இக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்

This entry is part of 28 in the series 20081218_Issue

தமிழநம்பி.


ஐயா,
வணக்கம்.
ஏறத்தாழ இரண்டாண்டுகளாகத் ‘திண்ணை’யைப் படித்து வருகின்றேன்.
அரசியல், குமுகம், மொழி, கதை, பா, அறிவியல், தொழினுட்பம், இலக்கியம், திறனாய்வு, அறிவிப்பு, பெரும்பாலும் அறிவடிப்படையிலான முரண் கருத்து மறுப்புகள் போன்ற பலகூறுகளிலும் அரிய சுவையான செய்திகள் அவ்வப்போது காண்கின்றேன்.

ஒவ்வொரு ‘திண்ணை’ யிலும் சிறப்புக்கூறுகள் கூடவோ குறையவோ உள்ளதைக் காண முடிகின்றது.

இந்த இதழில், பேரா.தேவமைந்தனின் ‘திபேத்தியப் பழமொழிகள்’ கட்டுரை சுவயாகவும் புதிய ஒப்பீட்டு உரையாகவும் இருந்தது. சில பழமொழிகள் மக்கள் தாம் வாழும் சூழல்களுக்கேற்பத் தம் பட்டறிவு வெளிப்பாடுகளான பழமொழிகளை உருவாக்கியிருக்கியிருப்பதை மிகத்தெளிவாக விளக்குகின்றன.
“உடம்பில் மயிர் முளைக்காத விலங்கே!”

“சோம்பேறிக் கழுதைக்குப் புல்லைத் தின்னவும் தெரியாது”

“மூக்கின்மேல் குளிர்ந்த காற்று மோதும் பொழுதுதான், உனக்கு அறிவு வரும்!”

“நீ சென்று, இருந்து, வாழ்ந்து பார்க்காத நாடு, உனக்கு மிகவும் இனிமையானதே!”

– அறிவார்ந்த வெளிப்பாடுகளான இவை, சுவைமிக்கப் பழமொழிகளாக உள்ளன.

புதிய மாதவியின் கீழ்க்காணும் வரிகள் (அண்ணா நூற்றாண்டுவிழாத் திருவிழாக்கள்) உண்மையை விளம்புகின்றன; உணர்ந்து நடந்துகொள்ள உதவுகின்றன.

“நான்

அண்ணா உருவாக்கிய

அமைச்சர்களின் வாரிசல்ல.

அண்ணாவை நம்பிய

தொண்டனின் கடைசி வாரிசு.

அதனால்தான்

இன்னும் என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறன

அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்”

அறிவியல் தொழினுட்பக் கட்டுரைகள் மிகுந்த உழைப்பெடுத்து எழுதப்படுபவை.

அத்தகைய கட்டுரைகளை எழுதிய என்னால், அவ்வுழைப்பை உணரமுடியும்.

முழுமையாக அவற்றைப் படித்தறிந்து கருத்துரைக்க மிக்க விருப்பமிருந்தும் நேரமும் சூழலும் அமைத்துக் கொள்ள இயலா நிலையுள்ளது; அமைத்துக் கொள்ள முயல்வேன்.

அன்பன்,

தமிழநம்பி.

Series Navigation