நால்வருடன் ஐவரானேன்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

கற்பகவிநாயகம்


உண்மையிலேயே, அந்த நால்வரை நினைத்து வருந்துகிறேன். தங்கள் பொன்னான ஞாயிறை இப்படி வீணடித்துள்ளனரே! பெரியவருக்குத்தான் எவ்வளவு சிரமம்!!

****

சிதம்பரம் பிள்ளையும், பாரதியும் ‘மாமா ‘ முறை சொல்லி அழைத்தது உண்மைதான். அதே நேரத்தில் கடையத்தில், பாரதியிடம் ‘சகுந்தலாப் பாப்பாவை ‘ப் பெண் கேட்டு, நாராயணப்பிள்ளை வாங்கிக் கட்டிக் கொண்டதும், அதனால் ஏற்பட்ட களேபரத்தில் சென்னைக்கு பாரதி ரயிலேறியதும் உண்மைதானே!

முறை வைத்துக் கூப்பிடுவது இன்றைக்கும் சமநிலையில் உள்ள இடைநிலை சாதிகளில் நடைமுறையில் உள்ளதுதான். உதாரணமாக சில ஊர்களிலுள்ள நாயுடு இனத்தவரை, இலை வாணியர் ‘மாமா ‘, ‘மாப்ளே ‘ என்பதும், சில ஊர்களில் முஸ்லீம்களை நாயுடுகள் , ‘மாமா ‘ என விளிப்பதும் சகஜமே. முறை வைத்து அழைப்பதாலேயே, ஐக்கியமாகி இருக்கின்றனர் எனக்கருதுதல் பேதமை. திருமணம் என்று வரும்போது அவரவர், அவரவரது சாதிக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர்.

இதே உறவுமுறையை ஓர் இடைநிலை சாதியிடம், தலித்கள் சொல்ல முடியுமா ?

1995ல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் ஊரில், நகரத்தில் படித்து விட்டு வந்த தலித் மாணவன் ஒருவன் அவனுக்குப் பழக்கமான, ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை ‘என்னக்கா ? சவுக்கியமா ? ‘ என்று நலம் விசாரித்தான். ‘யாருக்கு யாருடா அக்கா ? ‘ என்று கேட்டு அப்பையன் மண்டை உடைக்கப்பட்டது. உடனடியாக அரிவாள் வீச்சில் ஆரம்பித்து அடுத்த ஊர்கள் முழுக்க எரிய ஆரம்பித்தன.

இதே மாதிரிதான், ‘அந்தக் காலத்திலே அண்ணன் தம்பி மாதிரி ‘ பழகினாங்க எனும் பொய்கள். இதெல்லாம் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலை. முதலில், இதில் யார் அண்ணன், யார் தம்பி எனும் கேள்வியில் கூட ஆதிக்கம் ஒளிந்துள்ளதை அறியமுடியும். தம்பியாய் இருந்து அண்ணன் பேச்சைக் கேட்டு அடங்கிக் கிடந்த வன்முறை மவுனமே ‘அண்ணன் தம்பியாட்டம் ‘ பழகிய அந்தக் கால நடைமுறை.

****

சுந்தர ராமசாமி, நாத்திகர் ஆனபோதும் சுடுகாட்டில் இடம் கிடைத்ததாம். நல்லது. நல்ல மதம்தான்.

அது கிடக்கட்டும்!

தலித் ஒருவரின் பிணத்தை, ஆதிக்க சாதியினரின் சுடுகாட்டில் எரிக்க முடியுமா ? செத்தபிறகும் சாதியைக் காப்பாற்ற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி சுடுகாடு இருப்பது நம் மதத்தில்தானே! இதில் நாத்திகர் ஆனபோதும், அவரின் சாதிக்குரிய சுடுகாட்டில் இடம் கிடைத்ததற்காக நம் மதத்திற்கு என்ன பெருமை கிடைக்கும் ?

சாதியை மீறிக் கல்யாணம் செய்தாலோ, சாதிக்கட்டுப்பாட்டை மீறி நடந்தாலோ சாதி விலக்கம் செய்யப்படும் அநேக சாதி இந்துக்களை அச்சாதியின் சுடுகாட்டிலேயே எரிக்க விட மாட்டார்கள் தெரியுமா ?

****

வன்முறை மூலம் தமிழ்நாட்டில் கிறித்துவம் பரப்பியதாகவும், சவேரியார் வன்முறையின் மூலம் மதம் பரப்பினார் என்றும் மலர்மன்னன் கூறி இருந்தார்.

சில காலம் கோவாவில் வன்முறையை கிறிஸ்தவர்கள் செய்தது என்பது உண்மையே. அங்கு மாட்டுக்கறியை இந்துக்களின் வாயில் திணித்து கிறிஸ்தவராக்கினர். ஆனால் இம்முறையைக் கூடிய விரைவிலேயே கைவிட்டனர்.

ம.ம. குறிப்பிடுவது போல, தமிழ் நாட்டில் இச்சம்பவம் நிகழவில்லை. நடந்தது கோவாவிலே.

சவேரியார் வன்முறையின் மூலம் மதம் பரப்பினாரா ?

பாளையங்கோட்டையில் உள்ள யாதுமாகி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘திருநெல்வேலிக்கு கிறிஸ்தவம் வந்தது (ஆசிரியர்: டேவிட் பாக்கிய முத்து) ‘ எனும் நூலில் கத்தோலிக்கம் முதலில் தென் தமிழ் நாட்டுக் கடலோரத்திற்கு வந்த வரலாறு தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

‘அராபியாவிலிருந்து வாணிபம் செய்ய வந்த வணிகர்கள், தூத்துக்குடி உள்ளிட்ட கிழக்குக் கரையில் குழுமினர். அக்கடற்கரை மக்களான பரதவர்களுக்கும், அந்நிய அராபிய வணிகர்களுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. அப்போது இக்கடற்கரை மதுரை அரசதிகாரத்தின் கீழ் இருந்தது. மதுரையை, விஜய நகர ஆட்சியின் பிரதிநிதி, விட்டல நாயக்கர் ஆண்டு வந்தார். இவர், பரதவ மக்களின் இன்னலைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல், அம்மக்களின் முத்துக் குளித்தலுக்கு அதீத வரியை விதித்து வசூல் செய்வதில் மட்டுமே குறியாய் இருந்தார்.

அராபியர்கள் பரதவர் முரண்பாடு முற்றி, முத்துக்குளிப்பில் பரதவரின் பங்காக வர வேண்டிய பணத்தை அராபியர் மிகவும் குறைத்து விட்டனர். பரதவப் பெண் ஒருத்தியை அவமானம் செய்து, அவள் கணவனின் காதைக் கிழித்தும் விட்டனர். குமுறிய பரதவ மக்கள், அச்சமயம், கோழிக்கோட்டிலிருந்து கிழக்குக் கரைக்கு வந்திருந்த போர்த்துகீசியரான ஜாண் டி குரூஸ் என்பவனிடம் முறையிட்டனர். அவன், அம்மக்களின் தலைவர்களைச் சந்தித்து, அவர்களைக் கொச்சியில் உள்ள போர்த்துகீசியர்களிடம் உதவி கேட்க ஆலோசனை சொன்னான். 15 ஆண்களைக் கொச்சிக்கு அனுப்பிவைத்தான். கொச்சியில் இருந்த போர்த்துகீசிய கேப்டன் பெரோவாஸ்-டி-அமரால்,இம்மக்களுக்கு பாதுகாப்பு தந்து அராபியரை விரட்டுவதாக வாக்களித்தான். இதற்கு நன்றிக் கடனாக பரதவர்கள் கத்தோலிக்கம் தழுவுவதாய் சொன்னார்கள். கேப்டன் மகிழ்ந்து, மேலும் 70 பரதவர்களை கொச்சிக்கு வரவழைத்தான். கிபி 1535 டிசம்பரில் இந்த 85 பேரும் மதம் மாறினர். இவர்களின் பாதுகாப்பிற்கு ஒரு கடற்படை அனுப்பி வைக்கப்பட்டது.

அடுத்த நான்கே மாதங்களில், அதாவது 1536 மார்ச்-ஏப்ரலில் 20,000 பரதவர்கள், கடற்கரை ஊர்களில் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். 1537ல் தூத்துக்குடி, வைப்பார், வேம்பார் ஊர்களில் ஞானஸ்நானம் பெற்றனர். டெர்ஸெரியா எனும் வரலாற்று ஆசிரியர் ‘எமது ஆண்டவர், ஒரு காதுத்தண்டின் மூலம் (பரதவர் காது கிழிபட்ட நிகழ்ச்சி) ஏராளமான ஆத்மாக்களை ரட்சித்தார் ‘ என எழுதி இருக்கிறார்.

பிரான்சிஸ் சேவியர் (தமிழில் சவேரியார்), கோவாவில் கப்பலை விட்டு இறங்கியதும் அவர் முதலில் சென்ற இடம் தொழுநோயாளிகளின் மருத்துவமனை. அதன் பிறகே அவர் ஆர்ச் பிஷப் அரண்மனைக்கு சென்றார். அவர் கோவா வருவதற்குப் பல ஆண்டுகட்கு முன்பே, கிறிஸ்துவர்கள் வன்முறையைக் கைவிட்டிருந்தனர். அவர் கோவாவில் வந்திறங்கிய அடுத்த ஆண்டே, புனித பால் கல்லூரி நிறுவப்பட்டது. பின்னர் 1542ல் அவர் தூத்துக்குடிக்கு வந்தார். அதே ஆண்டு குமரி மாவட்டத்தில் 10,000 முக்குவர்களுக்கு கைகள் வலிக்கும் அளவிற்கு ஞானஸ்நானம் அளித்தார். அவர் ஞானஸ்நானம் அளிக்கையில் ஸ்பானிஸ் லிபியில் தமிழ் மந்திரங்களை எழுதி வைத்துப் படித்துள்ளார் ‘

சேவியர், வன்முறையில் இறங்கியதில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் சொல்ல முடியும்-எந்த முக்குவர்களை சவேரியார் மதம் மாற்றினாரோ, அந்த முக்குவர்களை வெட்டிப்போட ஒரு கூட்டம் 1982ல் மண்டைக்காட்டுக்கு வந்தது என்பதை.

இந்து சாம்ராஜ்யமான ‘விஜய நகரப் பேரரசின் ‘ விட்டல நாயக்கர், மனம் வைத்திருந்தால், பரதவர்கள் கத்தோலிக்கத்திற்குப் போயிருக்க மாட்டார்கள்.

****

சுப்பிரமணிய சிவம் செய்தது தந்திரமாய் இருக்கலாம். எதற்கான தந்திரம் அது ? அந்நியர் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான போர்த்தந்திரமே, அவர் கேட்ட மன்னிப்புக்கள் என்பதை மலர் மன்னன் ஒத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.

வீர (!) சாவர்க்கர் எழுதிக்கொடுத்து விட்டு வந்த மன்னிப்பு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்க்கப் பயன்பட்டதா ?

பாரதி, கடலூர் சிறையில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு அதன் பிறகு என்ன செய்தார் ?

எட்டையபுரம் போய் சீட்டுக் கவி எழுதி, பிரிட்டிஷாரின் பாதந்தாங்கியான ஜமீன் தாரின் தயவை நாடினார். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து நாடே கொதித்து எழுந்தபோது கடையத்தில் மவுனம் காத்தார்.

எனவே பொத்தாம் பொதுவாக, சிவாவை மற்றவருடன் சேர்த்துப் பேசுதல் சரியானதல்ல.

****

பாப்பாப் பட்டி, கீரிப்பட்டி விவகாரத்தில் தங்களின் ஆர்வம் கண்டு வியக்கின்றேன்.

ரிசர்வ் தொகுதியான கீரிப்பட்டியில் 1996 முதல் 17 முறை பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டும், அந்தப் பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் ஒரு தலித் அமர முடியவில்லை. 2002 தேர்தலில் நின்று 29 வாக்குகள் பெற்றுவிட்ட விடுதலைச்சிறுத்தை வேட்பாளர் பூங்கொடியையும், அவரது சொந்தக்காரர்களையும் ஊர் விலக்கம் செய்தார்கள். கடந்த 10 வருடங்களாக இப்படி அப்பட்டமாய் தீண்டாமை அனுசரிக்கும் அந்த ஊர்களின் ஆதிக்க சாதியினர் மீது ஒரு வழக்கைக் கூட போலீசு பதியவில்லை. ‘நாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஊரில் சிறுபான்மை தலித் சாதியைச் சேர்ந்த ஒருவர் எப்படிப் பஞ்சாயத்துத் தலைவராக முடியும் ? ‘ என்பது கீரிப்பட்டி சாதி இந்துக்களின் வாதம். நாட்டின் எல்லாக் கிராமங்களிலும் மக்கள் தொகையில் பெரும்பான்மையுள்ள தலித் மக்கள் மீது செலுத்தும் வன்கொடுமைக்குப் பெயர்தானே தீண்டாமை. இத்தீண்டாமைக்கு ஒரு நிவாரணமாய் அரசியல் சட்டம் அறிவித்துள்ள ரிசர்வ் தொகுதி முறையையே ஒழிக்க வேண்டும் என்பதுதான் இந்த சாதி வெறியர்களின் கோரிக்கை. அதாவது ‘தீண்டாமை எங்கள் ஜனநாயக உரிமை ‘ என்கிறார்கள். கெடா வெட்ட அரசு தடை போட்டபோது தம் மீசையை முறுக்கத் துணிச்சல் இல்லாத இவர்கள், ஏழைகளான தலித்களைக் கண்டதும் தமது வீரத்தைக் காட்டுகின்றனர்.

அப்பகுதிகளில் சிறுபான்மையாக மட்டுமில்லாமல், சொந்தமாய் கையளவு நிலமும் இன்றி, இந்த ஆதிக்க சாதியினரை நம்பிப் பிழைக்க வேண்டி இருப்பதால்தான் தலித்களுக்கு இந்த அவல நிலை. இதை எப்படித் தீர்ப்பதென்று ஏற்கெனவே பெரியவர் ம.ம.வுக்கு எழுதி இருந்தேன். சில விசயங்களை வாய்மொழியாகத்தான் சொல்ல முடியும். தொடர்பு முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு ஈ மெயில் அனுப்பினால், இது பற்றிச் சரியாகத் திட்டமிடலாம்.

இளைஞர்கள் வழி தங்களுக்குச் சரிப்படாதென்றால், பின் வரும் கோரிக்கையை அந்த ஊரில் சென்று அஹிம்சை முறையில் பிரச்சாரம் செய்யலாம். மண்டைக்காடு, வேலூர் ஜலகண்டேஸ்வரர் எனப் பல அஹிம்சைப் போராட்டங்களின் அனுபவம் உங்களுக்கு உதவக்கூடும்.

1) அரசியல் சட்டம் தலித் மக்களுக்கு வழங்கியுள்ள ஜனநாயக உரிமையை பறிக்கிறார்கள் சாதி இந்துக்கள். எனவே அவர்களுடைய வாக்குரிமை ரத்து செய்யப்பட வேண்டும்.

2) தலித் மக்களின் தனித்தொகுதியை – இட ஒதுக்கீட்டை- அவர்கள் எதிர்க்கிறார்கள். எனவே, அவர்களின் இடஒதுக்கீடு (கல்வி /வேலை) முழுக்க பறிக்கப்படல் வேண்டும்.

3) தலித் மக்களை சமூகப்புறக்கணிப்பு செய்யும் இம்மக்களுக்கு நிலம், மின்சாரம், சாலைப்போக்குவரத்து, வங்கிக்கடன், கல்வி, குடிநீர், மருத்துவம் போன்றவற்றை அரசு ரத்து செய்து அம்மக்களை அரசு புறக்கணிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகள் பற்றிக் குறைந்த பட்சம் ஒரு பொது கூட்டமாவது நீங்கள் உசிலம்பட்டி / ஆண்டிபட்டியில் பேச வேண்டும்.

****

முதலில் ‘வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவம் ‘ நம்மைப் பிளவுபடுத்தியதாகச் சொன்னார். இப்போது ‘பிராமணர்/பிராமணர் அல்லாதோர் என்று பெரியார்தான் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்தினார் ‘ என்று மலர் மன்னன் சொல்லி இருக்கிறார்.

1) சங்கராச்சாரியார், நெல்லையப்பர் கோவில் குடமுழுக்குக்கு வரக்கூடாது என்று திருநெல்வேலி சைவர்கள் நீதி மன்றம் வரை போனதற்குப் பெரியார்தான் காரணமா ?

2) அவர் மூலஸ்தானத்துக்குள் நுழையக் கூடாது என்றும், சாமியைத் தொட்டுப் பூசை செய்யக் கூடாதென்றும் திருநெல்வேலியில், சைவர்கள், 1960களிலும், 1980களிலும் தெருவில் இறங்கிப் போராடியது, பெரியார் பேச்சைக் கேட்டா ?

3) சங்கர மடம், ஸ்மார்த்தருக்கு மட்டுமே தீட்சை தரும். சைவ மடம், பிறப்பினாலே சைவரான ஒருவருக்கே தீட்சை தரும். இந்த இரு மடங்களுமே தலித் ஒருவருக்கு தீட்சை தராது. இத்தகைய பிளவிற்கும் பெரியார்தான் காரணமா ?

4) சில ஆண்டுகளுக்கு முன்பு, சங்கராச்சாரியார் ‘ஆழ்வார், நாயன்மார்களின் பிறந்த நாள்களை, அந்தந்த சாதிக்காரர்கள் கொண்டாட வேண்டும் ‘ என வேண்டுகோள் விடுத்தது, நம்மைப் பிளவுபடுத்தல் ஆகாதா ?

5) அவரே ஒரு முறை ‘தலித் என்ற பெயரோடு வந்தால் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் ‘ என்றதும், கூத்தரம்பாக்கத்து தலித்களிடம், ‘உங்களுக்கென்று தனியாக ஒரு கோவில் கட்டித்தருகிறேன் ‘ என்றதும் பிளவுபடுத்தல் ஆகாதா ?

(ஆதாரம்: யாதுமாகி பதிப்பகம் வெளியிட்ட ‘நான் இந்துவல்ல. நீங்கள்.. ? ‘)

****

முஸ்லீம்கள் கணிசமாய் இராணுவத்தின் உயர்ந்த இடங்களில் இருப்பதாகவும், பத்திரிக்கையாளனானதால் தாம் அறிவதாகவும் மலர்மன்னன் சொல்லி இருந்தார்.

10 ஆண்டுகளுக்கு முன் ‘தலித் சேனை ‘யின் தமிழ் நாட்டுப்பிரிவு வெளியிட்டுள்ள பிரசுரம் (circular no: 1/93) ஒன்றில் காணப்படும் புள்ளிவிவரம்:

1) இந்தியக் காவல் பணி (ஐ பி எஸ்) – மொத்த இடங்கள் – 3300; அவற்றில் பிராமணர்கள்: 2376 – அதாவது 72%

2) பாதுகாப்பு அமைச்சகம்: – வகுப்பு I பதவிகள் = 1379. இதில் பிராமணர்கள் = 1332 – அதாவது 96%

3) பாதுகாப்பு அமைச்சகம்: – வகுப்பு II பதவிகள் = 7752. இதில் பிராமணர்கள் = 6762 – அதாவது 87%

4) பாதுகாப்பு அமைச்சகம்: – வகுப்பு III பதவிகள் = 2127. இதில் பிராமணர்கள் = 1332 – அதாவது 62%

இக்கணக்கின்படி பார்த்தால், மிச்சம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இடங்களிலும் ஓ.பி.சி / எஸ் சி/ எஸ் டி மக்கள்தான் இடம் பிடித்திருப்பர். பின்னர் எங்கே முசுலீம்களுக்கு இத்துறையில் கணிசமாய் இடம் இருக்க முடியும் ?. இப்புள்ளி விவரம், 10 ஆண்டுகளுக்கு முந்தையதுதான் என்றாலும் தற்போது பெருமளவில் மாறி இருக்க எந்தச் சிறப்புக்காரணியும் இப்போது இல்லை.

****

பெரியார் நடத்திய சமத்துவப் போராட்டமான ‘முரளி கபே ‘ யை எவ்வளவு தூரம் இழிவாய் எழுதவேண்டுமோ, அவ்வளவு தூரம் எழுதி விட்டு, அப்போராட்டத்தால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது என்று எழுதும் மலர்மன்னனுக்கு, அதே சாலையில் ‘துலுக்கன வெட்டு, துலுக்கன் பொண்டாட்டியக் கட்டு ‘ என்று துவேச வெறி ஊட்டும் விநாயகர் ஊர்வலம், வருடா வருடம் செய்து வரும் இடையூறுகளும், பதற்றமும் ஒன்றுமே இல்லைதானே.

ஹிந்து பத்திரிக்கைக்கு ‘ஊர்வலங்களால் ஏற்படும் இடையூறுகளை ‘, தவறாமல் ‘ஆசிரியருக்கு கடிதம் ‘ பகுதியில் எழுதி வந்த கைகளும் ஒரு நாள் சென்னையில் போக்குவரத்தை இடைஞ்சல் செய்து, மனிதச்சங்கிலி நடத்தின. ஆனால் அச்சங்கிலியின் நோக்கம் மக்கள் நலனல்ல என்பதும் ம.ம. வுக்குத் தெரியும்தானே.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்