காங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

வருணன்


திமுக அமைச்சர் ராசா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடக்கக் காரணம் கருணாநிதி சுயநலமிக்கவர். ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர் அவர் என்ன செய்தாலும் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக மாட்டார் இப்படி ஒரு குடைச்சலைக் கொடுத்தால் அவர் ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடத்தமாட்டார் என்று நினைத்து செய்தது காங்கிரஸ் அவர்கள் நினைத்தது போலவே கூட்டத்தை ரத்து செய்து விட்டார்.

காங்கிரஸ் குணம் தெரிந்த திமுக இன்னும் காங்கிரசைத் தொங்கிக்கொண்டிருப்பதன் அவசியம் என்ன? நாட்டு மக்களுக்காக உழைப்பதாக இருந்தால் அமைச்சரவையிலிருந்து விலகிக்கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டியதுதானே. பாமக, திருமாவளவனைச் சேர்த்தாலே ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்துவிடுமே. அப்புறம் ஏன் காங்கிரசை நம்ப வேண்டும்?

முள்வேலியில் முடங்கியிருப்பவர்களை வெளிக்கொணர எம்பிக்களை அனுப்பியதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் திமுகவின் நிச்சயம் அந்த மக்களுக்காக இல்லை என்பதை நாடே அறியும். இவர்கள் பூச்செண்டு கொடுத்து பொன்னாடை போர்த்திவிட்டு மக்கள் எல்லோரும் முள் வேலிக்குள் நலமாக இருக்கிறார்கள் என்றுதானே அறிக்கை கொடுத்தனர். அரு அறிக்கையை இவ்வளவு விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்க தெரிந்த நம் குழுவினரின் செயல்பாடு வியப்பை ஏற்படுத்தியது. அந்தக் குழுவில் இவ்வளவு திறமை பெற்ற டி ஆர் பாலு ஏன் அமைச்சராக்கப்பட வில்லை?

திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் காங்கிரஸ்காரர்களும் ஓட்டு போட்டுதானே வெற்றி பெற்றார். அக்னிபுத்திரன் சொல்வது உண்மையாயிருந்தால் காங்கிரஸ் திருமாவளவனுக்கு ஓட்டு போட்டிருக்காதே? இதில் எங்கே இருந்து வந்தது கலைஞரின் செயல்? அப்படியிருந்தால் கருணாநிதி ஏன் இலங்கையில் திருமாவளவனைத் தொடர்ந்து கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்?

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இதுவரை கருணாநிதி மோதல் போக்கைக் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் பயந்து போய் பல்டிதான் அடித்தார் கருணாநிதி. இவரால் ஒரு துரும்பைக் கூட முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கிள்ளிப் போட முடியாது. இதற்கு முன் திமுக ஆதரவு மத்திய அரசுக்குத் தேவைப்பட்ட போது தமிழ்நாடுதான் இந்தியாவை ஆள்வதுபோல் வலிந்து ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி. அப்போதும் கூட தனக்குத் தேவையான துறைகளைப் பெறுவதிலேயே கவனம் செலுத்தினாரே ஒழிய அப்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை இவரது கண்களுக்குத் தெரியவில்லையா? தனது எம்பிக்களின் ஆதரவு தேவையில்லை என்ற நிலையிலும் தனது குரல் எடுபடாது என்ற சூழலிலும் ஊளையிட்டு ஊரூ ஏமாற்றிக் கொண்டு இருப்பது அக்னிபுத்திரன் போன்ற கண்ணை மூடிக்கொண்டு கருணாநிதியை தூங்கித் தோளில் வைத்துக் கொண்டாடுவோர்க்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம்.

எம் ஜி ஆரை வெற்றிகொள்ள முடியாத கருணாநிதி, ஜெயிடம் இரண்டு முறை தோற்ற கருணாநிதி, விஜயகாந்தைப் பார்த்து பயந்து போன கருணாநிதி ( வளரவிடாமல் தடுக்க பல்வேறு டார்ச்சர்கள் கொடுத்த) இப்போது ராகுலைப் பார்த்தும் பயப்படுவதாக வாக்குமூலம் கொடுத்துள்ள அக்னிபுத்திரன் தன் தலைவனின் நிலையை சில இடங்களில் வெளிப்படுத்துகிறார்.

கணிசமான வாக்கு வங்கி இருந்தும் அதிமுக பலவீனமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். கணிசமான வாக்கு வங்கி இருப்பது நாட்டுக்கே தெரியும். அதே சமயம் கருணாநிதியும் ஒருமுறை அவர் மட்டுமே வெற்றிபெற்ற சட்டபேரவைத் தேர்தலையும் நினைவில் வைத்துருப்பார் அக்னிபுத்திரன். அப்போதும் திமுக துவண்டு போய்தான் இருந்தது.

ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி பாஜகவுடனும் காங்கிரசுடனும் திமுக கூட்டு வைத்துக் கொண்டதே? அதைப்போலத்தான் அதிமுகவும் காங்கிரசுடன் கூட்டு வைக்க முயல்கிறது இதிலென்ன உங்களுக்கு கருத்து வேறுபாடு? ஜெ துடியாக துடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோமே. கருணாநிதி ஏன் வேண்டா வெறுப்பாக அக்கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்? பாஜக தற்சமயம் அக்னிபுத்திரன் கூற்று போல வலுவிழந்து இருப்பதாலா?

விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆலாய்ப்பறப்பதில் இவருக்கென்ன வந்தது? காங்கிரஸ் என்ன உங்களோடு ஏதாவது குத்தகை பேரம் பேசியிருக்கிறதா? அல்லது காங்கிரசை கருணாநிதி கல்யாணம் பண்ணிக்கொண்டு இருக்கிறாரா?

மருத்துவர் காங்கிரசுக்குத் தூண்டில் போடவில்லை. அவர் கருணாநிதிக்குத்தான் தூண்டில் போடுகிறார் என்பதுகூட தெரியாமல் இருக்கிறாரே இந்த அக்னிப்புத்திரன்.

இத்தனைப் பலமாக இருக்கிற திமுக என்கிறாரே எவ்வளவு பலம் இருக்கிறது திமுகவுக்கு என்று தெரியாமல் பேசுகிறாரே அக்னிபுத்திரன்? கடந்த முறை பெற்ற மக்களவை தொகுதிகளை இப்போது ஏன் பிடிக்க முடியாமல் போயிற்று? திமுகவை காங்கிரஸ் குட்ட முயற்சிக்கிறது என்றால் கருணாநிதி அந்தக் குட்டை இன்முகத்துடன் பெற்றுக்கொள்வாரே ஒழிய எதிர்க்க மாட்டார். இதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது காங்கிரஸ். மானமுள்ள திராவிட இயக்கமாக இருந்தால் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும். பாம்புக்கு தலையும் மீனுக்கும் வாவாலையும் காட்டிக்கொண்டு இருக்கிறார். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வாளாவிருந்து விட்டு தும்பை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அப்படிக் கூட சொல்ல முடியாது. வாலைப் பிடித்தால் மயிராவது மிஞ்சும்.

தினமலரை மஞ்சள் பத்திரிக்கை என்று வருணிக்கும் திமுகவினர் தினமலரை ஆதாரம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது. திமுக காங்கிரசுக்குக் கொடுத்த நெருக்கடிகளையெல்லாம் வசதியாக மறந்துவிட்டார் போலிருக்கிறது.

அரசியல் என்றால் அனைத்துக் கூத்துகளையும் நடத்தி முடித்து வெற்றி பெறுவதுதான் என்றாகிவிட்டது. லாலு, மாயா போன்றவர்களுக்கெல்லாம் முன் மாதிரியாக இருப்பவர்தானே இந்தக் கருணாநிதி. இவர் என்னவோ அவர்களோடு சமமாக வைத்து எடைபோடக்கூடாது என்கிறார். ஒருசமயம் ஹிட்லர் முசோலினி போன்றோர்களோடு ஒப்பிட வேண்டும் எதிர்பார்க்கிறாரா? மறந்து விட்டேன் நீரோ மன்னனோடு கருணாநியை ஒப்பிடலாம். இலங்கையில் உக்கிரமாக தமிழர்கள் தாக்குதலுக்கு ஆளானபோது குடும்ப சகிதம் மந்திரிபதவி வேண்டி டில்லியில் தவம் கிடந்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

ஐம்பது ஆண்டு அனுபவம் மிக்க கருணாநிதியால் உருப்படியாக ஒரு தமிழ் மாநாட்டை நடத்த வக்கில்லை. ஏற்றிவிட்ட ஆட்சியை இறக்கிவிட முடியும் என்கிறீர்களே. இப்போது இறக்க வேண்டியதுதானே. இதுதான் அரசியல் என்பது ஐம்பது ஆண்டு கால அனுபவத்திற்குத் தெரியவில்லையே. வசதியாக மக்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு கருணாநிதி மீது கொண்ட கண்மூடித்தனமான வெறியால் அக்னிபுத்திரன் பிதற்றுகிறார். இதில் வேறு சோனியாவுக்கு யாரோ தவறான யோசனை கூறுவதாக வேறு கூறியிருக்கிறார். அப்படியென்றால் சோனியாவை வானளாவ புகழ்ந்து கொண்டிருந்தாரே அப்போது தெரியவில்லையா? இவர் மற்றவரின் யோசனைப்படிதான் நடக்கிறார் என்று?

கருணாநிதியைப் பற்றித் தெரியவில்லை என்றிருக்கிறார் அக்னிபுத்திரன். அதுகூடத் தெரியாமலா உங்களுக்கே அவர்கள் தொடர்ந்து ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக்கால அரசியல் வேறு. இப்போது நடக்கிற அரசியல் வேறு. இப்பொழுது இருப்பவர்களுக்கு எல்லாம் பழைய கதையெல்லாம் தெரியாது என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.

காங்கிரசைப் பற்றிய அக்னிபுத்திரன் கருத்துகளையெல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் முதுகில் குத்துபவர்கள், கட்சிகளை உடைப்பது போன்ற அநாகரிக செயல்களைச் செய்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பது கருணாநிதிக்குத் தெரியாதா? அல்லது இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாதா? இதையெல்லாம் தெரிந்தே அவர்களோடு கூட்டு வைத்திருக்கிறீர்கள் என்றால் யார் அயோக்கியர்கள். இப்போது பாஜக பலவீனப் பட்டு இருப்பது தெரிந்து கொண்டதால்தான் அடக்கி வாசிக்கிறீர்களோ? ஒரு சமயம் பாஜக வலுவாக இருந்தால் அங்கு அப்படியே குரங்குத் தாவாக மாவி விடுவீர்களோ?

எல்லா வித்தைகளும் தெரிந்த காங்கிரசுக்கு, திமுகவுக்கு ஆப்பு வைக்க நன்கு தெரிந்திருக்கும். ஆனால் உங்களுக்குத்தான் அவர்களுக்கு ஆப்பு வைக்கத் தெரியவில்லை. அதனால்தான் கூனிக் குறுகிப் போய் கிடக்கிறீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இளையர் கருணாநிதி சுறுசுறுப்பாக செயல்படுவார் என்று நினைத்திருக்கும் உங்கள் நினைப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ்நாட்டு மக்கள் இவர் ஆட்சியில் படும் துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. டிவி கொடுத்துவிட்டால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. நான் நினைக்கிறேன் திரு அக்னிபுத்திரன் அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நினைக்கிறேன். இருந்திருந்தால் கருணாநிதிக்கு இப்படி வக்காலத்து வாங்க மாட்டார் என்று நினைக்கிறேன். இது போன்ற கட்டுரை தீட்டும் திரு அக்னிபுத்திரன் கொஞ்சம் கருணாநிதி ஆதரவாளராக இல்லாமல் ஒரு குடிமகனாக இருந்து யோசிப்பாராக குடிமகனாக இருந்தால்!

நன்றி.

Series Navigation

வருணன்

வருணன்