே! கெட்ட பழக்கம் எதுவும் கத்துக்கலையே ? ? ? ?
வேலையைப் பாரும்மா! சும்மா நொய் நொய்ன்னுக்கிட்டு …
கடந்த மூன்று வாரங்களாக சனிக்கிழமையானால் காலை 8 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பும் ராமு இரவு பத்து மணிக்குத் தான் வீட்டிற்குத் திரும்ப வருகிறான்.. இந்தக் கவலையால் தான் ராமுவின் அம்மா இப்போது அந்தத் தேவையில்லாத கேள்வியைக் கேட்டாள். ஆனால் ராமுவோ நிஜத்தில் நல்ல பையன் அல்லது இதுவரை நல்ல பையனாக இருந்து வருபவன் என்று வைத்துக் கொள்ளலாம். நண்பர்கள் சகவாசம் கொஞ்சம் அதிகமாக இருந்து வளர்ந்தவன். பன்னிரண்டாவது படிக்கும் போது அவன் வீட்டிற்கு தினமும் குறைந்த பட்சம் நான்கு நண்பர்களாவது வருவது வழக்கம். அவர்களுடன் இரண்டு மணி நேரமாவது பேசாவிட்டால் அவனுக்குத் தூக்கமே வராது. அவனது அம்மா நண்பர்களைத் திட்டிவிட்டால் வேண்டுமென்றே அன்றெல்லாம் படிக்க மாட்டான். கேட்டால், அம்மாவை பழிக்குப் பழி வாங்குறானாம். மடப் பையன்.
********
ராமுவை எனக்கு கல்லூரி வந்த பின் தான் தெரியும். கல்லூரி முதல் நாளில் என் பக்கத்தில் வந்து அமர்ந்தவன் அவன் தான். அப்பாவின் பிசினஸைப் பார்ப்பதென்று நான் பிறந்தவுடன் முடிவெடுத்துவிட்டார்கள் போல…. பார்க்கும் இடமெல்லாம்.. என்ன கவுண்டரே, அப்பாவோட கம்பெனி தானே ? என்று நக்கலாக கேட்பதுமுண்டு. அதுவுமின்றி எனக்கும் பிசினஸில் தான் ஆர்வம். சரி எதுக்கும் இருக்கட்டுமே என்று தான் நானும் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன், அப்பாவின் தயவில்.
எங்கள் கல்லூரி கோவை பஸ் நிலையத்திலிருந்து தொலைவில் அமைந்திருந்ததாலும் கல்லூரி செல்லும் வழி எனக்கு ஒன்றும் புதிதல்ல.ராமகிருஷ்ணா இன்ஜியரிங் கல்லூரி(ஆர். இ. சி) அமைந்திருந்த அதே சாலையில் தான் நான் படித்த பள்ளியும் அமைந்திருந்ததால் எனக்கு கல்லூரி வாழ்க்கைப் புதியதே தவிர வழி புதியதல்ல.
ராமு எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆகிறது. சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு அப்பாவும் அம்மாவும் ஸ்பின்னிங் மில்லுக்கும் ஃபவுண்டரிக்கும் போனதும் வீட்டிற்கு வருவான். வந்ததும் நாங்கள் கொஞ்ச நேரம் சீட்டு விளையாடுவோம். அதன் பின்னர்.. ‘ நெட் ‘ டில் நுழைந்துவிடுவோம்… ராமுவுக்கு இண்டர்னெட் என்ற மாயை அறிமுகப்படுத்தி அவன் வாழ்க்கையை திசைத் திருப்பிய புண்ணியவான் நான் தான்.
முதன் முதலில் அறிமுகப்படுத்தியதுமே அவனது வலையில் மாட்டிய மீன் தான் ஆஷிமா.
முதல் இரண்டு வாரம் ஆஷிமா தன்னைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
கொஞ்ச நாள் கழித்து தான் ஐ.ஐ.டி பெங்களூரில் படிப்பதாகச் சொன்னாள்.
ராமு கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தி தன் ஆட்டத்தை விளையாடினான். உங்களுக்குப் பிடித்த நடிகர் ? நடிகை ? புத்தகம் என்று பல கேள்விகள் கேட்டான். கடைசியில் அவள் தனக்குப் பிடித்த அய்ன் ரேண்ட் எழுதிய ‘atlas shrugged ‘ புத்தகத்தைப் பற்றிப் பேச ராமு அதை ஏற்கனவே படித்திருந்தது அவளுடன் மேலும் மேலும் பேச பல வழிகளை வகுத்துக் கொடுத்தது. அதன் பின் அவர்கள் அய்ன் ரேண்டின் அடுத்த புத்தகத்தில் ஆரம்பித்து கேட்சர் இன் தி ரை, ஜெப்ரி ஆர்ச்சர், மைக்கேல் க்ரைக்டன், ரெளலிங்,சல்மான் ருஷ்டி ,அலெக்ஸாண்டர் டூமாஸ் என்று எல்லை கடந்து எங்கேயோ போய்விட்டார்கள்…
இந்த மூன்று வாரங்களில் இவர்கள் நட்பு மிகவும் வளர்ந்திருந்தது.
அதுவும் சென்ற வார சாட்டிங் ராமுவின் வாழ்க்கையில் மட்டுமல்ல என் வாழ்க்கையிலுமே ஒரு திருப்புமுனை. எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்த ராமு திடாரென ஆஷிமாவிடம் உன்னைப் பார்க்க பெங்களூர் வரட்டுமா எனக்கேட்க அவளும் ஒத்துக் கொண்டது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. ஜெயநகரில் உள்ள கூல்-ஜாயிண்ட் ஜங்ஷனில் சந்திப்பதாக ஆஷிமா கூற ராமுவும் அதற்கு இசைந்துவிட்டான்.
இந்த இரண்டு நாள் நாங்கள் வீட்டில் சொல்லாமல் பெங்களூர் போயிருந்தோம். என் பள்ளி நண்பன் காசி அங்கு தயானந்த சாகர் இன்ஞினியரிங் கல்லூரியில் படித்து வந்ததால், எங்களுக்கு தங்குவதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
காலை ஒன்பது மணிக்கு ஆஷிமா கூல்ஜாயிண்ட்க்கு வருவதாகச் சொல்லியிருந்தாள். எட்டு மணிக்கே நானும் ராமுவும் அந்த இடத்தில் ஆஜர். ஒரு மணி நேரம் கழித்து என் செல்போன் மெதுவாக ஒலித்தது.
நான் தான் ஆஷிமா… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு…
இன்னும் ஒன் அவர்ல அங்க இருப்பேன்.. அங்கேயே இருங்க..
நான் ப்ளாக் கலர் சுடிதார் போட்டு இருக்கேன். ரெட் கலர் துப்பட்டா…
அது சரி… நீங்க என்ன கலர் ஷர்ட் ?
ராமு சற்றும் யோசிக்காமல் ப்ளூ கலர் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
ஏண்டா நான் ரெட் டி-சர்ட் நீயோ பிங்க் கலர் சர்ட்.. அப்புறம் எதுக்குடா ?
சரியாக ஒரு மணி நேரம் கழித்து ஒரு பெண் கறுப்பு கலர் சுடிதார் சிவப்பு கலர் துப்பட்டாவுடன் அந்த இடத்திற்கு வந்திருந்தாள். அங்குமிங்குமாக சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை எங்கள் மனதில் கட்டியிருந்த கோட்டைகள் அந்த ஒரு வினாடியில் சரிந்து விழுந்தன. என்னிடம் கமலஹாசன் பற்றி .. ஜெப்ரி ஆர்ச்சர் பற்றி .. பீத்தோவன் பற்றி.. பேசியவளா இவள் .. இவளா ஆஷிமா ?என்று திரும்ப திரும்ப கேட்டான்.
ஏண்டா பேசுறதுக்கு அறிவிருந்தா போதும்டா!
இல்லை..
அவனைப் பார்ப்பதற்கு எனக்கே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவன் முகத்தில் எந்தவித உணர்வுமில்லை. அவனிடம் எதுவும் விவாதிக்காமல் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினேன்.
கொஞ்ச நேரத்தில் நானும் ராமுவும் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டோம்.
அடுத்த இரண்டு வாரமாக ராமு எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்திவிட்டான். எனக்கே காரணம் தெரிந்ததால் நானும் அவனை எதுவும் கேட்கவில்லை.
நீண்ட நாட்கள் கழித்து இன்று மீண்டும் இண்டர்நெட்டில் நுழைந்தேன். ராமுவுக்கும் எனக்குமான பொது சாட்-ஐ.டியை உபயோகப்படுத்தி உள்ளே நுழைந்தால் – ஆஷிமாவிடமிருந்து பதில்…
‘ஐ அம் ரியலி சாரி… அன்னைக்கு வர முடியாம போயிடுச்சி. என்னோட அண்ணன் திடார்ன்னு ஹாஸ்டலுக்கு வந்திருந்தான்.. இன்னொரு நாள் நாம கண்டிப்பாகப் பார்க்கலாம்.. – ஆஷிமா ‘
என் யமஹா என்டைஸரின் கிக்கரை ஓங்கி அடித்தேன்.
கே ஆர் விஜய்
vijaygct@yahoo.com
******
- பொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு
- காதல் கிழியுமோ ?
- கவிதைகள் இரண்டு
- கரைந்த இடைவெளிகள்
- இரண்டு கவிதைகள்
- நானே நானா
- பைத்தியக்காரி
- அறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)
- அமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)
- ‘வெள்ளிப் பனித்துளிபோல்… ‘
- இயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)
- சந்திப்பு
- சாதி இரண்டொழிய….
- வெளிப்பாடு
- சந்தோசமே உயிர் மூச்சு !(கவிதைக்குள் ஒரு கதை)
- நான் மட்டும்
- பெண்களை நம்பாதே
- இலக்குகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது
- மனம்
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..
- இரண்டொழிய
- I..I.T. – R.E.C. காதல்:
- தளுக்கு
- இது ஒரு விவகாரமான கதை
- பறவைப்பாதம் 4
- வாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…
- கடிதங்கள்
- தியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ ?
- குறிப்புகள் சில (ஜூன் 7, 2003)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6
- இரண்டு கவிதைகள்
- மனசே! இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்!