Cloud Computing – Part 4

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

சித்ரா சிவகுமார், ஹாங்காங்


4

இரு நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்:

“தொழில் எப்படி நடக்குது?”

“நல்லாவேப் போகுது.”

“ஆமா உங்க ஆபிஸ் எங்கே இருக்குது?”

“இதோ இது தான் என் ஆபிஸ்” என்று தன் கணினியைக் காட்டினார் பொருளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வாணிகத்தில் இருப்பவர்.

“என்னது.. கணினியே உங்க ஆபிஸா?”

“ஆமா. ஒரு ஆபிஸ் போடணும்ன்னா.. வாடகைக்கு ஒரு இடம் வேணும். டெலிபோன் லைன் வாங்கணும். வேலைக்கு ஆள் எடுக்கணும். தினம் காலையில வீட்டை விட்டு கிளம்பி, பயணம் செஞ்சி ஆபிஸ_க்குப் போய் வேலையப் பார்த்துட்டு மறுபடியும் மாலையில பயணம் செஞ்சி வீடு திரும்பணும். அதெல்லாம் இதில இல்ல. நான் வீட்டிலிருந்துக்கிட்டே, இல்ல எங்காவது போனா, அங்கிருந்தே என்னோட வேலையச் செஞ்சி முடிக்கற வசதி இதனால இருக்கு.. பொருள வைக்கறதுக்கு கொடவுன் மட்டுந்தான் இருக்கு”

“எப்படிங்க முடியுது”

“கஸ்டமரோட தொடர்பு. ஆவணங்கள் செய்யறது. அவங்களுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கறது. இதத்தான் ஆபிஸ் போட்டாலும் செய்யப் போறேன். அதனால இணையம் மூலமா நான் எல்லாத் தொடர்புகளையும் செஞ்சிக்கறேன். பெரும்பாலான கோப்புகளை நான் மேகத்திலையே உருவாக்கி சேமிக்கறதால நான் எங்கே போனாலும், அதை நான் வை-பை இருக்கறதால பார்க்க முடியுது. இது போதாதா?” என்றார்.

வீட்டிலிருந்தே வேலை செய்கிறேன் என்று யாராவது சொன்னால், அவர் எப்படிச் செய்கிறார் என்பது இப்போது புரிகிறதா?

பிரபலமான ஆட்டக்காரர்களைக் கொண்ட பிரபலமான குழுவின் விளையாட்டுப் பயிற்சியாளருக்கு ஒரு போட்டியில் குழு கலந்து கொள்ள அழைப்பு வந்தது. இரண்டு நிமிடங்களில் அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். ஏற்பாடு செய்பவர் எப்படி இத்தனை வேகமாக முடிவு எடுக்க முடிந்தது என்று கேட்டார். அனைவரது விளையாட்டு அட்டவணை, கூகுள் காலண்டரில் இருப்பதால், போட்டி நடக்கப் போகும் தினங்களில் அனைவரும் சிக்குவார்கள் என்பதால் ஒப்புக் கொண்டதாகச் சொன்னார். ஆம் பொதுவான கூகுள் காலண்டரில் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு ஏதும் பணி இருந்தால் அதில் குறிப்பிட்டு விட்டால் போதுமானது. அதைக் குழுவின் எந்த உறுப்பினரும் எப்போது வேண்டுமானாலும் காணலாம். நண்பர் கிடைப்பாரா என்பதை அறிந்து கொள்ளலாம்.

இன்னும் வரும் காலங்களில் பல மாற்றங்களை இந்த மேகக் கணிப்பு நிச்சயம் கொண்டு வரும். அதனால் அதை இப்போதே புரிந்து கொள்வது நலம்.

மேகக் கணிப்பின் சாதக பாதகங்களை ஆராயும் போது, அதன் சிறப்பம்சங்கள் வெளிப்படும். அது என்ன என்பதும் தௌ;ளத் தெளிவாகப் புரியும்.

மேகத்தால் கிடைக்கும்; நன்மைகள் என்னென்ன?

பயனர்களுக்கு கணினி வைத்திருக்கும் செலவு குறையும். மிகவும் சக்தி வாய்ந்த கணினி பயன்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பயனர் கணினிக்கு சிடி டிவிடி டிரய்வ் கூட வேண்டியதில்லை. ஏனென்றால் பயன்பாடுகளும் தரவுகளும் கோப்புகளும் ஆவணங்களும் எனறு அனைத்துமே மேகத்திலேயே இருக்கின்றன. மிகப் பெரிய பயன்பாடுகளைப் பயன்படுத்த சாதாரண கணினி மேகத்துடன் தொடர்பு கொள்ளும் தகுதியுடன் இருந்தாலே போதுமானது.

மிகப் பல பயன்பாடுகளைக் கொண்ட கணினி செயல்படத் துவங்கவே நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் மேகக் கணிப்பில் இணைக்கப்பட்ட கணினிகளின் செயல்கள் மிகவும் வேகமாகச் செயல்படும். தேவையான மென்பொருள்களை அவை இதர கணினிகளின் உதவியுடன் செய்துவிடுவதால், செயல்பாடு சிறப்பாகிறது.

தகவல் நுட்பத்திற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் அமைக்கும் செலவு மிகக் குறைவாகிவிடும். மிகச் சக்தி வாய்ந்த பல சேவையகங்களுக்குப் பதிலாக மேகக் கணிப்பில இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளின் சக்தியைச் சரியான முறையில் பயன்படுத்தும் வழி தெரிந்தால் போதும். மற்ற சேவையகச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துவிடலாம்.

கணினிகளை வாங்குவதுடனும் பயன்படுத்துவதுடனுமட பயனர்கள் நின்றுவிட முடியாது. கணினிகளை அவ்வப்போது பழுது வராமல் தடுக்க சரிபார்க்கும் செலவுகளையும் எதிர் கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான கணினிகளைக் கொண்ட நிறுவனத்தில் அத்தகைய செலவு அதிகமாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை. அத்தகைய செலவுகள் மேகக் கணிப்பில் குறைவதோடு, சரிபார்க்கும் செலவுகளும் குறையும்.

மென்பொருள் செலவுகளும் குறைவு. பெரும்பாலும் இப்போது மேகச் சேவை தருபவர்கள், மென்பொருளையும் தந்து விடுவதால், அதற்கான வாங்கும் செலவும் மிகக் குறைவு. மென்பொருளை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்களோ, அத்தனை பேருக்கும் லைசன்ஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும். அத்தகைய செலவு குறைவு. அவற்றை ஒவ்வொரு கணினியிலும் நிறுவவும், செயல் சீரமைப்புகளுக்கான செலவுகளும் இதில் அறவே கிடையாது. பல மேகச் சேவையகங்கள் மென்பொருளையும் இலவசமாகக் கூடத் தருகிறார்கள்.

மென்பொருளில் ஏதாவது சிறப்பம்சம் கூட்டப்பட்டால். அதைப் பயனர்களுக்கு எளிதில் பகிர்ந்தளிக்க முடியும். ஒவ்வொரு கணினியிலும் நிறுவும் பணியே இருக்காது.

அதிகக் கணினி சக்தி கிடைக்கும் வாய்ப்பு. ஒரு சிறிய மேசை கணினியின் சக்தியுடன் மட்டுமே போராட வேண்டிய அவசியமில்லை. மேசைக் கணினியின் சக்தியை விடவும் பன்மடங்கு சக்தியை மேகக் கணினிகள் மூலம் குறைந்த செலவில் பெற்றுவிடலாம்.

சேமிப்பு சக்தி எல்லையில்லாதது. எவ்வளவு தரவுகளையும் கோப்புகளையும் ஆவணங்களையும் சேமித்து வைக்கலாம். கலன் அளவில்லாதது. அனைத்து கணினிகளின் கலனைகளை நன்றாகப் பயன்படுத்த மேகக் கணிப்பில் நுட்பம் இருக்கிறது.

மேகத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பத்திரமாக இருக்குமா என்ற ஐயம் நம்மில் பலருக்கு எழும். அவை எங்காவது ஒரு மூலையில் நிச்சயமாகப் பத்திரமாக இருக்கும். மேசைக் கணினியில் டிஸ்க் செயலிழந்து போகும் போது பல நேரங்களில் தரவுகளும் அழிந்துபோகும் நிலை ஏற்படும். ஆனால் அத்தகைய சூழல் மேகக் கணினிகளில் கிடையாது. தரவுகள் அனைத்தும் ஒன்றுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கணினிகளில் சேமிக்கப்படுவதால், ஒரு கணினி பழுதுபட்டாலும், தரவினை மேகம் மற்றொரு கணினியிடமிருந்து பெற்றுத் தந்துவிடும்.

மேகத்தில் இயக்கு தளம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேக், லினக்ஸ், வின்டோஸ் என்று எதுவாக இருந்தாலும், மேகத்திற்கு அனைத்துமே ஒன்று தான். நாம் எந்தக் கணினியிலிருந்தும் மேகத்தைத் தொடர்பு கொள்ளலாம். எந்த இயக்குதளக் கணினியிலிருந்தும் தரவுகளைப் பெறலாம்.

இணையகம் மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்களில் பார்மேட்டிங் தொல்லை கிடையாது. வின்டோஸ் வேர்ட் 2003இல் உருவாக்கப்பட்ட ஆவணத்தை, அதிலிருந்தே நாம் சரியாகப் பார்க்க முடியும். அது போன்ற தொந்தரவுகளட மேகக் கணிப்பில் இருக்காது.

குழுச் செயல்பாடுகளைச் சுலமாகச் செய்யலாம். குழுவின் ஒரு உறுப்பினர் ஆவணத்தை உருவாக்கினாலோ, மாற்றினாலோ, கூட்டினாலோ, குறைத்தாலோ அது மற்ற குழுவினருக்கு உடனே தெரியும்.

மின்னஞ்சல் மூலம் ஆவணங்களை மாற்றி மாற்றி அனுப்ப வேண்டிய நிலையை மேகக் கணிப்பு அறவே மாற்றிவிட்டது. குழுச் செயல்பாடுகள் எளிமையாக்கப்பட்டதால், திட்டங்கள் மிக வேகமாகவும் சரியாகவும் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆவணங்களை உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுகும் நிலையும் மேகக் கணிப்பால் உருவாகியுள்ளது.

ஒரே கணினியுடன் ஒட்டிக் கொள்ளும் நிலையை மேகம் மாற்றியுள்ளது. நாம் எந்தக் கணினியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சொந்தக் கணினியின்றி இருப்போரும், இப்போது இணையக மையக் கணினி மூலம் வேண்டியதைச் செய்து கொள்ளலாம். ஆவணங்களைப் பாதுகாத்து வேண்டிய போது பெற்றுக் கொள்ளலாம்.

மேகக் கணிப்பின் பாதகமான சூழல்கள் என்னென்ன?

மேகக் கணிப்பைப் பயன்படுத்த வேண்டுமென்றால், இணையத் தொடர்பு இருந்தேயாக வேண்டும். அது நல்ல முறையில் செயல்பட்டாலொழிய அதன் பயனை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. இணையத் தொடர்பு இல்லாத இடங்களில் நமக்கு வேண்டிய கோப்புகளையுதட ஆவணங்களையும் பெறுவது இயலாது. அப்போது நாம் எப்போதும் போல யு. எஸ். பி அல்லது சிடி போன்றவற்ளை பயன்படுத்த வேண்டிய அவசியமாகிறது.

மிகவும் குறைந்த மேகம் கொண்ட தொடர்பு வசதியில் மேகக் கணிப்பு சிறப்பான முறையில் செயல்பட முடியாது. ஏகப்பட்ட கணினிகளை பல வழிகளில் தேடுவதால், தொடர்பு அதிவேகம் கொண்டதாக இருப்பது நல்லது. ஒரு ஆவணத்தின் பக்கங்களைப் புரட்டுவது கூட மிக மெல்ல நடக்கும் குறைந்த வேகம் கொண்ட தொடர்பு இருந்தால்.

சில சமயம் அதிவேகத் தொடர்பு இருந்த போதும், பலவிதமான பயன்பாடுகளைச் செயல்படுத்துவமாலும், ஆவணங்களைப் பல்வேறு இடங்களிலிருந்து பெற்றுத்தருவதாலும், மேகக் கணிப்பு சற்று மெல்லச் செயல்படும் வாய்ப்புகளுமுண்டு.

மேகக் கணிப்பு புதிய யுத்தி என்பதன் காரணமாக, தற்போது தான் பலரும் பயன்பாடுகளை உருவாக்கி வருகின்றனர். அதனால் சில வகையான பயன்பாடுகள் மட்டுமே தற்சமயம் உள்ளன. அவற்றிலும் சில அம்சங்கள் மட்டுமே உள்ளன. இன்னும் மேகக் கணிப்புத் திறன் வளர வளர, பலவிதமான புதிய முறைகள் வரும்வரை, இருப்பதைக் கொண்டே செயல்பட வேண்டும்.

சில சமயம் பாதுகாக்கப்பட்ட தரவுகள் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நம் தரவுகளை மற்றவர்கள் பயன்படுத்தும் வாய்ப்புக்கு இடமுண்டு. அதனால் அணுகு முறையைப் பூரணமாக அறிந்து கொண்டே மேகக் கணிப்பில் நம் தரவுகளைச் சேமிப்பது நல்லது. மேகம் தரவுகளை தொலைப்பது அரிது என்றாலும் அப்படியும் தொலைந்து விட்டால் அம்பேல். பற்பல கணினிகளில் தரவுகளையும் கோப்புகளையும் ஆவணங்களையும் சேமிப்பதால், தொடர்பில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால், அதைப் பெற்றுத் தருவதிலும் பிரச்சினை ஏற்படும். அதனால் தரவுகளை மேகத்தில் சேமிப்பது நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியாது.

மேகக் கணிப்புத் தரும் சில சேவைகளைப் பற்றி சிறிது விரிவாக அறிந்து கொள்வோமா?

இசி2 என்கிற அமேசனின் சேவை கட்டமைப்புச் சேவை. அதிலென்ன இருக்கிறது?

அது முக்கியமாக மூன்று விதமான மறைமுகச் சேவையகங்களைத் தருகிறது.

சிறியது 1.7ஜிபி நினைவகம
160ஜிபி சேமிப்புக்கலன்
1 மறைமுக 32-பிட் கோர் பிராஸசர்

பெரியது 7.5ஜிபி நினைவகம
850ஜிபி சேமிப்புக்கலன்
2 மறைமுக 64-பிட் கோர் பிராஸசர்

ஆதிகப் பெரியது 15ஜிபி நினைவகம
1.7டிபி சேமிப்புக்கலன்
4 மறைமுக 64-பிட் கோர் பிராஸசர்

மென்பொருள் தயாரிப்போர், அமேசானின் வன்பொருளையும் சாதனங்களையும் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்குத் தேவையான பணிகளைச் செய்து கொள்ளலாம். அமேசான் வலைச் சேவையர் தற்போது தங்களிடம் 330000 நுகர்வோர் இருப்பதாகச் சொல்கிறது. அந்த அளவிற்கு பயன்கள் இருக்கின்றன இந்தச் சேவைக்கு என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

கூகுள் ஆப் என்ஜின்

இது உருவாக்கிகளுக்கு தங்கள் சொந்த வலைப் பயன்பாடுகளைச் செய்து கொள்ள உதவுகிறது. இது கூகுளின் சக்தி வாய்ந்த பயன்பாடுகள் செயல்படக் கூடிய அதேச் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறது.

இது மென்பொருளை உருவாக்கவும், கண்காணிக்கவும், வேண்டிய அளவு பெரிதாக்கிக் கொள்ளவும் எளிதானது. இது இலவசமான சேவை. இதில் ஒவ்வொரு பயனருக்கும் 500 எம்பி சேமிப்பு வெளி தரப்படுகிறது. தேவையான அளவு மைய கட்டுப்பாடு சக்தியும் அளிக்கப்படுகிறது. 50 இலட்சம் பக்கங்களை ஒரு மாதத்தில் புரட்டுமளவிற்கான பாண்டவிட்த்தும் கிடைக்கும்.

ஐ.பி.எம்

இது நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு பயன்படக்கூடிய மேகக் கணிப்புச் சேவையை பிளு கிளவுட் இனிசியேடிவ் மூலமாகத் தருகிறது.

நீல மேகம் நிறுவனங்களின் கணினித் தேவைகளை உலகளவில் பகிர்ந்தளிக்க உதவுகிறது. எக்ஸ்பிரஸ் அட்வான்டேஜ் சூட் என்பது தரவுகளை பின் பதிவு செய்யவும், மின்னஞ்சல் தொடரைக் காக்கவும், தரவுகளின் பாதுகாப்புத் தன்மையைக் காக்கவும் உதவும்.

மேக வன்பொருளை நிர்;வகிக்க ஹடூப் என்ற பணி அட்டவணை (வொர்க் ஷேட்யூலிங்) பயன்பாட்டை நிறுவியுள்ளது. டிவோலி தரவு மைய நிர்வாக மென்பொருளும் இதிலுண்டு.

கணினி நிறுவனங்களில் பணி புரிவோருக்கு இது எத்தனைப் பயன் தரக் கூடியது, அதேப் போன்று சாதாரண மக்களுக்கும் பயனளிக்க வல்லது. தாங்கள் எடுத்த புகைப்படங்களையும் வீடியோ படங்களையும் பல வகைகளில் வலையேற்றலாம். நண்பர்களைப் பார்க்கச் சொல்லலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த நண்பர்களைக் கண்டு பிடிக்கலாம் இணைய வசதி இருந்தால். அதற்கான மென்பொருள்கள் தற்போது மேகத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.

நாம் எடுத்திருக்கும் டிஜிடல் படங்களை பிகாசா, பிலிகர், வெப்ஷாட், அடோப் போட்டோ எக்ஸ்பிரஸ், பேஸ்புக் போன்ற வலையக பயன்பாடுகளை உபயோகப்படுத்தி சேமித்து வைக்கலாம்.

வலை மின்னஞ்சல் சேவைகளை ஜிமெயில், யாஹ_ மெயில், வின்டோஸ் லைவ் ஹாட்மெயில் இலவசமாகப் பயன்படுத்தி பயன் பெறலாம்.

உடனடி தூதுச் சேவைகளை எ.ஓ.எல் இன்ஸ்டண்ட் மெசென்ஜர், கூகுள் டாக், யாஹ_ மெசென்ஜர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேஸ்புக், யாஹ_ குரூப், கூகுள் குரூப் கொண்டு சமுதாய வலையைப் பின்னலாம்.

ஸ்கைப், எம்.எஸ்.என் மெசென்ஜர் மூலமாக வீடியோ கான்பரஸ் செய்யலாம்.

படங்களை பிக்ஸ்வர் மூலம் விருப்பிய படி மாற்றி அமைக்கலாம்.

எவியரி மூலமாக டிஜிடல் படங்கள், ஆடியோ, வீடியோ எடிடிங் செய்ய இலவசமாகவே பயன்படுத்தலாம்.

இன்று இத்தனை வசதிகளும் மேகக் கணிப்பு ஆய்வுகளின் காரணமாகத் தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதை திறம்படப் பயன்படுத்தி கணினி உலகில் மேன்மேலும் முன்னேற்றம் இருக்கத்தான போகிறது. நாமும் அதைப் பற்றி அறிந்து கொண்டே இருப்போம்.

Series Navigation

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்