வரவேற்போம், முகம்மது அமீனை.

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

பழனி


நானும் தான் வெகுநாட்களாக திண்ணையில் எழுப்பப்பட்டு சர்ச்சைகளை கவனித்து வருகிறேன். முதல் தடவையாக, கோட்டைக்கு உள்ளிருந்து ஒரு மிதவாதக் குரல், புத்தி பூர்வமான விமர்சனக் குரல் வந்துள்ளது முகம்மது அமீன் அவர்கள் வடிவில். பேசாப் பொருட்களைப் பேசத் துணிந்துள்ளார் அவர். முதல் தடவையாக முஸ்லீம் சமுதாயத்தில் அவர்களது மதம், நம்பிக்கைகள், பழக்கங்கள், சரித்திரம் இவை பற்றிய அனேக விஷயங்களை பேசாப் பொருட்களாக்கி வைத்துள்ளனர் என்பதை ஒரு முஸ்லீம் அன்பர் சொல்லக் கேட்கவே, நாம் ஒரு மூர்க்கத்தனமான, வன்முறையான நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல், சரித்திர நோக்கில், புத்தி பூர்வமான, மனிதாபிமான அடிப்படையில் பேசக்கூடும் ஒரு அன்பரை முகம்மது அமீனில் காணமுடிகிறது. அவர் இதுகாறும் முஸ்லீம் அன்பர்கள் பேசாப் பொருளைப் பேசத் துணிந்த நேசகுமாரை, இந்த கா·பிரைக் கண்டு வெடித்தெழுந்த வஹ்ஹாபி, நாகூர் ரூமி போன்றோரை கடிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், நேசகுமாருக்கும் பதில் சொல்லும் துணிவையும் கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது. இவரோடு நாம் பேசலாம். பயமின்றி. பேசாப் பொருளைப் பேசத் துணிந்ததற்காக, அவர் வசையில் இறங்க மாட்டார். பகைவர் குழாம் என்று லேபிள் ஒட்டமாட்டார், வஹ்ஹாபி வெகு சுலபமாகச் செய்துவிடுவது போல.

முதல் தடவையாக முகம்மது நபி வாழ்ந்த, சமூகத்தின், மக்களின் கலாச்சாரம் காட்டுமிராண்டித் தனமானது என்பதைச் சொல்வதில் அவருக்கு எவ்வித தயக்கமும் இருக்கவில்லை. அந்த சமூகத்திற்கு, தன்னால் அன்றைய காலகட்டத்தில் முடிந்த அளவு முகம்மது நபி மனிதாபிமானம், நாகரீகம் வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு மாதிரியான சமாசாரங்கள் இருக்கின்றன என்று சொல்லி அதை முடிந்த அளவு நடைப் படுத்தவும் முயன்றார், பல சமயங்களில் அவரே கூட அன்று நிலவிய பழக்கவழக்கங்களின் சிறையிலிருந்து மீறவும் மீறமுடியாமலும் இருப்பதைக் காணமுடிகிறது. இதை நாம் இன்று பார்க்கும்போது தெரிகிறது. இந்தப் பார்வையை நமக்கு அளித்துள்ளது இடைப்பட்ட பதிமூன்று நூற்றாண்டுகால சரித்திரம். இதைப் பற்றிய சிந்தனையே கொஞ்சம் கூட இல்லாமல், நபிகள் வாழ்ந்த எழாம் நூற்றூண்டு அராபிய இனக் குழுக் கலாச்சாரத்திலேயே உறைந்து அதைத் தாண்டி வர மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஒரு மூர்க்கத்தனமான நம்பிக்கையில் வாழும் அவலம், அந்த வாழ்வையும் நம்பிக்கையையும் மதக்கட்டுப்பட்டின் இறுக்கத்தில் காட்டுமிராண்டித்தனமான அதிகாரத்தை மதத்தின் பெயரைச் சொல்லி இன்றைய சமூகத்தின் மீது வற்புறுத்தும் முல்லாக்களின் பிடியில் சிக்கிக் கிடக்குமவலம் பற்றியெல்லாம் முஸ்லீம் சமுதாயத்தினர் தான் சிந்திக்க வேண்டும்.

இந்த விமர்சனக் குரல்கள், மனிதாபிமானக் குரல்கள், முஸ்லீம் சமுதாயத்திலிருந்து தான் எழவேண்டும். ஏதோ கொஞ்சம் வலி தாளாது நாகூர் ரூமி போன்றவர்கள் லேசாக முணகத் தொடங்கினால் கூட அவரது நண்பர்களே அவரைப் பகைக்கிறார்கள். ரசூல் பாவம் மதப் பிரஷ்டம் செய்து விட்டார்கள். எப்போதும் இது நேர்வது தான். முல்லாக்கள், கா·பிர்களிடமிருந்து எழும் விமர்சனங்களை வெகு சுலபமாக ஒரு மூர்க்கத்தனமான கூட்டுக் கூச்சலில் அடக்கி விடலாம். கா·பிர்களுக்கு இஸ்லாம் பற்றி என்ன தெரியும்? அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று. இதை மற்றமுஸ்லீம்களும் “ஆமாம்” என்று தலையாட்டி, முல்லாகாட்டிய வழி மந்தையாகப் பின் தொடர்வது சௌகரியம் நிறைந்தது. ஆனால், முஸ்லீம் சமுதாயத்திலிருந்தே விஷயம் தெரிந்தவர்களிடமிருந்து விமர்சனக் குரல்கள் எழுந்தால், முகம்மது அமீனை என்ன செய்யமுடியும்? கா·பிர் என்று திட்டுவதா? நீ குரான் படித்திருக்கிறாயா, ஹதீஸ் எல்லாம் தெரியுமா? என்றா கேட்கமுடியும்? முல்லாக்கள் பாடு, வஹ்ஹாபிகள் பாடு கஷ்டம் தான்.

கம்யூனிஸ்டுகளுக்கு முதலாளித்வ சமூகத்திலிருந்து எழும் எதிர்ப்புகளை எதிர்கொள்வது மிகச் சுலபம். கோஷங்கள், வாய்ப்பாடுகள் தயாராக இருக்கின்றன. எடுத்து வீசி விடலாம். தோழர்களும் சேர்ந்து கோஷம் போடுவார்கள். ஆனால் சோஷலிஸ்டுகளிடமிருந்து வரும் கண்டனங்களைக் கண்டால் தான் அவர்களுக்கு படு கோபம் வரும்? உனக்கு மார்க்ஸிஸம் தெரியுமா என்று அவர்களைக் கேட்க முடியாது. நீ முதலாளித்வ வர்க்கத்தின் அடியாள் என்றா வசை பாடமுடியும்?

இப்போது வஹ்ஹாபி முகாமது அமீனைஎதிர் கொள்வாரா, எப்படி என்று அறியும் ஆவல் எனக்கு.

pala16ni33@yahoo.in

Series Navigation

பழனி

பழனி