மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா ?

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

பி.கே. சிவகுமார்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

“வளவள, பள பள பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பேட்டிக் கண்டு சுவாரசியமான கட்டுரை எழுத முற்பட்ட வாஸந்தி அதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாகச் சிவசேனை சம்பந்தப்பட்ட மும்பை அரசியலையும் தொட்டுத் தனது முற்போக்கு மதச் சார்பற்ற நிலைப்பாட்டை நிறுவ அவர் முற்படுவதால்” என்று திண்ணை பத்திரிகையின் “நாட்டாமை” போல (ஒருவேளை மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.) மலர்மன்னன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். யார் யாரைப் பற்றி எழுதுவது எழுதக்கூடாது என்று சொல்ல ஆரம்பிக்கிற பத்வா வேலையை மலர்மன்னன் போன்ற இந்துத்துவ அடிப்படைவாதிகளும் ஆரம்பித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. வளவள பளபள பத்திரிகைகள் தேவைக்கு ஏற்ப எழுதச் சொன்னால் மலர்மன்னன் போன்றவர்கள் ஓடோ டிப் போய் எழுத மாட்டார்களா என்ன? அப்படி யாரும் இவர்களைப் போன்றவர்களைச் சீண்டாததால்தானே திண்ணையிலும் தமிழ் சிஃபியிலும் உட்கார்ந்து இலவச உபதேசங்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மலர்மன்னன் இப்படி இலவச உபதேசங்களை அள்ளி விடுவது பற்றியோ, அதற்குத் திண்ணை இடம்தருவது பற்றியோ எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இப்படித்தான் திண்ணைக்கு எழுத வருகிற எழுத்தாளர்களை இவர் தன்னுடைய நாட்டாமையால் துரத்திவிடுகிறாரோ என்பதை எண்ணும்போதுதான் எனக்கு வருத்தம் வருகிறது. உதாரணமாக, கொஞ்ச காலம் முன்பு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தொடர்ந்து திண்ணையில் எழுதிக் கொண்டிருந்தார். அவரை மலர்மன்னன் வம்புக்கிழுத்து இப்போது வாஸந்தியை எழுதியதுபோல எழுத ஆரம்பிக்க, அவர் திண்ணைக்கு எழுதுவதை நிறுத்திவிட்டாரோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. இதுகுறித்த திட்டவட்டமான தகவல்கள் எனக்குத் தெரியும் என்றாலும் அவற்றைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை. இப்போது அதே மலர்மன்னன் வாஸந்தி எப்படி இதைப் பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று திண்ணையின் நாட்டாமைபோலக் கேள்வி கேட்க, நீங்களும் அதை உங்கள் பத்திரிகா சுதந்திரப்படி அப்படியே பிரசுரித்துள்ளீர்கள். மலர்மன்னன் போன்றவர்கள் லெவலுக்கு இறங்கிச் சண்டை போடவோ விவாதம் செய்யவோ விருப்பம் இல்லாது இருந்தால் வாஸந்தியும் திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிடப் போகிறார் என்று வாசகனாக எனக்குப் பயமாக இருக்கிறது. யார் எதை எழுதுவது என்பதைச் சொல்ல மலர்மன்னன் யார்? மலர்மன்னன் யாரைப் பற்றியெல்லாம் எழுதுகிறாரோ அவர்களின் வீட்டுச் சமையலறை வரை சென்று பழகிவிட்டுத்தான் – அதாவது நன்றாகத் தெரிந்து கொண்டபின்புதான் எழுதுகிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதிய மலர்மன்னன் என்ன, மகாத்மாவின் காரியதரிசியாகப் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை எழுதினாரா? இப்போது வாஸந்தியைக் கேட்க வந்துவிட்டார். மலர்மன்னன் போன்றவர்கள் எழுதுவதையெல்லாம் பிரசுரிப்பதற்கு முன், மலர்மன்னனைத் தவிர மற்றவர்களைப் படிக்க விரும்பும் திண்ணை வாசகர்களுக்கு ஏற்படக் கூடிய இழப்புகளைப் பற்றித் திண்ணை ஆசிரியர் குழு சிந்திக்க வேண்டும். நேரடியாகவும் பிற பெயர்களில் ஒளிந்து கொண்டும், உற்பத்தி செய்யப்பட்டு, இந்தக் கடிதத்தை எதிர்த்து வரப்போகும் கடிதங்களை திண்ணை அப்படியே பிரசுரிக்கும் என்று அறிவேன். ஆனால், திண்ணை இப்படித் தொடர்ந்து எழுத்தாளர்களை இழந்து கொண்டிருக்கும் நிலை இனியும் ஏற்படுமானால், பேசாமல் அதை பா.ஜ.க.வின் பிரசாரப் பீரங்கி என்று அறிவித்து விடலாம். என்னைப் போன்றவர்களுக்கு இப்படிக் கடிதம் எழுதுகிற வேலையாவது மிச்சமாகும்.

அன்புடன்,
பி.கே. சிவகுமார்


pksivakumar@yahoo.com

(திண்ணைக்கு யாரும் நாட்டாமையோ அலல்து திண்ணை யாருக்கும் பிரசார பீரங்கியோ அல்ல. இ பா இனி திண்ணைக்கு எழுத மாட்டேன் என்று திண்ணைக்குத் தெரிவித்ததில்லை. மலர் மன்னன் அல்லது வேறு யாருடைய விமர்சனத்துக்கும் அஞ்சி எந்த எழுத்தாளரும் எழுதுவதை நிறுத்தி விடமாட்டார்கள். கடிதங்கள், கட்டுரைகள் எழுதப்பட்ட பொருள் பற்றி மட்டுமல்லாமல் எழுதியவரைப் பற்றியதும் கூட என்பதை திண்ணை வாசகர்கள் நிச்சயம் சீர்தூக்கி உணர முடியும் என்பதால் தான் சில கடுமையான எழுத்துக்களையும் திண்ணையில் வெளியிடுகிறோம். புரிந்து கொள்ளுங்கள். நன்றி- திண்ணை குழு)

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்