எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

சோதிப்பிரகாசம்


எழுத்தாளர்களின் பண்பாடு பற்றி மிகவும் தீவிரமாக என்னைச் சிந்திக்க வைத்து இருக்கிறார் நண்பர் பித்தன்!

மண்டையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்டி (எனது மண்டையில்தான்!) சுரேஷின் நண்பரை நான் தேடிக் கொண்டு இருக்கின்ற எனது பித்தத்தைத் தெளிந்திட வைப்பதுதான் பித்தனின் நோக்கம் என்று எடுத்துக் கொண்டு ஒரு புறம் நான் மகிழ்கிறேன்.

மறு புறமோ, பரிவு உள்ள நண்பர்களாக ஜெய மோகனும் நானும் இருந்து கொண்டு வருகின்ற குட்டு, பித்தனால் உடை பட்டுப் போய் விட்டதே என்று நான் தடுமாறுகிறேன்.

கூடவே, ஜெய மோகன்தான் எனது ‘ஆதர்ச ‘ எழுத்தாளர் என்று நண்பர் சிவகாமி கண்டு பிடித்து வைத்து இருக்கின்ற கரசியம் எப்படிப் பித்தனுக்குத் தெரிந்திட வந்தது என்று நான் மிரண்டும் போகிறேன்!

அய்யகோ, எவ்வளவு அச்சுறுத்தல் காரர்களாக இருக்கிறார்கள் இந்த எழுத்தாளர்கள்! நல்ல வேளையாக ஓர் எழுத்தாளனாக நான் இல்லை. அந்த மட்டுக்கும் ஒரு மகிழ்ச்சி!

ஒரு ‘ஞானப் பிழம்பாக ‘ ஜெய மோகனைத் ‘திறனாய்வுக் கூட்டம் ‘ கட்டுரையில் நான் சித்தரித்து இருக்கிறேன் என்று பித்தன் வனைந்து இருக்கின்ற சித்திரத்தைப் படித்துப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்து இருக்க வேண்டும் சூரியா! சூரியா மட்டும் என்ன, புதியது ஒரு நண்பர் தமக்குக் கிடைத்து இருப்பதை எண்ணி எண்ணி ஜெய மோகன் கூட மகிழ்ச்சி அடைந்து இருக்கக் கூடும்.

ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரலை ‘ப் படித்து இருக்கக் கூடியவர்களோ, கஞ்சத் தனம் இல்லாமல் அள்ளி அள்ளிப் பித்தன் வழங்கி இருக்கின்ற நகைச் சுவைக்காக அவருக்கு நன்றி சொல்லாமல் இருந்து இருக்க மாட்டார்கள்!

ஆனால், இப்படிப் பட்ட எந்த அனுபவமும் எனக்கு ஏற்பட வில்லை. ஏனென்றால், எழுதுவதற்கும் நேரம் இல்லாமல் படிப்பதற்கும் நேரம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்ற பித்தனின் தவிப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனினும், ஆர அமர எதையும் கொஞ்சம் படித்துப் பார்த்திட வேண்டாமா, பித்தன் ? எத்தனை நாட்களுக்குதான் பிறவி ஞானத்தையே நம்பிக் கொண்டு நாம் இருப்பது ?

‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ என்னும் பெயரில் பெரியது ஒரு கதையினை ஜெய மோகன் எழுதி இருப்பது பித்தனுக்குத் தெரிந்து இருக்கலாம். அந்தக் கதையில், ஜெய மோகன் என்னும் ஒரு கதை மாந்தரைப் பற்றி அருணாசலம் என்னும் ஒரு கதை மாந்தரிடம் ராமசாமி என்னும் ஒரு கதை மாந்தர் கூறுவார்—-இலக்கிய உலகின் இன்றைய ‘ஸ்டார் ‘ ஜெய மோகன்தான் என்று!

இப் பொழுது நண்பர் பித்தன் முடிவு செய்து கொள்ளட்டும்—-ஒரு ஞானப் பிழம்பாக ஜெய மோகனை நான் பாராட்டி இருக்கிறேனா அல்லது கிண்டல் அடித்து இருக்கிறேனா என்று! அவரது மறு வினைகளையும் நான் எதிர் நோக்குகிறேன்—-கூட்டணிக்காக அல்ல, ஒரு பண்புக்காக!

இந்தத் ‘திறனாய்வுக் கூட்டம் ‘ கட்டுரையின் கதையே ஒரு தனிக் கதை! தேவை இல்லாமல் குருக்கள் சதக்கத்துல்லாவின் மேல் களங்கம் கற்பிப்பதற்குச் சூரியா முயன்று இருப்பதால் அது பற்றியும் ஈண்டு நான் குறிப்பிட்டு ஆக வேண்டும்.

‘புதிய கோடாங்கி ‘யில் வெளியிடுவதற்காகத் ‘திறனாய்வுக் கூட்டம் ‘ ஒளி-அச்சாகி இருந்த நேரத்தில், தமது ‘சொல் புதிது ‘ இதழில் வெளியிடுவதற்காக அதனை ஜெய மோகன் கேட்டதால், புதிய கோடாங்கி வட்டத்தின் அனுமதியுடன் அதனை நான் ஜெய மோகனிடம் ஒப்படைத்தேன். அவரோ அதனைக் கிடப்பில் போட்டு விட்டார். இறுதியில், குருக்கள் சதக்கத்துல்லாவின் பொறுப்பில் சொல் புதிது வெளி வரத் தொடங்கிய பின்னர்தான் வெளிச்சத்திற்கு வந்தது ‘திறனாய்வுக் கூட்டம் ‘!

சரி, அது போகட்டும்! கருணா நிதியாருக்கும் ஜெய மோகனுக்கும் இடையே கலைத் தரம் பற்றிய முரணம் எழுந்ததற்கும் வெகு காலத்திற்கு முன்னரே, ‘திறனாய்வுக் கூட்டம் ‘ கட்டுரையில் அதனை நான் சுட்டிக் காட்டி இருந்தேனே, அதையாவது கவனத்தில் கொண்டு இருக்கிறாரா, பித்தன் ? என்றால் அதுவும் இல்லை. வாழ்க்கைத் தரத்தின் வேறுபாடுகளுக்கும் கலைத் தரத்தின் வேறுபாடுகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றிய இந்த முரணம், விள்ளனக் காரர்களால் (விமர்சகர்களால்) விளக்கிடப் படுவது வரை நாம் காத்துக் கொண்டு இருக்கலாம்; இந்த வகையில் தமது முயற்சிகளை மேற் கொள்வதற்கு நமது பித்தனும் முன் வரலாம்.

இஸ்லாமியக் குருக்கள் என்றாலே அவர்களிடம் ஒரு ‘மருமம் ‘ மறைந்து கிடக்குமாமே—சுட்டிக் காட்டுகிறார் சூரியா! இதற்காக— மற்றவர்களின் மருமங்களைத் தேடித் திரிந்து கொண்டு இருக்கின்ற சூரியாவின் மருமம் என்ன வென்று நாம் கேட்கப் போவது இல்லை. ஏனென்றால், மற்றவர்களின் மருமங்களுக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பது மாண்பு உடைய மனிதர்களின் வேலை இல்லை. எப்படியும், இந்தத் தனி மனித உரிமை மீறலுக்கு விளக்கம் அளித்திட வேண்டிய பொறுப்பு சூரியாவுக்கு உண்டு.

மற்ற படி, கடவுள் நம்பிக்கைகளை இழிவு படுத்திக் கொண்டு வருகின்ற மதக் காரர்களின் வரிசையில் ஜெய மோகன் சேர்வதற்கு அணுவளவும் வாய்ப்பு இல்லை என்பதை அவரது எழுத்துகளில் இருந்து யாரும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆம், இதைத்தான்—-இதைத்தான்—-நான் எதிர் பார்த்தேன் என்று இப் பொழுது பித்தன் நினைத்துக் கொள்வது எனக்குப் புரியாமல் இல்லை. எனினும், இதற்கு விளக்கம் அளித்திட வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

கலைப் போதையைப் பொறுத்த வரை, திரைப் படங்களுடன் எனது பருகலை நான் முடித்துக் கொள்வது எனது வழக்கம். ஆனால், மார்க்சியத்தை விள்ளனம் செய்து ஜெய மோகன் எழுதி இருக்கின்ற ஒரு கதை என்று பின் தொடரும் குரலை எனது நண்பர் சொ. கண்ணன் எனக்கு அறிமுகம் செய்து வைத்ததால் அதனை நான் படித்திடத் தொடங்கினேன்.

அப் பொழுதுதான் எனக்குப் புரிந்தது—-வாதங்களுக்குப் பதிலாக வசை மொழிக் கணைகளை விள்ளனக் காரர்கள் ஏந்திக் கொண்டு வந்து இருந்த அவல நிலை! ஒரு பக்கம் போட்டி-பொறாமைகள்! மறு பக்கம் புகழ்ச்சிக் குவியல்கள்! இடையிலோ வசை மொழிப் படலங்கள்! இந்தியக் கம்யூனிஸ்டுகள் முதல் பின்-புதின வாதிகள் வரை, இந்த ஸ்தாலினிசப் பண்பாட்டிற்குள் நின்று கொண்டுதான் அவரைச் சாடிக் கொண்டு வந்து இருந்தார்கள். கூடவே, எந்தச் சாதிக்கும் எந்த மொழிக்கும் உரியவர் அவர் என்னும் கேள்விகள் வேறு!

எனவேதான், மாற்றுக் கருத்துகளை வரவேற்பது, எதிர்க் கருத்துகளைத் தீவிரமாக எடுத்து உரைப்பது, அதே நேரத்தில், எதிராளியின் மாண்பு குலையாமல் அவரை எதிர் கொள்வது, முதலிய பொது நாயக (டெமாக்ரடிக்)ப் பண்புகளின் வழி நின்று அவரது கதையினை நான் அலசினேன்; அவர் மீது வீசப் பட்டு வந்த வசை மொழிகளுக்கு எதிராக வாதங்களையும் நான் நிகழ்த்தினேன்.

நண்பர் சிவகாமியின் மீது வீசப் பட்டு வந்த வசை மொழிகளுக்கு எதிராக வாதங்களை நான் நிகழ்த்தியதும் இதே பான்மையில்தான்! சரியாகச் சொல்வது என்றால், எனது கொள்கைகளை நான் வலியுறுத்திக் கொள்கின்ற வகையில் எனக்குக் கிடைத்து இருந்த வாய்ப்புகள் அவை! சிவகாமிக்கும் ஜெய மோகனுக்கும் எதிரான எனது கருத்துகளைச் சுட்டிக் காட்டிடவும் நான் தவறியது இல்லை. புதிய கோடாங்கியில் இந்தக் கட்டுரைகள் வெளி வந்து இருந்தன.

அப்படி என்றால், புதிய கோடாங்கி வட்டத்தினர் ஜெய மோகனின் ஆதரவாளர்களா என்றால், அதுதான் இல்லை! சிவகாமியின் மீதும் ஜெய மோகனின் மீதும் வீசப் பட்டு வந்த வசை மொழிக் கணைகள் ஒரே ஒரு தரப்பில் இருந்து ஒரு-சேர எழுந்து வந்து கொண்டு இருந்ததால், இந்த இருவரையும் பற்றி ஒரு-சேர நான் குறிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது; அதனை வெளியிட வேண்டிய அவசியமும் புதிய கோடாங்கிக்கு ஏற்பட்டு இருந்தது.

அதே நேரத்தில், இது போன்ற கட்டுரைகளை—-சிவகாமிக்கு ஆதரவான கட்டுரைகளை—-சொல் புதிதில் வெளியிடுவதற்கு ஜெய மோகன் முன் வந்து இருப்பாரா என்றால், ஆம் என்று உறுதியாக என்னால் விடை கூறிட முடியாது. எனினும், வளர்வது, வளர்த்து விடுவது, என்பன போன்ற தந்திரங்களுக்கு அப்பால் பட்டவர்கள் என்றும் புதிய கோடாங்கி வட்டத்தினரை நான் குறிப்பிட்டு விட முடியாது. இயல்பான பான்மைகளாக இம் மாதிரியான தந்திரங்கள் சிற்றிதழ் வட்டங்களில் ஏற்றுக் கொள்ளப் பட்டு இருப்பதுதான் இதில் வேடிக்கை!

ஆனால், இங்குதான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கருத்துகள் முக்கியம் பெறுகின்றன. மிகவும் சரியாக அவர் சுட்டிக் காட்டுவதைப் போல, ஒரு ‘மூலவரை ‘ச் சுற்றித் துதிபாடிகளால் நடத்தப் படுகின்ற இதழ்களாகத்தாம் சிற்றிதழ்கள் இருந்து கொண்டு வருகின்றன.

அப்படி என்றால், பேரிதழ்களைக் குறை சொல்லிக் கொண்டு வந்து இருக்கின்ற சிற்றிதழ்களின் தரம் என்ன ? இந்த எழுத்தாளர்களின் பண்பாடுதான் என்ன ? என்னும் கேள்விகள் எழுகின்றன. இறுதியில், எந்தக் கொள்கை சிறந்த கொள்கை என்னும் கேள்வியினை விட, யார் பெரியவன் என்னும் கேள்விதான் முன்னுக்கு வந்து நிற்கிறது. எப்படியும், பணம் போட்டுப் பத்தரிகை நடத்துவது என்றால் சும்மாவா, என்ன!

சாதி-மதங்களின் பெயரால் மனிதர்களை மனிதர்கள் இழிவு படுத்திக் கொண்டு வருகின்ற ஒரு நாட்டில்—-பசி-பட்டினிகளால் மனிதர்கள் மடிந்து கொண்டு வருகின்ற ஒரு நாட்டில்—-கொள்கைகளுக்கு என்று இல்லாமல், கூலிக்கு மாரடித்துக் கொண்டு வருகின்ற தலைவர்களும் தொண்டர்களும் நிறைந்த ஒரு நாட்டில்—-யார் பெரியவனாக இருந்து யாருக்கு என்ன பயன் ?

இதில், சமுதாயச் சிந்தனையாளர்களாக இருந்திடக் கூடிய எழுத்தாளர்களுக்குக் கூட வெட்கம் இல்லை என்றால், திரைப் படக் காரர்களையோ அரசியல் காரர்களையோ எழுத்தாளர்கள் குறை கூறிக் கொண்டு இருப்பதில் என்ன பொருள் ?

பெயரும் புகழும் வேண்டுமாம் இவர்களுக்கு!

என்ன பெயர் ? எப்படிப் பட்ட புகழ் ?

புரட்சிக் காரன் என்னும் பெயரா ? கொள்கையாளன் என்னும் புகழா ?

இந்தப் பெயரையும் புகழையும் பெற்று இருந்தவர்கள் எல்லாம் சாதி இழிவுகளை ஒழித்து விட்டார்களா ? வறுமையை அகற்றி விட்டார்களா ? இல்லை என்பதுதான் பதில் என்றால், எழுத்தாளர்களே, என்னத்தைச் சாதித்து விடப் போகிறீர்கள், நீங்கள் ? அதுவும் கதை-கவிதைகளை எழுதி!

கலியாண வீட்டில் மண மகனாகவும் சாவு வீட்டில் பிணமாகவும் தாம் இருந்திட வேண்டும் என்று கருணா நிதியார் விரும்புவாராம்—-கருணா நிதியாரைக் கிண்டல் செய்கிறார் கண்ண தாசனார்! ஆனால், கருணா நிதியாருக்கு மட்டும்தான் இது பொருந்துமா ? தம்மை வளர்த்துக் கொள்ளுகின்ற உத்திகளில் நம்பிக்கை வைத்து இருக்கின்ற கதை-கவிஞர்களுக்கும் நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் இது பொருந்தாதா ?

சிசரோ என்று ஒரு வழக்கறிஞர்! கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வாக்கில் ரோமில் பணியாற்றிக் கொண்டு வந்து இருந்தவர்!

நூல் ஒன்றினை எழுதியதற்காக ‘ராஜத் துரோக ‘க் குற்றம் சாட்டப் பட்டு இருந்த ஓர் எழுத்தாளருக்காக வழக்கு மன்றத்தில் அவர் வாதாடுகிறார்—-தமது கட்சிக் காரர் மீது ‘கருத்துத் திருட்டு ‘க் குற்றம் வேண்டும் என்றால் சாட்டப் பட்டிட முடியுமே ஒழிய, ‘அரச வஞ்சனை ‘க் குற்றம் எதற்காகவும் தமது கட்சிக் காரருக்குத் தண்டனை எதையும் யாரும் வழங்கி விட முடியாது என்று! ஏனென்றால், தமது நூலில் தமது கட்சிக் காரர் வெளிப் படுத்தி இருந்த கருத்துகள், முந்திய பல சிந்தனையாளர்களது கருத்துகளின் திருட்டு (plagiarism) என்று!

தமது கட்சிக் காரரைக் காப்பாற்றுவதற்காக சிசரோ அப்படி வாதாடி இருக்கலாம். எனினும், சிசரோவின் கருத்துகளை நான் ஏற்றுக் கொள்ள வில்லை. காரணம், முந்திய கருத்துகளைக் கடந்து வந்து, பிந்தைய வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப அவற்றை வளப் படுத்தி, வளர்த்துச் செல்லப் படுவனதாம் புதிய கருத்துகளே அன்றி, தனது பிறவி ஞானத்தால் முற்றிலும் புதியதாக ஒரு புதிய ஞானி வடிவமைத்துத் தந்து விடுபவை அல்ல. எனவே, ஆய்வுகளைப் பொறுத்த வரை, கருத்துத் திருட்டு என்கின்ற பேச்சுகளுக்கே இடம் இல்லை.

பித்தனுக்கு இப் பொழுது புரிந்து விட்டது—எங்கே நான் வருகிறேன் என்று!

சரவணனோ, அருள் மொழியோ, ஜெய மோகனோ, அங்கயற் கண்ணியோ, அல்லது வேறு யாரோ, அந்தக் காலத்து இசையைப் பற்றி இந்தக் காலத்தில் வெளிப் படுத்தி இருக்கின்ற கருத்துகள் என்னவாக இருந்து விட்ட போதிலும், முந்திய ஆதாரங்கள்—-ஆய்வுகள்—-எவையும் இல்லாமல் வெளிப் படுத்தப் பட்டு இருக்கின்ற கருத்துகளாக நிச்சயம் அவை இருந்திட முடியாது; எனவே கருத்துத் திருட்டு என்னும் குற்றச் சாட்டிற்கு எந்த வகையிலும் இதில் இடம் இருந்திடவும் முடியாது.

அதே நேரத்தில், இம் மாதிரியான சூழல்களில் எல்லாம், மேற்கோள்களை இடம் சுட்டிக் குறிப்பிட்டு விடுவதுதான் முறை; அறிவாண்மை நாணயமும் கூட! எல்லோர்க்கும் இது பொருந்தும்.

பி. :டி. சீனிவாச(அய்யங்கார்)னாரின் கருத்துகளை எல்லாம் எத்தனையோ ஆய்வாளர்கள், குறிப்பாக, திரவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்து ஆண்டு இருக்கிறார்கள்; ஆனால், அவரது பெயரைக் குறிப்பிடுவதற்கு மட்டும் அவர்கள் மறந்து விடுவார்கள்! ஏனென்றால், புதிய கருத்துகளைக் கண்டு பிடித்து விட்ட பெயரும் புகழும் தங்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்கின்ற பேராசை அவர்களுக்கு! இப் பொழுதும் கூட இப்படிப் பட்டவர்களை நாம் காண முடியும்!

ஆனால், இதுதான் நமது பண்பாட்டு மரபு! சாதி மரபுகளைக் கடந்து வந்து, பொது நாயகப் பண்பாட்டு மரபுகளை நாம் எய்திடாத வரை, இத் தகு இழிவுகளை எல்லாம் நாம் சுமந்து வந்துதான் ஆக வேண்டும்; உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்னும் மூடங்களுக்குள் முடங்கிக் கிடந்துதான் தீர வேண்டும்.

ஜெய மோகனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதற்காகக் கந்தருவனின் மேல் அவரது கட்சி/நிறுவனம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்றால், தீண்டாமை மூடத்தின் வயப் பட்டுக் கிடக்கின்ற ஓர் இழிவின் விளைவு என்று இல்லாமல், வேறு எப்படி இதனை நாம் எடுத்துக் கொள்வது ?

மிகவும் சரியாக நண்பர் சூரியா சுட்டிக் காட்டி இருப்பது போல, சுரேஷின் நண்பருக்கு எதிராக எழுதப் பட்டு இருக்கின்ற ஒரு கட்டுரை அல்ல ஜெய மோகனின் கட்டுரை; கதை-கவிதைகளைப் பற்றிய எனது கருத்துகளுக்கு எதிராக அவர் எழுப்பி இருக்கின்ற ஒரு போர் முழக்கம்தான் அது! எனக்கு அது தெரியாமல் இருந்து விடக் கூடுமோ என்னும் ஐயத்தில் என்னிடம் அதனை ஜெய மோகன் சொல்லியும் இருக்கிறார்.

எனினும், களத்தில் இறங்கிடுமாறு சுரேஷின் நண்பருக்கு நான் அழைப்பு விடுத்ததற்குக் காரணம், அவரிடம் ஏதேனும் தயக்கம் இருந்தால் அதனை அவர் களைந்திட வேண்டும் என்னும் நல் எண்ணம்தான்! நல் எண்ணங்களுக்குதான் நாட்டில் என்றும் பஞ்சம் இருப்பது இல்லையே!

எனினும், ஜெய மோகனின் புதிய பாணங்களை வரி-வரியாக நான் எதிர் கொள்வேன்; எந்தக் கருத்தையும் எதிர் கொள்வதற்கு மார்க்சிய வாதிகள் என்றும் தயங்குவது இல்லை என்பதை நான் நிருபிப்பேன். நான் குறிப்பிடுவது மார்க்சிய வாதிகளை; ஸ்தாலினிச வாதிகளை அல்ல!

அண்மையில், ‘வர்ணக் கட்சிகள் x சாதிக் கட்சிகள் ‘ என்னும் தலைப்பில் புதிய கோடாங்கியில் கோபு எழுதி இருந்த ஒரு கட்டுரை என்னைக் கவர்ந்தது; அதனைப் பாராட்டி உடனே நான் மடல் எழுதினேன்—-ஆனால், கூட்டணிக்காக அல்ல! புதிய கலாச்சாரத்தில் ‘இந்தியா பழி வாங்கும் ‘ என்னும் தலைப்பில் துரை. சண்முகம் எழுதி இருந்த ஒரு கட்டுரை என் நெஞ்சைச் சுட்டது; அதனைப் பாராட்டி உடனே நான் மடல் எழுதினேன்—-அவரது நெஞ்சின் நெருப்பினைப் பகிர்ந்து கொள்வதற்காக!

இப்படித்தான் சுரேஷின் நண்பரையும் நான் தேடினேன். மற்றவர்களைப் பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் ஒரு குற்றமா, பித்தரே ?

ஜெய மோகனைப் பற்றி எப் பொழுதாவது என்னிடம் சற்றுக் கிண்டலான நட்புடன் சிவகாமி கேட்பது உண்டு —-உங்கள் ஆதர்ஷ எழுத்தாளர் எப்படி இருக்கிறார் என்று! ஆதர்ஷ என்றால் என்ன பொருள் என்று கேட்டு வேறு பொருளுக்கு உடனே நான் தாவி விடுவேன். ஆனால், பித்தனுக்கும் இந்தக் கரசியம் தெரிந்து இருக்கிறதே, எப்படி ? பித்தன்தான் இதற்குப் பதில் கூறிட வேண்டும்.

இறுதியாக, பெரியவன்-சிறியவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், என்னும் சாதிய மரபுகளின் தாக்கங்களில் நின்று நாம் விடுபடுவோம்; தனி மனித உரிமைக்கும் மாண்பிற்கும் ஒவ்வொருவர் இடத்தும் நாம் ஒப்பளிப்போம்! ‘பெரியாரை வியத்தலும் இலமே; சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே! ‘ என்று கூறிய கணியன் பூங்குன்றனாரை என்றும் நமது நினைவில் நாம் கொள்வோம்!

பித்தனுக்கு என் நன்றிகள்!

sothipiragasam@lycos.com

தொலை பேசி எண்கள்: சென்னை: 2644 4637 ; 2617 2823.

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்