அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

சூபி முகம்மது



சூபி முகமது என்ற முகமூடியில் ஒளிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத ஒருவர் என்று என்னை முத்திரை குத்துகிறார் ஜாபர். ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. ஹெச்.ஜி.ரசூல் இவ்விவாதங்களில் ஒருதடவை முகமூடியை கிழித்து வகாபியின் உண்மை முகத்தை காட்ட கேட்டிருந்தார். நேசகுமார், எழில் வஜ்ரா சங்கர் என்பது போல அருளடியான், பாபுஜி, வகாபி என பல முகமூடிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

முஸ்லிம் அல்லாதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வகாபிஸ்டுகளாக இருப்பவர்களை நோக்கிய எனது கேள்வி என்பதே ஒன்றிக்கிருப்பதற்குகூட திருக்குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டி அதன்படி ஒன்றுக்கிருக்க சொல்லும் நீங்கள் போலிப்பெயரை வைத்துக் கொண்டு எழுத்தில் குழப்பத்தையும் நடிப்பையும் செய்ய திருக்குர்ஆன் ஹதீதில் ஆதாரம் இருக்கிறதா…

இரண்டாவது ஜபர் ரொம்பவும் தெளிவோடு இருக்கிறாராம். என்னிடம் தெளிவில்லாமை இருக்கிறதாம். பகவான் அவரை மன்னிப்பாராக…

திருக்குர்ஆன் கூறுகிற இதைப்போன்ற ஒரு அத்தியாயத்தை அமைத்துக் கொண்டு வாருங்கள், மனிதர்கள் ஜின்கள் முயற்சித்தாலும் அவர்களால் அவ்வாறு உண்டாக்க முடியாது வசனங்களின் அடிப்படையில் ஜாபர் சொல்கிறார் இது மனித குலத்திற்கு சவால் விடும் வசனங்களாகும், சூபியும் அவரை சார்ந்தவர்களும் இதை போன்று ஒரு திருக்குர்ஆன் வசனம் உண்டாக்கி இறைவனின் சவாலை ஏற்றுக் கொள்ளுங்களேன் எனக் கூறுகிறார். இதுவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

திருக்குர்ஆனின் வசனத்தைப்போல இன்னொரு வசனம் கொண்டு வரவே முடியாது. ஏனெனில் அசல் ஒன்று தான். பிறகு வருபவை எல்லாமே நகல்கள் தான் ஹமீது ஜாபரை போல் இன்னொரு ஹமீது ஜபாரை உருவாக்க முடியுமா… இதுபோல் தான் திருக்குறளைப்போல் இன்னொரு திருக்குறளை கொண்டு வரவே முடியாது. கம்பராமாயணத்தைப்போல் இன்னொரு கம்பராமாயணத்தை உருவாக்க முடியாது. கார்ல்மார்க்சின் மூலதனத்தைப் போல் இன்னொரு மூலதனத்தை கொண்டுவர முடியாது. ஏனெனில் ஏற்கனவே திருக்குர்ஆன், திருக்குறள், கம்பராமாயணம், மூலதனம் உருவாக்கப்பட்டுவிட்டன. அதே ஒன்றை எப்படி திரும்ப உருவாக்க முடியும்.

கண்ணாடியில் தோன்றும் உருவம் பிம்பம் தான் உண்மையல்ல. படைப்பை பொறுத்த மட்டில் வடிவம், உள்ளடக்கம் (Form & Content) சார்ந்து ஒன்றை மற்றொன்றாக அப்படியே உருவாக்க முடியாது. இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாது திருக்குர்ஆன் மனித குலத்திற்கு சவால் விடுகிறது என்று கூறுவது திருக்குர்ஆனையே நையாண்டி செய்வதாகும்.

நிலைமையைப் பாருங்கள்…. திருக்குர்ஆனின் புனிதத்தை நிலைநாட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரை ஜாபர் ஆதாரத்திற்கு அழைத்திருக்கிறார் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

திருக்குர்ஆன் எந்த வசனத்தையும் ‘முஸ்லிம்களே’ என்று அல்ல மனிதர்களே என்றுதான் விளிக்கிறது என்றெல்லாம் கூறிய வகாபிஸ்டுகள்
”குர்ஆன் எல்லோருக்குமுள்ள நூல் அல்ல, அது இறை மறுப்பாளர்களுக்கு அருளப்பட்டதல்ல” – என்பதான பரமஹம்சரின் கருத்தை மேற்கோளிடுகிறார்கள்.

திருக்குர்ஆன்படி இறைமறுப்பாளர்கள், அல்லாவை தவிர பிற தெய்வங்களை வணங்குபவர்கள். அதாவது முஸ்லிம்களைத் தவிர பிறர் அனைவருமே. எனவே இது திருக்குர்ஆனின் உலகளாவிய பார்வையை கேவலப்படுத்தும் குரலாகவே உள்ளது. வெறும் நம்பிக்கை மட்டும் சார்ந்ததல்ல இதைத் தாண்டி நாம் அரபு சமூக பண்பாட்டு அடையாளங்களும் வரலாறும் அற மதிப்பிடுகளும் சார்ந்து தான் திருக்குர்ஆனை வாசிக்க முடியும்.

இறுதியாக ஜாபர் கூறுகிறார். குர்ஆன் விஞ்ஞானமல்ல. அது விஞ்ஞானத்தின் குறியீடு என்று. இதைத்தான் நான் தெரிவித்திருந்தேன். திருக்குர்ஆனில் இருப்பது நிரூபண விஞ்ஞானமல்ல. அது இயற்கை விஞ்ஞானம் என்று.

இறுதியாக ஏற்கெனவே சொல்லப்பட்ட அன்னை மர்யத்தின் ஆண் துணையற்ற கர்ப்ப உள்ளிட்ட ஆறு சொல்லாடல்களுக்கு பதில் வேண்டும்.

அல்லாவின் புனைவு மொழி கதையாடல் – 6
(அத்யாயம் 7 அல்அ·ராப் – சிகரம் வசனம் 64)
பின்னும் அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால் அவரையும் அவரைச் சார்ந்தோர்களையும் கப்பலில் (ஏற்றி) இரட்சித்துக் கொண்டு நம்முடைய வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை(ப் பெரு வெள்ளத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை காணமுடியாத) குருடர்களாகவேயிருந்தனர்.
இந்த நூகு நபி வரலாற்றில் அல்லாவை வணங்காதவர்களை ஒழித்துக்கட்டுவதுதான் அல்லாவின் தெளகீதா….?


Series Navigation

சூபிமுகம்மது

சூபிமுகம்மது