கடிதம் ஜூன் 3,2004

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

கலைமணி


என்ன ஆனது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு.

தற்பொழுது இந்தியாவில் என்றைக்கு தேர்தல் வந்தாலும் ஆங்காங்கே கேட்க கூடிய முக்கியமான சேதிகளில் இதும் ஒன்று. இது வரைக்கும் இந்தியா ஒரு மதசார்பற்ற அரசை தான் கொண்டுள்ளது. என்றைக்கும் கொள்கை அளவிலோ அல்லது எதிர்காலத்தை மனதில் கொண்டு இது வரை ஒரு குறிப்பிட்ட மதத்தை மனதில் கொண்டு திட்டங்களோ அல்லது சட்டங்களையோ ஏற்படுத்திக்கொள்ளாத நாடாகத்தான் இன்றளவும் இருக்கிறது.

இப்படி எந்த ஒரு சலனமும் இல்லாது சொன்று கொண்டு இருந்த தேசத்தின் அரசியலில் மதம் ஒரு முக்கிய காரணமாக பேசும் படி என்ன அவசியம் வந்தது. அதுவும் இந்துத்துவா கொள்கைகளை பிரதானமாக கொண்டு தான் நாடு இருக்கவேண்டும் என்று அனேக அனைவரும் கூறுகிறார்கள்.

இப்படி இவர்கள் கூறுவதை மேலோட்டமாக பார்த்தால், இவர்கள் கூறுவது போல் இன்றைக்கு இந்தியாவில் இந்துத்துவ கொள்கைகள் எல்லாம் அறவே புறக்கனிக்கப்பட்டது மட்டும் இல்லாது சிறுபான்மையினரது கொள்கைகளும் மதக்கோட்பாடுகளும் தான் கோலோச்சுவதாத்தான் எல்லோருக்கும் தோன்றும். ஆனால் உண்மை என்ன, இந்த சர்ச்சைகளுக்கு அடிதளம் என்ன என்று நாம் முதலில் கவனிக்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் கிருஸ்த்துவ மற்றும் முஸ்லீம் மக்களுள் ஒன்றும் வாட்டிகானிலிருந்தோ, மெக்கவில் இருந்தும் வந்து இறங்கியவர்கள் அல்ல. காலம் காலமாக இங்கே இந்த இந்தியாவிலேயே தான் தன்னையும் வளர்த்துகொண்டும் தனது சந்ததியினர்களையும் காலம் காலமாக விருட்ச்சமாக வளர்த்துகொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தியா நாடாக உருவாக்கப்பட்டபோது ஆங்காங்கே இருந்த மக்களை உள்ளடக்கி மொழி வாரியாக பிரித்து மாநிலமாகவும், பின்னர் அங்கங்கே கொண்ட ஊர் என்று அனைத்து ஊர்களும் அடையாளம் காணப்பட்டு, எல்லை வகுத்து ஆட்சி செலுத்தப்பட்டு வந்துக்கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் 45 ஆண்டுகளாக இல்லாத இந்த இந்துத்துவ தேவை இந்த 10 ஆண்டுகளாக மட்டும் தேவை என்றோடு மட்டும் அல்லாது நாட்டின் முக்கியமான பிரச்சனையே அது ஒன்று மட்டும் தான் என்று பேசும் அளவிற்கு சென்றுவிட்டார்கள் அனேகர்கள்.

இப்படி இவர்கள் கூறும் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக வாததிற்கு என்று வைத்துக்கொள்ள காரணங்களை கேட்டால் அப்படி அவர்கள் கூறும் காரணம் என்னவாக இருக்கும். இந்துக்கள் அதிகம் இருக்கும் ஊர்களில் அவர்கள் வந்து சர்சோ அல்லது மசூதியோ கட்டி கொண்டு வாழ முடிகிறது. ஆனால் அவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் இந்துத்துவ கொள்கைகளை பற்றி பேசினாலே கோவையில் கொண்ட தொட்ர் குண்டுவெடிப்புகளை போல் அல்லவா நிகழும் என்றும். ஒரு காலத்தில் மக்கள் தொகையில் ஒரு சொற்ப விகிதாரத்தில் இருந்த இவர்கள் இன்றைக்கு ஆட்சிக்கு வரும் அரசை நிற்னையிக்கும் சக்தியாக அல்லவா உருவெடுத்துவிட்டார்கள் என்றும். இப்படியே விட்டால் இன்னமும் சிறிது காலத்தில் இந்துக்கள் எல்லாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டு விடுவோம். ஆகவே இந்துத்துவா கொள்கைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல எங்களால் மட்டும் தான் முடியும் . ஆகவே எங்களை தேர்ந்தெடுங்கள், இல்லையேல் இன்னமும் கொஞ்ச நாளில் நீங்கள் எல்லோரும் அகதிகள் முகாமில் தான் தஞ்சம் புகவேண்டி இருக்கும் என்று வெளிப்படையாக பேசிக்கொண்டு இருப்பதை அனேக பத்திரிக்கைகளும் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் காணுகிறோம்.

முதலில் இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதானா என்று பார்போம், பிறகு அவர்கள் எங்கே நம்மை அழைக்கிறார்கள் என்றும் பார்கலாம்.

எனக்கு தெரிந்த வரையில், இந்தியாவில் எந்த ஒரு மதத்தை தேர்ந்தெடுக்கவோ பின் பற்றவோ இன்ன இன்னாருக்குத்தான் முடியும், அதுவும் இன்ன இன்ன மதத்தில் இருந்து இங்கு இங்கு தான் போகவேண்டும் என்ற எந்த ஒரு நெருக்குதலும் இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் எந்த ஒரு மத்தை வேண்டுமானாலும் தாராளமாக யாரும் பின் பற்றலாம் இது நமது இந்தியாவின் அனைவரது ஜனநாயக உரிமை.

அதே போல், இன்ன இன்ன மதத்தில் இந்த இந்த மதக்காரியங்களை இப்படி செய்ய வேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் கூறவில்லை, திருமணம், மற்றும் ஒருசில முக்கிய சமுதாய செயல்கள் தவிற சட்டம் வேறு எந்த ஒரு கட்டுபாட்டையும் விதிக்கவில்லை.

அது மட்டும் இல்லாது, ஒரு சமுதாயத்திலே சிறுபான்மையினராக இருக்கும் சமுகத்தார்கள் கவனிக்கப்படாமல் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு என்று பல சலுகைகளை வழங்கும் விதமாக சட்டதில் பல வழிவகைகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவைகளும் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் அவர்களுக்கு அளித்திருக்கும் பாதுகாப்புகள்.

இப்படி ஒரு சிறப்பு கவனிப்பு ஏன் அவர்களுக்கு கொடுக்கவேண்டும், ஏன் என்றால் அப்படி ஒரு கவனம் செலுத்தாவிட்டால் அவர்களது சமுதாயம் கவனிப்பார் அற்று புறக்கணிக்கபட்டுவிடும் என்ற கனிப்பில் அப்படி ஒரு சட்டவசதியை ஏற்படுத்திகொடுத்துள்ளார்கள் சட்டவல்லுனர்கள்.

சுதந்திர இந்தியாவில் சட்டங்களை ஏற்றும் போதும், சட்டவல்லுனர் முன்னால் நின்ற கணக்கில் அடங்கா சவால்களில் மிகவும் முக்கியமாக தோன்றிய விஷியங்களில் மதத்தின் பெயரால். மொழியின் பெயரால் அல்லது வேறு எதுவின் பெயராலும் ஒன்று பட்ட இந்தியா பின் எந்த ஒரு காரனத்தைகொண்டு துண்ட்டாட பட்டுவிடக்கூடாது என்றது மட்டுமே. ஆகவே, அவர்கள் வார்த்தெடுத்த சட்டங்கள் அனைத்தும், மொத்த சமுதாயத்தையும் ஒன்றாக கொண்டு வளர்ந்து வருவது ஒன்றே நோக்கமாக இருக்கவேண்டும் என்றது மட்டுமே.

45 ஆண்டுகளாக இந்த சட்டங்கள் வழங்கி வந்த பாதுகாப்பு மற்றவர்கள் கண்ணுக்கு உறுத்தவே இல்லை. காரணம் சிறுபான்மையினரது பொருளாதார முன்னேற்றமோ, மற்ற எதுவுமே இந்துக்களை ஏதும் பெரிதும் பாதித்ததில்லை. ஆக கிராமங்கள் அல்லாது அனைத்து இடங்களிலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தான் சென்றுக்கொண்டு இருந்தது.

முன்பெல்லாம் முஸ்லீம் நாட்டுகளில் வேலை கிடைக்கிறது என்று அனைவரும் எந்த பாகு பாடும் இல்லாமல் வேலைக்கு சென்று வந்தார்கள். அங்கே பேச அரபு மொழி மட்டுமே தெரிந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் போக போக அவர்களது போக்கில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்று முன்னேரி கடைசியில் முஸ்லீம் மக்கள் தவிற வேறு யாருக்கும் எங்களின் பணமோ செல்வமோ போய் சேரக்கூடாது என்று பிரகடணப்படுத்தும் விதமாக, இனிமேல் மற்றவர்களுக்கு இங்கே வேலைகள் இல்லை என்று கூறினார்கள்.

இந்த ஒரு சின்ன காரியத்தின் விளைவு, ஒரே ஊரில் சமமாக இருந்த அனைவரினும் முஸ்லீம் மக்களின் செல்வ வள்ர்ச்சி மற்றவர்கள் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து வந்தது. முன்னாலிலே என்னப்பா எப்படி இருக்கிறே என்று கேட்டோர்கள், என்ன காதர் பாய் எப்படி இருக்கிறீங்க என்று வினவ வேண்டி வந்தது.

அது மட்டும் அல்லாது, கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சொல்லுக்கேற்ப பட்டி தொட்டி எல்லாம் மசூதிகள் முளைக்க ஆரம்பித்தது. இதற்கு வேண்டிய பொருளுதவிகளை எல்லாம் மேலே சொன்ன நாடுகளில் இருந்து தேவைக்கு அதிகமாகவே வந்து குவிந்தது. அங்கே ஒன்று என்றும் இங்கே ஒன்றும் என்று இருந்தது கடைசியில், நகரங்களிலும், பட்டினங்களிலும் நிகழந்தது தான் தாமதம்.

எனக்கு தெரிந்த வரையில் கோவில்களில் ஏதும் திருவிழா என்றால் அனேகமாக 1 மாத காலத்துக்கு கூத்து முதல் எல்லா கேளிக்கைகளும் இரவுகளை நல்லிரவு தாண்டி அதிகாலை வரை நடந்து வந்ததை எனது குழந்தை பருவம் முதல் பார்த்துக்கொண்டு வருகிறேன். அது மட்டும் இல்லாது, சுமார் 15, 18 வருங்களுக்கு முன்பில் இருந்து கோவில் திருவிழா என்றால் மெல்லிசைக்கச்சேரி இருக்கவேண்டும் என்று எழுதப்படாத விதியாகிவிட்டது.

இந்துக்களின் திருவிழாக்கள் வருடம் தோரும் எண்ணிக்கையில் அதிகம், இருப்பினும் வரும் அத்தனை திருவிழாக்களுக்கும், பாடல் போடுவது முதல் கூத்துவரை அனைத்துமே நடந்துக்கொண்டு தான் இன்றும் இருக்கிறது.

இந்த செய்கைகளினால் ஏற்படாத தொந்திரவுகள், இந்த செய்கைகளினால் பாதிக்காத பிள்ளைகளின் படிப்புகள், இந்த செய்கைகளினால் ஏற்படாத பொது மக்கள் அசெளகரியங்கள், மசூதிகளில் இருந்து வெளிப்படும் ஓதுதலினால் திடாரென நிகழ ஆரம்பித்துவிட்டது தான் அதிசயம். கிருஸ்துவ சகோதர்கள் ஊர்வலம் நடத்தினால், பொது மக்களுக்கு இடஞ்சல், ஆனால் அதுவே மயானக்கொள்ளை நடத்தினால் யாருக்கும் இடைஞ்சல்கள் இல்லவே இல்லை என்று தான் இதுவரை அனேகர்கள் கருதுகிறார்கள்.

இந்த வெறுப்புகளுக்கு என்ன காரணம், என்ன தான் காரணம் கூறினாலும், உண்மையில் அவைகள் எல்லாம் காரணங்களாகவே இருக்கவே முடியாது. உண்மையான காரணம் அவர்களது முன்னேற்றத்தில் நம்மில் அனேகருக்கு மகிழ்ச்சி இல்லை என்றே அர்த்தமாகிறது. இந்துக்கள் கொண்டாடும் அத்தனை விழாக்களுக்கும் எந்தவிதமான எதிர்ப்பும் அவர்கள் தெரிவிப்பதாக தெரியவில்லை. மேலும் சில குறிபிட்ட செய்கைகளில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட எதிர்த்து கருத்துகளை தெரிவிக்காமல் இதுவரை இருந்து வருகிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் என்றைக்குமே இல்லாத பிள்ளையார் சிலை ஊர்வலம் திடாரென அறிமுகபடுத்தப்பட்டதோடு இல்லாமல், இந்த இந்த தெருவழியாகத்தான் ஊர்வலம் என்றதோடு நில்லாமல். அப்படி வரும்போது வேறு மதத்துகாரர்கள் யாரும் எந்த பூஜைகளோ, வேறு காரியங்களில் ஈடுபடவோ கூடாது என்றும். உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ இந்த பிள்ளையாரை வந்து தரிசித்து பிரசாதம் பெற்று காணிக்கை வழங்கி செல்லவேண்டும் என்று வர்புறுத்துவது எந்த விதத்தில் ஞாயம் என்றே தெரியவில்லை.

அந்த ஒரு தீ பொரியை, இது தான் சமயம் என்று பார்த்த அரசியல் கட்சிகள் தன் பங்கிற்கு எண்ணையை வார்க்க ஆரம்பித்தது தான் தாமதம். இன்றைக்கு என்னால் எனது நாட்டில் சுதந்திரமாக சாமி கும்பிட முடியவில்லை என்றும், பெரும்பாண்மையினர்கள் உதாசினபடுத்த படுகிறார்கள் என்றும். இந்த நிலை இதற்கு மேலும் தொடர்ந்தால் பாக்கிஸ்தான் தான் நமக்கு சட்டங்களை நிறுவி மெக்காவும் வாட்டிகானும் ஆட்சியை செலுத்தும் சித்தாந்தம் சொல்லுகிறார்கள் இந்த ஒரு சில அரசியல் கட்சியும் அதன் சார்ப்பு கொண்ட சமூக அமைப்புகளும்.

ஒரு வாதத்திற்கு என்று வைத்துக்கொண்டாலும் கூட, ஒரு வேளை சிறுபாண்மையினர்கள் ஒன்று சேர்ந்து நாங்கள் இந்த பூஜை செய்கிறோம், ஊர்வலம் நடத்துகிறோம், நீங்கள் அனைவரும் உங்களது வேலைகள் எல்லாத்தையும் விட்டு விட்டு வந்து முடிந்தால் மரியாதை செலுத்துங்கள் இல்லை என்றால் அமைதியாக இருங்கள். அப்படி இல்லை என்றால் தகராருதான் வரும் என்று சொன்னால் இந்துகள் அதை பெருந்தண்மையோடு அப்படியே ஆகட்டும் என்று ஏற்றுக்கொள்ள தயாரா. பின் நாம் இப்படி செய்வது மட்டும் எப்படி ஞாயமாகும்.

உண்மையில், அவர்களின் வளர்ச்சியைகண்டு அஞ்சும் ஒரு சிலரது விஷமச்செயலே இத்தகைய பிரச்சாரங்கள் வலு பெற்று வளர காரணம். அப்படி அவர்கள் முன்னேற்றம் கொள்ளும் கால், அவர்கள் அதிகமாக இருக்கும் இங்களில் ஆதிக்க சக்திகளாக வரக்கூடும் என்ற அச்சமாகத்தான் இவர்களது செயல்கள் இருக்கிறது.

ஏன் சிறுபாண்மையினர் எப்போதும் இப்படியே இருந்துவிடவேண்டுமா, அவர்கள் எப்போதும் பெரும்பாண்மையினரது தயவில்தான் வாழ்ந்திடவேண்டும் என்ற பொறாமை ஏன் நமக்கு வரவேண்டும்.

மத்த எல்லாவிஷியங்களையும் தூர தள்ளிவிட்டு பார்த்தாலும், அவர்களும் மனிதர்கள் தான். நம்மோடு இதே இந்த நாட்டில் நாட்டுக்காவும், சமுதாய முன்னேற்றத்திர்காவும் அயராது பாடு பட்டு பொருளீட்டி குடுத்துதணம் நடத்தும் அன்டைவீட்டுகாரர் தான். அந்த மனிதன் வேறு ஏதோ ஒரு இனத்தை/மதத்தை சேர்ந்தவன் என்ற ஒரே ஒரு காரணத்தை காட்டி சட்டமும், நாடும் அவர்களுக்கு வழங்கி இருக்கும் அடிப்படை உரிமையைக்கூட தட்டி பறிப்ப நினைப்பது தீவிரவாதமே. மனித குலத்திலே, அடுத்த வீட்டுகாரணிடம் போட்டி இருக்கவேண்டியது தான், அதற்காக அது இப்படி பொறாமையாக மாறி, வெறியாக உருவெடுத்து ஒருவரை ஒருவர் அழிக்க துணியும் எண்ணம் வரை வளர்ந்திருக்க வேண்டாம்.

இந்த அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியினரும் அவரது சகாக்களும் கூறுவதை போல், சிறுபாண்மையினரால் நாட்டுக்கு என்ன ஆபத்து விளைந்துவிடும் என்று பார்ப்போம்.

முதலாவதாக முஸ்லீம் மக்கள் எல்லோருக்கும் நாடு என்றால் அது இந்தியா இல்லை, அவர்களுக்கு நாடு பாக்கிஸ்தானும், முதலாலிகளாக அரபு நாடுகளும் விளங்குகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று பார்ப்போம்.

இந்திய நாட்டில் இந்திய தேசத்தின் இறையான்மைக்கு எதிராக எதிரி நாட்டுக்காக அப்படி எத்தனை பேர் உளவு பார்த்தார்கள், அல்லது இராணுவ ரகசியங்களை எதிரி நாட்டுக்கு தாரைவார்த்துக்கொடுத்தர்கள். உண்மையில் அப்படி ஏதும் நடந்ததாக இது வரை சான்றுகளோ அல்லது பத்திரிக்கை செய்திகள் கூட வந்தாக ஞாபகம் இல்லை. அப்படி வரும் தேச துரோக செயல்களில் ஈடுபடும்பட்ட மக்களை எண்ணிக்கையில் கொண்டால் அனேகமாக எல்லா வகையராவிலும் ரெளடிகளும், கேடிகளும் இருக்கிறது தெளிவாகத்தெரியும். தாவுத் இபிராகிமை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு பேசுதல் முறையாகாது. இங்கே சென்னையிலே தேசவிரோத சக்திகள் என்று சென்னையில் என்கவுண்டர்கள் மூலம் இறந்த ரெளடிகள் எல்லாம் எந்த இணத்தை சேர்ந்தவர்கள் என்ற கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை.

இரண்டாவதாக அரபு நாடுகள் தான் அவர்களுக்கு முதலாளி, அவர்கள் என்ன என்ன செய்ய சொல்லுகிறார்களோ அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியிலோ அல்லது சமுதாய முன்னேற்றத்தில் அவர்களது பங்கு என்று எதுமே இல்லை.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று தமிழிழ் ஒரு பழமொழி இருக்கிறது. அப்படி இருக்கையில், உண்டியோடு நில்லாமல், சமுதாத்தில் இருக்கும் ஏற்றதாழ்வில், ஒரு சம்மான அந்தஸ்தையும் வழங்கும் மதத்தினிடம் அதிக பக்தி ஒரு நன்றியுனர்வே அல்லாமல் எப்படி தேசதுரோகமாக ஆகும். ஒவ்வொரு தனிமனித முன்னேற்றமும், அவர்கள் இருக்கும் சமுதாயத்தின் முன்னேற்றமாகும். அப்படி பல சமுதாயத்தின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும்.

ஒரு கால கட்டத்தில் படிக்க நல்ல பள்ளிகள் இல்லை, அப்படி இருப்பின் இடம் இல்லை என்ற குறைவேறு. அப்படி இருந்த காலகட்டத்தில், தேவை அதிகமாக உள்ள இடங்களில் தரமான கல்வி நிறுவனங்களை துவங்கி சமுதா முன்றேற்றத்திற்காக அவர்களை பாடு பட்டதை எல்லாம் வசதிக்காக மறந்துவிட்டு பேசலாகாது. இப்போது முன்னனி கல்வி நிலையங்களாக விளங்கும் அவர்களது நிலையங்களில் அனைத்து சமுதாயத்தினரும் சென்று கல்வி பயின்று திரும்புவது ஒரு அன்றாட நிகழ்ச்சி.

மூன்றாவதாக, அவர்களது பழக்க வழக்கங்களும், சடங்குகளும் சகிக்கும் வண்ணமாக இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு. அடுத்தவர் வீட்டு பழக்கவழக்கங்களில் நமக்கு என்ன வேலை. இந்துக்களிடம் இருக்கும் தீண்டாமையை இன்னமும் முழுதாக ஒழித்தபாடில்லை. அப்படி இருக்க அவர்களது பழக்கங்க வழக்கங்களை பற்றி பேச நமக்கு அருகதையே கிடையாது. இந்த ஒரு விஷியம் என்று இல்லை, இங்கே இந்து சமுதாய நெறிமுறைகளைப்பற்றி பேச ஆரம்பித்தால் நாட்க்கள்கொள்ளும். அப்படி இங்கு நிலைமை இருக்க, அவர்களது சமுதாய செய்கைகளை பற்றி பேச நமக்கு முதலில் தகுதிவேண்டும். அப்படி பெறும் கால் அவைகளை இந்துக்கள் மேற்கொள்ளட்டும். அதுவரை இந்துக்கள் என்னதான் சொன்னாலும் மற்றவர்கள் காதில் போட்டுக்கொள்ள போவதில்லை அதுதான் மறைமுகமான உண்மை.

கிருஸ்துவ கல்விநிலையங்கள் கொடுக்கும் கல்வி வேண்டும், அவர்களது மருத்துவமனைகளில் கிடைக்கும் பாகுபாடில்லா மருத்துவம் வேண்டும் ஆனால் அவர்கள் வேண்டாம் என்றால், கேட்பவர் யாராக இருந்தாலும் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

மொத்தத்தில் பார்த்தால் இந்துக்களுக்கு என்று தான் நாடு இன்று வரை இருந்து வருகிறது, அதனால் தான் என்னமோ, மற்ற மதத்தினருக்கு என்று சிறப்பு சலுகைகளை ஆரம்பத்தில் இருந்தே ஏற்படவேண்டிய கட்டாயத்தில் உருவாக்கி வைத்தோம் போலும். நிலைமை இப்படி இருக்க, இனிமேல் தான் இப்படி ஒரு நிலைமை கொனற வேண்டும் என்று பிதற்றுவது தவறு, மட்டும் அல்லாது. மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட நினைக்கும் எண்ணமும் கூட ஆகும். இது தேச துரோக செயலுக்கு சமனானதாகவும், தீவிரவாதத்திற்கும் சமமாகவும் கருதலாம்.

இப்படி எந்த ஒரு ஞாயமான காரணமும் இல்லாமல், அடுத்தவரின் முன்னேற்றத்தின் மேல் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டும் வளரும் ஒரு கலாச்சாரம் நமது பாரத்திற்கு தேவையே இல்லை. யாராக இருந்தாலும் இதைதான் சொல்லுவார்கள். இந்த தப்பு பிரச்சாரத்தை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் இல்லை என்றால், அது விஷ விருட்சமாக வளர்ந்து நாளைக்கு அகற்ற கடினமாகிவிடும். மத நல்லிணக்கத்தோடு இருக்கும் வலிய பாரத்தை வலுபடுத்த ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், இந்தியர்களை இந்தியர்களாகவே வாழவிடுங்கள். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, வளரும் இளைய சமுதாயத்தில் விஷமேற்றாதீர்கள்.

அன்புடன்,

கலைமணி.

kalaimani1@yahoo.com


Series Navigation

கலைமணி

கலைமணி

கடிதம் ஜூன் 3,2004

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

மதிவாணன்


தேர்தல் முடிவுகளும் எண்ணங்களும் என்ற சின்னக்கருப்பனின் கட்டுரையைப் படித்தேன். பின்னர் அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரையையும் படித்தேன்.

முன்னதாக சின்னக்கருப்பன் மற்றும் சிலர், நா.இரா.குழலினியின் கட்டுரைகளுக்கு எழுதிய எதிர்வினைகளையும் படித்தேன். திண்ணையில் உட்கார்ந்துகொண்டு காற்றில் விஷம் பரப்பும் இந்த நபர்கள் மிகுந்த ஆபத்தானவர்கள் என்பதால் இந்த எதிர்வினை.

இவர்களின் கருத்துப்போர் ரொம்பவும் வினோதமானதாக இருக்கிறது. இவர்கள் கண்டு அச்சப்படும்ி வலுவான எதிரியாக உண்மை மட்டுமே இருக்கிறது. அதனைச் சந்திக்க நேரும்போது ஜாக்கிசான் சண்டை முறையைப் பின்பற்றி, சந்து பொந்துகளில் புகுந்து ஓடி, என்ன ஆயிற்று என்று தெரியாமலடித்து ஜகஜால வித்தை புரிகிறார்கள். இவர்களின் மான் கராத்தே பற்றி இவர்களுக்கு பயங்கர திருப்தி. மற்றொரு புறம், ரசிக மகா ஜனங்கள் கைதட்டி ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை வேறு.

எனவே, மிகச்சுருக்கமாகவும் சாரமாகவும் மட்டும் சிலச் செய்திகளை அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

சின்னக்கருப்பனின் அனைத்துவிதமான விவர முன்வைப்புக்குப் பின்னும் ஒளிந்துகொண்டிருக்கும் செய்தி ஒன்றுதான். அது அவரின் கட்டுரையின் முதல் பத்தியிலேயே வந்துவிட்டது. ‘இது சோனியா காந்தி போட்ட பிச்சை என்று கருதுவது மடமை ‘ என்று அவர் விவாதத்தைத் தொடங்குகிறார். (அந்த மடமையைச் செய்தவர் முன்பத்தியில் சொல்லப்பட்ட, உண்மையான டாக்டர் பட்டம் வாங்கிய மன்மோகன!ி)

இவரின் கட்டுரையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்:

1) வெளிநாட்டவர் ஒருவர் பிரதம மந்திரி, எதிர்கட்சித் தலைவர் போன்ற முக்கிய பதவிகள் வகிப்பது தவறு.

2) கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது தவறு.

முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.

இன்றைய நிலைமைகளில் புலம் பெயர்வதும், வேற்று நாட்டு குடிமக்கள் ஆவதும் பெரிய அளவில் நடக்கிறது. இது ஒரு இயல்பான முன்னேற்றமான நிகழ்வாகும். அதன் காரணமாக புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்கள் ஜனநாயக்ததில் பங்கெடுப்பதும், தேர்ந்தெடுக்கப்படுவதும் நடக்கிறது. பிஜி உள்ளிட்ட நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பிரதான அரசு அதிகாரப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது, சின்னக்குழுக்களில் எல்லைகட்டி வேறுபாடு பாராட்டிய மானுட சமூகம் உலக சமூகமாக முன்னேறுவதில் உள்ள பல்லாயிரக்கணக்கான படிகளில் ஒன்று. இதனை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

சோனியா விவகாரத்தில் உள்ள மற்றொரு சாரமான பிரச்சனை அவர் பிரதமர் ஆவதற்கு மக்கள் வாக்களித்தார்களா மற்றும் அது சட்டபூர்வம் என்பதால் ஒப்புக்கொள்ள முடியுமா என்பது.

மிக எளிமையான உண்மையை நேருக்கு நேர் பார்ப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப் பெரும் கட்சி சோனியாவை தனது தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அவ்வளவுதான் அது. அதற்கு அந்த கட்சிக்கு உரிமையிருக்கிறது.

நிச்சயமாக அதனைப் பற்றி கருத்துச் சொல்லவும் அக்கட்சியைத் தவிர்த்த மற்றவர்களுக்கு உரிமையிருக்கிறது. ஆனால், சின்னகருப்பன் மற்றும் இன்ன பிறரின் ஆட்சேபம் ஆரம்பிக்கும் முகாந்திரம் என்ன ? சொல்லும் காரணம் என்ன ? நோக்கம் என்ன ?

முகாந்திரம் சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்பதுதான். எந்த நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் மற்றொரு நாட்டின் குடியாகிவிட்டால் அந்நாட்டில் அவர் எந்தப் பதவிக்கும் வருவது சாத்தியமாக இருக்க வேண்டும் என்பதே சரியானது. ஏனெனில் அதுதான் உலகம் முன்னேறி வரும் வழி.

அவர் சொல்லும் காரணம் என்ன ?

இந்தியாவின் ரகசியங்கனை வெளிநாட்டுக்குக் கொடுத்துவிடுவார்காளாம். சரி. இதுவரையிலான அரசுகள் என்னதான் செய்திருக்கின்றன ? இந்திய ராணுவத் தளவாடத் துறையையே வெளிநாட்டுக் கம்பெனிகளுக்குக் கொடுக்க முயற்சி நடந்தது. நடக்கிறது. அதில் பாஜக விற்கும் பங்குண்டு. இந்திய மண்ணில் அமெரிக்க ராணுவத்தின் கால் பதிக்க இடமளித்தது யார் ? வாஜ்பாய் அரசுதான். எனவே,. இந்தியர்களாகப் பிறந்த தலைவர்கள் வெளிநாட்டவருக்கு அடிபணிய மாட்டர்கள், வெளிநாட்டவர் இந்திய ரகசியங்களை விற்றுவிடுவார்கள் என்பதெல்லாம் மூடர்களின் விருப்பமான பொய்கள். அவ்வளவுதான்.

சின்னக்கருப்பன் வகையறாக்களின் நோக்கம் என்ன ?

இந்தியர் என்று, இன்னும் சொல்லப்போனால் இந்து என்ற மாயையைக் கட்டமைக்க வேண்டும் என்பதுதான். அதுதான் மக்களின் உண்மையான பிரச்சனைகளை மறைக்க உதவும் வலுவான திரை என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்திய மக்களின் அடிப்படையான பிரச்சனை என்ன ? உணவு, வேலை, வாழ்க்கை. அது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒன்றுதான். இந்த அடிப்படையான போராட்டத்தில் மக்கள் முன்னேறுவது என்பது பழமைப் பிசாசுகளுக்கு ஆபத்தானது.

ிஅச்சப்படும் அளவுக்குத் தேசபக்தியைக் கட்டுரையில் அரவிந்தன் காட்டுகிறார். சீக்கியர் ‘படுகொலையுடன் ‘ குஜராத் :கலவரத்தை ‘ ஒப்பிட்டுப் பார்க்கிறார். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற உத்தமமான ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்.

பிஜேபி வகையறா கொடுமையான மத வெறியைப் பின்பற்றுகின்றன என்றால், காங்கிரஸ் வகையறாக்கள் (தமிழ்நாட்டு திமுக வரை) மென்மையான இந்துத்துவாவைப் பின்பற்றுகின்றன. சீக்கியப் படுகொலையும், குஜராத் (முஸ்லீம்) இனவொழிப்பும் மானுட இனத்துக்குக் களங்கம். அவற்றைச் செய்தவர்கள் எத்தனை நூற்றாண்டு தாண்டினாலும் தண்டிக்கப்படுவார்கள்.

இந்திய தேசப்பற்று என்பது இந்திய மக்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பது. அமெரிக்ிகா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்யும் வாஜ்பாயும், பாஜகவும், சோனியாவும், காங்கிரசும் இந்திய மக்கள் விரோதிகள். தேசவிரோதிகள். சோனியாவை வெளிநாட்டுக்காரி என்று சொல்வதன் நோக்கம் இந்துத்துவக் கும்பலின் தேசவிரோதச் செயலை மறைத்து தேசபக்தி வேடம் கட்டி ஆட மட்டுமே. பாஜக பதவியை விட்டுச் செல்வதற்கு முன்னதாக இந்திய விவசாயத்தை பன்னாட்டு மன்சாண்டோவுக்கு விற்றதை நாம் தேசபக்தி சேவை என்று பாராட்டமுடியுமா ? (பாஜக வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்திய) அமெரிக்க ஆதரவு நிலையைத் தொடர்வதாக அறிவித்திருக்கும் சோனியாவின் காங்கிரசின் தேசபக்தியை தேசபக்தி என்று சொல்ல முடியுமா ?

ஆட்சியில் இடதுசாரிகள் பங்கேற்பது குறித்து இப்போது பேசுவோம்.

நடப்பது காங்கிரஸ் ஆட்சிதான். எந்த சீர்திருத்தத்தை முன்னுக்கொண்டு சென்றதற்காக பிஜேபியை மக்கள் தோற்கடித்தார்களோ அந்த சீர்திருத்தத்தைத்தான் காங்கிரஸ் அமுல்படுத்தும் என்பதை CMP தெளுவாகக் காட்டுகிறது. அந்த அரசுக்குள் இடதுகள் இருப்பது என்பது சாத்தியமில்லை. அப்படிப் பங்கெடுத்தால் சீர்திருத்தத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் எதிரி வரிசையில் இடதுகள் நிற்கவேண்டியிருக்கும். இந்துத்துவ சக்திகள் மக்கள் நண்பர்கள், தேச பக்தர்கள்வேடம் போட்டு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் நடத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமாகும். அதற்காகத்தான் கருப்பன் உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் இடதுகள் ஆட்சியில் இடம்பெற வேண்டும் என்ற ஞான ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக கொஞ்சம் பெரும்பான்மை பற்றிப் பேச வேண்டும். இந்த நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மை அல்ல. மாறாக, உழைத்துவிட்டு வாழவழியில்லாமல் இருக்கும் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களே பெரும்பான்மை. அந்த பெரும்பான்மை மக்கள்தான் பிஜேபிக்கு எதிராக வாக்களித்து அதனை வெளியேற்றியிருக்கிறார்கள்.

C. மதிவாணன்

mathivanan_c@yahoo.com

Series Navigation

மதிவாணன்

மதிவாணன்