Capturing the Freidmans (2003)

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

மாது


ஒய்வுபெற்ற ஆசிரியரான அப்பா, அடங்கிய மனைவி, அழகான மூன்று பிள்ளைகள், சொந்த வீடு.சீராகச் சென்றுக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. தினம் இரவு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பாட்டை ரசிக்க முடிகிறது. நடுத்தர வர்க்கத்து அமெரிக்க கனவில் இதைவிட வேறு என்ன வேண்டும் ? ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, திடாரென்று காவலர்கள் வீட்டிற்குள் நுழைகிறார்கள். வீட்டை சோதனை இடுகிறார்கள். அப்பாவையும், கடைசி மகனையும் கைது செய்கிறார்கள். காப்ஃகாவின் ஏதோ ஒரு கதை போல் இருக்கிறதா ? இல்லை இது நிஜம். கைது செய்யப்பட்டவர்களின் மேல் சுமத்தப் பட்ட குற்றம் – சிறுவர்களின் மேல் பாலியல் பலாத்காரம் செய்தது (Sodomy).

1987ஆம் வருடம், ந்யூ யார்க் மாநிலத்தைச் சேர்ந்த க்ரேட் நெக் (Great Neck) என்ற ஊரில் ஆர்னால்ட் ப்ரீட்மன் (Arnold Freidman) என்பவரும் அவருடைய பதினெட்டு வயதான ஜெஸ்ஸி ப்ரீட்மன்னும் (Jesse Freidman) சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்கள் வைத்திருந்ததற்காகவும், ஆண் குழந்தைகளை பலாத்காரம் செய்ததற்காகவும் கைது செய்யப் படுகிறார்கள். ஊரே கொதிப்படைகிறது. காவல் துறை ப்ரீட்மன்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதற்காக ஆதாரங்களை திரட்டுகிறது. தொலைக்காட்சி, செய்தித்தாள் முதலிய ஊடகங்களுக்கு நல்ல வேட்டை. தந்தையும் மகனும் சிறையில் அடைக்கப் படுகிறார்கள் ? உண்மையில் நடந்தது என்ன ?

சாட்டப்பட்ட குற்றத்தினால் சின்னா பின்னமாகி சிதைந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒரு புறம். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கித் தருவதே சரியான நியாயம் என்று தீவிர நம்பிக்கை கொண்டிருக்கும் பெரும் கூட்டம் மற்றொரு புறம். இரு தரப்பு வாதங்களையும் ஆவணப் படுத்தி, எது உண்மை என்பதை நிர்ணயம் செய்யும் பொறுப்பை நம்மிடம் விட்டிருக்கிறார் இயக்குநர் அண்ட்ரூ ஜரெக்கீ (Andrew Jarecki). ப்ரீட்மன் குடும்பத்திற்கு தங்களை (விடியோ) படமெடுத்துக் கொள்வதில் அளவிலா ஆர்வம். அந்த ஆர்வம் வழி வழியாக வருகிறது. தேனிலவு செல்வது, மதிய நேரங்களில் சிறு குழந்தைகள் விளையாடுவது, ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவது, ஜாமினில் வெளியே வந்த போது சண்டை போட்டுக் கொள்வது என்று எல்லாவற்றையும் படம் பிடித்திருக்கிறார்கள். இந்த குடும்பப் படச் சுருள்களை இயக்குநர் நன்றாக உபயோகப் படுத்தியிருக்கிறார். ஒரு வினோதக் குடும்பத்தை பார்க்க முடிகிறது.

உண்மையும் ஹய்சன்பர்க்கின் நிச்சயமற்ற கோட்பாட்டுக்கு (Heisenberg ‘s Uncertainity Principle) உட்பட்டது போலும். உண்மை என்ன என்று ஆராய நோக்கினால் உண்மை மாறுபட்டுவிடும் அபாயம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒரு நிகழ்வை வெவ்வேறு பார்வை கொண்டு பார்த்தால், வெவ்வேறு உண்மைகள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது என்பதை ரஷொமோன் (Rashomon) முதல் விருமாண்டி வரை உள்ள படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மை என்ன என்று தெரியாமல் வெவ்வேறு தரப்பினரின் வாதங்களை மட்டும் கொண்டு உண்மையை அறிவது எவ்வளவு கடினம் என்பதை இந்த ஆவணப் படம் நன்றாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

நம்மில் பெரும்பாலோனோர் ஏதாவதொரு வண்ணக் கண்ணாடியை அணிந்து கொண்டு உலகத்தை பார்க்கிறோம். முன்கூட்டியே மனதில் செய்த முடிவுகளைக் கொண்டு உண்மைகளை ஆராய்கிறோம். ‘விபச்சார வழக்கில் நடிகை கைது ‘ என்று செய்தி படித்தால், ‘எனக்கு நல்லா தெரியும், இந்த நடிகைகளே இப்படித்தான், இவங்களல்லாம் உள்ள பிடிச்சி போட்டு நல்லா வாங்கணும் ‘ என்று ‘நியாயத்தை ‘ நிலை நாட்ட துடிக்கிறோம். ஆனால் எளிதில் பிடிபடாதது உண்மை என்பதை மிக அழகாக கூறியிருக்கிறது இப்படம்.

சென்ற வருட சன்டான்ஸ் திரைப்பட விழாவில் (Sundance Film Festival) சிறந்த ஆவணப் படத்திற்கான விருது Capturing the Freidmansக்கு கிடைத்தது. இந்தப் படம் உருவானதைப் பற்றி ஒரு சுவையான தகவல் – தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவதில் அமெரிக்க பெற்றோருக்குள் பெரும் போட்டி. பிறந்த நாள் விழாவிற்கு வரும் குழந்தைகளுக்காக கோமாளிகளை (clowns) வாடகைக்கு அமர்த்தி குழந்தைகளை மகிழ்விப்பார்கள். ந்யூ யார்க் போன்ற நகரங்களில் இந்த கோமாளிகளுக்கு நல்ல வரும்படி. இந்த கோமாளிகளை பற்றி ஆவணப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் இயக்குநர் அண்ட்ரூ ஜரெக்கீ. ந்யூ யார்க் நகரின் மிகப் பிரபலமான கோமாளி சில்லி பில்லி (Silly Billy). அவனைப் படம் எடுக்கும் போது, அவனுள் ஏதோ அடிப்படையான கோபம் இருப்பதை உணர்ந்தார். அவனிடம் மேலும் பேச்சு கொடுத்த போது, அவன் குடும்பத்தைப் பற்றி கூற ஆரம்பித்தான். ஆர்னால்ட் ப்ரீட்மன்னின் மூத்த பிள்ளை தான் சில்லி பில்லி என்று அழைக்கப் படும் டேவிட் ப்ரீட்மன். கோமாளிகளைப் பற்றிய படம் நின்றது, Capturing the Freidmans என்ற ஒரு சிறந்த ஆவணப் படம் உருவானது.

—-

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மாது

மாது