கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்

This entry is part of 47 in the series 20090828_Issue

ஸ்வயம்


வணக்கம்,

இந்த வார திண்ணையில் அன்பர் ஷேக் தாவூத் அவர்கள் திரு மலர்மன்னன் அவர்களுக்கு எழுதிய (கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்) பதில் மேலும் விவாதத்திற்கான வழிகளை திறக்கிறது. சில கேள்விகளை முன் வைக்கிறது.

பொதுவாக எந்தவொரு கருப்பொருளும் விவாதத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்பது இந்திய மரபின் அடிப்படை. அதில் இறையும், இறை நம்பிக்கையும் அடக்கம். இந்திய சூழலில் இறையை விட இறை உணர்வே முக்கியம். அதனால் தான் த்வைதம், அத்வைதம், விஸிஷ்டாத்வைதம் போன்று வேறுபட்ட பல கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. எல்லாமே எது இறை என்று அவரவர் தம் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தவை.

வேதங்கள் கூட இறைவனால் அருளப்பட்டதாக சனாதனத்தில் நம்பப்படவில்லை. ரிஷிகளின் மூலமாக வெளிப்பட்ட வேதங்கள் பின்னாளில் வியாசர் மூலமாக தொகுக்கப்பட்டன. மத(சனாதன) சம்பந்தமான நூல்கள் என்று நமக்கு தெரிகின்ற எல்லா நூல்களுமே ஏதோ ஒரு காலத்தில் தனி மனிதர்களாலோ, சிறு குழுவாலோ மட்டும் போற்றப்பட்டு வந்துள்ளன. பின்னர் வெகு காலத்திற்கு பிறகே அவைகள் வழிபாட்டின் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று ஒரு சொலவடை உள்ளது. இறையை கண்டவர்களால் அதை விவரிக்க முடியாது… வெகு ஜோராக விமர்சிப்பவர்கள் அதனை கண்டிருக்க மாட்டார்கள்.

இறை உணர்வை பெற நிறைய பக்குவம் வேண்டும். அதனால் தான் இங்கு மதக்கல்வி கட்டாயமாக்கப்படவில்லை. பொருள் சேர்க்கும் ஆசையால் தனை மறந்து ஓடும் மனிதன், நிதானமாகும் போது இறை சிந்தனை வருகிறது. மறுஜென்மம் பற்றிய இந்திய சித்தாந்தம் இதைத் தான் காட்டுகிறது. யாருக்கு தன்னையுணர்தல் அவசியமோ அவனுக்கு மட்டும் அந்த வழிகள் புலப்படும். ஆன்மீக சிந்தனையுள்ளவனால் தன் தேவையை தேடி அடைய முடியும். தேடல் குருவாகிறது, போதிக்கிறது. தானறிந்ததை மேலும் ஆராய்கிறான். மேலும் மேலும் விவாதத்திற்குள்ளாக்குகிறான். விவாதங்கள் அறிவை வளர்க்கும். மாறுபட்ட கருத்துக்கள் நாமறியா ஒரு கோணத்தை காட்டும்.

நான் இது வரையில் இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர் குறித்தும் அறிந்தவைகளை வைத்து எனக்கு எழும் சில கேள்விகள். என்னுடைய புரிதல் தவறாக இருப்பின், சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். கேள்விகளுக்கு நேரிடையான பதில்கள் தேவை, ஒப்பீட்டிற்காக பிற மத கோட்பாடுகளை மேற்கோள் காட்ட வேண்டாம்.

1) முகமது ஒரு இறை தூதர் என்று எதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்.

2) இறை தூதருக்கு அடிபணியுங்கள் என்று குரானின் நிறைய வசனங்களில் சொல்லப்பட்டுள்ளதாக அறிகிறேன். ஒரு நபிக்கான மரியாதைக்காக இறைவன் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறான்.

3) முகமது நபி அவர்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம் என்றும், விரும்பாத போது விலக்கி வைக்கலாமென்றும் சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவே. ஏன்?

4) முன்பு ஜெருசலம் நோக்கி தொழச் சொல்லியிருந்த முகமது, பின்பு மெக்காவை நோக்கி தொழச் சொன்னதேன். யூதர்களுடன் சமரசரம் ஏற்படவில்லை என்பதாலா? அவ்வாறு தொழச் சொல்லி ஒரு வசனம் வேறு வெளிப்பட்டதே. அது அல்லாவிடமிருந்து வெளிப்பட்டதா இல்லை முகமதிடம் இருந்து வெளிப்பட்டதா?

5) ஆறு வயது ஆயிஷாவை ஐம்பத்தாறு வயதில் முகமது மணந்தது இறை விருப்பம் என்று நீங்கள் நிஜமாகவே நம்புகிறீர்களா?

6) புர்கா எனப்படும் பெண்களுக்கான முகத்திரை முகமதின் மனைவிகளுக்காகத் தான் என்று குரானில் கூறப்பட்டுள்ளதாமே. உண்மையா?

7) எது உண்ண வேண்டும், எப்பொழுது உறங்க வேண்டும், எவ்வளவு பெண்களை மணக்க வேண்டும், யாருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் புத்தகத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும், மாற்றுக் கருத்துக்கள் வேண்டியதில்லை என்று கூறுகிறீர்களா?

8) காபிர்கள் எவ்வளவு நல்லவர்களாகவே இருந்தாலும், நரகத்திற்குத் தான் செல்வார்கள் என்று குரானில் கூறப்பட்டுள்ளதாமே. அது நியாயம் என்றோ, அது இறைவனின் வாக்கு என்றோ நம்புகிறீர்களா?

9) ஒரு இஸ்லாமியன் வேறு மதத்தை தழுவினால் மரணம்தான் தண்டனை என்று குரானில் கூறப்பட்டுள்ளதாமே. அது நியாயம் என்று நினைக்கிறீர்களா?

கேள்விகள் கேட்டதில் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்பதை உணரவேண்டும். கருத்துப் பறிமாற்றமே கதவுகளைத் திறக்கும் என்று நம்புவதாலேயே இந்த கேள்விகள்.

— ஸ்வயம்(swayamsanatan80@gmail.com)

Series Navigation